'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை': பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

(சென்றவாரம்)
அதன்பின் குருவினுடனான அவன் தொடர்பு நீண்டது. நெருங்க நெருங்க அவரின் பெருமை தெரிந்தது. பாரதிக்கு நிகரான ஒரு பிராமணர் அவர். அன்பும் அறிவுமே அவரிடம் நிறைந்து கிடந்தன. எத்தனை அனுபவங்கள்,  ஓரிரண்டைச் சொல்ல நினைக்கிறான் அவன்.

💛💙💙💙
லகம் கம்பகாவியத்தை அனுபவிக்க,
பெருந்தொண்டாற்றியவர்களுள்,
கம்பனடிப்பொடி என அழைக்கப்பட்ட சா.கணேசனும் ஒருவராவார்.
காரைக்குடியில் அவர் நடத்திய கம்பன் விழாக்கள்,
தமிழ் ரசிகர்களுக்கு அக்காலத்தில் அறிவு விருந்தளித்து வந்தன.
அவ்விழாக்களில் பேரறிஞர் பலர் கலந்து கொண்டு,
தமிழமுதத்தை அள்ளித் தருவது வழக்கமாக இருந்தது.
அத்தகைய புகழ்பெற்ற காரைக்குடி கம்பன் விழாவில்,
குருவுடன் அவனுக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை,
இன்றுவரை அவனால் மறக்கமுடியவில்லை.

💙💛💙💙

காரைக்குடிக் கம்பன் விழாவின் நிறைவுநாள் நிகழ்வு,
நாட்டரசன்கோட்டை கம்பன்சமாதியில் நடைபெறுகிறது.
அந்நிகழ்வில் கலந்து கொள்வது ஒரு தனி அனுபவம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மூதறிஞர்கள் மட்டுமே,
அங்கு பேச அனுமதிக்கப்படுவார்கள்.
அந்த நிகழ்வுகளில் அவனது குருவின் பேச்சுத்தான்,
நிறைவுப் பேச்சாக எப்போதும் இருக்கும்.
அன்றும் அப்படியே அவனது குரு பேச எழும்புகிறார்.
குருவின் நிறைவுப்பேச்சு மெல்ல ஆரம்பித்து சூடுபிடிக்கிறது.
மக்கள் மண்ணை மறந்தார்கள்.
பேச்சு முடிகிறது.

💙💙💛💙

வியர்வை வழிய வெளியில் வந்து ஒரு காரில் சாய்ந்து நிற்கிறார் அவனது குரு.
காலில் விழுபவர்களும், கண்ணில் ஒற்றுபவர்களுமாக,
அவரைச் சூழ்ந்து பெருங்கூட்டம்.
குருவின் பெருமைகண்டு அவனுக்குள் ஆனந்தசாகரம் பொங்குகிறது.
கூட்டம் குறைந்ததும் மெல்ல அவன் குருவை அணுகுகிறான்.
'ஐயா! என்னை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள்,
உங்கள் வீட்டில் ஒரு வேலைக்காரனாக வேண்டுமானாலும் இருந்துகொள்கிறேன்.'
கலங்கிய கண்களுடன் தயங்கித் தயங்கி அவன் கேட்க,
அவனை நேர்ப்பார்வை பார்க்கிறார் குரு.
அவரது கண்களில் அருள் பொங்குகிறது.
அவனது கையைப்பிடித்து அருகில் இழுக்கிறார்.
தோள் மேற்கைபோட்டு அவனைத் தன்னோடு நெருக்கிக் கொள்கிறார்.
தழுதழுத்த குரலில் பேசத்தொடங்குகிறார்.

💙💙💙💛

'வேணான்டா நானும் மனுஷன்தான்,
ரொம்பக்கிட்டக்க வந்தா எம் பலவீனமெல்லாம் தெரிஞ்சுபோம்.
நீ என்மேல வச்சிருக்கிற மதிப்புக் கொறைஞ்சிடும்.
நீ அங்கேயே இருந்துக்க.'
துளியும் போலித்தனமின்றி மிகப்பெரும் யதார்த்தத்தை,
தன்கௌரவம் பார்க்காது சீடனுக்கு உணர்த்திய அக்குருவின் மேல்,
அவனுக்கு மேலும் மதிப்பு உயர்கிறது.

