'நெஞ்சினால் பிழைப்பிலாள்': பகுதி 2 - கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

லகம் ஒப்பும் வகையில்,
ஓர் அபாண்டமான பழியினை சில குறுமதியாளர்,
அகலிகை காதையுள் தம் கற்பனையால் புகுத்தி,
வீண் பழி உரைப்பர்.
அவர்தம் கற்பனையையும் அதற்காம் பதிலையும் காண்பாம்.
♠♠♠♠
அகலிகை ஓர் இளம்பெண்.
கௌதம முனிவரோ முதியவர்.
இம்முரண்பாட்டால்,
இவ் இருவர்தம் வாழ்க்கையும் சிறப்புற்றிருக்க வாய்ப்பில்லை.
முனிவரானதாலும், முதியவரானதாலும்,
சிற்றின்ப நாட்டமின்றி இருக்கக்கூடிய கௌதமர்,
அகலிகையை மகிழ்விக்க முடியாதவராய் இருந்திருப்பார்.
காமநாட்டமிக்க இளைஞனான இந்திரனிடம்,
தன் நீண்டநாள் ஏக்கம் தீரும் விருப்பால்,
அகலிகை உடன்பட்டே இணங்கியிருப்பாள் என,
மரபிலக்கியங்களில் பயிற்சி இல்லாத,
அழுக்குகளைத் தேடிக்காண விழைதலையே ஆய்வாகக் கருதும், 
நவீன அறிஞர் சிலர் உரைக்கின்றனர்.
இவர்களின் இக்கூற்று முழுக்க முழுக்கப் பொய்யானது.
♠♠♠♠
நரையோடும், திரையோடும் கூடிய முதியதோற்றத்தில்,
முனிவர்களை,
சினிமாக்களிலும், நாடகங்களிலும் மட்டுமே கண்டு பழகிய இவர்கள்,
முனிவர் என்றாலே முதியவர் எனக் கருதுகின்றனர். 
இவர்தம் கருத்துத் தவறானது.
மாபெரும் முனிவரான 'சுகர்',
பதினாறே வயதானவர் என்பதை இவர்கள் அறியார்.
கௌதமர் முதியவர் என்ற கருத்துக்கு,
இராமாயணத்தில் எங்கும் ஆதாரம் இல்லை.
அதுபோலவே,
அகலிகையை மிக இளமையான பெண் என்று, 
அறியாது உரைத்து வருகின்றனர் இவர்கள்.
அகலிகைக்குச் சாபவிமோசனம் அளித்தபின்,
இராமஇலக்குவணரை அழைத்துக்கொண்டு,
விசுவாமித்திரர் மிதிலை செல்கிறார்.
இவர்களை,
ஜனகனின் குலகுருவான சதானந்தரே வரவேற்பதாய்,
கம்பன் கூறுகிறான்.
சதானந்தமுனிவர் அகலிகையின் மகனாவார்.
அகலிகை கல்லாய்க் கிடந்த கால அளவை,
இராமாயணம் நமக்குத் தராவிடினும்,
மேற்சொன்ன சம்பவத்தால்,
இந்திரனால் ஏமாற்றப்படும்போது, 
அகலிகை,
ஒரு தாயாகவே இருந்தனள் என்பது தெரியவருகிறது. 
இவ்வுண்மை தெரியவர,
இந்திரனால் ஏமாற்றப்பட்டபோது,
அகலிகை மிகச்சிறிய வயதுடைய இளம்பெண்ணாய் இருந்தனள் எனும்,
கூற்றின் பொய்மை உணர்கிறோம்.
♠♠♠♠
பற்றில்லாத முனிவர்கள் சிற்றின்ப நாட்டமிலராதலால்,
சிற்றின்ப வேட்கை கொண்ட பெண்ணை,
திருப்தி செய்யார் எனும் வாதமும் தவறானதே.
புலனடக்கும் பயிற்சியில்லாது சிற்றின்பம் புகுவார்,
அவ்வின்பத்துள் நிலைக்க வல்லாரல்லர்.
புலன்களை அடக்கவல்ல முனிவரோ,
தம் மனஉறுதியால்,
காம இன்பத்தின் கரைகாண வல்லார்.
