'மனுநீதிகண்ட சோழன்': பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

பிறந்தனன் உலகம் போற்ற என்ற தொடரில், உலகம் போற்றும்படியாக இவன் பிறந்தான் எனும் பொருளும், உலகத்தைப் காக்க இவன் பிறந்தான் எனும் பொருளும், ஒன்றித்து நின்று மகிழ்வு தருகின்றன.
(போற்ற - வாழ்த்த, காக்க)

🔔 🔔 🔔 🔔
லகம் காக்கப் பிறந்த அம்மைந்தனின் நெறிப்பட்ட வளர்ச்சியை,
தொடரும் பாடல் எடுத்தியம்புகிறது.

தவம் முயன்று அரிதில் பெற்ற தனி இளங் குமரன் நாளும்
சிவம் முயன்று அடையும் தெய்வக் கலை பல திருந்த ஓதி
கவனவாம் புரவி யானை தேர்படைத் தொழில்கள் கற்று
தவம் முயன்ற அதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான்.

தனி - ஒப்பற்ற, திருந்த - ஐயம்திரிபற, கவனவாம் - வேகமாகத்தாவி ஓடும், புரவி - குதிரை, பவம் -பிறவி, முயன்றது - அடைந்தது

(தவம் செய்து அருமையாய்ப் பெற்ற ஒப்பில்லாத அவ்வரச  குமாரன் தினமும் முயற்சி செய்து சிவத்தை அடைவிக்கும் தெய்வக்கலைகள் பலவற்றையும் ஓதியதோடு, குதிரை, யானை, தேர், படை ஆகியவற்றின் தொழில்கல்வியையும் கற்று, முற்பிறவியில் செய்த புண்ணியங்களினால் உண்டான பேற்றினால் நற்பண்புகளில் சிறந்து விளங்கினான்.) 

கல்வி இருவகைத்து,
உலகியலிலிருந்து விடுவித்து மறுமைப் பயன் தருபவை ஒருவகை.
உலகியல் ஆற்றல் தந்து இம்மைப் பயன் தருபவை மறுவகை. 
இந்த இளவரசன் தந்தையைப் பின்பற்றி
மறுமைப் பயன் தரும் கல்வியையும் இம்மைப் பயன் விளைக்கும் கல்வியையும்,
ஒருங்கே கற்றனன் என்கிறார் சேக்கிழார்.
இவ்விரண்டுவகைக் கல்வியுள்ளும்,
ஆன்மஈடேற்றம் தரும் முதல்வகைக் கல்வியே உயர்ந்ததாகலின்,
அதனைக் கற்றமையை முன்கூறி உலகியல் கல்வி கற்றமையை பின்கூறி,
இவ்விரு கல்வி நிலைகளினதும் வரிசை உணர்த்தும்,
சேக்கிழார்தம் மாண்பு இரசிக்கத்தக்கது.

🔔 🔔 🔔 🔔

சிவம் முயன்று அடையும் தெய்வக் கலை பல திருந்த ஓதி
கவனவாம் புரவி யானை தேர்படைத் தொழில்கள் கற்று

கற்றதன் பயன், 
இறைவனின் நற்றாள் அடைதலே என்பார் வள்ளுவர்.
அவர்தம் நெறியைப் பின்பற்றி, 
இறையைச் சார்விப்பதான தெய்வக்கலைகளை,
இவ் இளங்குமரன் கற்றான் என்கிறார் தெய்வச் சேக்கிழார்.
மறுமைப்பயன் தரும் கல்வியைக் கற்றான் என்பதோடு நில்லாமல்,
இம்மைப்பயன் தருவதான தன் குலத்தொழிலுக்குப் பயன் செய்யும்,
குதிரை, யானை, தேர், படைப்பயிற்சிகளையும்,
இவன் பெற்றான் என்கிறார்.
இவ்விடத்தில் மறுமைப்பயன் தரும் கல்வியை,
தெய்வக்கலை என்றும், 
இம்மைப்பயன் தருபவற்றை தொழில்கள் என்றும்,
குறிப்பிடுதல் கவனிக்கத்தக்கது.
அதுமட்டுமன்றி,
இறைநெறி காட்டும் கலைகளைப் பயில்தலை,
ஓதுதல் என்ற சொல்லாலும்,
உலகநெறி காட்டும் தொழில்களைப் பயில்தலை,
கற்றல் என்ற சொல்லாலும் சுட்டுவதும்,
ஆழ்ந்த கவனத்திற்குரியது.

🔔 🔔 🔔 🔔

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

இஃது வள்ளுவர் காட்டும் கல்விநெறி.
அக்குறளை மனங்கொண்டு, 
தெய்வச் சேக்கிழார்,
இவ் இளவேந்தன்தன் தரமுரைக்கும் அழகு தனியானது.
இப்பாடலில் வரும்,
ஓதி, கற்று எனும் சொற்கள் குறளில் வரும் கற்க என்பதனையும்,
திருந்த எனும் சொல் கசடற என்பதனையும்,
கலைபல, தொழில்கள் எனும் சொற்கள் கற்பவை என்பதனையும்,
பண்பில் மிக்கான் எனும் தொடர் நிற்க அதற்குத்தக என்பதனையும்,
பொருந்தி நின்று,
இப்பாடலைக் குறள் வடிவாக்கி இரசிக்க வைக்கின்றன.

🔔 🔔 🔔 🔔

இக்காதையின் முக்கிய பகுதிக்கு,
அடுத்த பாடல் நம்மை அழைத்துச் செல்கிறது.

