'பிழையும் பிழைதிருத்தமும்': பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

27.04.20அன்று உகரத்தில் வெளியிடப்பட்ட 'பிழையும் பிழைதிருத்தமும்' எனும் கட்டுரையின் மூன்றாம் பாகம் இன்று(29.04.20), இங்கே, உங்களுக்காக...

🚩🚩🚩🚩
ன்றைய அரச நிர்வாகங்களில்,
அமைச்சர்களைப் பேணும் முறைமை உண்டு.
புரோகிதர்களைப் பேணும் முறைமை இல்லை.
அதனாற்றான் இயற்கை தீச்சகுனங்களால் விடுக்கும் எச்சரிக்கைகளை அறியமாட்டாது,
இயற்கையின் பெருந்தாக்குதலுக்கு ஆளாகி நாம் நிலைகுலைந்து நிற்கிறோம்.
🚩🚩🚩🚩

முன் சொன்னாற்போல,
அண்மைக்காலமாக அடுத்தடுத்து நிகழ்ந்த இயற்கைச் சீற்றங்களை,
இது இயற்கை விடுக்கும் எச்சரிக்கை என அறிந்திருந்தால்,
தொடர் மரணங்களாலும், வீட்டுச்சிறை வாழ்க்கையாலும்,
நாம் இந்த அளவு இன்று வேதனைப்பட வேண்டி வந்திராது.
🚩🚩🚩🚩
பெரும்பாலும், மேற்சொன்ன இயற்கைச் சீற்றங்கள், 
இன்றைய உலகின் வலிமை பெற்ற வல்லரசுகளையே, சுற்றிச் சுற்றித் தாக்கியதையும், 
இன்று கொரோனாவால் அந்நாடுகளில் நிகழும் பேர் அவலத்தையும் கூட்டிக்கழித்துப் பார்க்க,
தம் பலத்தால் உலகின் இயற்கையை மாற்ற நினைத்த, 
வல்லரசுகளின்  அறம் மீறிய செயல்களுக்கான 
இயற்கையின் எதிர்வினைதான் இதுவோ என, ஐயுறவேண்டியிருக்கிறது.
🚩🚩🚩🚩
வல்லரசுகளுக்குப் பாதகத்திற்காம் பரிசு கிடைத்திருக்கிறது.
மற்றை நாடுகளுக்கு, அவ் வல்லரசுகளுடன் அணி சேர்ந்து நின்று
பாதகத்தைப் பார்த்திருந்ததற்காம் பரிசு கிடைத்திருக்கிறது.
🚩🚩🚩🚩
மேற்சொன்னவை,
நிகழ்ந்த பிழைகள் பற்றி ஆராய்ந்து உரைக்கப்பட்டவை.
இனி பிழை திருத்தங்கள் பற்றியும் ஆராய்தல் அவசியமாகிறது.
அப்பிழைதிருத்தங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 
🚩🚩🚩🚩
ஒன்று,
பாரம்பரியம் மிக்க மேற்சொன்ன சிந்தனைகளை நிராகரித்து,
தம் அறிவுக்கு ஆட்பட்டதே இவ் உலகு என இன்றும் நம்புவோர்க்கான அறிவுறுத்தல்.
மற்றையது,
மேற் சொன்ன பாரம்பரியங்களை நம்பி, 
நம் மூதாதையர் காட்டும் நன்நெறியில் செல்ல விரும்புவோர்க்கான அறிவுறுத்தல்.
🚩🚩🚩🚩
தம் அறிவை மட்டும் நம்பி இயங்கும் முதல் பகுதியினர், 
இயற்கையை மாசுபடுத்தும் செயலில், 
தாம் எல்லை கடந்து பயணித்ததை உணர்ந்தும்,
இவ் உலகு மனிதர்க்கு மட்டுமானது எனும்,
தமது தவறான சிந்தனையின் போக்கை உணர்ந்தும்,
உடனடியாக அவ் இரு நிலைகளிலும் மாற்றம் உண்டாக்க வேண்டும்.
இயற்கையை அலட்சியம் செய்து அவற்றை நாம் மாசு செய்தோம். 
இன்று இயற்கை நம்மை அலட்சியம் செய்து ஒடுக்கி,
தன்னைத்தான் தூய்மை செய்து கொண்டிருக்கிறது.
நாம் ஒடுங்கி வாழும் இக்காலத்தில், 
ஆறு, கடல், காற்று, ஆகாயம் எனும் அனைத்தும்,
தூய்மையாகிக் கொண்டிருக்கும் செய்தியை, 
விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிவித்துக் கொண்டிருக்கின்றனர். 
