'நெஞ்சிருக்கும் வரைக்கும்' - பகுதி 6: 'துரோகம்'-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

யிர்கள் இறைவனின் அற்புதப் படைப்புக்கள்.
இயற்கையை ஊன்றிக் காணுகிறவர்க்குத்தான் அவ்வுண்மை புரியும்.
ஓரறிவு தொடக்கம் ஆறறிவு வரையிலான உயிர்களின் விரிவு ஓர் அதிசயம்.
உயிர்ப்படைப்புகளுக்குள் ஆறறிவைத் தனித்துப் பெற்றதால்,
மனிதன் தன்னைப் பெரிய 'கொம்பனாய்' நினைக்கிறான்.
ஆனால், அந்த எண்ணம் தவறாம்.
நம்மைவிடக் குறைந்த அறிவுடைய பல ஜீவன்கள்,
உணர்வு மிகுதியில் நம்மைவிட எவ்வளவோ மேலோங்கி நிற்கின்றன.
ஈரறிவுடைய எறும்பு, மழை  வரப்போவதை தனது உணர்வுத் திறனால்,
நமக்கு முன்னரே தெரிந்து தமது முட்டையைக் காக்க திட்டியில் ஏறுகிறது.
அதேபோல மழை பெய்யப்போவதை உணர்ந்து மயில் ஆடுகிறது.
காலமாற்றத்தை உணர்ந்து குயில் கூவுகிறது.
இந்த விடயங்களை அறிவதில் மனிதன் அவ்விலங்குகளுக்குப் பிற்பட்டே நிற்கிறான்.
அறிவு கூடிய மனிதரைவிட உணர்வு கூடிய பல ஜீவன்கள்,
நம்மைவிட ஆற்றலோடு இருப்பதை வைத்துத்தான்,
உயிர்ப்படைப்பின் அற்புதம்பற்றி ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன்.
அத்தகைய உணர்வு மிகுந்த ஓர் விலங்கு பற்றிய செய்திதான்,
இவ்வாரக் கட்டுரையின் கருப்பொருள்.
🌷 🌷 🌷
ஆண்டு சரியாக ஞாபகத்தில் இல்லை 1966 அல்லது 1967 ஆய் இருக்கலாம். 
அப்போது சிலாபத்தில் எங்கள் அப்பா 'டவுன் ஓவசியராக' இருந்தார்.
அந்தக் காலத்தில் நல்ல வருமானமுள்ள தொழில் அது.
அத் தொழில் தந்த செழிப்பால் அப்பா ஒரு குட்டி ஜமீன்தார் போலவே அங்கு வாழ்ந்து வந்தார்.
அப்போது சிலாபத்தில் கார்கள் எல்லாம் பெரிய அளவில் வந்திருக்கவில்லை.
'பக்கி' என்று சொல்லப்படுகின்ற கால் மடித்து வைத்து உட்காரக்கூடிய,
ஒற்;றை மாட்டு வில்லு வண்டிகள் தான் அப்போது அங்கு 'டாக்ஸிகளாய்' இயங்கின.
எங்கள் வீட்டில் எமக்குச் சொந்தமாகவே ஒரு 'பக்கி' நின்றது.
இப்போதைய பணக்காரர்கள் தமது கார்களுக்கு,
அதையிதைப் பூட்டி பளபளக்க வைப்பது போல் எங்கள் அப்பாவும்,
எங்கள் வீட்டு 'பக்கி'யைப் பலவிதமாய் அலங்காரப்படுத்தி,
இது 'டவுன் ஓவசியர்' வீட்டு 'பக்கி' என்று மற்றவர்கள் சொல்லும்படியாய் வைத்திருந்தார்.
அந்த 'பக்கி' எங்கள் வீட்டு கௌரவத்தின் அடையாளமாய் நின்றது.
🌷 🌷 🌷
இரட்டை மாட்டு வண்டில்கள்,  அவற்றிற்கான தனி மாட்டுத் தொழுவங்கள்,
தமிழ், சிங்கள வேலையாட்கள், வசதியான எங்கள் வீட்டிற்குப் பின் பகுதியில் இருந்த,
வேலையாட்கள் தங்கும் லயம், அங்கு தங்கியிருந்த வேலையாட்களின் குடும்பங்கள், 
அவர்களுக்குள் நடக்கும் பாமரத்தனமான பிரச்சினைகள்,
அவற்றிற்கு பஞ்சாயத்துப் பார்த்து  நாட்டாமை செய்யும் எங்கள் அப்பா என,
சிலாபத்து வாழ்வு இப்பொழுதும் என் கண்முன்னால் விரிகிறது.
