'சிவனருட்செல்வி': பகுதி 06 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

றவெல்லாம் கதறி நிற்க,
தன் கண்ணீரை நிதானமாய்த் துடைத்துக் கொண்டு,
பேசத் தொடங்குகிறாள் சிவனருட்செல்வி.
'யாரும் அஞ்சாதீர்கள்! உடனடியாக உங்கள் கவலையை விடுங்கள்.
எங்கள் ஐயன் வெறுமனே இறந்துபோகவில்லை.
ஒரு நோக்கத்திற்காகவே தன் உயிரைத் துறந்திருக்கிறார்.
அவரது நோக்கத்தை நிறைவேறச் செய்வதுதான் எமது கடமையாகும்.
சுந்தரரைக் காண விரும்பாததாலேயே அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இப்போது நமது இல்லவாசலில் சுந்தரர் நிற்கிறார்.
எங்கள் தலைவர் இறந்த செய்தி சுந்தரருக்குத் தெரியக் கூடாது.
வீடுதேடி வந்திருக்கும் விருந்தினரான சுந்தரரை,
உபசரிக்காமல் விடுவதும் நாகரிகமல்ல.
எனவே, இறந்துகிடக்கும் நம் தலைவருடைய சடலத்தை,
உள்ளெடுத்துச் சென்று மூடிவையுங்கள்.
சுந்தரர் வந்துபோகட்டும். 
அதன் பிறகு செய்யவேண்டிய காரியங்கள்பற்றிச் சிந்திக்கலாம்'.

சிவனருட்செல்வியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கட்டளைகளாய்ப் பிறக்க,
உறவுகள் அதிர்ந்து நிற்கின்றன.

🌊 🌊 🌊

நேற்றுத்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
வழமைபோல அதிகாலையில் தன் இல்லக்கடமைகளைச் செய்ய எழுந்த,
சிவனருட்செல்விக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
வழக்கமாக, சற்றுத் தாமதமாக எழும் கணவனார்,
கட்டிலில் எழுந்து உட்கார்ந்து ஏதோ சிந்தித்தபடி இருக்கிறார்.
அவர் முகத்தில் கவலையின் ரேகைகள்.
கணவனாரின் கவலை முகத்தைக் கண்ட சிவனருட்செல்வி பதறுகிறாள்.
'சுவாமி என்ன நடந்தது? ஏன் இந்த அதிகாலையில் விழித்திருக்கிறீர்கள்?
இதென்ன, உங்களது முகத்தில் இவ்வளவு கவலை?
ஏது நடந்தது? தயைகூர்ந்து சொல்லுங்கள்.'
என,
விரிந்து கிடந்த தன் கூந்தலை முடித்துக் கொண்டு,
கட்டிலில் இருந்த கணவனாரின் காலடியில் உட்காருகிறாள் சிவனருட்செல்வி.

🌊 🌊 🌊

தனது தொடையில் தலைசாய்ந்து உட்கார்ந்த சிவனருட்செல்வியின் கூந்தலை,
கலிக்காமரின் கைகள் சிந்தனையோடு கோதுகின்றன.
'உனக்குச் சொல்லாமலா? நீ வேறு, நான் வேறா?
செல்வி! கடந்த சிலநாட்களாகச் சூலைநோயால் நான் வருந்துவதை நீ அறிவாய்.
ஏன் வந்தது என்று தெரியாமல் வந்த இந்நோய் என்னை வாட்டுகிறது.'

கலிக்காமர் முடிக்குமுன் பதறுகிறாள் சிவனருட்செல்வி.
'சுவாமி! நோயின் கடுமையால்த்தான் இப்படி வாடியிருக்கிறீர்களா?
ஐயோ! என்னை எழுப்பியிருக்கலாமே.
நேற்றைய வேலைப்பளுவால் சற்றுக் கண் அயர்ந்துவிட்டேன்.
எழுப்பியிருந்தால் ஏதேனும் செய்து தங்கள் துன்பத்தைக் குறைத்திருப்பேனே,'

கண்ணீர் சோரப் பேசுகிறாள் சிவனருட்செல்வி.

❖❖❖❖❖❖

அவள் துன்பம் கண்டு வருந்திய கலிக்காமர்,
அவசரமாய்ப் பேசத்தொடங்குகிறார்.
'செல்வி! இதென்ன கண்ணீர்? 
நோய் வாட்டியிருந்தால் உன்னை எழுப்பி இருக்க மாட்டேனா?
இது நோயால் வந்த கவலையில்லை! வேறு கவலை!
இந்தக் கவலையின் முன், நோய்க் கவலை இரண்டாம் பட்சமாகிவிட்டது.'

கலிக்காமர் சொல்ல, சிவனருட்செல்வியின் முகத்தில் மருட்சி.
'சுவாமி அதென்ன கவலை? உங்கள் மனம் நோக யாரேனும் நடந்தார்களா?
அல்லது நான் ஏதும் தவறு செய்துவிட்டேனா?'
சிவனருட் செல்வி பதற,
கலிக்காமர் மீண்டும் அவள் தலைதடவி ஆறுதல்ப்படுத்துகிறார்.

