'நாவலரும் பேர்சிவலும்' -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-

ஆறுமுக நாவலரின் நினைவுநாள் டிசம்பர் 5. ஆண்டுதோறும் அவர் நினைக்கப்படுகிறார். அவரை நினைக்கின்ற தேவை இன்னும் இல்லாமல் போய்விடவில்லை. 

அவர் தேசிய வீரர். தமிழ்ப் பாடலூக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ்ப் பதிப்பு வரலாற்றினை வெற்றிகரமாகத் தொடக்கி வைத்த ஆளுமை. ஈழத்து இலக்கியம் என்ற கோசத்தினை முன்மொழிந்தவர். தமிழ் வசனநடை கைவந்த வல்லாளர். இவ்வாறு, தமிழை அடுத்த கட்டத்துக்கு உயர்த்திய பெருமைக்குரியவர்.

அவர் ஆண்டுதோறும் நினையப்படுவதற்கான காரணங்கள் இப்படியாகப் பலப்பல உள்ளன. அவற்றால் ஈழத்தமிழர் வரலாற்றில் அவர் மிகவும் முக்கியமான ஆளுமையாகப் போற்றப்படுகிறார்.

அதேவேளை, அவர் தூசணைகளுக்கும் உள்ளாக நேர்ந்துள்ளது. அதற்கான காரணங்கள் சில தூசிப்பவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது நாவலரால் முன்வைக்கப்பட்ட கிறித்துவ சமய கண்டனங்கள். 

இக்கண்டனங்கள் மூலம், நாவலரை சமய வெறியராகக் காட்டப்படுகிறார். இது சரியா? 

பலரும் பல காரணங்களுக்காக நாவலரை நினைக்க, இங்கு நான் அவரை நினைப்பதற்குக் காரணம், கருத்தியல் ரீதியாக தன்னுடன் முரண் திசையில் நின்ற கிறித்துவர்களுடனும் அவர் நட்புடன் இயங்கிய அவரது உள்ளமேயாகும். 

அதற்கான நல்ல எடுத்துக்காட்டுத்தான், பேர்சிவல் பாதிரியாரோடு அவர் கொண்டிருந்த உறவு விளங்குகின்றது.
யார் இந்த பேர்ச்சிவல் பாதிரியார்? 

1814 இல் யாழ்ப்பாணத்தில், இலங்கையில் தொடங்கிய வெஸ்லியன் மெதடிஸ்த மிசனைச் சார்ந்து, பாதிரியாராக கிறித்துவ சமயப் பரப்புகைக்காக வருகைதந்த அவர், பாடசாலையைத் தொடங்கிய கல்விச் சேவையாளராகவும் தினவர்த்தமானி பத்திரிகையை வெளியிட்ட இதழியலாளராகவும், விளங்கினார்.  வாய்மொழி மரபுகளுள் ஒன்றான பழமொழிகளைத் தொகுத்தார், மாணவர் அகராதி உருவாக்கினார்.

அவர், 1840 இல் வேதாகம திருத்திய மொழிபெயர்ப்புக் குழுத் தலைவர் பொறுப்பும் ஏற்கிறார். நல்லதொரு மொழிபெயர்ப்பை பைபிளுக்கு வழங்கவென உழைத்த அவர், இதற்கென தம் கல்லூரி மாணவராக விளங்கிய நாவலரின் உதவியைப் பெறுகிறார். 
மாணவப் பருவத்திலேயே நாவலரின் இருமொழிப் புலமையைக் கண்ட பார்சிவல், கீழ்வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத்தையும், மேல் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழையும் பாடமாக நடத்துமாறு கூறியுள்ளார். 

பின்பு பேர்சிவல், நாவலரிடம் தானும் தமிழ் படித்துள்ளார். நாவலரை 'மம ருரு' என அழைக்கும் வழக்கம் அவருக்கு இருந்தது.

இதனால் ஏற்பட்டிருந்த அறிமுகம் காரணமாக இருவரும் எவ்வித வேறுபாட்டுணர்வும் இல்லாமல் பைபிள் மொழிபெயர்ப்புப் பணியை நிறைவேற்றுகின்றனர். முன்பு ஆறாண்டுகளாகப் பெரிய முன்னேற்றமில்லாது வந்த மொழிபெயர்ப்புப் பணி, நாவலர் ஈடுபட்டதன் பின்னர் ஈராண்டுகளில் (1848இல்)  நன்கு நிறைந்தது. 

நாவலர் முதன்முதலாகத் தமிழ்நாடு சென்றது பீற்றர் பேர்சிவலோடுதான். பைபிள் மொழிபெயர்ப்பின் பிரசுர அலுவல்களாக இருவரும் சென்றிருந்தனர். பின்னாளில், ஈழத்திற்குள் மட்டும் எல்லைப்படாமல், தமிழகத்தையும் தனது பணியிடமாகக் கொண்டு நாவலர் எழுச்சியடைய, இம் முதற் பயணம் கால்கோள் இட்டது. 

கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக வலுவான குரல் எழுப்பிய நாவலர், பாதிரிமார்கள் சைவத்தின் மீற் சுமத்திய குற்றங்களை, மறுத்தெழுதினார். அது தன் சுய சமயத்தைத் தாபிக்க அவர் மேற்கொண்ட கருத்தியல் பணி. 

மற்றபடி, பேர்சிவல் போன்ற உண்மையான கிறித்துவர்களை அவர் மதித்தார். நட்புப் பாராட்டினார். பேர்சிவலிடமும் இந்த உயர் குணம் இருந்துள்ளது. கடுஞ்சைவரான நாவலருடனான நட்பை அவர் தொடர்ந்துள்ளார். இக்குணமே இன்று பெரிதும் வேண்டப்படுகிறது.

இவ்வாறு, பன்முக ஆளுமைகொண்ட இருவர் - அதுவும் சமயத் தளத்தில் போட்டி மனோபாவத்தோடு எதிர் எதிர்த்துருவங்களாக இருந்த வேறுவேறு சமயங்களைச் சார்ந்த இருவர் - கொண்டும் கொடுத்தும் ஆற்றிய உறவில், தமிழ்மொழி வளங்கண்டதென்பது உண்மை.  

வேறுவேறு தளத்தில் நின்ற இருவர் எவ்வாறு நட்புடனும் அன்புடனும் இயங்கினார்கள் என்பது எம்மால் பார்க்கப்பட வேண்டும். எம்மால் படிக்கப்பட வேண்டும்.

சமயத்தை வைத்து மோதும் இன்றைய அறியாமை உலகத்துக்கு இதுவே நாவலர் தரும் செய்தியாகும். 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்