'சிவனருட்செல்வி': பகுதி 07 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ளம் பதைக்க நின்றுகொண்டிருக்கிறார் சுந்தரர்.
கலிக்காமரின் அரண்மனை வாசலுக்குத் தான் வந்து இவ்வளவு நேரமாகியும், 
அரண்மனையின் உள்ளிருந்து தன்னை அழைக்க யாரும் வராதது, 
அவர் மனதில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
மெய்யடியாரான கலிக்காமர் தன்னை மன்னிக்காமலே விட்டுவிடுவாரோ?
என்ற எண்ணமே சுந்தரரின் மனப்பதைப்புக்குக் காரணமாய் இருந்தது.
நடந்து முடிந்த சம்பவங்களை மீள நினைக்கிறார் அவர்.

🌊 🌊 🌊

இறைவரோடு கொண்ட நட்புரிமையால்,
தன் காதலி பரவையிடம்,
சிவனாரைத் தான் தூதனுப்பிய செய்தி கேட்டு,
கலிக்காமர் தன்மேல் கோபம் கொண்டிருக்கும் செய்தியை,
அடுத்தடுத்துப் பலரும் வந்து சொல்ல,
எப்படிக் கலிக்காமரின் கோபத்தைத் தீர்ப்பது எனும் வழி தெரியாமல்,
பலதரமாய் யோசித்தபின்பு, சிவனிடமே தான் சரணடைந்ததை,
நினைத்துக் கொள்கிறார் சுந்தர்.

🌊 🌊 🌊

சிவனார் தன் அடியவர்களை ஒன்று சேர்ப்பதற்கான,
சூழ்நிலையை உருவாக்குவதற்காய்,
கலிக்காமருக்குச் சூலைநோயை வரச் செய்தமையையும்,
சுந்தரரால்த்தான் அச்சூலைநோய் மாறும் என,
கலிக்காமரிடம் சென்று உரைத்தமையையும்,
சுந்தரர் வந்துதான் தனக்குச் சூலைநோய் மாறவேண்டுமென்றால்,
அதைவிட அச்சூலைநோய் தன்னுடனேயே இருந்துவிட்டுப் போகட்டும் என்று,
கலிக்காமர் சிவனிடமே கூறியதையும்,
சிவனாரே வந்து சொல்லக் கேட்டு,
தான் அடைந்த வேதனையை நினைந்து பார்க்கிறார் சுந்தரர்.

🌊 🌊 🌊

இறைவன் தன்மேல் கொண்ட பேரன்பை நினைந்து,
சுந்தரரின் மனம் கனிகிறது.- அவர் கண்களில் நீரூற்று.
உண்மையில், இறைவன் அச்சூலைநோயை,
குற்றம் செய்த தனக்கல்லவா தந்திருக்க வேண்டும்.
அங்ஙனம் எனக்குத் தண்டனை தந்து, 
கலிக்காமர் வந்தால்த்தான்,
அச்சூலைநோய் மாறும் என்று உரைத்திருந்தால்,
கருணை உள்ளம் கொண்ட கலிக்காமர்,
ஒருவேளை தன்னைத் தேடி வந்திருப்பாரோ?
முறைப்படி இறைவனார் அப்படித்தானே செய்திருக்க வேண்டும்.
தோழனான தன்மேல் கொண்ட பேரன்பால் எனக்குச் சூலைநோயைத் தர,
இறைவனார்க்கு மனம் இல்லாமல் போயிற்று போலும் என நினைந்தவர்,
ஐயன் தன்மேல் கொண்ட பெருங்கருணையை நினைந்து,
விம்மி அழுகிறார்.

🌊 🌊 🌊

கலிக்காமரின் வருகைக்காய் காத்திருந்த சுந்தரரின் மனம்,
தெளிவுற்று உறுதி பூணுகிறது.
கலிக்காமர் தன்னைத் தேடி வராவிட்டால் என்ன? 
நானாகச் சென்று அவர் பாதங்களில் வீழ்ந்தால்,
எப்படியும் அவர் என்னை மன்னிக்கத்தானே வேண்டும் எனும் நினைப்பு உந்த
சுந்தரர் உடனேயே  தனது பரிசனங்களுடன்,
கலிக்காமரின் அரண்மனையை நோக்கிக் கிளம்புகிறார்.

🌊 🌊 🌊

மனதில் ஓடிய எண்ண அலைகள் தடைப்பட,
சுந்தரர் சுயநினைவு பெறுகிறார்.
நடந்தவற்றை மீள நினைத்ததால் சுந்தரர் மனதில் பெரும் சோர்வு,
வெளியில் நின்ற அவர்மேல் சூரியனின் வெம்மைக்கதிர்கள் பாய,
'இவனுக்குமா என்மேல் வெறுப்பு?' என அவர் மனம் நினைகிறது.
'எத்தனை பெரிய தவறிழைத்துவிட்டேன்.
சிவன் எனக்கு மட்டுமா உரியவர்.
எத்தனை அடியார்கள் அவரை மனதிருத்தி வழிபட்டு நிற்கின்றனர்.
அத்தனை அடியவரது மனங்களும்,
பரவையிடம், தான் சிவனைத் தூதனுப்பிய செய்தியால் வருந்துமென,
என் புத்தி ஏன் நினையாமல் போயிற்று?'

