'மல்லிகை' ஆசிரியர் டொமினிக் ஜீவாவுக்குக் கழகத்தின் அஞ்சலி - 'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

'மல்லிகை' ஆசிரியர் டொமினிக் ஜீவாவுக்கு 
கழகத்தின் அஞ்சலி

'மல்லிகை' ஜீவா நேற்று தனது 94வது அகவையில் இயற்கை எய்தினார். கம்பன் கழகத்தை உயிராய் நேசித்த மனிதர். எமது நன்மை, தீமைகளை தனதாய்க்கொண்டு உணர்வுப் பிரதிபலிப்புச் செய்தவர். யாழ்ப்பாணத்தில் பெரிய படித்த மனிதர்களிடமும் இல்லாத வீரியமான ஆளுமையைக் கொண்டிருந்தவர். பல்கலைக்கழகம் தந்த கௌரவத்தை என் தகுதிக்கு இது காணாது எனத் தூக்கி எறிந்த வீரியன். இன்னும் எவ்வளவோ சொல்லலாம். இப்போது எழுதுபவை அவர் மறைவையொட்டி இரக்கத்தின்பால் எழுதுவதாய் அமைந்துவிடும். அவரைப் பற்றி எனது 'பழம் பண்டிதரின் பகிரங்கக் கடிதம்' எனும் நூலில் 1998 ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையினையும், அண்மையில் அவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையாய் இருந்த போது அவரை சந்தித்துவிட்டு 'காலம் விழுங்கக் காத்திருக்கிறது' எனும் தலைப்பில் வீரகேசரியிலும் உகரத்திலும் நான் எழுதிய கட்டுரைகளை அவரின் நினைவாக வெளியிடுகிறேன். நீளம் சற்று அதிகமாய்த்தான் இருக்கும். எனினும் அவரை நேசிப்பவருக்கு அக் கட்டுரைகள் பல நினைவலைகளை மீட்டலாம். அதற்காகவே இம்முயற்சி. கம்பன் கழகம் கண்ணீரோடு எங்களை நேசித்த பெரியவரின் பாதங்களை வணங்கி நிற்கிறது.
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

பழம் பண்டிதரின் பகிரங்கக்கடிதம்

(28.06.1998-தினக்குரல்)

ஈழத்தில் முப்பத்து மூன்று ஆண்டுகளாய் வெளிவரும்,
'மல்லிகை' எனும் சிறுசஞ்சிகையின் ஆசிரியர் இவர்.
தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த இவர் தன் சுயமுயற்சியால் இலக்கிய உலகில் பெயர் பொறித்தவர்.
நல்ல வருமானம் தந்த சிகையலங்காரத் தொழிலைக் கைவிட்டு,
சிறு சஞ்சிகை நடத்தத் துணிந்த சாதனையாளர். சாகித்திய அக்கடமி விருது பெற்றவர்.
ஈழத்தின் இலக்கிய வாதிகள் பலரை வெளிப்படுத்திய பெருமை கொண்டவர்.
மார்க்சீயக் கொள்கை கொண்ட முற்போக்கு இலக்கியவாதி.
'மல்லிகைப் பந்தல்' எனும் மல்லிகையின் உப அமைப்பின் மூலம்,
பல எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் முப்பத்து மூன்று நூல்களாய் வெளியிட்டிருப்பவர்.
இவரது முயற்சிகள் அனைத்தினதும் வெற்றிக்கு தனிமனித சாதனையே காரணம்.
27.06.1998 இல் நடைபெற்ற இவரது எழுபத்திரண்டாவது பிறந்தநாளை ஒட்டி,
இச்சாதனையாளருக்குப் பழம்பண்டிதர் எழுதிய பகிரங்கக் கடிதம்.
🦢 🦢 🦢
அன்புக்குரிய 'மல்லிகை' ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கட்கு,
வணக்கம். நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
நேற்ற எழுபத்திரண்டு அகவை எய்தியதாய் அறிந்தேன். மகிழ்ச்சி.
நூறாண்டு வாழ என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
எழுபத்திரண்டு வயதிலும், 'துள்ளும்' உங்கள் இளமை கண்டு,
என்னுள் பொறாமை துளிர்க்கிறது.
'பிறர் ஈன நிலை கண்டு துள்ளும்' பாரதியின் வாரிசு நீங்கள்.
