'சிவனருட்செல்வி': பகுதி 05 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகம், மானக்கஞ்சாறனாரின் பக்தி நிலை கண்டு வியந்து நிற்கிறது.
மகளின் அறுத்தெடுத்த கூந்தலைக் கையில் எடுத்துக் கொண்டு,
வந்த சிவனடியாரைத் தேடுகிறார் மானக்கஞ்சாறனார்.
எங்கு தேடியும் அவரைக் காண முடியாது திகைக்கிறார்.
நின்ற பெரியவர்கள் சிவனடியார் வேடத்தில் வந்தவர் சிவனேயென முடிவு செய்கின்றனர்.
அனைவர் கண்களிலும் ஆனந்த அருவி.

🌊 🌊 🌊

நடந்த அதிசயத்தால் மெய்மறந்து நின்ற அவையோரின் செவிகளில்,
மங்கள இசையின் முழக்கம் கேட்க, மீண்டும் சபையில் திகைப்பு.
மாப்பிள்ளை வீட்டார் உள்நுழைந்துவிட்ட செய்தியை,
அம்மங்கள ஓசை உணர்த்துகிறது.
என்னாகப்போகிறதோ? என்று அனைவர் மனதிலும் பதற்றம்.
மாப்பிள்ளை அருகில் வந்துவிட்ட நேரத்தில்,
அறுந்த கூந்தலோடு அமங்கலக் கோலத்தில் நிற்கிறாள் சிவனருட்செல்வி.
என்ன செய்வதென்று தெரியாமல் உறவினர் பரபரப்படைகின்றனர்.

🌊 🌊 🌊

மானக்கஞ்சாறனாரது முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
உறவினர் 'உள்ளே வா' என்று கைபிடித்து இழுக்க,
எவ்வித அசைவுமின்றி தந்தையின் கையைப் பற்றியபடி,
சிவனருட்செல்வியும் அங்ஙனமே நிற்கிறாள்.
பந்தலினுள் புகுந்த மாப்பிள்ளைவீட்டார் அனைவரது முகத்திலும்,
சிவனருட்செல்வியின் தோற்றம் கண்டு பேரதிர்ச்சி.
'இதென்ன அமங்கலக்கோலம்?'
ஊர்வலத்தில் வந்த மூத்த உறவுப்பெண்கள் வாயில் கைவைத்து முணுமுணுக்கிறார்கள்.
பெண் பார்க்க வந்தபோதுகூட கருநாகம் போன்ற நீண்ட கூந்தலோடு,
நின்றவள்தானா இங்கு நிற்பவள்? ஐயமெழ உறவெல்லாம் அருவருக்கிறது.
'என்ன துணிச்சலிருந்தால் திருமண நாளன்று கூந்தலை அறுத்து இங்ஙனம் நிற்க விடுவார்கள்.
மாப்பிள்ளையை அவமரியாதை செய்ய நினைந்தார்கள் போலும்,
இதற்குமேலும் இங்ஙென்ன பேச்சு?
கொணர்ந்த சீர்களை மீழ எடுத்துக் கொண்டு புறப்படுங்கள் போகலாம்.'

பெரியவர் ஒருவர் உத்தரவிட உறவெல்லாம் திரும்பிச் செல்லத் தயாராகிறது.
எல்லோரும் கலிக்காமரின் குறிப்பறிய அவரைப் பார்க்கிறார்கள்.

🌊 🌊 🌊

கலிக்காமர் எவ்வித சலனமுமின்றி சிவனருட்செல்வியை நோக்குகிறார்.
அவளது கண்கள் கலங்கியிருந்தாலும் முகத்தில் சலனமற்ற தெளிவு.
ஏதும் பேசாமால் அவள் அருகில் மானக்கஞ்சாறனாரும் மருட்சியின்றி நிற்கிறார்.
அவ்விருவர்தம் நிலையும் ஏதோ ஒன்றை உணர்த்த,
புறப்பட்ட உறவுகளைக் கைகாட்டி நிறுத்திய கலிக்காமர்,
மானக்கஞ்சாறனாரின் அருகில் வந்து பேசத் தொடங்குகிறார்.

🌊 🌊 🌊

'ஐயனே! யாது நடந்தது இங்கே? 
பண்பாட்டில் சிறந்த பரம்பரையில் வந்த தாங்களும் தங்கள் புதல்வியும்,
மாப்பிள்ளையாக நான் வரும் இவ்வேளையில்,
என்னை இழிவு செய்யும் வகையில் வேண்டுமென்றே,
இச்செயலைச் செய்திருக்கமாட்டீர்கள் என்பதை உணர்கிறேன்.
நான் பெண் பார்க்க வந்தபோது அழகிய கூந்தலோடு நின்ற,
சிவனருட்செல்வியின் கூந்தலுக்கு என்னாயிற்று?
ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.
தயைகூர்ந்து என் உறவுகளும் உலகமும் அறிய உண்மையை உரைக்க வேண்டும்.'

கலிக்காமரின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் இளமையைத் தாண்டிய முதிர்ச்சி.
அன்பும் கருணையும் நிறைந்த அவரது வார்த்தைகள் கேட்டு,
தந்தையின் முதுகில் முகமறைத்து மெல்ல விம்முகிறாள் சிவனருட்செல்வி.

