'நெஞ்சிருக்கும் வரைக்கும்' - பகுதி 7: 'காலம் விழுங்கக் காத்திருக்கிறது!' -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

ள்ளம் கனத்துப் போயிற்று.
திடீரென மனம் உந்துதல் செய்ய எழுத்தாளர் டொமினிக் ஜீவாவை நேற்றுப் போய்ப் பார்த்தேன்.
'அதிர்ந்தேன்' என்ற சொல் என் உணர்வை வெளிப்படுத்தப் போதாது என்றே நினைக்கிறேன்.
ஒற்றை உடையோடு சுருண்டு கிடந்தார், கடந்த சில நாட்களாக நீராகாரம் மட்டும்தானாம். 
சொல்லி வருந்தினார் மருமகள், அவர் கண்களில் ஒரு மகளுக்கான வாட்டம்.
உடம்பு உயிரைப் பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருக்கிறது.
சிங்கம் போலக் கர்ச்சிக்கும் அவரது வாய், வார்த்தைகள் தேடித் தத்தளிக்கின்றது.
காதருகில் சென்று நான் சத்தமாய் அழைக்க மெல்லக் கண் திறந்தவர்,
அந்த நிலையிலும் என்னை அடையாளம் கண்டு கையெடுத்துக் கும்பிட்டார்.
வாயில் சிறிய புன்னகை வேறு, நெஞ்சு கலங்கிவிட்டது!
⧫ ⧫ ⧫
காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.
40 ஆண்டுகளுக்கு முன் நான் சந்தித்த ஜீவா மனதில் வந்தார்.
பழைய பண்டிதர்களைப் போல கைநீண்ட வெள்ளை நஷனல், வெள்ளை வேட்டி.
எப்போதும் கையில் கர்ப்பந்தரித்த ஒரு பை இருக்கும்.- அதன் உள்ளே 'மல்லிகை'கள்.
கண்டவர்களுக்கெல்லாம் விபூதி கொடுக்கும் சுவாமிமார் போல,
தெரிந்தவர்களுக்கெல்லாம் ஒரு 'மல்லிகை'யை நீட்டுவது ஜீவாவின் வழக்கம்.
சிலர் காசு கொடுப்பார்கள். பலர் கொடுக்காமலே வாங்கிச் செல்வார்கள்.
கொடுக்காதவர்களில் வாய்ச்சொல் அருளும் கல்விமான்கள் தொகையே அதிகம்.
⧫ ⧫ ⧫
மல்லிகை என்றால் என்ன? என்று சொல்லாமலே விபரித்துக் கொண்டு போகிறேன்.
ஜீவா இயங்காமல் ஒடுங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய தலைமுறையினருக்கு,
ஜீவாவையோ 'மல்லிகை'யையோ தெரிந்திருக்க நியாயம் இல்லை.
அவர்களுக்காக 'மல்லிகை' பற்றி ஒரு சிறு அறிமுகம்.
'மல்லிகை' என்பது ஜீவாவின் அடையாளம். 'மல்லிகை' என்பது ஜீவாவின் இலட்சியம். 
'மல்லிகை' என்பது ஜீவாவின் தொழில். 'மல்லிகை' என்பது ஜீவாவின் உயிர்.
ஜீவாவால் வெளியிடப்பட்ட சிறு சஞ்சிகையே 'மல்லிகை' என்ற அறிமுகம்,
நிச்சயம் போதாது என்ற காரணத்தினாலேயே மேல் வரிகளை எழுதினேன்.
⧫ ⧫ ⧫
சவரத்தொழிலாளர் குடும்பத்தில் இருந்து வந்த ஜீவா, 
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தனது சுயமுயற்சியால்,
'மல்லிகை' என்ற இலக்கிய சஞ்சிகையை வெற்றியோடு நடாத்தினார்.
ஆரம்பத்தில் சொந்தமாய் சலூன் வைத்துத் தொழில் செய்தவர் அவர்.
அவரது சலூன்தான் 'மல்லிகை' சஞ்சிகையின் பிறப்பிடமாயிருந்தது.
⧫ ⧫ ⧫
ஜீவாவின் ஆளுமை எனக்கொரு ஆச்சரியம்.
பெரும்பெரும் பேராசிரியர்கள் பலரும் கூட ஜீவாவுக்கு முன்னால்,
பெட்டிப்பாம்பாய் அடங்கி, ஒடுங்கி நின்றதைப் பார்த்திருக்கிறேன்.