வித்திட்டு, வரப்புகட்டி, நீர்பாய்ச்சி, உடன் விளைவு தரும் வீட்டுப்பயிராய் அல்லாமல்,
கண்காணாச் சிறுவிதையாய், எச்சங்கலந்து, எங்கோவிழுந்து,
மண்கீறி, வேர்விட்டு, மழைநம்பி, மரபுமீறி,
எங்கிருந்து வந்ததென எண்ணுமுன்...கிளையாகி, கொப்பாகி, மரமாகி,
அசைக்கமுடியாத உறுதியுடன் நிற்கும் ஆலமரமாய்த்தான்,
நீங்கள் என் அகத்தில் படுகிறீர்கள்.
எவர் துணையும் இன்றி தனித்துத் தானே வளரினும்,
பழிவாங்கும் உணர்வின்றிப் பலருக்கும் நிழல் செய்யும்,
அவ் ஆலமரப் பண்பு அப்படியே உங்களிடம்.
இன்று எத்தனையோ வித்துக்கள் உங்களால் உருவாகி, ஊரெல்லாம் ... ஏன்?
உலகெல்லாம் நிறைந்தபடி விழுதுகள் மண்தொட்ட பின்னும்,
இன்றும் அவற்றைச் சுமந்தபடி நிற்கும் உங்கள் கம்பீரம்,
எனக்கு நிரம்பப் பிடிக்கிறது.
வேண்டாத விழுதுகளை உதற நினைக்காத,
உங்கள் உண்மை கண்டு மகிழ்ந்து போகிறேன்.
இத்தனைக்கும் சுமப்பார் எவருமின்றி 'சுமை' யுடன் முன்னேறியவர் தாங்கள்.
சான்றோர்தம் சிந்தனையில், 'வர்ணமாய்ப்' பிரிவுற்ற சமூகத் தத்துவம்,
வக்கிரமுற்ற நம் மானுடக்கீழ்மையால் ....'சாதி'களாகி,
சழக்குகளும், வழக்குகளும், சண்டைகளும் உருவாக்க,
பிளவுற்ற நிலையில் பேதைமை மாறாமல் 'வரலாறாய்த்' தொடரும் சாதிய வக்கிரத்துடன்,
நீண்ட நாளாய் நம் தமிழினம்.
வள்ளுவனும், கம்பனும், பாரதியும்.... மல்லுக்கட்டியும் மாறாத கீழ்மையுடன்,
இன்றும நம் தமிழ்ச்சாதி அனைத்திலும் இருந்த யாழ்ப்பாணத்தானின் உறுதி,
இந்த அழுக்கிலும் அமைந்தது அதிர்ஷ்டயீனமே.
தனிக்கோயில், தனிக்கிணறு, தனிப்பேணி என,
தன் சக மானுடனைத் தள்ளிவைப்பதிலேயே,
'தனி'த்துவம் பேணி, 'உயர்சாதி' என மிடுக்குக்காட்டிய உலுத்தர்கள் மத்தியில்,
அதிசயமாய், மண்புழுவாய்க் கிடந்த நீங்கள், மலைப்பாம்பாய்ப் பலம் பெற்று எழுந்தீர்கள்.
எழ வைத்தது 'பொதுவுடமைத் தத்ததுவம்' எனும் உண்மை தெரிய,
கற்காவிடினும், 'மார்க்ஸ்' எனும் முனிவனை, மதிக்கத் தோன்றுகிறது.
மாகாளி கண்வைக்க, 'ஆஹா' என்று எழுந்த 'ருஷ்ய' யுகப்புரட்சி யாழ் மண்ணையுந் தொட்டது.
அப்புரட்சியால் உந்தப்பட்டு அடக்கு முறையைத் தலைவிதியாய் ஏற்றுத்தாழ்ந்து கிடக்காமல்,
தனித்துவம பேணித் தலை நிமிர்த்திய .. ஈழத்தின் முதல் 'இலக்கியச் சூரியன்' நீங்கள்.
உதிக்கும் சூரியனின் முதற்கீற்றை, மின்மினியாய் நினைத்து, மிதிக்க நினைத்தோர் பலர்.
மிதிக்க நினைத்தோரை, மதிக்க வைத்தது உங்கள் மாண்புறு சாதனை.
இன்றும், உங்கள் 'புறம்' நின்று, சாதிச் சழக்குரைக்கும், 'இலக்கியக் கீழ்மக்கள்' இல்லாமலில்லை.
