'பொங்கித் தணிந்தது' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

னித மன உணர்ச்சிகள் ஆயிரமாய் விரிபவை.
அவ் உணர்ச்சிகளை வடநூலார் ஒன்பதாய் வகுத்து,
நவரசங்கள் எனப் பெயரிட்டனர்.
அவை அற்புதம், ரௌத்திரம், கருணை, பீபற்சம், 
சாந்தம், சிருங்காரம், பயம், நகை, வீரம் என்பனவாம்.

🍁 🍁 🍁

உளத்தில் தோன்றும் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புக்களை உடல் காட்டுவதால்,
உடலில் தோன்றும் உணர்ச்சி வெளிப்பாடுகளை அடிப்படையாய்க் கொண்டு,
இவ்வுணர்ச்சிகளை 'மெய்ப்பாடுகள்' எனுந் தலைப்பில்,
நம் தமிழ் இலக்கண நூலாசிரியர்கள் வகைப்படுத்தினர்.
உணர்ச்சி அடையாளங்கள் மெய்யில் படுவதால்,
மெய்ப்பாடு எனும் அப்பெயரை இட்டனர் போலும்.
வடநூலார் சொன்ன சாந்தம் எனும் ரசம் உணர்வுகள் அடங்கிய நிலையாம்.
அதனால் உணர்வுகள் அடங்கிய அந்நிலையில் மெய்ப்பாடுகள் தோன்றாமையை உணர்ந்தே,
வடநூலாரால் ஒன்பதாய் உரைக்கப்பட்ட ரசத்தை,
மெய்ப்பாடுகள் எனும் தலைப்பில் எட்டாய் உரைத்தனர் நம் தமிழறிஞர்கள்.

🍁 🍁 🍁

மனித மனங்களில் அலை அலையாய்க் கிளம்பும் உணரச்சிகள் ஆயிரமாய்த் தோன்ற,
அவற்றை ஒன்பதெனச் சுருக்கி வகைப்படுத்தியமை நமக்கு வியப்புத் தருகிறது.
இவ்வகைப்படுத்தல் சரியோ? எனின், சரியேயாம்.
ஏழான ஸ்வரங்கள் ஒன்றோடொன்று மாறிக் கலக்க,
இராகங்கள் ஆயிரமாய் விரிவது போன்று,
ஒன்பதான இரசங்களின் கலப்பால், 
உணர்ச்சிகள் பலவாய்த் தோற்றந் தருவது இயற்கையே.
இவ்வாறு விரியும் உணர்ச்சிகளைப் பாத்திரங்களில் பொருத்தி,
காவியங்களை மிளிரச் செய்கின்றனர் கவிஞர்கள்.

🍁 🍁 🍁

இவ்வுணர்ச்சி வெளிப்பாட்டால் சிறப்புற்ற இலக்கியப் பாத்திரங்கள் பற்பல.
தான் அமைத்த பாத்திரங்களூடு இவ் உணர்ச்சிகளைக் கையாளத் தலைப்பட்ட கம்பன்,
சற்று ஆழச் சிந்திக்கிறான்.
உணர்ச்சிகள் மனித மனங்களிலே தனித்தனி உதிக்கின்றனவா?
அல்லது,
ஒரு சேரத்தோன்றி குழப்பம் விளைவிக்கின்றனவா?
இக்கேள்வி கம்பன் மனதிற் சிந்தனையைத் தூண்டுகின்றது.

🍁 🍁 🍁

காட்சியிலோ, கருத்திலோ தோன்றும் சம்பவங்களே, 
மனித உணர்ச்சிகளின் தூண்டுகோல்கள்.
இச் சம்பவங்களிலே சில மேற்கூறிய உணர்ச்;சிகளில்,
தனியொன்றை மனதிலே தூண்டலாம்.
வேறு சிலவோ, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உணர்ச்சிகளைத் தூண்டி,
உணர்ச்சிக் கதம்பமாய் மனதைக் குழப்பம் செய்யலாம்.
உணர்ச்சிகள் ஒருமித்துக் கதம்பமாய்த் தோன்ற,
குழப்பமுறும் ஒரு பாத்திரத்தை வடிக்க நினைக்கிறான் கம்பன்.
அயோத்தியா காண்டத்திலே அதற்கான தக்க ஓர் இடம் வாய்க்கிறது.