யாழ் பல்கலைக்கழகம் அவருக்கு பட்டம் தந்து கௌரவிக்க முன்வர,
அப்பட்டம்  தகுதியற்றது எனக் கூறி அதனை நிராகரித்த ஆண்மையாளர்.
மண்ணுள் புதைந்த ஒரு ஆலம்வித்து விருட்சமாகி விரிவது போல,
அடக்குமுறைகளைத் தாண்டி சுயமுயற்சியால் வளர்;ந்து, விரிந்து, நிமிர்ந்தவர் அவர்.
எத்தனையோ இலக்கியவாதிகளை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி நிழல் செய்தவர்.
அவரைப் பொறுத்தவரை மல்லிகைதான் எல்லாமே.
⧫ ⧫ ⧫
யாழ் ராஜா தியேட்டருக்கு அருகில் இருந்த சிறிய சந்துக்குள்தான் அவரது அலுவலகம்.
மல்லிகையை, ஒற்றைத் தொழிலாளியும் தானுமாய் இருந்து,
தொடர்ந்து வெளியிட்ட அவரது சாதனை 'கின்னஸ்' புத்தகத்தில் பதியப்படவேண்டியது.
ஜாதியால் நசுக்க நினைத்த சமூகம் ஒருபுறம், கல்வியால் நசுக்க நினைத்த அறிவுலகம் மறுபுறம்.
பொருளாதாரப் பாதிப்புற்ற குடும்பச் சூழ்நிலை வேறொருபுறமுமாய் இழுக்க,
இத்தனையையும் தாண்டி எவருடனும் சமரசம் ஏதும் செய்து கொள்ளாமல், 
நிமிர்ந்து நின்றதால், அந்த மனிதன் என் நெஞ்சச் சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
⧫ ⧫ ⧫
பெரும்பாலும் பேச்சாளர்கள், எழுத்தாளர்களாய் இருப்பதில்லை.
எழுத்தாளர்கள் பேச்சாளர்களாய் இருப்பதில்லை, இரண்டிலும் வெற்றிபெற்றவர் ஜீவா.
மேடையேறி அவர் முழங்கினால் அடுத்த  நிமிடம் சபை அடங்கிப்போகும்.
உயர்ந்த பிறகும், தனது அடையாளத்தை உரத்துச்சொல்லத் தவறாத ஆண்மையாளர்.
ஆரம்பத்தில் யாழ் சமூகம் அவருக்குக் கொடுத்த தொல்லைகள் ஒன்றிரண்டு அல்ல.
சிறிது சிறிதாய்ச் சேர்த்த பணத்தில், மசாலைத்தோசை சாப்பிட உட்கார,
ஜாதியால் இனங்காணப்பட்டு 'தாமோதரவிலாஸிலிருந்து' துரத்தப்பட்ட கதையை,
மேடைகளில் மனவருத்தத்தோடு பலதரம் பகிர்ந்திருக்கின்றார்.
அக்காலத்தில் விரிந்த 'மாக்ஸிஷ' தத்துவத்தின் எழுச்சியால்த்தான்,
ஜீவா போன்றவர்களால் நம் சமூகத்தில் தலைநிமிர முடிந்தது.
அதற்காகவே 'மாக்ஸ்' எனும் முனிவனை வணங்கத் தோன்றுகிறது.
⧫ ⧫ ⧫
ஜீவாவின் போராட்டத்தின் வெற்றியை, நான் கண்ணாரக் கண்டேன்.
அக்காலத்தில் யாழில் ஜாதி அடக்குமுறையின் இருப்பிடங்களில் ஒன்றாக,
மாவிட்டபுரம் கோயில் கருதப்பட்டது, ஜாதிப் போராட்டங்கள் பல நடந்த இடமது.
பின்னர் அவ் ஆலயத்தின் ஆதீனகர்த்தராக இருந்தவர் சண்முகநாதக் குருக்கள் அவர்கள்.
அவரும் ஒரு புரட்சியாளர், சிந்தனாவாதி, இலக்கிய ஆர்வலர்.
கோயிலுக்குள் இருந்த அவரது வீட்டில் எனக்கும், ஜீவாவுக்கும், 
எழுத்தாளர் சோமகாந்தன் ஐயாவுக்கும் ஒருமுறை குருக்கள் விருந்திட்டார்.