🌊 🌊 🌊

'பைத்தியக்காரி ஏன் பதறுகிறாய்?
இங்கு யார் என் மனம் நோக நடக்கப்போகிறார்கள்?
உன்னால் எனக்கு மகிழ்வைத் தவிர, கவலை என்றேனும் வருமா?
திருமணமாகி இத்தனை வருடங்களில்,
ஒருதரமாவது நான் கவலைப்படும்படி நீ நடந்திருக்கிறாயா?
இது வேறுவிடயம் செல்வி! பதறாதே நடந்ததைச் சொல்கிறேன்'
என்று 
கலிக்காமர் பேசத் தொடங்குகிறார்.

🌊 🌊 🌊

'நேற்று இரவு நீ வேலைக்களைப்பில் கண் அயர்ந்துவிட்டாய்.
சூலை நோயின் கடுமை, சற்றுத் தணிந்தாற்போல் தோன்ற,
நானும் மெல்லக் கண் அயர்ந்தேன்.
திடீரென யாரோ என்னைத் தட்டி எழுப்புமாப்போல் இருந்தது.
திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் ............,
அதை வார்த்தைகளால் நான் எப்படிச் சொல்வேன்?
என் குலம் முழுதும் ஆண்ட என் ஐயன் சிவனே,
என் கண்முன் நின்றுகொண்டிருந்தார்.
விதிர்விதிர்த்துப் போனேனடி.
உச்சியில் கரங்கூப்பிச் சிவனார் பாதங்களில் வீழ்ந்தேன்.
வீழ்ந்த என்னைத் தோள்பிடித்து அச்சிவனே தூக்கிவிட்டார்.
வழிந்த என் கண்ணீரைத் துடைத்தவர்,
பின் என்னை நோக்கிப் பேசத் தொடங்கினார்.'

🌊 🌊 🌊

''கலிக்காமா! சூலைநோய் உன்னைக் கடுமையாய் வருத்துகிறதா?
அஞ்சாதே! உன் துன்பம் விரைவில் தீர்ந்துவிடும்.
உன் 'சூலை' மாறுவதற்கான வழியைச் சொல்லத்தான் இங்கு வந்தேன்.
சுந்தரன் என்னும் என் அடியான்தான் உன் 'சூலை'யைத் தீர்க்கவல்லவன்.
அவன் வந்தால் ஒழிய உன் சூலைநோய் நீங்காது.'' என்றார் சிவபெருமான்.'

எனக்கூறி சற்று நிறுத்தினார் கலிக்காமர்.

🌊 🌊 🌊

சிவனருட்செல்வியின் கண்களில் ஆனந்த நீர் பொங்கிற்று.
'சுவாமி என்ன சொல்கிறீர்கள்?
நம் ஐயன் சிவனே இங்கு வந்தாரா?
உங்கள் சூலைநோய் நீங்கும் வழி சொன்னாரா?
இதென்ன ஆச்சரியம், என்னால் ஆர்வத்தைத் தாங்கவே முடியவில்லை.
தயைகூர்ந்து மேலும் என்ன நடந்ததென்று சொல்லுங்கள்'
என்றாள் சிவனருட்செல்வி.

🌊 🌊 🌊

இப்போது கலிக்காமர் முகத்தில் சோர்வு.
'பெண்ணே ஐயனின் வார்த்தைகளுக்கு நீயுமா மகிழ்கிறாய்.
சிவனார் சொன்னதில் எனக்குச் சிறிதும் மகிழ்ச்சி இல்லை.
நேரடியாகவே என் கருத்தை அவருக்குச் சொல்லிவிட்டேன்.
ஐயனே! நான், என் தந்தை, என் தந்தையின் தந்தை என,
என் தந்தையர் கூட்டமெல்லாம் பரம்பரையாக உன்னையன்றி யாரை வழிபட்டார்கள்,
அங்ஙனம் பரம்பரை பரம்பரையாக நீள நினைந்து,
மீளா அடிமைகளாய்த் திகழும் சந்ததியில் வந்த என் நோயைத் தீர்க்க,
நேற்று நீர் வலிந்து ஆண்டுகொண்ட ஒருவன் தானா வரவேண்டும்?
உன் பெருமை தெரியாத அவன் வந்துதான் என் நோய் தீரவேண்டுமென்றால்,
இச்'சூலை' என்னுடனேயே இருந்துவிட்டுப் போகட்டும்.
ஒருக்காலும் அச்சுந்தரனை அண்டி என் நோயைத் தீர்க்கமாட்டேன் என,
நான் உரைத்ததும் சிவனார் மறைந்துவிட்டார்.

🌊 🌊 🌊

'எல்லாம் ஒரே குழப்பமாய் இருக்கிறதடி பெண்ணே!
சிவனார் நேரில் வந்தாரா? கனவில் வந்தாரா? 
இதனைத் தெளியமுடியாமல் தத்தளிக்கிறது என் மனம்.
எது எப்படியிருந்தாலும் சிவனை இழிவு செய்த சுந்தரனை,
ஒருகாலும் என் நோய் தீர்ப்பதற்காய் அணுகமாட்டேன். 
இது உறுதி'
என்ற கலிக்காமரை,
வியப்பும் பெருமையும் தோன்றப் பார்க்கிறாள் சிவனருட்செல்வி.

(சிவனருட்செல்வி தொடர்ந்து வருவாள்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்