அஃதறிந்தும், அறியார்போல் அவர்களையும் அணைத்து நிற்கும் உங்கள் பண்பு பிடிக்கிறது.
உங்கள் மாறாப் பிடிவாதத்தினால் மறுதலித்தவர்களையெல்லாம் மண்கவ்வ வைத்தீர்கள்.
அந்தப் பிடிவாதம்தான் உங்கள் பலம்.
ஒரு குடும்பத்தலைவனாய் இருந்து கொண்டும், 'சோறிட்ட' தொழிலை உதறி,
'இனி இலக்கியமே என்வாழ்வு' என அறிவிக்க பிடிவாதமுள்ள உங்களால் மாத்திரமே முடியும்.
'மண் குதிரையை நம்பி ஆற்றிலிறங்கிய' கதையாய் 'மல்லிகை' எனும் சிறு சஞ்சிகையை நம்பி,
'புருஷ இலட்சணம்' துறந்த புரட்சியைச் செய்தீர்கள்.
அம் மண் குதிரைக்கு, உயிர் கொடுத்து, ஓடவைத்து, வெற்றி கொண்ட,
உங்கள் 'சித்து' வேலை கண்டு, இன்று தமிழகமும் வியந்து நிற்கின்றது.
அன்றைய நிலையில் தாழ்வுற்ற தனிமனிதனாய்,
நீங்கள் எதிர்கொண்டிருக்கக்கூடிய பிரச்சினைகளை எண்ணிப் பார்க்கின்றேன்.
அத்தனை இடர்களையும் எங்ஙனமாய்ச் சமாளித்தீர்களோ?
வழி மறைக்காமல் துணைநின்ற உங்கள் குடும்பத்தை வணங்கத் தோன்றுகின்றது.
ஒதுக்கப்பட்ட பாதிப்பின் எதிர் விளைவாய், 'மறுதலிப்பை' உங்கள் மனதுட் புகவிடாமல்,
அனைவரையும் அரவணைத்து, நீங்கள் ஏற்று நிற்பது, ஆச்சரியமே!,
தனிவாழ்வுப் பாதிப்புக்களின் பழிவாங்கும் கருவியாய்,
இலக்கியத்தை மாற்றாத உங்கள் ஏற்றம் கண்டு மகிழ்கிறேன்.
'சாதிப்பிரச்சினையில் முன்னின்று போராடிய ஜீவா,
இனப்பிரச்சினையில் ஏதும் செய்யவில்லை'.... என, உங்கள்மேல் ஒரு குறையுண்டு.
மனிதர்களை வேறுபடுத்தும் எந்தக் கொள்கைகளையும் தாங்கள் ஏற்காததற்கு,
'அடிபட்ட' தங்களின் ஆரம்ப மனநிலையே, அடிப்படை என்பதறிவேன்.
அதனாற்தான், தமிழர்தம் இனப் போராட்டத்தை,
தாங்கள் புறக்கணித்தீர்கள் என்பது என் கருத்து,
அம்முடிவில் தங்களோடு நான் முரண்படினும்,
வடக்கில் ஒன்று, கிழக்கில் ஒன்று, தெற்கில் ஒன்றாய்ப் பேசும்,
சந்தர்ப்பவாதப் 'பேரறிஞர்களை'(?) விட,
சரியோ, பிழையோ 'இது தான் நான்' எனச் 'சுயம்' காட்டும்.
உண்மைத்தன்மை கொண்ட உங்களை மதிக்கத் தோன்றுகிறது.
எது எப்படியோ உழைப்பால் உயர்ந்த உங்களை எவரும் மதிக்காமலிருக்க முடியாது.
முப்பத்து மூன்றாண்டுகளாய் 'மல்லிகையை' நடாத்துவதோடு முப்பத்து மூன்று நூல்களையும்,
'மல்லிகைப் பந்தல்' மூலம் வெளியிட்டிருக்கும், உங்கள் முயற்சி நிச்சயம் 'அசுர' சாதனைதான்.
என்றோ நம் பல்கலைக்கழகங்கள் உங்களைப் பாராட்டியிருக்க வேண்டும்.
கருத்துக்காக இல்லையெனினும் உழைப்புக்காகக் கட்டாயம் செய்திருக்கலாம்.
மண்ணோடு கலந்தால்தானே அவர்களுக்கு மனிதர்களைத் தெரிந்திருக்கும்.