💛💙💙💙

அதே நாட்டரசன்கோட்டை விழாவில் மற்றொருமுறை.
குருநாதர் உரையாற்றுகிறார்.
பேரறிஞர் பலர் அவரைச் சூழ குழுமியிருக்கின்றனர்.
அவர்களுள் இராமராஜன் என்ற நாமமிட்ட ஒரு வைஷ்ணவர்.
தமிழ்க்கடல் என்பது அவரின் பட்டம்.
தமிழ் கேட்டதும் தன்னை மறப்பார்.
அன்று குருநாதர் இராமனைப் பரம்பொருளாய் விரிக்கும் ஒரு பாடலை எடுத்து,
அணுவணுவாய் இரசித்துச் சொல்லத் தொடங்குகிறார்.
சபை வாய்பிளந்து கேட்கிறது.
வைஷ்ணவருக்கோ ஆனந்தம் தாழவில்லை.
சபாஷ்! பலே! கோவிந்தா கோவிந்தா!! என,
பலவிதமாய் அவனது குருவின் பேச்சை அங்கீகரித்து ஆனந்திக்கிறார் அவர்.
அவர் கண்களில் ஆனந்தவர்ஷம் பொழிகிறது.
அவரின் ரசனை கண்டு குருவின் பேச்சு உச்சநிலையடைகிறது.
வைஷ்ணவர் தன்னை மறந்து தளர்கிறார்.
அப்போது  பாடலைச்சொல்லி முடித்த குருநாதர்,
அந்த வைஷ்ணவரைப் பார்த்து,
'இந்தப்பாடலை பிற்சேர்க்கையில் போட்டுட்டாங்க சார்' என்று சொல்ல,
சிலிர்த்தெழுகிறார் வைஷ்ணவர்.

💙💛💙💙

அப்போதுதான் சென்னைக் கம்பன்கழகம்,
இராமாயணத்தைப் புதுமையான முறையில் பதிப்பித்திருந்தது.
பதிப்புக்குழுவிலிருந்த கம்பனடிப்பொடி,  நீதிபதி இஸ்மாயில் முதலியோர்,
அந்த அவையில் சூழ இருக்கின்றனர்.
குருநாதரின் பேச்சில் தன்னை மறந்திருந்த அந்தத் தமிழ்க்கடல்,
'பிற்சேர்க்கையில் பாடலைப் போட்டுட்டாங்க சார்' அவர் என்று சொன்னதும்,
தன் இரண்டு கைகளையும் வானம்நோக்கித் தூக்கி,
'பாவிகள் நரகத்திற்குப் போவார்கள், பாவிகள் நரகத்திற்குப் போவார்கள்' என்று,
சத்தம்போட்டுச் சபித்தார்.
அந்தப் பேரறிஞரை சூழலை மறக்கச்செய்த,
தன்குருவின் உரையின் வலிமைகண்டு,
அன்று அவன் உறைந்துபோனான்.

💙💙💛💙

அப்போது இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில்,
இராமனுஜம் என்னும் பயணிகள் கப்பல் ஓடிக் கொண்டிருந்தது.
அவனுக்கு செலவு வைக்கக்கூடாது என்பதற்காக,
குருநாதர் விமானத்தைத் தவிர்த்து அந்தக் கப்பலில்த்தான் வருவார்.
அப்படி அவர் வரும்போதெல்லாம்,
அவனது குருவின் துணைவியார்,
அவனுக்குப் பிடித்த உணவுப் பண்டங்களைச் செய்து கொடுத்தனுப்புவார்.
குருநாதர் கப்பலிலிருந்து இறங்கும்போது சிரித்துக்கொண்டே,
'உங்கம்மா உனக்குப் புளிசாதம் பண்ணிக்கொடுத்தாடா?,
பாவம் கப்பல் ஆப்பீசருங்க ரொம்ப நாளா,
நல்ல சாப்பாடில்லாம தவிச்சிக்கிட்டிருந்தாங்க
அதை அவங்ககிட்டக் குடுத்திட்டேன்.
நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே,
நான் உனக்குப் பண்ணிப்போடுறன்' என்பார்.

💙💙💙💛

அதுபோலவே இங்கிருந்து அவர் புறப்படும்போது,
அவர்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு,
அவனால் முடிந்தவற்றை வாங்கிக்கொடுத்து அனுப்புவான்.
அடுத்தமுறை அவன், அவர்கள் வீடு செல்லும்போது,
அவன் கொடுத்தபொருள் ஒன்றும் வீடு செல்லாதது தெரியவரும்.
கப்பல் வேலைக்காரர்களிலிருந்து ரயில் ஊழியர்கள்வரை,
அத்தனைபேர்களிடமும் அப்பொருள்கள் சேர்ந்திருக்கும்.
'என்பும் பிறர்க்குரிய அன்பர்' அவர்.
அவர் இறக்கும்போது,
குடும்பத்திற்குச் சொந்தமாக ஒருவீடு கூட இருந்திருக்கவில்லை.
அதுவே அவர்தம் உயர்வுக்குச் சான்று பகன்றது.

