'பொன்னதனைச் சுட்டாற் போல் பொலிந்து மீள்வாள்!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உலகெங்கும் புகழ் கொண்ட பேச்சாளர் சகோதரி பாரதி பாஸ்கரின் உடல்நலக் குறை நீங்க வேண்டி அகில இலங்கைக் கம்பன் கழகத்தார் பிரார்த்தித்து நிற்கின்றனர்.
 
ள்ளமெல்லாம் நடுநடுங்கிப் போயிற்றம்மா!
உவப்பில்லா அச்செய்தி கேட்ட நேரம்
கள்ளமில்லா பாரதியின் நலத்தைப் பற்றி
கடுஞ்செய்தி முகநூலில் கண்டு நானும்
வெள்ளமெனச் சோகத்தில் வீழ்ந்து போனேன்
விதிர் விதிர்த்து எனதுள்ளம் துடித்துப் போனேன்
தள்ளரிய பெரும்புகழைத் தேடி நின்ற
தங்கைக்கோ இத்துயரம் தரித்ததம்மா!
 
மேடையிலே ஏறியவள் முழங்கி நின்றால்
மேன்மையுறும் நம் தமிழும் கற்றோர் போற்ற
சாடையிலே சரஸ்வதியாய் நின்று என்றும் 
சலிக்காமல் முகம் மலரச் சிரிக்கும் நங்கை
வேடமிலா நெஞ்சமதால் விரிந்த அன்பை 
வேற்றார்க்கும் அள்ளித்தான் விரும்பி நல்கி
ஓடை மலர்க் குளிர்ப்பார்வை தன்னால் ஈர்க்கும்
ஒப்பற்ற தங்கைக்கும் உறுமோ துன்பம்?
 
செந்தமிழைத் தன் தமிழாய் ஆக்கி வைத்து
செகமெல்லாம் பலர் நெஞ்சம் ஈர்த்து நின்றாள்.
சொந்தமென உலகெங்கும் வாழும் மக்கள்
சோதி முகம் கண்டேதான் மயங்கி நின்றார்.
அந்தமிலாப் பேரறிவால் அகிலம் ஈர்த்து
அன்னை இவள் நற்பொருளை ஆயும்போது
பந்தமொடு இவள் தன்னை உறவாய் எண்ணிப்
பாராத மனிதர்களும் உண்டோ கண்டீர்!
 
 புகழ் மலையின் உச்சியிலே நின்றபோதும்
பொருந்துகிற பண்பதனால் பணிந்தே நிற்பாள்.
அகமதனில் சிறிதேனும் பெருமை கொள்ளாள்.
அனைவரையும் உறவாக அணைத்து நிற்பாள்.
தகவுடைய பேருரைகள் செய்த பின்பும்
தாழ்ந்தேதான் அறிஞர்களைப் போற்றி நிற்பாள்.
இகமதனில் எளிமையுடன் உயர்வும் கொண்ட
இவள் தனையோ விதியதுவும் வாட்டிற்றம்மா!
 
மேடையிலே நிற்கையிலே சிங்கம்போல
மேன்மையுறக் கர்ச்சிப்பாள் கீழே வந்து
ஓடையிலே செல்கின்ற நீரைப் போல 
உயிர் ஈர்த்துக் குளிர்ந்தேதான் உரைத்து நிற்பாள்.
தேடுகிற செல்வமெல்லாம் பிறருக்கீவாள்.
தெய்வதமாய் உலாவந்து தேற்றம் செய்வாள்.
வாடுகிற நோயாலே வருந்தி இன்று
வனிதை இவள் வாடிடவே வையம் வாடும்.
 
இன்றுலகத் தமிழர்களின் இல்லமெல்லாம்
இனிமையுறு பண்டிகைகள் எழுச்சி கொள்ள
தன்னிகரில் இவள் உரைகள் தரவே வேண்டும்
தக்கபடி ராஜாவும் இவளும் மோத
விண் அதிரக் கரகோஷம் விளைந்து நிற்கும்
வேறெதுவும் வேண்டாவாம் மூத்தோரோடு
சின்னவரும் தமை மறந்து கேட்கும் தன்மை
சேர்த்தேதான் தமிழ் மகட்குப் பெருமை செய்தாள்.
 
எங்களுடைப் பேரறிஞர் பாப்பையாவும்
இவள் தன்னை மகளாக்கி மேடைதோறும்
பங்கமில்லாப் புகழ் உரைத்துப் பெருமை சேர்த்தார்.
பாரெல்லாம் இவள்தனையே பார்க்க வைத்தார்.
நங்கையிவள் நோயதனால் வாடி நிற்க
நலம் சேர்த்த ஐயாவும் தாங்குவாரோ?
பொங்குகிற துயரமதைப் போக்கி ஐயன் 
போற்றட்டும் வாழ்த்தாலே பொலிந்து மீள்வாள்.
 
என்னை அவள் தன் மனதில் ஏற்றி வைத்து
எத்தனையோ புகழ் வார்த்தை இயம்பிப் போற்றி
தன்னுடைய இலட்சியமாய்ப் பேசி நிற்பாள்.
தாயவளை நினைக்கையிலே உள்ளம் வாடும்
பொன்னை நிகர் அவளெங்கே? புறத்தே நிற்கும்
புன்மையனாம் நான் எங்கே? பொலிவாய் மீண்டும்
என்னுடைய மனங்குளிர மேடையேறி
எழுச்சியுடன் பேசிடுவாள் குளிரக் கேட்பேன்.
 
ஈழத்தில் கம்பனது கழகந்தன்னை
எப்போதும் உளங்கொண்டு சொந்த வீடாய்
ஆழத்தில் மனதிருத்தி ஆண்டுதோறும்
அன்போடு வந்து உரை ஆற்றிச் செல்வாள்
நீளத்துப் புகழ் கொண்ட பின்னும் இங்கு
நிதி தந்தால் வாங்காது நிமிர்ந்து நிற்பாள்.
காலத்தை வென்றன்னை மீண்டும் வந்து
களிப்போடு எமைத் தேடி வருவாள் கண்டீர்! 
 
மீண்டன்னை வந்திடுவாள் அஞ்ச வேண்டாம்
மிளிர்ந்திடுமாம் அவளாலே மேடையெல்லாம்
பூண்ட பெரும் புகழ் மேலும் வளர்ந்து நிற்க
பொன்னதனைச் சுட்டாற் போல் பொலிந்து மீள்வாள்
ஆண்டவனின் அருளாலே அவளால் எங்கும் 
அற்புதமாம் தமிழமுதம் பாய்ந்து நிற்கும்
நீண்டவளின் ஆயுளதும் நிலைத்து நிற்க 
நெஞ்சத்தால் கம்பனையே பணிந்து நின்றோம்.
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்