மூடிக்கட்டிய மதில்களினுள்ளே கூடு கட்டிக் குதூகலிக்கும் குருவிகள் அவர்கள்.
எவர்க்கும் நிழல் செய்ய விரும்பாத அப்'பட்ட'மரங்களும்,
தம் பட்டங்களுக்காக மல்லிகையில் கட்டுரைகள் வரைந்தன.-களம் கொடுத்தீர்கள்.
எவர் மறந்தாலும் ஈழத்து இலக்கிய உலகம் தங்கள் பெயரை,
பொன்னெழுத்தில் பொறித்து வைக்குமென்பது சர்வநிச்சயம்.
🦢 🦢 🦢
இத்தனையும் கிடக்க, உங்களைப் பற்றி,
விடைகாண முயலும் கேள்விகளும் என்னுள் உண்டு.
'சாதியரக்கனை' எதிர்த்து, 'பேனா வாளோடு' போர்க்களம்  புகுந்தீர்கள்.
அவனை அழித்துவிட்டீர்களா? 'ஆம்' என நீங்கள் சொன்னால் அது பொய்.
புறமுதுகிட்டு ஓடிய அவனைப் போரில் வெற்றிகொண்டதாய் மகிழாதீர்கள்.
அவன் ஓடியது உங்கள் எழுத்துக்களாலல்ல.
இம்மண்ணில் எழுந்த இனப்போர்.
அச் சாதி அரக்கனைச் சற்றுப் பின்வாங்க வைத்திருக்கிறது. அவ்வளவே.
தக்க பலத்தோடு மீண்டும் தலைதூக்குந்தருணம் பார்த்திருக்கின்றான் அவன்.
ஓடிவிட்டதாலேயே, ஒழிந்து விட்டான் என நினைந்து விடாதீர்கள்.
தனிமனிதனாகிய உங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்.
தாழ்த்தப்பட்ட அனைவருக்கும் கிடைத்த அங்கீகாரமாய் மயக்கம் செய்யும்.
இன்றும், 'ஜீவா எதை வெட்டித் தள்ளினார்?' என்றும்,
'டானியல் எதை வெளுத்துக்கட்டினார்?'
என்றும் குறிப்புப் பொருளில் சாதிபேசும் வஞ்சகர்கள் உளர்.
வருந்த வேண்டிய உண்மையாய்,
உங்கள் முற்போக்கு இலக்கிய வட்டத்துக்குள்ளேயே அவர்களும்.
ஆதலால் பொன்னாடைகளும், புகழ் வார்த்தைகளும், உங்கள் போர்க்குணத்தை,
மழுங்கச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
தாழ்த்தப்பட்டோருக்கான போராட்டத்தில்,
மல்லிகையின் ஆக்கங்கள் செய்த தாக்கம் பற்றி ஆராய்ந்தால்...
நீங்கள் மகிழத்தக்க விடை கிடைக்குமா? சந்தேகம் தான்...
இனியேனும் மல்லிகை, பண்டிதர்கள் கைவிட்டு, பாமரர்கள் கைசேரட்டும்,
'ஜனரஞ்சகப்' பெயர் நீக்கத்துக்காக மட்டுமாய்,
படிப்பாளிகளை மல்லிகையில் 'வறட்டி' தட்டவிடாமல்,
அதனை மக்களுணர்வால் வளப்படுத்துங்கள். மூன்று தசாப்த முடிவின் பின்.
சொல் புதிது, பொருள் புதிது, சோதிமிகு வடிவமென, 'மல்லிகை' மலராவிட்டால், 
முதுமை சூழ, தலைமுறை இடைவெளியால் 'மல்லிகை' தனித்துப்போகும்.
எழுபத்திரண்டு வயதிலும் இளமையுடன் இருக்கும் நீங்கள்,
முப்பத்து மூன்று வயது மல்லிகையை முதுமையடைய விடலாமா?
உங்கள் இளமையைவிட மல்லிகையின் இளமை, எனக்கு முக்கியமாய்ப்படுகிறது.
புரட்சி உங்களுக்குப் புதியதல்ல.
உங்கள் 'மறுபுரட்சிக்காய்' வாசகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
அவர்தம் மகிழ்வுக்காய், தோள்தட்டி வாளெடுக்கத் துணியுங்கள்.
எதிர்பார்ப்புடன் நாம்.
இங்ஙனம்
பண்டிதன்.


காலம் விழுங்கக் காத்திருக்கிறது!

