"வாய்ச் சொல்லும் செயல் வீரமும்" - பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்

து இளைஞர்களின் வாரமோ என்று நினைக்கத்தோன்றுகிறது.
சமூக வலைத்தளங்களில் எல்லாம் அரசியல் மற்றும் விளையாட்டுத்துறை சார் இளவல்களின் ஆற்றல்கள்தாம் காணொளிகளாக உள்ளன. 
அரசியலும் ஒரு விளையாட்டுத்தான். அந்த விளையாட்டை அழகாக விளையாடினார் கஜேந்திரகுமார். பாராளுமன்றில் அவர் அண்மையில் ஆற்றிய உரை, பெரும்பான்மை நெஞ்சங்களைத் தீயாய்த் தொட்டது உண்மை.

எங்கே எதிர்முகாமில்  ஒருவர் பேசினால், கூட்டமைப்பில் ஒருவரும் பேசவில்லையா? என்ற தோரணையில் அடுத்து பந்தாடியவர் சாணக்கியன்; 
கஜேந்திரகுமார் ஒரு மொழியில் பந்தாட, சாணக்கியனோ மும்மொழிகளிலும் விளாசினார். துணிகரமாக மன்றில் நேரடியாகக் கருத்துக்களை முன் வைப்பதும் அவற்றைப் பேச்சாற்றலோடு வெளிப்படுத்துவதும் பாராட்டற்குரியன. 
எனினும், இப்பேச்சுக்களால் விளையக்கூடிய நன்மைகள் எவை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

யாருக்காக இப்பேச்சுக்கள்? மன்றில் அமர்ந்திருக்கும் பெரும்பான்மை இனப்பிரதிநிதிகளைக் கோபப்படுத்தவா? அல்லது தம்மை மன்றுக்கு அனுப்பிய சிறுபான்மை இன மக்களை உணர்ச்சிவசப்படுத்தவா? 
ஏற்கனவே, கையாலாகாத நிலையில் இருக்கும் தமிழினத்தின் பிரதிநிதிகளாக இருந்து, இன்று அனைத்தையும் சாதிக்கக்கூடிய வல்லமையோடு ஆட்சி பீடம் ஏறி இருக்கும் அவர்களைத் தொடர்ச்சியாகக் கோபப்படுத்துவதனால் என்ன இலாபம் விளையப் போகிறது? 
இன்று சர்வதேசமும் எம்மைக் கைவிடும் நிலையில் நாங்கள் ஆட்சியாளர்களிடம் தானே உரிமையைக் கேட்கப்போகிறோம் அவர்களிடம்தானே அதைப் பெறப்போகிறோம். அவர்களுடன்தானே வாழப் போகிறோம். 
இந்நிலையில் எதிர்கால வாக்குகளுக்காகத் தற்காலத்தில் வாய்ச்சொல்லில் வீரம் காட்டுவதை விடுத்து செயலில் எதையாவது உருப்படியாகச் செய்தால் நல்லதல்லவா? 
ஹன்சாட்டில் பெயர் வருவதற்காகப் பேசிக் கொண்டே இருப்பதை விட்டு விட்டு நீங்கள் தந்த தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றும் வழியைப் பாருங்கள். 
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்காக, நீங்கள் பாராளுமன்றம் சென்று சாதித்த நடவடிக்கை என்ன? சிறையில் வாழும் அப்பாவி அரசியல் கைதிகளை விடுவிக்கச் செய்தது என்ன? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் செயல் வீரர்களான இரு இளைஞர்கள் பற்றியும் காணக் கிடைத்தது. ஒருவர் இலங்கை கிரிக்கட் மைதானங்களில் தமிழ் அடையாளமாக இறங்கி இருக்கும் வி. வியாஸ்காந்த். 
இப்படியொரு இளம் ஆளுமை, செல்வாக்குகளால் இடம் பிடிக்கும் விளையாட்டுத் துறையில் தன் ஆற்றலால் நுழைந்திருப்பது பாராட்டுக்குரியது. முன்பு முத்தையா முரளிதரன் களமாட இறங்கியபோது தமிழர்கள் அனைவரும் தங்கள் அடையாளமாகக் கொண்டாடி குதுகலித்தார்கள். 
அவர் கைகள் வீசிய பந்துகள் காரணமாக அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒருவர் தன் வாயால் வீசிய பந்துகளால் தமிழர் மனங்களுக்குத் தொலைவாகிப் போனார். 
இந்நிலையில்தான், தமிழ் அடையாளமாகக் களம் காணும் வியாஸ்காந்த் அனைவராலும் பாராட்டப்படுகிறார். 
எதிர்பார்ப்பு எனும் அழுத்தத்தைக் கொடுத்து அவன் வளர்ச்சியை முடக்கி விடாமல் சற்றே விலகி இருந்து அவனை இயல்பாக வளர விடுமாறு சமூக வலைஞர்களைக் கேட்கத் தோன்றுகிறது.
 
மேல்மூவரும் பாராட்டுக்குரியவர்கள் எனினும் என்னைப் பெரிதும் நெகிழச் செய்தவர் மற்றொருவர். 
ஊர் பெயர் பெரிதும் அறியப்படாத அந்தத் தம்பியோ இன்று அமரராகிவிட்டார்.

தன் ஊர் குளத்தைச் சுத்தப்படுத்தி, பொலித்தின் கழிவுகளை அகற்றத் தன் நண்பர்களோடு இறங்கிய அவர், குளத்தில் மூழ்கிப் பலியான செய்தி நெஞ்சைப் பதற வைத்தது. 
மாகாணச் சபை, மாநகர சபை, மேலும் சில அரச நிறுவனங்களின் கடமைதானே அது என்று பார்த்துக்கொண்டு இருக்காமல் ஓர் இளைஞன் சமுதாய நோக்கோடு மழைக்காலத்தில் ஊர் குளத்தைச் சுத்தமாக்கச் சென்றது இன்றைய தலைமுறையினருக்கு எந்தளவு பெரிய பாடம?

இளைஞர்கள் என்றாலே பொறுப்பற்றவர்கள்.
உண்பதும், குடிப்பதும், களிப்பதுமாகத் திரிபவர்கள்.
வாளோடு அலைபவர்கள் எனும் எண்ணத்தை மாற்றிய அந்தத் தம்பியை வாய்ப்  போராளிகள் எல்லாரையும் விட உயர்வாகக் கருதத் தோன்றுகிறது. 
அந்தச் சமுதாய மனிதனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!
உடம்பை முறுக்கேற்றி, நரம்பைச் சூடாக்கும் வாய்ச்சொல் வீரத்திற்குக் கொடுக்கும் மரியாதையை, 
ஊரின் மாசகற்றச் சென்ற ஒருவனுக்குக் கொடுக்கக் கூடாதா? சிந்திப்போம்.

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்