'நெஞ்சிருக்கும் வரைக்கும்' - பகுதி 3: 'குப்பாயி' -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

ங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்.
எத்தனை வயது முதல் உங்கள் ஞாபகத்தில் பதிவாகியிருக்கின்றன?
உங்கள் அனுபவம் எப்படியோ தெரியவில்லை. 
எனக்கு 2, 3 வயதில் நடந்த சம்பவங்களில் சிலவும் கூட,
இன்னும் நினைவில் பதிவாகியிருக்கின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?
அதனால்த்தானோ என்னவோ என் நெஞ்சிருக்கும் வரையிலான நினைவுகள்,
மிக நீளமாய் விரிகின்றன.
 
🦚  🦚  🦚
 
ஓவசியராய் இருந்த எனது தந்தை, வேலை இடமாற்றத்தின் போதெல்லாம்,
எங்களையும் உடன் அழைத்துச் சென்றதால்,
என் வாழ்வனுபவங்கள் வெவ்வேறு இடங்களில் சுவையாய் விரிந்தன.
வவுனியா செட்டிகுளத்தில் பிறந்து, 2 வயது வரை அங்கு வாழ்ந்த பதிவுகளில் ஒன்று கூட,
இப்போது என் மனதில் துளியளவேனும் இல்லை.-இரண்டாவது வயதின் பாதிக்கு மேல்,
மலையகத்திலுள்ள புசல்லாவையில் என் வாழ்வு தொடர்ந்தது.
கைக் குழந்தையாய் அங்கு சென்ற எனக்கு ஏற்பட்ட ஒருசில அனுபவங்கள்,
இன்றும் ஆழ்மனதில் ஓரளவு பதிவாகிக்கிடக்கின்றன.
குழந்தையான என்னைப் பராமரிக்கவென,  அங்கு பல வேலைக்காரர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
அந்த வேலைக்காரர்களில் ஒருவன் தான் 'பியசேன'.
கைக்குழந்தையான என்னைக் காவித் திரிவதுதான் அவனது வேலை.
சிங்கள  இளைஞனான 'பியசேனவினது' முகம்கூட இன்று என் மனப்பதிவில் இல்லை.
விபரமாக இல்லாவிட்டாலும் பியசேன பற்றிய, நிச்சயிக்கமுடியாத சில நிழற் காட்சிகள்,
இப்போதும் என் மனத்திரையில் அடிக்கடி நிழலாடும்.
விரும்பத்தகாத, விரசமான அந்நிழற் காட்சிகள் உண்மையா? பொய்யா? என்று,
நிச்சயப்படுத்தி என்னால் சொல்லக்கூட முடியவில்லை.
ஸ்திரப்படுத்திச் சொல்ல முடியாமல் இருக்கும் அவ் எண்ணங்களை விட்டுத் தொலைப்போம்!
ஆனால் ஒன்றை மட்டும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
குழந்தைகளை வேலைக்காரர்களிடம் கொடுத்து வளர்க்கும் பழக்கத்தை,
எவ்வளவு வசதி இருந்தாலும் பெற்றோர்கள் செய்யாமல் விடுவது நல்லது!
 
🦚  🦚  🦚
 
அடுத்து, குழந்தையான என்னைப் புசல்லாவையில் பராமரித்தவள்,
'குப்பாயி' என்னும் வயதான இந்திய வம்சாவளிப் பெண்மணி. 
இவள்தாள் இவ்வாரக் கட்டுரையின் கதாநாயகி.
ஓவசியரான என் தந்தையின் கீழ் றோட்டுப் போடும் வேலைக்காய்ச் சேர்ந்திருந்தவள் அவள்.
பின்னர் தந்தையின் அதிகாரத்தால் வீட்டுப் பணிக்காகவும் இணைத்துக் கொள்ளப்பட்டாள்.
வீட்டுப் பராமரிப்போடு என்னைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் அவளுக்கு வழங்கப்பட்டது.,
வீட்டில் வேலை செய்வதற்கான சம்பளத்தை றோட்டில் எடுப்பாள்.
எனது தந்தையின் அரச அத்துமீறல் அது.
 