தன்கையாலே வெற்றிலை மடித்து எங்களுக்குத்  தந்தார்.
எந்தக் கோயிலுக்குள் குறைந்த ஜாதிக்காரர்கள் வரக்கூடாதென்று சொல்லப்பட்டதோ,
அதே கோயிலுக்குள் அக் கோயிலின் தலைமைக் குருக்களே ஜீவாவுக்கு விருந்திட்டு, 
வெற்றிலையும் மடித்துக் கொடுத்தது இன்றும் என் கண்களில் நிழலாடுகிறது.
ஜீவா, குருக்கள் இருவருமே அன்று என் மனச்சிகரத்தில் ஏறினார்கள்.
⧫ ⧫ ⧫
இலக்கியத்தில், நான் முழுக்க முழுக்க மரபுவாதி, ஜீவா முழுக்க முழுக்க புதுமைவாதி.
ஆனாலும் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராய் நேசித்தோம்.
தனது மகனின் திருமண நிச்சயத்தை எங்களது கம்பன் கோட்டத்தில்தான்,
செய்யவேண்டும் என்று பிடிவாதம் பிடித்துச் செய்வித்தார்.
யாழ் கோட்டை தாக்கப்பட்டபோது எங்களுடன் சிலகாலம் சீவித்தார்.
அப்போது எதிலும் வரம்புமீறா அவரது நாகரிகம் என்னை ஈர்த்தது.
உணவு, உறக்கம், உரையாடல் என  எல்லாவற்றிலும் கட்டுப்பாடு பேணினார்.
தனது சுயத்தை என்றும் எவருக்கும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை.
கொழும்புக்கு வந்தும் அதே வேகத்துடன் இயங்கிய அவர்,
ஆரோக்கியத்துடன் இருக்கும் போதே,
திடீரெனத் இலக்கிய உலகைவிட்டு ஒதுங்;கிக் கொண்டது ஒரு ஆச்சரியம்.
⧫ ⧫ ⧫
சில ஆண்டுகளுக்கு முன் அவரைச் சந்திக்கப் போன போது மகிழ்ந்து வரவேற்றவர்,
பின்னர் என்னை அனுப்பி வைப்பதிலேயே குறியாய் இருந்தார்.
தன் இயலாமையை மற்றவர்கள் அறிவதை அவர் விரும்பவில்லை.
பல வருடங்களின் பின் நேற்றைய சந்திப்பு நிகழ்ந்தது.
ஒருசில விநாடிகள்தான், வணங்கி விடைபெற்றேன்.
எத்தனையோ இலக்கியவாதிகளை இனங்காட்டிய மனிதன்.
யாழ்ப்பாணத்தின் ஜாதி எனும் இரும்புக்கோட்டையினை உடைத்தெறிந்த மனிதன்.
ஈழத்து இலக்கியத்திற்கு முகவரி தந்த மனிதன்.
இன்றைக்கு மகனாலும்  மருமகளாலும் மட்டும் பராமரிக்கப்பட்டுக் கிடக்கிறார்.
கவிஞர் மேமன்கவி மட்டுமே இன்றும் அவர்களுடனான நெருங்கிய தொடர்பில்.
இவ் அரிய தொண்டுக்காக அம்மூவர் இருக்கும் திசைநோக்கித் தொழுகின்றேன்.
⧫ ⧫ ⧫
பெரும்பாலும் இலக்கிய உலகம் ஜீவாவை மறந்துவிட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
இக்கட்டுரைரயைப் படித்ததும் ஒருசிலர் ஜீவாவைப் பார்க்கப்புறப்படலாம்.
அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயைகூர்ந்து ஜீவாவின் தனிமையைக் குழப்பாதீர்கள்!
இக்கட்டுரையை ஜீவா படிக்கவேண்டும் என்று என் மனம் விரும்புகிறது.
ஆனால் அது நடக்கப்போவதில்லை என்பதும் தெரிகிறிது.
பெரும்பாலும் ஜீவா என்ற அந்தப் புரட்சியாளரின் வாழ்வு,
சில நாட்கள் அல்லது சில வாரங்களாகத் தான் இருக்கும் போல் தெரிகிறது.
அவரது காலம் நீள்வதை விட குறைவதைத்தான் அவரும் விரும்புவார்.
பலரையும் வென்று நின்ற ஒரு புரட்சியாளனை காலம் வெல்லக் காத்திருக்கிறது.
⧫ ⧫ ⧫
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்