🍁 🍁 🍁

ஓர் இரவில்,
தன் கன்ன மூலத்தினிலே கண்ட நரை தந்த உணர்ச்சியால்,
உடனேயே துறவு நோக்கிய முயற்சியில் ஈடுபட முடிவு செய்கிறான் தசரதன்.
உணர்ச்சிகளின் நிலையின்மையை உணர்ந்த அவன்,
மீண்டும் மனம் பற்றுக்கு உட்படுவதன் முன்,
அரச போகங்களை உடன் துறக்க வேண்டுமெனத் துணிகிறான்.
அக்கருத்தால் இராமனின் முடிசூட்டுவிழாவை,
அடுத்த நாளே நடாத்த நிச்சயிக்கிறான் அவன்.

🍁 🍁 🍁

செய்தி அறிந்து நாடே மகிழ,
இராமனைப் பயந்த கோசலையின் தோழியர் இவ் இனிய செய்தியை,
அன்னையாம் கோசலையிடம் சென்று வணங்கி உரைக்கின்றனர்.
தேசத்தின் ஆட்சி மாற்றம்பற்றிய செய்தி,
மக்களுக்குத் தெரிந்த பின்பே அந்தப்புர அரசியர்க்குத் தெரிகிறது.
அந்தப்புரங்களில் அரசியலை நிர்ணயிக்கும் இக்கால அரசியல்வாதிகளிற்கு,
அரசியல்த் தூய்மை பற்றித் தசரதனினூடு கம்பன் தரும் படிப்பனை இஃதாம்.

🍁 🍁 🍁

கோசலையிடம் தோழியர் பட்டாபிஷேகச் செய்தியைச் சொல்ல,
அவ்விடத்தில், உணர்ச்சிகளின் குழப்பநிலை பற்றிய கருத்தை,
பதிவு செய்ய நினைக்கிறான் கம்பன்.
சாதாரண புலவனாயின்,
தன் பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தி கேட்ட தாயின் மனதில்,
மகிழ்ச்சி பொங்கிற்றெனப் பாடி முடித்திருப்பான்.
அவ்வாறு பாடின், தன் கவிதைச் சிறப்பன்றி,
கோசலையெனும் பாத்திரத்தின் கற்புச் சிறப்பும் வீழும் எனக் கருதுகிறான் கம்பன்.

🍁 🍁 🍁

தன்னளவில் தனியளாய் இருக்கும் ஒரு பெண்,
கணவனுக்கு மனைவியாய், பிள்ளைகளுக்குத் தாயாய், மாமனுக்கு மருமகளாய்,
இன்னும் பலவாய் உறவுகள் விரிய விரிய,
பிறர் பார்வையிலே அவள் வேறு வேறு உறவுநிலைகளைக் கொள்கிறாள். 
நிகழும் சம்பவம் ஒன்றெனினும் இப்பல தன்மை கொண்ட உறவுநிலை பற்றி,
உணர்ச்சிகள் பலவாதல் இயல்பன்றோ?
இஃதுணர்ந்த கம்பன்,
கோசலையைத் தனித்து இராமனின் தாயாகக் காணாமல்,
தசரதனின் கற்புடை மனைவியாகவும் காண்பதால்,
அவ்விரு நிலைகளிலும் இராமனுக்குப் பட்டாபிஷேகம் எனும்,
இவ் ஒரு செய்தி ஏற்படுத்தும் உணர்ச்சி மோதலை விபரிக்க விரும்புகிறான்.