(19.07.2020-வீரகேசரி)
 

ள்ளம் கனத்துப் போயிற்று.
திடீரென மனம் உந்துதல் செய்ய எழுத்தாளர் டொமினிக் ஜீவாவை நேற்றுப் போய்ப் பார்த்தேன்.
'அதிர்ந்தேன்' என்ற சொல் என் உணர்வை வெளிப்படுத்தப் போதாது என்றே நினைக்கிறேன்.
ஒற்றை உடையோடு சுருண்டு கிடந்தார். கடந்த சில நாட்களாக நீராகாரம் மட்டும்தானாம். 
சொல்லி வருந்தினார் மருமகள். அவர் கண்களில் ஒரு மகளுக்கான வாட்டம்.
உடம்பு உயிரைப் பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருக்கிறது.
சிங்கம் போலக் கர்ச்சிக்கும் அவரது வாய், வார்த்தைகள் தேடித் தத்தளிக்கின்றது.
காதருகில் சென்று நான் சத்தமாய் அழைக்க மெல்லக் கண் திறந்தவர்,
அந்த நிலையிலும் என்னை அடையாளம் கண்டு கையெடுத்துக் கும்பிட்டார்.
வாயில் சிறிய புன்னகை வேறு. நெஞ்சு கலங்கிவிட்டது!
🌺 🌺 🌺
காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.
40 ஆண்டுகளுக்கு முன் நான் சந்தித்த ஜீவா மனதில் வந்தார்.
பழைய பண்டிதர்களைப் போல கைநீண்ட வெள்ளை நஷனல், வெள்ளை வேட்டி.
எப்போதும் கையில் கர்ப்பந்தரித்த ஒரு பை இருக்கும். அதன் உள்ளே 'மல்லிகை'கள்.
கண்டவர்களுக்கெல்லாம் விபூதி கொடுக்கும் சுவாமிமார் போல,
தெரிந்தவர்களுக்கெல்லாம் ஒரு 'மல்லிகை'யை நீட்டுவது ஜீவாவின் வழக்கம்.
சிலர் காசு கொடுப்பார்கள். பலர் கொடுக்காமலே வாங்கிச் செல்வார்கள்.
கொடுக்காதவர்களில், வாய்ச்சொல் அருளும் கல்விமான்கள் தொகையே அதிகம்.
🌺 🌺 🌺
மல்லிகை என்றால் என்ன? என்று சொல்லாமலே விபரித்துக் கொண்டு போகிறேன்.
ஜீவா இயங்காமல் ஒடுங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய தலைமுறையினருக்கு,
ஜீவாவையோ 'மல்லிகை'யையோ தெரிந்திருக்க நியாயம் இல்லை.
அவர்களுக்காக 'மல்லிகை' பற்றி ஒரு சிறு அறிமுகம்.
'மல்லிகை' என்பது ஜீவாவின் அடையாளம். 'மல்லிகை' என்பது ஜீவாவின் இலட்சியம். 
'மல்லிகை' என்பது ஜீவாவின் தொழில். 'மல்லிகை' என்பது ஜீவாவின் உயிர்.
ஜீவாவால் வெளியிடப்பட்ட சிறு சஞ்சிகையே 'மல்லிகை' என்ற அறிமுகம்,
நிச்சயம் போதாது என்ற காரணத்தினாலேயே மேல் வரிகளை எழுதினேன்.
🌺 🌺 🌺
சவரத்தொழிலாளர் குடும்பத்தில் இருந்து வந்த ஜீவா, 
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தனது சுயமுயற்சியால்,
'மல்லிகை' என்ற இலக்கிய சஞ்சிகையை வெற்றியோடு நடாத்தினார்.
ஆரம்பத்தில் சொந்தமாய் 'சலூன்' வைத்துத் தொழில் செய்தவர் அவர்.
அவரது சலூன்தான் 'மல்லிகை' சஞ்சிகையின் பிறப்பிடமாயிருந்தது.
🌺 🌺 🌺
ஜீவாவின் ஆளுமை எனக்கொரு ஆச்சரியம்.
பெரும்பெரும் பேராசிரியர்கள் பலரும் கூட ஜீவாவுக்கு முன்னால்,
பெட்டிப்பாம்பாய் அடங்கி, ஒடுங்கி நின்றதைப் பார்த்திருக்கிறேன்.