🌷 🌷 🌷
மேற் சொன்ன பணக்கார 'எடுப்புக்களில்' ஒன்றாகத்தான்,
எங்கள் வீட்டில் இரண்டு நாய்களும் வளர்ந்தன, அவை சாதாரண ஊர்நாய்கள்தான்.
ஆனாலும் எங்கள் வீட்டு உணவுச் செழிப்பால் மிகக் கொழுத்து,
ஏதோ 'அல்ஸேஷன்' நாய்கள்போல அவை நின்றன.
அவற்றின் தோற்றம் கண்டு வீட்டிற்கு வருகிறவர்கள் பயப்பிடுவார்கள்.
ஆனால், அவையோ பரம சாதுக்கள்.
ஆண் நாய்க்கு 'டாமி' என்று பெயர், பெண்நாய்க்கு 'ஜூலி' என்று பெயர்.
வயிறு முட்டச் சாப்பிடுவதும், அதன் பின் நிழல்தேடி நன்றாகத் தூங்குவதும்,
எப்போதாவது தூக்கம் கலைகிறபோது தம் இருப்பை உணர்த்த இடையிடையே குலைப்பதும்தான்,
அவை இரண்டினதும் அன்றாட வேலைகளாய் இருந்தன.
அவற்றிற்கு வயிறுமுட்ட வீட்டில் சாப்பாடு விழுந்தாலும்,
அப்பா, தான் சாப்பிடுகிறபொழுது தன் கோப்பையிலிருந்து,
ஒரு இறைச்சித் துண்டையோ, மீன் துண்டையோ போடாமல் இருந்ததில்லை.
அதனாலோ என்னவோ அவை இரண்டிற்கும் அப்பாவின்மேல் அவ்வளவு பிரியம்.
🌷 🌷 🌷
நாங்கள் இருந்த சிலாப வீடு டவுனிலிருந்து சற்று உள்ளே இருந்தது.
எங்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் ஒரு பெரிய ஆறு.
அந்த ஆற்றின் மேல் போடப்பட்டிருந்த பாலத்தைக் கடந்துதான் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும்.
எங்கள் அப்பா எங்கேனும் போய் விட்டு வீட்டுக்குத் திரும்பும்போது,
பாலத்திற்கு அப்பால் அவர் வரும்போதே,
டாமியும், ஜூலியும் அவரின் வருகையை ஏதோ வகையில் அறிந்து,
துள்ளிக் குதித்து வாலாட்டி அல்லோலகல்லோலம் செய்யும்.
பின் கேற்றினூடு புகுந்து பாலம்வரை சென்று அவரை அழைத்துக் கொண்டுவரும்.
ஒவ்வொரு முறையும் அவை காட்டும் குதூகலம் வியப்புத் தரும்.
அவ்வளவு தூரத்தில் அப்பா வருவது அவற்றிற்கு எப்படித் தெரியும் என்ற விடயம்,
இன்றைக்கும் எனக்கோர் ஆச்சரியம் தான்.
பிள்ளைகளாகிய நாங்கள் அடுத்த அறையில் அப்பா இருப்பதையே அறியமாட்டோம்.
'நாயிற்கடையாய்க் கிடந்த அடியோம்.'
🌷 🌷 🌷
அப்படி இருக்கையில்த்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
வைத்த சாப்பாட்டை உண்ணாமல் ஒருநாள்,
வீட்டின் ஒரு மூலையில் போய் டாமி படுத்துக் கிடந்தது.
அதனது வாயிலிருந்து எச்சில் வடிந்தபடி இருந்தது.
கண்ணை மூடுவதும், பின்னர் 'சிலோமோஸனில்' அதைத் திறப்பதுமாக,
அது கிடந்ததைப் பார்த்துவிட்டு அப்பா மிருகவைத்தியரை அழைப்பித்தார்.
வந்த வைத்தியர் நாயின் தோற்றத்தைக் கண்டு பயந்து, தூரத்தில் நின்றே அதைப் பார்த்துவிட்டு,
சினிமாவில் வரும் டாக்டர்களைப் போன்று கண்ணாடியைக் கழட்டித் துடைத்துக் கொண்டு,
டாமிக்கு விசர் வந்துவிட்டது என்றும்,
அதைக்கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறிவிட்டுச் சென்றார்.
🌷 🌷 🌷
வீடு பயந்தது.
'டாமியா', தங்கள் உயிரா? என்ற கேள்வி வந்தபோது,
டாமியை இழக்க வீட்டார் முழுமனதாய்த் தயாரானார்கள்.
கடகடவெனக் காரியங்கள் நடந்தேறின.
'டாமி' ஒருவருக்கும் ஒன்றும் செய்யாதிருந்த போதும்,
விசர் வந்ததாய்ச் சொல்லப்பட்ட அதற்குக் கிட்டப்போக எல்லாரும் பயந்தார்கள்.