எனவே இன்றைய நம் துன்பம் இயற்கையின் எதிர்வினையே என்பதறிந்து,
இயற்கைக்குப் பணிந்து செயலாற்றத் தலைப்படின்,
இவ் இயற்கைப் பாதிப்பிலிருந்து நாம் வெளிவரும் வழி தானாய்ப் பிறக்கும்.
இஃது முன்னவர்க்கான செய்தி!
🚩🚩🚩🚩
இனி, 
நம் பாரம்பரியங்களிலும் மூதாதையரின் வழிகாட்டுதலிலும்,
நம்பிக்கை கொண்டோர்க்கான அறிவுறுத்தல்.
நம்முடைய மூதாதையர்களான, ரிஷிகளும், ஞானிகளும் தம் யோகக்காட்சியால்,
இன்றைய விஞ்ஞான ஆய்வுகளுக்கு அப்பால், எவ்வளவோ தூரம் சென்றுள்ளனர்.
இவ் உண்மையை நம்மில் பலர் அறியவில்லை.
வெறும் விஞ்ஞான அறிவை மட்டும், அறிவின் எல்லையாய் நம்பி இருக்கும் அவர்தமக்கு,
நான் சொல்பவை நகைப்பைத் தரலாம்.
அவர்தம் நகைப்புப் பற்றி எனக்குக் கவலை இல்லை!
அவர்களுக்கு நான் நகைப்பிற்குரியவனாய்ப்படுவதும்,
எனக்கு அவர்கள் நகைப்பிற்குரியவராய்ப்படுவதும் இயற்கைதான்.
'நாடவர் நம்தனை ஆர்ப்ப ஆர்ப்ப நாமும் அவர்தமை ஆர்ப்ப ஆர்ப்ப' என, 
இந்நிலையை மணிவாசகர் என்றோ பாடிவிட்டார். 
அவர்களைப் புறந்தள்ளி மற்றவர்க்காய் இனிச் செய்தி உரைக்கிறேன்.
🚩🚩🚩🚩
நம்முடைய வேதங்கள் அறிவின் 'மூலமாய்க்' கருதப்படுபவை.
அவ் வேத ஓசையுள் அனைத்துவித அறிவுகளின் கூறுகளும்,
சூக்குமமாய் உள்ளடங்கி இருப்பதாய் நம் பெரியவர்கள் உரைக்கின்றனர்.
சோதிடம் போன்ற கிரக சாஸ்திரங்களை, அன்றே உரைத்த ஒன்றே 
அவர்தம் அறிவிற்குச் சாட்சியாம். 
இவ் உண்மையை நம்பி மேற்குலகாரும்,
இன்று இவ் வேத ஆய்வில் ஈடுபட்டு வருவது வெளிப்படை.
🚩🚩🚩🚩
இவ் வேத மந்திரங்களில், உலகின் அனைத்துப் பொருட்களின் அணு அசைவுகளும்,
'பீஜ மந்திரங்களாய்ப்' பதிவாகியுள்ளதாய்ச் சொல்லப்படுகிறது.
இம்மந்திரங்களை முறைப்படி உச்சரிப்பதன் மூலமும், 
உயர் வேள்விகளால் தேவுக்களைப் பிரீதி செய்வதன் மூலமும், 
இயற்கையின் சீற்றத்தை அடக்கலாம் என,
நமது புராண, இதிகாசங்கள் பல இடங்களில் வலியுறுத்துகின்றன.
இவற்றைச் சரிவர ஆற்றக்கூடிய வேத விற்பன்னர்கள் பலர்,
பாரத தேசத்தில் பரவலாய் வாழ்ந்து வருகின்றனர்.
நமது ஈழமணித்திருநாட்டிலும் அத்தகையோர் ஒருசிலர் வாழ்ந்துவரவே செய்கின்றனர்.
அவர்களின் பங்களிப்பு இந்நேரத்தில் அவசியமானது.
🚩🚩🚩🚩
'கொரோனாவின்' தாக்குதலுக்கு அஞ்சி, 
இன்று ஆலயங்கள் பல பூட்டப்பட்டிருக்கின்றன.
அச்செயலில் எனக்கு உடன்பாடில்லை.
ஆலயங்களில் மக்களைக் கூட்டும் செயல் நிறுத்தப்படவேண்டுமே அன்றி,
அந்தணர் இயற்றும் வேள்விகளும் பூசைகளும்,
எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்படக் கூடாது என்று நான் கருதுகிறேன்.
எனவே, ஆலயங்கள் தோறும் வேதவிற்பன்னர்களால்,
முன்னையதைவிட அதிகமாய்ப் பூசைகளும் யாகங்களும் செய்யப்படல் வேண்டும்.
அவற்றில் எழுகின்ற மந்திர அதிர்வு,