யாழ் பல்கலைக்கழகம் அவருக்கு பட்டம் தந்து கௌரவிக்க முன்வர,
அப்பட்டம்  தகுதியற்றது எனக் கூறி அதனை நிராகரித்த ஆண்மையாளர்.
மண்ணுள் புதைந்த ஒரு ஆலம்வித்து விருட்சமாகி விரிவது போல,
அடக்குமுறைகளைத் தாண்டி சுயமுயற்சியால் வளர்ந்து, விரிந்து, நிமிர்ந்தவர் அவர்.
எத்தனையோ இலக்கியவாதிகளை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி நிழல் செய்தவர்.
அவரைப் பொறுத்தவரை மல்லிகைதான் எல்லாமே.
🌺 🌺 🌺
யாழ் ராஜா தியேட்டருக்கு அருகில் இருந்த சிறிய சந்துக்குள்தான் அவரது அலுவலகம்.
மல்லிகையை, ஒற்றைத் தொழிலாளியும் தானுமாய் இருந்து,
தொடர்ந்து வெளியிட்ட அவரது சாதனை 'கின்னஸ்' புத்தகத்தில் பதியப்படவேண்டியது.
ஜாதியால் நசுக்க நினைத்த சமூகம் ஒருபுறம். கல்வியால் நசுக்க நினைத்த அறிவுலகம் மறுபுறம்.
பொருளாதாரப் பாதிப்புற்ற குடும்பச் சூழ்நிலை வேறொருபுறமுமாய் இழுக்க,
இத்தனையையும் தாண்டி எவருடனும் சமரசம் ஏதும் செய்து கொள்ளாமல், 
நிமிர்ந்து நின்றதால், அந்த மனிதன் என் நெஞ்சச் சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
🌺 🌺 🌺
பெரும்பாலும் பேச்சாளர்கள், எழுத்தாளர்களாய் இருப்பதில்லை.
எழுத்தாளர்கள் பேச்சாளர்களாய் இருப்பதில்லை. இரண்டிலும் வெற்றிபெற்றவர் ஜீவா.
மேடையேறி அவர் முழங்கினால் அடுத்த  நிமிடம் சபை அடங்கிப்போகும்.
உயர்ந்த பிறகும், தனது அடையாளத்தை உரத்துச்சொல்லத் தவறாத ஆண்மையாளர்.
ஆரம்பத்தில் யாழ் சமூகம் அவருக்குக் கொடுத்த தொல்லைகள் ஒன்றிரண்டு அல்ல.
சிறிது சிறிதாய்ச் சேர்த்த பணத்தில், மசாலைத்தோசை சாப்பிட உட்கார,
ஜாதியால் இனங்காணப்பட்டு 'தாமோதரவிலாஸிலிருந்து' துரத்தப்பட்ட கதையை,
மேடைகளில் மனவருத்தத்தோடு பலதரம் பகிர்ந்திருக்கின்றார்.
அக்காலத்தில் விரிந்த 'மாக்ஸிஷ' தத்துவத்தின் எழுச்சியால்த்தான்,
ஜீவா போன்றவர்களால் நம் சமூகத்தில் தலைநிமிர முடிந்தது.
🌺 🌺 🌺
ஜீவாவின் போராட்டத்தின் வெற்றியை, நான் கண்ணாரக் கண்டேன்.
அக்காலத்தில் யாழில் ஜாதி அடக்குமுறையின் இருப்பிடங்களில் ஒன்றாக,
மாவிட்டபுரம் கோயில் கருதப்பட்டது. ஜாதிப் போராட்டங்கள் பல நடந்த இடமது.
பின்னர் அவ் ஆலயத்தின் ஆதீனகர்த்தராக இருந்தவர் சண்முகநாதக் குருக்கள் அவர்கள்.
அவரும் ஒரு புரட்சியாளர், சிந்தனாவாதி, இலக்கிய ஆர்வலர்.
கோயிலுக்குள் இருந்த அவரது வீட்டில் எனக்கும், ஜீவாவுக்கும், 
எழுத்தாளர் சோமகாந்தன் ஐயாவுக்கும் ஒருமுறை குருக்கள் விருந்திட்டார்.
தன்கையாலே வெற்றிலை மடித்து எங்களுக்குத்  தந்தார்.