அப்பாவின் உத்தரவுப்படி டாமியைக் கொல்லவென,
துப்பாக்கியோடு ஒருவர் அழைத்து வரப்பட்டார்.
வீடு பரபரத்தது. எனக்கோ கவலையான கவலை,
எந்தப் பதட்டமும் இல்லாமல் அப்பா தூரநின்று, வந்தவனுக்கு டாமியைக் காட்டினார்.
வந்தவன், எங்களை எல்லாம் விலகிப் போகச் சொல்லிவிட்டு,
தான் கொண்டுவந்த பெரிய காட்டுத்துப்பாக்கியால் டாமிக்குக் குறி வைத்தான்.
🌷 🌷 🌷
டாமிக்கு நோய் வந்த நாள் முதல் அதற்குச் சற்றுத் தூரத்திலே,
தானும் உணவு உண்ணாமல் கண்ணீர் வலிய படுத்திருந்த ஜூலி,
சற்றுப் பதட்டத்தோடு இக்காட்சியைப் பார்த்தது.-அதன் கண்களில் மிரட்சி.
தன் காதலனுக்கு ஏதோ தீங்கு நடக்கப்போகிறது என்பது மட்டும்,
அதன் உணர்வுக்குத் தெரிந்திருக்கும் போல,
அது அப்பாவின் காலடியில் ஓடிப்போய் மெல்லிய சத்தம் எடுத்து,
அனுங்கி அனுங்கி அழுதது, அப்பா அதைப் பொருட்படுத்தவில்லை.
🌷 🌷 🌷
எந்தப் பதட்டமும் இல்லாமல் படுத்துக் கிடந்த டாமி,
மெல்ல தலையைத் தூக்கி அப்பாவைப் பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு,
ஒருதரம் மெல்ல வாலை ஆட்டிவிட்டு மீண்டும் நிதானமாய்ப் படுத்துக்கொண்டது..
மரணத்தை ஏற்றுக் கொள்ளும் கம்பீரம் அதன் செயலில்.
இன்று நினைத்துப் பார்க்க, அன்று அப்பாவை 'டாமி' பார்த்த பார்வையில்,
பிற்காலத்தில் நான் படித்த, 'யூ டூ புறூட்டர்ஸ்' என்ற 'யூலியஸ்சீசரின்' ஏக்க வினா,
இருந்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.
🌷 🌷 🌷
அப்பாவின் கண்ணோரங்களிலும்  சில கண்ணீர்த்துளிகள்.
அதைக் கண்டு, அப்பா 'டாமி'யைக் காப்பாற்றி விடுவாரோ என்று,
எனக்குள் ஒரு சிறு நம்பிக்கை.- ஆனால், என் நம்பிக்கை வீணானது.
அப்பா முகத்தைத் திருப்பிக் கொள்ள துப்பாக்கி வெடித்தது.
இரண்டு தரம் உடம்பு குலுங்க துள்ளிய 'டாமி' பின் அமைதியாய்ச் செத்துப்போனது.
🌷 🌷 🌷
தன் கண் முன்னாலேயே காதலன் இறந்த கொடுமையைத் தாங்க முடியாமல்,
ஜூலி அன்று முழுக்கத் தனித்து இருந்து ஊளையிட்டது.
அந்த வாரம் முழுவதும் ஒரு உறவை இழந்த மயான அமைதி எங்கள் வீட்டில்.
அதன் பிறகு அப்பா போடுகிற இறைச்சி, மீன் துண்டுகளை உண்ணாது நிராகரித்து,
ஜூலி சத்தியாக்கிரகம் பண்ணியது.
அதன் பார்வையில் அப்பாமீதான வெறுப்பு தெளிவாய்ப் படிந்திருந்தது.
'தேராமன்னா! செப்புவது உடையேன்' என்ற கண்ணகியின் குமுறல்,
 ஜூலியின் மௌனத்தில்  வெளிப்பட்டதாய் இப்போது எனக்குத் தோன்றுகிறது.
சில நாட்களிலேயே பிடிவாதமாக உணவு உண்ணாமல் விட்டு ஜூலியும் இறந்து போனது.
🌷 🌷 🌷
டாமி, ஜூலி இரண்டினது இறப்பும் என்னைப் பாதித்தளவு,
வேறு மரணங்கள் என்னைப் பாதித்தனவா என்று தெரியவில்லை.
இறக்கிறபொழுது டாமி நிமிர்ந்து பார்த்த பார்வையில்,
'நீங்கள்தான் ஆறறிவுடைய மனிதர்களா?' எனும் கேள்வி இருந்ததாய்ப்பட்டது. (கேலி)
நான் பார்த்த முதல் கொலை அது.
உயிர்க்கொலை மட்டுமல்ல, நன்றிக் கொலையுமாம்.
🌷 🌷 🌷
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்