இவ்வுண்மையால்,
அகலிகையின் இன்ப ஏக்கமே,
இந்திரன்பால் அவளை ஈடுபடச் செய்தது எனும் கூற்றின்,
பொய்மை வெளிப்படுகிறது.
இவற்றால்,
மேலோட்டமாய்க் கற்று, 
அகலிகையைக் கொச்சைப்படுத்தும்;,
போலி அறிஞர்தம் பொய்யுரைகள் நிராகரிக்கப்படுகின்றன.
கம்பகாவியத்தின் உட்புகுந்து,
கம்பன் கவிதைகளையே சான்றாக்கி,
தெரிந்தே அகலிகை தவறிழைத்தாள் என உரைக்கும்,
அறிஞர்தம் வாதங்களை இனிக் காணப்புகுவாம்.
♠♠♠♠
அவ்வறிஞர் காட்டும் முதற்சான்று இது.
பூனையாய் ஓடிய இந்திரனுக்குச் சாபம் கொடுத்து,
பின், அகலிகையை நோக்கிச் சாபமுரைக்கிறார் கௌதமர்.
அச்சாபத்தை,
பின்வருமாறு கம்பசூத்திரம் பதிவுசெய்கிறது.
'எல்லையில் நாணமெய்தி யாவர்க்கும் நகைவந்தெய்த
புல்லிய பழியினோடும் புரந்தரன் போயபின்றை
மெல்லியலாளை நோக்கி 'விலைமகள் அனைய நீயும்
கல்லியல் ஆதி' என்றான் கருங்கலாய் மருங்கு வீழ்வாள்'

முனிவரான கௌதமர் இப்பாடலில், 
'விலைமகள் அனைய நீயும்' என அகலிகையை விழிப்பதால்,
அகலிகை,
இந்திரனிடம் தெரிந்தே தன் கற்பை இழந்தாள் என,
இவர்கள் உரைக்கின்றனர்.
இனி, கௌதமரிடம் சாபவிமோசனம் வேண்டும் அகலிகை,
பிழைத்தது பொறுத்தல் பெரியவர் கடன் எனக்கூறி,
மன்னிப்புக் கோருகிறாள்.
'பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனேளூ அன்பால்,
அழல்தரும் கடவுளன்னாய்! முடிவிதற்கருளுக!| என்ன,
தழைத்து வண்டுஇமிரும் தண்தார்த் தசரதராமன் என்பான்
கழல் துகள் கதுவ, இந்தக்கல்லுரு தவிர்தி| என்றான்.'

இப்பாடலில்,
'பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே' என,
அகலிகை கூறுவதால்,
அவளே, தான் பிழைத்ததை ஒத்துக்கொள்வதாய்க் காரணம் காட்டி,
தெரிந்தே அவள் கற்பிழந்தாள் என, 
இவர்கள், தம்வாதத்தை வலிமை செய்கின்றனர்.
இங்ஙனமாய்,
அகலிகை தெரிந்தே தவறினள் என்று,
உரைப்பார்தம் கூற்று ஆராய்தற்கு உரியது.
♠♠♠♠
அகலிகை தெரிந்தே தவறிழைத்தாள் என்பதற்கு,
மேற்சொன்ன இரு ஆதாரங்களும் போதியனவாய் அமையவில்லை.
அகலிகையை விலைமகளாய்ப் பேசும் கௌதமர்,
சம்பவத்தால் உணர்ச்சிவயப்பட்ட நிலையிலேயே, 
அக்கூற்றை உரைக்கிறார்.
சூழ்நிலையின் தாக்கத்தால்,
அகலிகை தெரிந்தே தவறிழைத்தாள் என எண்ணி,
கௌதமர் அக்கூற்றை உரைத்திருக்கக்கூடும்.
முக்காலும் உணரும் முனிவர், நடந்தது அறியாரோ? எனின்,
கோபத்தால் உணர்வு கலங்கிய நிலையில்,
முக்காலும் உணர்தல் முனிவராலும் முடியாதென்பதே பதிலாகிறது.
ஆதலால்,
விலைமகளென முனிவர் பேசியதைக் கொண்டு மட்டுமே,
அகலிகையை,
தவறிழைத்தவளாய்க் கொள்ள முடியவில்லை.