💛💙💙💙

அப்போது அவன் யாழில் ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்து,
அதில் தங்கியே கம்பன் கழகத்தை நடத்திக் கொண்டிருந்தான்.
எந்த வசதியுமில்லாத ஒரு அறை அது.
ஒரு கோழிக்கூட்டின் ஊடாகத்தான் கழிவறைக்குச் செல்லவேண்டும்.
அந்த அளவிற்கு வசதி குறைந்த அறை அது.
குருநாதரின் உரையைக் கேட்டதும்,
செல்வர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், கல்விமான்கள் என,
அத்தனைபேரும் குருநாதரைத் தங்கள் வீட்டுக்கு வரும்படி இரந்துநின்றனர்.
அத்தனைபேர் கோரிக்கைகளையும் நிராகரித்த அவர்.
'இந்தப் பசங்களோட இருப்பதுதான் எனக்குச் சந்தோஷம்.' என்று சொல்லி,
அவர்களின் அழைப்பைத் தவிர்த்துவிட்டு,
வசதிகளற்ற அந்த அறையிலேயே அவரும் தங்கினார்.
வசதிகளைத் துறந்து அன்பை மட்டுமே தேடிய முனிவர் அவர்.
குருவின் அவ்வன்பு கண்டு கரைந்துபோனான் அவன்.

💙💛💙💙

அவன் குருநாதர் அந்த அறையில்,
அவனோடும், அவன் நண்பர்களோடும் தங்கினார்.
இருந்த ஒரே கட்டிலில் அவர் படுத்திருக்க,
அவனும் அவன் நண்பர்களும்,
அக்கட்டிலைச்சூழ்ந்து நிலத்தில் படுத்துக்கிடப்பார்கள்.
விடிந்ததும் ஒருவன் அவருக்கு,
குளிக்க கிணற்றில் நீர் அள்ளிக்கொடுப்பான்.
ஒருவன் குருநாதரின் உடைகளைத் தோய்ப்பான்.
அவன் குருநாதருக்கு ஏற்றபடி காப்பி தயாரிப்பான்.
ஒற்றை அறைக் குடித்தனம் அவனுக்கு சுவர்க்க சுகம் தந்தது.

💙💙💛💙

ஒருநாள் காலைப்பொழுது.
வெந்நீர் வைத்து குருநாதருக்குக் குளிக்கக்கொடுத்த பின்பு,
அவருக்கான சமையலை,
அவசர அவசரமாக அவன் செய்துகொண்டிருக்கிறான்.
குளித்து முடித்து வந்த குருநாதர் அவனைப் பார்த்து,
'டேய் ஓம் வேட்டியும் அழுக்காயிருந்திச்சு நானே தோய்ச்சுட்டேன்டா', என்கிறார்.
விக்கித்துப்போனான் அவன்.
குருநாதரின் தோளில் அவனது தோய்த்த வேட்டி.
குருநாதர் வந்துவிட்டால் அவன் தன்னை மறந்துபோவான்.
தன்னையே மறப்பவன் உடையை நினைப்பானா?
தன்னை மறந்த அவனது நிலையைக் கவனித்து,
தாயன்போடு அத்தெய்வம் அவன் வேட்டியையும் தோய்த்து,
தோளில் சுமந்து வந்து நிற்கிறது.
விம்மி அழுதுவிட்டான் அவன்.
எத்தகைய ஒரு குரு.
ஏழை மாணவனின் உடை தோய்த்த அவ் அந்தணன்.
அறவாளி அந்தணன் அன்றி வேறென்ன?

💙💙💙💛

இலங்கைக்கான முதற்பயணம் முடித்து குருநாதர் தாயகம் திரும்புகிறார்.
தலைமன்னாரில் அவனும், அவன் நண்பர்களும்,
அவரைப் பயணம் அனுப்ப வந்திருக்கிறார்கள்.
அந்தப்பிரிவு வாழ்நாளில் அவனால் மறக்கமுடியாத பிரிவு.
சினிமாவும், பெண்களும், சிரிப்பும், கூத்துமாயிருக்கும்,
அவன் இளம் நண்பர்கள் குருநாதரின் பிரிவைத் தாங்க முடியாது,
விம்மி விம்மி அழுகிறார்கள்.
அவனுக்கோ எல்லையற்ற ஆச்சரியம்.
இவர்களா அழுகிறார்கள்?
இவர்கள் முகம்வாடிக்கூட அவன் பார்த்ததில்லையே.
இலக்கியத்தின் பக்கம் தலைவைத்தும் படுக்காதவர்கள் அவர்கள்.
அவர்களையே  கவர்ந்து நிற்கிறார் அவர்.

💙💛💙💙

கண்ணீர்விட்டுக் கதறும் அவர்களிடம்
வார்த்தையேதும் பேசாது கலங்கிய கண்களோடு,
தீடீரெனக் கப்பல் ஏறிவிடுகிறார் குருநாதர்.
திரும்பும்போது எந்நேரமும் இன்பத்துறையில் எளியவனான,
கிரி என்னும் அவன் நண்பன் சொன்னது,
இப்போதும் அவனுக்கு ஞாபகத்தில் இருக்கிறது.
'மச்சான் இந்த அஞ்சாறு நாளா காமங்கூட வரேலடாப்பா',
இளையோரையும் ஈர்த்த ஏந்தல் அவர்.

💛💙💛💙💛💙💛💙

                                           (அடுத்த வாரமும் குருநாதர் வருவார்) 
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்