'ஞானவதி' : பகுதி 03 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

றக்கத்தில் இருந்த கணவர்,
திடீரெனப் படுக்கையில் அங்குமிங்குமாய் உருண்டு,
'சிவசிவ, சிவசிவ' என்று பெரிதாய்ச் சத்தமிட,
ஞானவதியின் மனம் பதறுகிறது.
எண்ண அலைகள் நிற்கப் படுக்கையைவிட்டு எழுந்து,
பதறி அவர் அருகில் ஓடுகிறாள் அவள்.
'இனி உன்னைத் தீண்டமாட்டேன்' என,
காலையில் கணவர் இட்ட சபதம் நினைவில் வர,
அச்சபதத்தைக் காப்பது தன் கடமை என்று நினைத்த அவள்,
'சுவாமி, சுவாமி' என அவரைத் தீண்டாமலே அருகிருந்து எழுப்புகிறாள்.
 
🌼 🌼 🌼
 
ஞானவதியின் உரத்த அழைப்பால்,
திடுக்கிட்டுக் கண்விழித்த திருநீலநக்கர்,
படுக்கையில் எழுந்து உட்காருகிறார்.
அவர் மேனியெல்லாம் வியர்வையில் நனைந்து கிடக்கிறது.
கண்களிலிருந்து ஆனந்த அருவி பாய்கிறது.
தன்னை எழுப்பிய ஞானவதியை பக்தியோடு அவர் கண்கள் பார்க்கின்றன.
பின்னர், திடீரெனத் தன் கைகளை உச்சிமேல் குவித்து,
ஞானவதியை நோக்கித் தலை கவிழ்ந்து வணங்குகிறார் அவர்.
 
🌼 🌼 🌼
 
கணவரின் செயல்கண்டு பதறிப் போகிறாள் ஞானவதி.
காலையில் இட்ட சபதத்தைவிட கணவரின் இச்செயல்,
அவளை மிகவும் வாட்டுகிறது.
'சுவாமி இதென்ன வேலை? இவ் அபலையை நோக்கி,
தாங்கள் கையெடுத்துக் கும்பிடுவதா?
இதைவிடத் தாங்கள் என்னைக் கொன்றுபோட்டு விடலாமே,
என்னைத் தண்டிப்பதானால் வேறு வகையில் தண்டியுங்கள்.
இத்தகைய செயலைத் தயைகூர்ந்து செய்யாதீர்கள்.
காலையில் நான் செய்தது தவறுதான்.
சிவனார் மேல் சிலந்தி விழுந்த பதற்றத்தில்,
உங்களது மனம் உணராமல் நடந்துவிட்டேன்.
மீண்டும் மீண்டும் அதற்காக மன்னிப்புக் கோருகிறேன்.
இந்த ஏழையை மன்னித்து அருளுங்கள்'.
கணவனின் கால் அடியில் வீழ்ந்து கதறுகிறாள் ஞானவதி.
 
🌼 🌼 🌼
 
திடீரெனக் கணவரின் இருகரங்களும்,
தனது தோள்களைப் பற்றுவதை உணர்ந்து திடுக்கிட்டுப் போன ஞானவதி,
அவரின் கரங்களை விலக்கிப் பின்னால் நகருகிறாள்.
'சுவாமி சிவன் சந்நிதியில் வைத்து,
இனி உன்னைத் தீண்டமாட்டேன் என,
தாங்கள் இட்ட சபதத்தை உறக்கக் கலக்கத்தில் மறந்துவீட்டீர்கள் போல,
சிவன் முன்னால் இட்ட சத்தியத்தைத் தாங்கள் மீறலாமா?
தயைகூர்ந்து என்னைத் தொடாதீர்கள்.
தூரத்தில் இருந்தபடியே தங்களுக்குத் தொண்டியற்றி,
என் வாழ்நாளைக் கழித்து விடுகிறேன்.'
கூறியபடி ஞானவதி விம்மி அழ,
அருகில் வந்த திருநீலநக்கர் அன்போடு அவள் கைகளைப் பற்றுகிறார்.
 
🌼 🌼 🌼
 
'ஞானவதி நீ தவறிழைக்கவில்லை.
நான்தான் தவறிழைத்துவிட்டேன். 
இறைவன்மீது நீ வாயால் ஊதியதைக் கண்டு சகிக்காமல்,
நான் செய்த சபதம் எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை இப்போதுதான் உணர்ந்தேன்.
நான் சிவன்மேல் வைத்த பக்தியைவிட உன் பக்தி உயர்ந்தது என்பதை,
இறைவன் எனக்கு உணர்த்திவிட்டார்.
அதனால்த்தான் உன்னை நான் கையெடுத்துக் கும்பிட்டேன்.
இன்னும் ஆயிரம்தரம் உன்னை வணங்கினாலும் அது தகும்.'
என்று கூறியபடி மீண்டும் அவளை நோக்கி,
திருநீலநக்கர் வணங்கத் தலைப்பட,
'சுவாமி' என்று கூவியபடி அவர் காலில் வீழ்ந்து கதறுகிறாள் ஞானவதி.
 