🦚  🦚  🦚
 
'குப்பாயியின்' முகமும் இப்போது எனக்கு முழுமையாய் ஞாபகத்தில் இல்லை.
ஆனால் அவள் பற்றிய சில பதிவுகள் இன்றும் என் நினைவில் பசுமையாய் இருக்கின்றன.
50, 60 வயதைத்தாண்டிய தோற்றம், கன்னங்கரேல் எனக் கறுத்த நிறம்.
வெற்றிலைக் கறைபடிந்த அருவருக்கத்தக்க பற்கள். 
எந்நேரமும் ஓர் இயந்திரம்போல வெற்றிலையை அரைத்தபடி இருக்கும் வாய்.
சிக்குப்பிடித்த தலைக்குள் எப்பொழுதும் பேன் தேடிக்கொண்டிருக்கும் கைகள்.
இதுதான், 'குப்பாயியின்' தோற்றம் பற்றிய என் நினைவுகள்.
சுருங்கச் சொன்னால் சற்று அருவருப்பான வடிவம்.
 
🦚  🦚  🦚
 
நாகரிகம் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில்,
பலரிடமும் சுத்தம் பற்றிய உணர்வு அதிகரித்து இருக்கிறது.
இப்போவென்றால் மேற்சொன்ன வடிவத்தோடு கூடிய ஒரு பெண்மணியிடம்,
கைக்குழந்தையை யாரும் கொடுக்கவே மாட்டார்கள்.
ஆனால் அன்று நான் 'குப்பாயியிடம்' ஒப்படைக்கப்பட்டிருந்தேன்.
அதற்கும்  காரணம் இருந்தது.- அப்போது எங்கள் வீட்டில்,
இரண்டு அக்காமார், ஒரு அண்ணன், நான் என நான்கு பிள்ளைகள் இருந்தோம்.
பெரும்பாலும் இரண்டிரண்டு வயது வித்தியாசங்களில் ஒவ்வொருவரும்.
அப்பா தினம், தினம் வீட்டிற்கு விருந்தினர்களை அழைத்து வருவார்.
இந்நிலையில்த்தான் குழந்தையான என்னைப் பராமரிக்க ஆள் தேவைப்பட்டது.
அம்மா, அப்பா வழிகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து உதவக்கூடிய,
உறவுகள் ஏதும்  இல்லாத நிலை.-கடல் தாண்டிச் செல்லாத தூய பிராமணர்களைப் போல,
ஊர் தாண்ட விரும்பாதவர்களாய் யாழ்;மக்கள் இருந்த காலமது. 
எங்கள் குடும்பம் மட்டும் அதற்கு விதிவிலக்கு.
இந்நிலையில் என்னைப் பராமரிக்க வந்தவள்தான் 'குப்பாயி'.
அவளது பெயருக்கான அர்த்தம் இன்றுவரை எனக்குப் புரியவில்லை.
பெரும்பாலும் அது காரணப்பெயராய் இருந்திருக்கலாம் போல,
குப்பை ஆயிதான் 'குப்பாயி' என்றாயிற்றோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.
 
🦚  🦚  🦚
 
எந்நேரமும் வெற்றிலை குதப்பிய வாயோடு, தலையில் பேன் பிடித்தபடி,
முழங்கால்  மடித்துக் குந்தியிருக்கும் 'குப்பாயியின்' மடியில்,
என்னைக் கிடத்திவிட்டுத்தான் அம்மா, தனது மற்றைய வேலைகளைப் பார்ப்பார்.
அம்மா கவனிக்காத நேரத்தில் என்னை மடியில் கிடத்தியபடி,
'குப்பாயி' சுருட்டுக் குடித்ததாயும் மெல்லிய ஞாபகம் உண்டு.
கள்ளுக் குடிக்கும் பழக்கமும் அவளுக்கு இருந்தது என்று வீட்டில் பேசிக் கொள்வார்கள்.
 
🦚  🦚  🦚
 
அப்போது எனக்கு ஓரிரண்டு வயது கூடியிருந்தது.
பள்ளி விடுமுறை நாட்களில் அப்பா அம்மா வழி உறவுக்குடும்பங்கள்,
மலையக வாழ்வை அனுபவிக்க எங்கள் வீட்டிற்கு வருவார்கள்.
அங்ஙனம் வரும், படித்த நாகரிகமிக்க அப்பாவழி உறவுகளுக்கு நான் கிண்டற் பொருளாவேன்.
'குப்பாயியின்' வளர்ப்பால் என் பாஷை வேறுபட்டிருந்தது.-கிண்டலுக்கான காரணமது.
ஒருமுறை உறவுகளுக்கு முன்னால் 'சொடசொட வட நல்லா இருக்கு' என்று சொல்லப்போய்,
எனக்கு அவர்கள் 'சொட சொட' என்று பட்டமே வைத்துவிட்டார்கள்.
அங்கிட்டு, இங்கிட்டு, போயிக்கிட்டு, வந்துக்கிட்டு போன்ற வார்த்தைகள்,
இயல்பாய் என் பேச்சில் அடிக்கடி கலக்கும்.
அதைக் கேட்டு யாழ்ப்பாணப் பாஷை பேசும் உறவினர்கள், 
தங்களது யாழ்ப்பாணப் பாஷைதான் உயர்ந்தது எனும் நினைப்பில், விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
'தோட்டக்காட்டுப் பெடியன்' என்று என்னைக் கேலி செய்வார்கள்.
அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று அப்போது எனக்கு விளங்கியதே இல்லை.
 
