'தமிழ்மொழிக் கல்வி - இன்றும் இனியும்' -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-

பாடசாலைகள் கட்டடங்களால் வளர்ந்துள்ளன. பாடநூல்கள் அச்சாக்கப் புதுமையால் அழகு பெற்றுள்ளன. தொழில்நுட்ப வசதிகள் என்றுமில்லாத அளவில் அதிகரித்துள்ளன. கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதற்கு உதவக் கூடிய கற்றல் சாதனங்கள் பெருகியுள்ளன. 

இவ்வாறு, கல்விச்சூழலின் அனைத்துத் தரப்பிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நாடு முழுவதும் தமிழ்மொழிப் பாடத்திற்கான மாணவர் அடைவுமட்டமோ, பெரிதும் வீழ்ச்சி கண்டுள்ளது. 
பதினொராம் வகுப்பு (க.பொ.த. சாதாரணதரம்) மற்றும் பதின்மூன்றாம் வகுப்பு (க.பொ.த. உயர்தரம்) ஆகிய தரங்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவரும் பெறுபேற்றால், தமிழ்ப்பாடத்தைத் தெரிவுசெய்யும் மாணவர் தொகை குறைவடைந்துள்ளது. 

'க. பொ. த. சாதாரண தரம் வரையும் தமிழ் மொழியைக் கட்டாய பாடமாகப் பயின்றுவரும் மாணவர்கள் க. பொ. த உயர்தர வகுப்பில் தமிழை ஒரு பாடமாகத் தெரிவு செய்து கற்பதற்கு விரும்பாத நிலை காணப்படுகிறது. இந்நிலைக்குக் காரணம் தமிழ்ப் பாடத்திற்கான பாடப்பரப்புக்கள் அதிகமானவை, அதனால் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வது கடினம் எனப் பலராலும் பலவிதமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.' 
என்கிறது தேசிய கல்வி நிறுவகத்தின் வெளியீடாகிய நூலொன்று. 
ஏன் இந்த நிலை?
இதற்கான காரணங்கள் விரிவாக ஆராயப்படவேண்டும்.

🗼கலைத்திட்டம் பாடத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் 
🗼பிழைகள் மலிந்துவிட்ட பாடநூல்கள், 
🗼சேவை எனும் நிலையிலிருந்து இறங்கித் தொழிலாகிவிட்ட ஆசிரியம், 
🗼கல்வி நிர்வாகத்தில் காணப்பெறும் சீர்குலைவுகள்


முதலிய பலவற்றுள் ஒன்றோ, பலவோ இதற்கான காரணமாக இருக்கலாம்.
இவற்றுள் மிகவும் அடிப்படையாக இருப்பது, கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களில் காணப்படும் குறைபாடே என ஆசிரியர் பலரும் நேரடியாக என்னிடம் கூறியுள்ளனர். எனவே, இந்த வாரம் அதைப் பற்றி மட்டும் கருதலாம் என எண்ணுகிறேன்.

கலைத்திட்டம் மிக விரிந்து காணப்படுகின்றமை, கலைத்திட்டத்தின் நோக்கத்துக்கும் விடயத் தெரிவுக்கும் இடையில் பொருத்தப்பாடு காணப்பெறாமை, கலைத்திட்டம், பாடத்திட்டம் என்பன தெளிவுற வரையறுக்கப்படாமையால் பாடநூலும் ஆசிரியர் வழிகாட்டியும் முரண்படுகின்றமை, கலைத்திட்டம், தரத்துக்கும் வயதுக்குமேற்ற படிமுறை வளர்ச்சியைக் கொண்டிராமை முதலிய பல குறைபாடுகள் கலைத்திட்டத்தில் உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.
கலைத்திட்டம் மிக விரிந்து காணப்படுகின்றமைக்கு முக்கிய காரணம் பிரதேசம் தொடர்பான தேவையற்ற பிடிவாதமான அக்கறையாகும். 

தரமான - மாணவர் வயது மட்டத்துக்குப் பொருத்தமான - பாடங்களை இணைத்துக் கொள்வதற்குப் பதிலாக, எல்லாப் பிரதேசத்து இலக்கியங்களையும் கலைத்திட்டத்தில் உள்வாங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டால், கலைத்திட்டத்தின் வழி உருவாகும் பாடநூல் தேவையற்ற விதத்தில் விரிந்து காணப்படுகின்றது.
 
அதாவது யாழ்ப்பாணம், வன்னி, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை என எல்லாப் பிரதேசத்து இலக்கியங்களும் கவனத்தில் எடுக்கப்படுகின்றபோது, மாணவர்க்கும் பொருத்தமான அலகு, என்பது காணாமற் போய்விடுகிறது.
இவ்வாறே சைவம், இஸ்லாம், கிறிஸ்தவம் எனஅனைத்துச் சமயங்களையும்,இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர்கள், முஸ்லிம்கள் எனஅனைத்து இனத்தாரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடங்கள் கலைத்திட்டத்தில் வேண்டும் எனும் அவசியமற்ற கருத்துநிலையால், பாடநூல்களில் வீணே பாடங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

மாணவர்தம் அறிவுமட்டத்தைக் கருத்திலெடுக்காது, அவர்களது மொழி, இலக்கிய ஆளுமையை வளர்க்கும் நோக்கத்தில் கருத்தைக் குவிக்காது வெறுமனே பிரதேச, இன, மத வேறுபாடுகளைக் கவனத்தில் எடுக்கும் கலைத்திட்டங்களாலும், அவற்றின் வழி உருவாக்கப்படும் பாடநூல்களாலும் சுமை அதிகரிக்கின்றதே ஒழிய, மாணவர்களின் மொழியறிவு குறிப்பிடத்தக்க அளவிலேனும் விருத்தியடையவில்லை.
 
மாணவர்களின் வயது மட்டத்துக்கும் அறிவு மட்டத்துக்குமான பாடங்களை மட்டும் இணைத்துக் கொண்டால், அப்பாடங்களை மாணவர் விருப்புடன் கற்பர். அவை அவர்களுக்குச் சுமையாகவும் இருக்காது.
தேசிய கல்வி நிறுவகத்தில் தமிழ்மொழித்துறைக்குப் புதிதாக நியமனம் பெற்றுள்ள பணிப்பாளர் இவ்விடயத்தில் கவனம் குவிப்பாரா?

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்