🌼 🌼 🌼
 
அவளை ஆதரவோடு அணைத்துத் தூக்கி அழைத்துச் சென்று,
தன் படுக்கையில் தனக்கு அருகில் உட்கார வைக்கிறார் திருநீலநக்கர்.
'பெண்ணே உனக்கு என் மாற்றத்தைக் காண ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
அந்த மாற்றத்திற்கான காரணத்தைச் சொல்கிறேன் கேள்.
சற்று முன் உறக்கத்தில் கிடந்த எனக்குள் ஓர் கனவு வந்தது.
அக்கனவில் அயவந்திப் பெருமான் கங்கைவார் சடையராய்த் தோன்றினார்.
அவரது திருமேனியைக் கூர்ந்து கவனித்தேன்.
அந்தக் கொடுமையை என்னென்று சொல்வேன்?
என் ஐயனின் திருமேனி முழுவதிலும்,
சிற்சில இடங்கள் தவிர்ந்த மற்றைய இடங்களிலெல்லாம், 
பெரிய பெரிய கொப்பளங்கள் முளைத்திருந்தன.
அப்போது ஆச்சரியமாகச் சிவனார் என்னோடு பேசத் தொடங்கினார்.
''நீலநக்கா! என் உடலையெல்லாம் பார்த்தாயா?
உன் மனைவி ஞானவதி ஊதிய இடங்கள் தவிர,
மற்றைய இடங்களிலெல்லாம் சிலந்தியால் கொப்பளங்கள் முளைத்துவிட்டன.'
என்று கூறி மறைந்துவிட்டார்.
உணர்ச்சிவயத்தால் வார்த்தைகள் தடுமாற,
நீலநக்கரின் கண்களில் நீர் அருவியாய்ப் பொங்குகிறது.
 
🌼 🌼 🌼
 
'பெண்ணே! உன் பக்தியின் பெருமையை,
உன்னோடு இவ்வளவு நாள் வாழ்ந்தும் நான் உணரத் தவறிவிட்டேன்.
இறைவனே வந்து உணர்த்தும் அளவுக்கு,
உண்மை உணராமல் மூடனாய் இருந்துவிட்டேன், என்னே என் மடமை? 
இறைவனாரை நீ நேசித்த அளவு என்னால் நேசிக்க முடியாமல் போனதையிட்டு நாணுகிறேன்.
உன்னாலன்றோ இறைதரிசனமும், இறைவாக்கும் எனக்குக் கிடைத்தன.
உன்னைத் தண்டிக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது.
நீ தான் என்னை மன்னிக்க வேண்டும்.
மன்னிப்பாயா?' என அவள் கைபிடித்துக் கெஞ்சுகிறார் திருநீலநக்கர்.
 
🌼 🌼 🌼
 
ஞானவதி சிலையாக ஸ்தம்பித்து நிற்கிறாள்.
இவ் அபலைக்காக அவ் இறைவனே வந்தானா?
நினைக்க நினைக்க அவள் நெஞ்சம் உருகுகிறது.
உணர்ச்சி மிகுதியால் தளர்வுற்று கணவர் காலில் வீழ்ந்து மீண்டும் கதறுகிறாள் அவள்.
 
🌼 🌼 🌼
 
பெரியபுராணத்து அறுபத்துமூன்று அடியார்களுள்,
திருநீலநக்கருக்கும் ஓர் இடம் கிடைத்திருக்கிறது.
திருஞானசம்பந்தரின் திருமண வைபவத்தில் தோன்றிய சோதியில்,
வைகாசி மூல நாளில் திருநீலநக்கரும் இறையருள் எய்தினார் என்கிறார் சேக்கிழார்.
பெரியபுராணத்தில் திருநீலநக்கரின் மனைவியார் பெயர்கூடப் பதிவாகவில்லை.
கணவனாரோடு அவளும் சோதியில் கலந்தாளா? என்ற செய்தி பெரியபுராணத்தில் இல்லை.
 
🌼 🌼 🌼
 
தன்னை வெளிப்படுத்தாமல்,
பக்தியில் உச்சநிலையில் நின்று,
தனக்காகச் சிவனாரையே பேசவைத்த அப்பெண்ணின்,
சரியை, கிரியை, யோகம் கடந்த ஞானநிலையை உணர்த்துதற்காய்,
இக்காதையில் அவளுக்கு 'ஞானவதி' என நான் பெயரிட்டு இருக்கிறேன்.
கணவரைச் சிவனடியாராக்கி காலத்தினுள் மறைந்து போய் நிற்கும் இப்பெண்ணின்,
பெருமையை என்னென்பது?
மங்கையராய் வந்து பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்பது,
எத்தனை பெரிய உண்மை.
 
🌼 🌼 🌼
 
(ஞானவதி நிறைவுற்றாள்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்