🦚  🦚  🦚
 
எங்கள் வீட்டிற்குள்ளேயும் 'குப்பாயி' தொடர்பில் எனக்குக் கிண்டல்கள் நிகழும்.
குழந்தையாய் இருக்கும்போது 'குப்பாயியின்'  மடியில் கிடந்தபடி,
ரவிக்;கை போடாத அவளது சுருங்கித் தொங்கும் மார்பைச் சப்பியபடி நான் இருப்பேனாம்.
'குப்பாயியிடம்' பால் குடித்தவன் என்றும், இவன் 'குப்பாயியின்' பிள்ளை என்றும்,
அப்பாவும், அம்மாவும் காசு குடுத்து என்னைக் 'குப்பாயியிடம்'தான் வாங்கினார்கள் என்றும்,
என் சகோதரர்கள் கிண்டல் செய்ய, அப்போதே கற்பனை மிகுந்திருந்த என் மனதில்,
உண்மையில் நான் 'குப்பாயியின்' பிள்ளைதானோ என்ற சந்தேகம் எழுந்து என்னை வாட்டும்.
கண்ணாடிக்கு முன் நின்று நான் 'குப்பாயி' போல இருக்கிறேனா என்று பார்த்துக் கொள்வேன்.
காலம் வேகமாக ஓடிவிட்டது. நிச்சயம் 'குப்பாயி' இப்;போது உயிரோடு இருக்கமாட்டாள்.
நன்றாக வளர்ந்த பிறகு எனக்குள் உண்டான, 
மீண்டும் 'குப்பாயியை' ஒருதரம் பார்க்கவேண்டும் என்ற ஆசை,
கடைசிவரை நிறைவேறாமலேயே போய்விட்டது.
 
🦚  🦚  🦚
 
இனித்தான் முக்கியமான விடயத்தைச் சொல்லப்போகிறேன்.
எங்கள் வீட்டில் நான் ஒரு விதிவிலக்கு.
என்னுடைய தமிழ் ஆர்வம், இறைபக்தி, பேச்சாற்றல், உணவு முறை எல்லாம்,
என் வீட்டாரோடு முற்றாய் மாறுபட்டிருக்கின்றன. 
எனது அப்பழக்கங்கள் அனைத்திலும் ஓர் இந்தியச் சாயல் படிந்திருப்பதை உணர்கிறேன்.
அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மக்கள் மத்தியில், எனக்கு ஏற்பட்டிருக்கும் பிரபல்யம்,
ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் எவர்க்கும் இதுவரை கிடைக்காத ஒன்று.
தம் இனத்தாரை அன்றி மற்றவர்களை அதிகம் அங்கீகரிக்காத தமிழ்நாட்டாரின்,
எனக்கு மட்டுமான தனித்த இந்த ஆதரவும் எனக்குக் குழப்பம் தரும்.
அங்குமட்டுமென்றில்லை, கொழும்பிலும் கூட,
மற்ற எந்த யாழ்ப்பாணத்தார்க்கும்; இல்லாத ஆதரவை,
இந்தியப் பிரமுகர்கள் எனக்கு மட்டும் தருகிறார்கள்.
இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா?
சொன்னால் சிரிக்கப் போகிறீர்கள்.
மேற்சொன்னவற்றையெல்லாம் தொகுத்துச் சிந்திக்கிறபொழுது இடையிடையே, 
நான் 'குப்பாயியின்' மகன் தானோ! என்ற எண்ணம் இப்போதும் வரப்பார்க்கிறது.
வீட்டில் சொன்னால் அடிக்கப்போகிறார்கள்!
 
🦚  🦚  🦚
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்