♠♠♠♠
அதுபோலவே,
சாபவிமோசனம் வேண்டும் அகலிகை,
'பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே' என 
பெரியவர்களின் இயல்பை,
முனிவர்க்கு எடுத்துக்காட்ட உரைத்தாளேயன்றி, 
தான் பிழைத்ததை ஒத்துக்கொள்ள,
அங்ஙனம் உரைத்தாள் அல்லள் என,
உரைத்தலும் கூடும். 
எனவே,
இவ்விரு செய்திகளையும் மாத்திரம் கொண்டு,
அகலிகை தெரிந்தே பிழை செய்தாள் என,
வைக்கப்படும் வாதம் வலியிழந்து போகிறது.
♠♠♠♠
இனி, 
அகலிகை கற்புள்ளவளே!
வந்தவன் இந்திரன் என அறியாதே,
அவள் ஏமாந்து தனை இழந்தாள் என,
கம்பனைச் சான்றாய்க் காட்டி,
உரைப்போரின் வாதங்களைக்காண்பாம்.
♠♠♠♠
கற்பு என்பது,
தமிழர்களால் மிக உயர்த்திப்போற்றப்பட்ட ஒரு பண்பு.
இப்பண்பு கொண்ட பெண்களை,
தமிழ்மரபு தெய்வமாய்ப் போற்றிற்று.
இம்மரபை ஏற்றே கம்பன் காவியம் செய்கிறான்.
இம்மரபைப் போற்றுதற்காக,
மூலநூலின் பல இடங்களிற் திருத்தம் செய்யவும்,
கம்பன் தவறினானில்லை.
வான்மீகத்தில்,
கபடசந்நியாசியாய் வரும் இராவணன்,
சீதையின் இடையையும், தொடையையும்பற்றி இழுத்துச் செல்வதாய்க் கதை.
மாற்றான் தீண்டின் மாசுறும் கற்பு என்பதால்,
தமிழ் மரபுநோக்கி,
இராவணன், சீதையை,
பர்ணசாலையோடு பறித்துச் சென்றதாய்,
மூலகதையை மாற்றியுரைப்பான் கம்பன்.
அதுமட்டுமல்லாது இவ்வகலிகைக் கதையிலேயே,
தமிழ் மரபு பேணுதற்காய், 
அத்தகு மாற்றம் ஒன்றை அவன் செய்கிறான்.
இராமன் கால்பட்டுக் கல் பெண்ணாவதாய் வான்மீகம் கூறும்.
இராமனேயானாலும்,
ஆண்மகனான அவன் கால்பட்டு அகலிகை உயிர்ப்புறுவது,
தமிழர்தம் கற்பு நிலைக்குப் பொருந்தாது எனக்கருதி,
மூலகதையில் மாற்றம் செய்து,
இராமன் காற்துகள்பட்டே அக்கல் பெண்ணாயிற்று என,
மாற்றியுரைத்தான் கம்பன்.
இங்ஙனமாய்,
கற்புநிலை பற்றி அதிக அக்கறை காட்டிய கம்பன்,
கற்பிழந்த ஒருவள்,
தூயனான இராமன் காற்துகள்பட்டு உயிர்த்தாள் என, மூலகாதையில் மாற்றம் செய்து பாடுவானா?
எனக்கேள்வி எழுப்பி,
இராமனாற் சாபவிமோசனம் கொடுக்கப்பட்ட அகலிகை,
நிச்சயம் தூயளே என்பர் இவர்.
அநுமானப்பிரமாணத்தை அடிப்படையாய்க் கொண்ட இக்கருத்தே, 
இவர்தம் முதல் வாதம்.
♠♠♠♠
சீதை, பாஞ்சாலி, தாரை, மண்டோதரி, அகலிகை எனும் ஐவரும்,
தெய்வப்பெண்களாய் அங்கீகரிக்கப்பட்டு, 
பஞ்சகன்னிகையர் எனப் போற்றப்படுகின்றனர்.
தெய்வநிலையிற் போற்றப்படும்,
பஞ்சகன்னியர்களுள் ஒருவளாய் அமைந்ததால்,
அகலிகை நிச்சயம் தூயளே என்பது,
அதே அநுமான அடிப்படையைக் கொண்ட,
இவர்தம் அடுத்த வாதமாம்.
♠♠♠♠

(அடுத்த வாரமும் தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்