எந்தக் கோயிலுக்குள் குறைந்த ஜாதிக்காரர்கள் வரக்கூடாதென்று சொல்லப்பட்டதோ,
அதே கோயிலுக்குள் அக் கோயிலின் தலைமைக் குருக்களே ஜீவாவுக்கு விருந்திட்டு, 
வெற்றிலையும் மடித்துக் கொடுத்தது இன்றும் என் கண்களில் நிழலாடுகிறது.
ஜீவா, குருக்கள் இருவருமே அன்று என் மனச்சிகரத்தில் ஏறினார்கள்.
🌺 🌺 🌺
இலக்கியத்தில், நான் முழுக்க முழுக்க மரபுவாதி, ஜீவா முழுக்க முழுக்க புதுமைவாதி.
ஆனாலும் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராய் நேசித்தோம்.
தனது மகனின் திருமண நிச்சயத்தை எங்களது கம்பன் கோட்டத்தில்தான்,
செய்யவேண்டும் என்று பிடிவாதம் பிடித்துச் செய்வித்தார்.
அதுபோலவே நானும் எனது தங்கையினதும் குமாரதாசனதும் திருமணத்தின் போது,
ஜீவாவைத்தான் முதற்சாட்சிக் கையெழுத்துப் போடவைத்தேன்.
யாழ் கோட்டை தாக்கப்பட்டபோது எங்களுடன் சிலகாலம் அவர் சீவித்தார்.
அப்போது எதிலும் வரம்புமீறா அவரது நாகரிகம் என்னை ஈர்த்தது.
உணவு, உறக்கம், உரையாடல் என  எல்லாவற்றிலும் கட்டுப்பாடு பேணினார்.
தனது சுயத்தை என்றும் எவருக்கும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை.
கொழும்புக்கு வந்தும் அதே வேகத்துடன் இயங்கிய அவர்,
ஆரோக்கியத்துடன் இருக்கும் போதே,
திடீரெனத் இலக்கிய உலகைவிட்டு ஒதுங்;கிக் கொண்டது ஒரு ஆச்சரியம்.
🌺 🌺 🌺
சில ஆண்டுகளுக்கு முன் அவரைச் சந்திக்கப் போன போது மகிழ்ந்து வரவேற்றவர்,
பின்னர் என்னை அனுப்பி வைப்பதிலேயே குறியாய் இருந்தார்.
தன் இயலாமையை மற்றவர்கள் அறிவதை அவர் விரும்பவில்லை.
பல வருடங்களின் பின் நேற்றைய சந்திப்பு நிகழ்ந்தது.
ஒருசில விநாடிகள்தான். வணங்கி விடைபெற்றேன்.
எத்தனையோ இலக்கியவாதிகளை இனங்காட்டிய மனிதன்.
யாழ்ப்பாணத்தின் ஜாதி எனும் இரும்புக்கோட்டையினை உடைத்தெறிந்த மனிதன்.
ஈழத்து இலக்கியத்திற்கு முகவரி தந்த மனிதன்.
இன்றைக்கு மகனாலும்  மருமகளாலும் மட்டும் பராமரிக்கப்பட்டுக் கிடக்கிறார்.
கவிஞர் மேமன்கவி மட்டுமே இன்றும் அவர்களுடனான நெருங்கிய தொடர்பில்.
இவ் அரிய தொண்டுக்காக அம்மூவர் இருக்கும் திசைநோக்கித் தொழுகின்றேன்.
🌺 🌺 🌺
பெரும்பாலும் இலக்கிய உலகம் ஜீவாவை மறந்துவிட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
இக்கட்டுரையைப் படித்ததும் ஒருசிலர் ஜீவாவைப் பார்க்கப்புறப்படலாம்.
அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயைகூர்ந்து ஜீவாவின் தனிமையைக் குழப்பாதீர்கள்!
இக்கட்டுரையை ஜீவா படிக்கவேண்டும் என்று என் மனம் விரும்புகிறது.
ஆனால் அது நடக்கப்போவதில்லை என்பதும் தெரிகிறிது.
பெரும்பாலும் ஜீவா என்ற அந்தப் புரட்சியாளரின் வாழ்வு,
இன்னும் சில நாட்கள் அல்லது சில வாரங்களாகத் தான் இருக்கும் போல் தெரிகிறது.
அவரது காலம் நீள்வதை விட குறைவதைத்தான் அவரும் விரும்புவார்.
பலரையும் வென்று நின்ற ஒரு புரட்சியாளனை காலம் வெல்லக் காத்திருக்கிறது.
🌺 🌺 🌺
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்