நினைக்க, நினைக்கச் சுந்தரரின் மனதில் துன்பஅலைகள் பெருகின.
கலிக்காமரிடமிருந்து மன்னிப்புக் கிடைத்தால் ஒழிய,
இவ்விடத்தைவிட்டு நகர்வதில்லை என உறுதி பூண்கிறார் அவர்.
சூரியனின் வெம்மை அதிகரித்துச் செல்லவும்,
அதைத்தாங்கி அரண்மனை வாயிலைப் பார்த்தவாறு,
அசையாது அங்கேயே நிற்கிறார் சுந்தரர்.

🌊 🌊 🌊

சிவனருட்செல்வியின் உறுதியான வார்த்தைகளால்,
உறவு முழுவதும் அசைவற்று நிற்கிறது.
அவள் வார்த்தைகளை மீறும் துணிவு எவருக்கும் இல்லை.
வேறுவழியின்றி கலிக்காமரின் உடலை ஓர் வெண்துணியால் சுற்றி,
அரண்மனையின் மூலை ஒன்றில் கிடத்துகிறார்கள்.
அவர்கள் கண்களில் வெள்ளமாய் கண்ணீர் பாய்கிறது.

🌊 🌊 🌊

அசையாது நின்று உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த,
சிவனருட்செல்வியின் மனதில் தீர்க்கமான முடிவு உண்டாகியிருந்தது.
இல்லத்தலைவரின் இலட்சியத்தை நிறைவேற்றியபின்,
கணவனாரோடு சிவபதமடைவதென முடிவெடுத்திருந்த அவள்,
மிகத் தெளிவாகச் செயற்பட்டாள்.
மீண்டும் சிவனருட்செல்வியிடமிருந்து உத்தரவுகள் பிறக்கின்றன.
'உடனடியாக எல்லோரும் உங்கள் கண்ணீரைத் துடையுங்கள்,
நாம் நம் தலைவர்மேல் கொண்ட அன்பை அழுதுகாட்டுவதைவிட,
அவர் நோக்கத்தை நிறைவேற்றிக் காட்டுவதுதான் முக்கியமானது.
சுந்தரர் வந்து செல்லும் வரையும் இங்கு யாரும் அழக் கூடாது.
அதுமட்டுமல்ல, ஒருவர் முகத்திலும் சோகத்தின் சாயல்கூடத் தெரியக் கூடாது.
இயல்பாக இருப்பதுபோல் நம்மை மாற்றிக்கொண்டு,
நம் அரண்மனையை அலங்கரித்து மங்கள ஆரத்தியுடன்,
சுந்தரரை வரவேற்போம் வாருங்கள்!'
என,
உறுதியாய்ச் சொன்ன சிவனருட்செல்வி,
தன் கண்ணீரையும் துடைத்துக் கொண்டும்,
முகத்தில் பொய்யான புன்னகையைப் பூட்டிக்கொண்டும்,
முன்னே நடக்கத் தொடங்குகிறாள்.
வேறுவழியின்றி உறவுகளும் அங்ஙனமே அவளைத் தொடர்கின்றன.

🌊 🌊 🌊

திடீரெனக் கால்களின் அரவங்கள் கேட்க,
சுந்தரர் முகம் சூரியனாய் மலர்கிறது.
கோபம் மாறிய கலிக்காமர்,
தன்னை வரவேற்க உறவுகளுடன் வருகிறார் என்ற எண்ணம் மகிழ்வுதர,
கலிக்காமர் வந்ததும் அவர் பாதங்களில் வீழ்ந்து,
மன்னிப்புக் கோர வேண்டும் என நினைத்துக்கொண்டு,
கூப்பிய கரங்களுடன் காத்திருக்கிறார் சுந்தரர்.

🌊 🌊 🌊

அரண்மனை வாயில் மெல்லத் திறக்க,
கூட்டமாய் வந்த கலிக்காமரின் உறவுகள்,
சுந்தரரை வணங்கி வரவேற்கின்றன.
அவர்களைக் கைகளால் வணங்கியபடி,
கண்களால் கலிக்காமரைத் தேடுகிறார் சுந்தரர்.
அவருக்குப் பெரும் ஏமாற்றம்.

🌊 🌊 🌊

 (சிவனருட்செல்வி தொடர்ந்து வருவாள்)

 

 

 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்