🌊 🌊 🌊

மானக்கஞ்சாறனாரின் இல்லத்துப் பெரியவர் ஒருவர் மெல்ல வாய்திறக்கிறார்.
சற்றுமுன் திடீரெனச் சிவனடியார் ஒருவர் வந்ததையும்,
தன்னை வணங்கிய சிவனருட்செல்வியின் கூந்தலைக் கண்டு,
தனது பூணூலுக்காய் அக்கூந்தல் வேண்டுமென அவர் கேட்டதையும்,
சிவனடியாரைத் திருப்தி செய்யவதற்காய்,
மகளின் திருமணநாள் என்றும் பாராமல்,
மானக்கஞ்சாறனார் மகளின் கூந்தலைத்தர சம்மதித்தமையையும்,
ஊரார் தடுக்கவும் அதனைப் பொருட்படுத்தாமல்,
அடியாரைப் போற்றும் தந்தையின் கொள்கையே முக்கியம் என,
தானே வாள் எடுத்துக் கொடுத்துக் கூந்தலை அறுத்தெடுக்கச் சொன்ன,
சிவனருட்செல்வியின் சிவபக்தியையும் வரிசையாய் எடுத்துச் சொல்கிறார் அப்பெரியவர்.

🌊 🌊 🌊

இப்போது கலிக்காமரின் கண்களில் அருவி பொங்குகிறது.
தான் பக்தியோடு வணங்கும் சிவன்மீது இத்தனை பக்தி கொண்ட குடும்பமா? இது,
எவரால் செய்ய முடியும் இந்தச் சிவத்தியாகத்தை என வியக்கிறார்?
முதியவரான மானக்கஞ்சாறனாரின் செயலைவிட,
தன் இளமை, திருமணநாள் என்பவற்றையெல்லாம் கூடப் பொருட்படுத்தாமல்,
தந்தையின் தியாகத்திற்காய் தன் வாழ்வை இழப்பதற்குத் துணிந்த,
சிவனருட்செல்வியின் அரிய தியாகமே அவருக்குப் பெரிதாய்ப்படுகிறது.
அவரது கண்கள் சிவனருட்செல்வியைக் காதலோடு பார்க்கின்றன.
சிவபக்தி நிறைந்த தனது வாழ்வுக்கு, 
இவளைவிட வேறெவர் மனைவியாய் வாய்க்க முடியும்? என நினைந்த அவர்,
உறவினரை நோக்கி உறுதியுடன் பேசத் தொடங்குகிறார்.
'இவளே என் மனைவி! எடுத்த சீர் தட்டங்களையெல்லாம் மீளவையுங்கள்.
மங்கள இசை மீண்டும் ஒலிக்கட்டும்! முகூர்த்தம் முடியப் போகிறது.
கூந்தல் அறுந்த இதே தோற்றத்தில் சிவனருட்செல்வி மணவறையில் வந்து அமரட்டும்.'

என்று கூறியபடி தானும் சென்று மணவறையில் அமர்கிறார் கலிக்காமர்.

🌊 🌊 🌊

இருபக்க உறவெல்லாம் அதிசயித்து நிற்கிறது.
'இப்படியொரு மருகனா?' சிவன் அருளை நினைந்து,
விம்மி அழுகிறார் மானக்கஞ்சாறனார்.
மருகன் என்றும் கருதாது கலிக்காமரை நோக்கிக் கையெடுத்து வணங்குகிறார்.
தந்தையின் நிலையையும் தனக்கு வாழ்வளிக்கும் தலைவனின் நிலையையும்,
நினைந்து உருகி நிற்கிறாள் சிவனருட்செல்வி.
'உன்னைப் போல் அதிஷ்டசாலி எவருளர்?' எனக்கூறி,
அவள் கன்னந்தொட்டுத் தடவி திருஷ்டி கழிக்கின்றனர் மூத்த சுமங்கலிகள்.
அவளின் தோழியர்க்கு அளவற்ற மகிழ்ச்சி.
நாணத்தால் தடுமாறி நிற்கும் அவளின் கைபிடித்து,
மணவறையில் அமர்த்துகின்றனர் அவர்கள்.
ஊர் மகிழ, உலகம் போற்ற சிவனருட்செல்வியின் கழுத்தில் மங்கலநாண் ஏறுகிறது.
இலட்சியவாதியான தன் கணவரின் முகத்தை,
நாணத்தைக் கூட மறந்து நிமிர்ந்து நோக்குகிறாள் சிவனருட்செல்வி.
அவளை அறியாது அவரை நோக்கி அவள் கைகள் குவிகின்றன.

🌊 🌊 🌊

என்றோ நடந்த சம்பவங்கள் நினைவில் வர,
இறந்து வீழ்ந்து கிடக்கும் கணவரை மீளப் பார்க்கிறாள் சிவனருட்செல்வி.
கவலையால் மருண்டு கிடந்த அவள் முகத்தில் இப்பொழுது ஒரு தெளிவு.
கூடிநின்ற உறவினர்களைப் பார்த்து நிமிர்வோடு பேசத் தொடங்குகிறாள் அவள்.

🌊 🌊 🌊

(சிவனருட்செல்வி தொடர்ந்து வருவாள்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்