அளவில் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க
உளமகிழ் காதல் கூற ஓங்கிய குணத்தால் நீடி
இளவரசு என்னும் தன்மை எய்துதற்கு அணியனாகி
வளர்இளம் பரிதி போன்று வாளுநாள் ஒருநாள் மைந்தன் 

தொல் - பழைய, முற்றி - முதிர்ந்து, கூற - மிக, ஓங்கிய - உயர்ந்த, நீடி - வளர்ந்து, அணியன் - அண்மித்தவன்

(தொன்மையான கலைகள் யாவும் நிரம்பப்பெற்று, தந்தையார் மனம் மகிழ்ந்து ஆசைகொள்ளும்படி மென்மேலும் வளரும் நற்குணங்கள் நிறைந்தவனாய்த் திகழ்ந்த இம்மைந்தன், இளவரசனாகும் தகுதியை அண்மித்து ஒளியுடைய வளர்கின்ற இளம்சூரியன் போன்று விளங்கினான்.)

முதற்பாடலில்,
தெய்வக்கலைகளை ஓதியும், தொழிற்கல்வியை கற்றும்,
வளர்ந்தான் என்றுரைத்தவர்,
இப்பாடலில்,
அவ்விரண்டு வித்தைகளிலும் அவன் முதிர்ச்சி பெற்றான் என்கிறார்.

🔔 🔔 🔔 🔔

கல்விக்கு முடிவில்லை ஆனால் முதிர்ச்சி உண்டு.
அதுநோக்கி,
கற்று முடித்தான் என்றுரைக்காமல், 
முதிர்ந்தான் என்றுரைக்கிறார் தெய்வச்சேக்கிழார்.
இப்பாடலில் வரும் முற்றி எனும் சொல்லுக்கு,
முதிர்ந்தான் என்பதே பொருளாம்.

🔔 🔔 🔔 🔔

உளமகிழ் காதல் கூற ஓங்கிய குணத்தால் நீடி
எனும் அடியில் வரும்,
ஓங்கிய எனும் சொல்லை இருபுறமும் சேர்த்து,
ஒங்கிய குணத்தால் நீடி என்றும்,
ஓங்கிய காதல் கூற என்றும் பொருள் கொள்ளலாம்.
மைந்தனிடம் உயர்ந்து வளர்ந்த நற்குணங்கள் கண்டு,
உளமகிழ்ந்து அவன்பால் அரசனுக்கு காதல் வளர்ந்தது, 
என்பது இவ்வடிக்காம் பொருள்.

🔔 🔔 🔔 🔔

மைந்தனிடம் வளர்ந்த நற்குணங்கள் - காரணமாக,
மன்னன் மனதில் வளர்ந்த காதல் - காரியமாயிற்று.
இக்காரண காரியத் தொடர்புணர்ந்தால்தான்,
தன்மைந்தன் என்பதற்காயன்றி,
அவன் நற்குணங்கண்டே மன்னன் மகிழ்ந்தான் எனும் உண்மையை, 
நாம் தெரிந்துகொள்ளலாம்.

🔔 🔔 🔔 🔔

இளவரசு என்னும் தன்மை எய்துதற்கு அணியனாகி
அளவில் தொல்கலைகளும், ஓங்கிய குணமும் முற்றியதால்,
இளவரசாகும் தகுதியை இவன் அண்மித்தான் என்கிறது இப்பாடல்வரி.
அரசனுக்கு அடுத்தநிலையை அடைதல் இளவரசத் தகுதியாம்.
பசுவின் துன்பத்திற்கு பரிகாரம் பதிலாகாது எனநினைந்தான் அரசன்.
பசுவின் துன்பம் கண்டு பரிதவித்தாலும்,
பரிகாரம் செய்து மீள நினைந்தான் மைந்தன்.
இவ்வேற்றுமை நினைந்து,
இளவரசனாகும் தன்மையை அடைந்தான் என்னாது,
அண்மித்தான் என்கிறார் சேக்கிழார்.

🔔 🔔 🔔 🔔

வளர்இளம் பரிதி போன்று வாளுநாள்
மழலைகள் வளர்ச்சியை மதியுடன் ஒப்பிடுதலே மரபு.
மதி வளர்ந்து தேயும்.
இவ்விளவரசன்,
புகழால் வளருதல் அன்றித் தேய்வடையான் என்பதைக் குறிக்கவும்,
இவன் சூரியமரபிற் தோன்றியவன் என்பதை உணர்த்தவும் வேண்டி,
இவனது வளர்ச்சியை,
மதியோடு ஒப்பிடாமல் உதயசூரியனோடு ஒப்பிடுகிறார் தெய்வச் சேக்கிழார்.
இவ்வுவமையிலும் அவ்விளவரசனின் வளர்ச்சி முற்றுப்பெறாமை உணர்த்தப்படுகிறது.

🔔 🔔 🔔 🔔

இப்பாடலின் நிறைவடியில் வரும் ஒருநாள் என்பதற்கு,
குறித்த ஒருநாளில் எனப்பொருளுரைக்காது,
இவன் வாழ்நாளில் அமைந்த ஒப்பற்ற அந்நாளில்,
எனப்பொருளுரைத்தல் அவசியம்.
ஒரு என்பதற்கு ஒப்பற்ற என்பதும் பொருளாம்.
இவ்விளவரசனுக்கு சிவ தரிசனம் கிடைக்கப்போகும் அந்நாளை,
ஒப்பற்ற நாள் என்று தெய்வச் சேக்கிழார் உரைப்பதன்,
பொருத்தப்பாடு கண்டு நாம் உளம் மகிழ்கிறோம்.

🔔 🔔 🔔 🔔
(சோழன் கதை தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்