நிச்சயம் இன்றைய இயற்கையின் சீற்றத்தைத் தணிக்குமென,
நான் உறுதியாய் நம்புகிறேன்
🚩🚩🚩🚩
வேதப்பயிற்சி இல்லாத மற்றையோர்க்கும் ஒரு கடமை உண்டு.
அவர்கள் தத்தம் இல்லங்களில் இருந்தபடி, 
ஐந்தெழுத்து மந்திரத்தையோ, எட்டெழுத்து மந்திரத்தையோ,
அல்லது தாம்தாம் விரும்பும் வேறு மந்திரங்களையோ
முடிந்தவரை அதிக நேரம் உச்சாடனம் செய்ய வேண்டும்.
அது தவிர விநாயகர் அகவல், திருமுருகாற்றுப்படை,
திருநீற்றுப் பதிகம், கோளறுப் பதிகம், அபிராமியந்தாதி,
இராமயாணத்தில் வரும் கருடாழ்வார் துதி முதலிய பாசுரங்களை,
தனித்தோ குடும்பத்துடன் இணைந்தோ,
தினந்தோறும் முடிந்தவரை பாராயணம் செய்தல் வேண்டும்.
மேற்சொன்ன பாடல்களால் அற்புதங்கள் நிகழ்ந்தமை வரலாறு.
இவ் உண்மை உணர்ந்து நம்பிக்கையோடு நம் போன்றவர்களும், 
ஒன்றிய மனத்தொடு இப்பாடல்களை ஓதினால்  
இயற்கையின் சீற்றத்தை அது பெருமளவு தணிக்கும் என்பது திண்ணம்.
மாற்றுமதங்களைச் சார்ந்தவர்களும் தம் மதங்கள் உரைக்குமாறு
இவ் இடர்தீர தம்வழிபாட்டினை இயற்றுதல் அவசியமாம்.
🚩🚩🚩🚩
என் அறிவுக்குப் பட்ட வரையில், 
இறை நம்பிக்கை உள்ளாரும் இல்லாரும், 
இயற்ற வேண்டிய கடமைகளை எடுத்துரைத்துள்ளேன்.
இக்கருத்துக்களில் சர்ச்சைகளும் தர்க்கங்களும் ஏற்படுத்தி,
காலத்தை வீண் விரயம் செய்யாமல்,
அவரவர்க்குரிய வழியில், இயற்கையின் சீற்றத்தைச் சாந்தம் செய்ய முனைவோம்.
இஃது என் பணிவான வேண்டுகோள்
🚩🚩🚩🚩
நிறைவாக ஒரு வேண்டுகோள்,
இன்றைய பிரச்சினை உலகளாவி எழுந்திருக்கும் பிரச்சினை.
இந்நிலையில் நம் மூதாதையர் உரைத்த மேற்சொன்ன உயர் கருத்துக்களை, 
உலகளாவி உரைப்பது நம் கடமையாம்.  
எனது மொழியறிவின் வறுமையால், 
இக்கட்டுரையைத் தமிழில் மட்டுமே என்னால் எழுத முடிகிறது.
இக்கட்டுரையைப் படிக்கும் பன்மொழிப்புலமை உள்ள வாசகர்கள், 
முடிந்தால் இக்கட்டுரையை உங்களுக்குத்தெரிந்த மொழிகளில் மொழிபெயர்த்து,
பொது வெளியில் உலாவவிடுவதன் மூலம், நம் மூதாதையரின் கருத்துக்களை 
உலகெலாம் சேர்ப்பிக்க வேண்டும் என வேண்டிப் பணிகிறேன்.
இஃது என் விளம்பரம் நோக்கிய வேண்டுதல் அன்று.
உலகின் விடுதலை நோக்கிய வேண்டுதல் என்பதை தக்கார் உணர்வார்களாக.
🚩🚩🚩🚩
ஞானபூமியாகிய பாரதமே, நான் பின் சொன்ன பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
பாரதத்தை வழிநடத்தும் இறை நம்பிக்கையுள்ள இன்றைய ஆட்சியாளர்களிடமும்,
மதிப்பிற்குரிய பாரதப் பிரதமரிடமும் இச் செய்தியைச் சேர்ப்பித்து, 
இம் முயற்சிகள் சிறக்க எவரேனும் துணை செய்தால், 
அது இவ் உலகிற்கு காலத்தால் செய்த உதவியாய் அமையும்
'சாதனை செய்க பராசக்தி'
🚩🚩🚩🚩

'பிழையும் பிழைதிருத்தமும்' நிறைவடைந்தது.

'இன்பமே எந்நாளும் துன்பமில்லை'
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்