🍁 🍁 🍁

அவன் கவிச்சக்கரவர்த்தியல்லவா? ஒரே கவிதைக்குள் அவ் இரு உறவு நிலைகளால் தோன்றும் உணர்ச்சிகளையும்,
அமைத்துக் காட்டி விந்தை செய்கிறான்.

🍁 🍁 🍁

பட்டாபிஷேகச் செய்தி கேட்டதும் தாயாகிய கோசலையின் உள்ளம்,
எல்லையில்லா மகிழ்ச்சியால் பொங்குகின்றது.
தாயுறவு தலைமை உறவன்றோ? அத்தாய்மை உணர்ச்சி முந்துகிறது.
கோசலையின் தாயுள்ளத்திலே பேருவகைக் கடல் பொங்கிற்று,
என்று பாடலைத் தொடங்குகிறான் கம்பன்.
சிறக்கும் செல்வம் மகற்கெனச் சிந்தையுள்
பிறக்கும் பேருவகைக் கடல்
.......

🍁 🍁 🍁

இவ்வரிகளிலே தாயுள்ளத்தின் மகிழ்ச்சி நிலையை வெளிப்படுத்திய கம்பன்,
அவ் உள்ளத்திலே தொடரும் கற்பனை நிலைகளைச் சிந்திக்கிறான்.
தாயல்லவா? மறுநாள் பிள்ளை அடையப் போகும் பெருமைகளெல்லாம்,
அவள் மனதில் காட்சிகளாய் விரியத் தொடங்குகின்றன.
பெற்ற அன்றே, தன் மகன் உயர்வடைவான் என,
கற்பனையில் நினைந்து மகிழ்தல் தாய்மையின் இயல்பன்றோ? 
அவ் இயல்புணர்ந்த கம்பன்,
கோசலையிடம் அதைப் பொருத்திப் பார்க்கிறான்.

🍁 🍁 🍁

மறுநாள் நிகழப்போகும் பட்டாபிஷேகக் காட்சி,
அப்போதே கோசலை மனத்திலே தோன்றுகிறது.
முனிவர்கள் ஆசி கூற, 
அந்தணர்கள் மறையோத, 
மன்னர்கள் சூழ்ந்து வர,
மக்கள் குதூகலிக்க,
தம்பியர் பணிய,
அமிழ்தின் வந்த அணங்காம் சீதையுடன்
அரசவையில் இராமன் சிம்மாசனத்திலிருக்கும் காட்சி,
சிந்தையிலே தோன்ற, பிறக்கிறது பேருவகைக் கடல்.

🍁 🍁 🍁

எண்ண அலைகள், இந்த அளவில் முற்றுப் பெறாமல்த் தொடர்கின்றன.
நிமித்தகர்கள் குறித்த முடி சூட்டும் நல்ல நேரம் வந்து விட,
இராமனுக்கு முடி சூட்டுவதற்காகக் குலகுருவாம் வசிட்ட மகரிஷி,
இராமனருகில் வந்து அவனுக்கு முடி சூட்டத் தயாராகிறார்.
என்கின்ற அளவில் விரிந்ததான கற்பனைக் காட்சிகள் மகிழ்ச்சி தர,
கோசலை உள்ளத்திற் பொங்கிய உவகைக் கடல்,
திடீரென, வடவைக் கடல் தோன்ற வற்றிப் போயிற்று என்கிறான் கம்பன்.
சிறக்கும் செல்வம் மகற்கெனச் சிந்தையுள்
பிறக்கும் பேருவகைக் கடல் பெட்புற
வறக்கும் மா வடவைக் கனல் ஆனதால்

🍁 🍁 🍁

உவகைக் கடலாய்ப் பொங்கிய உணர்ச்சிகள்,
வடவைக் கனல் தோன்ற வற்றியதன் மாயமென்ன? திகைக்கிறோம் நாம்.
இராமனுக்கு, வசிட்டன் முடிசூட்டப் போகின்ற காட்சியை நினைந்த கோசலை மனத்தில்,
மகிழ்ச்சி வற்றியதேன்? மயங்குகிறது நம் மனம்.
பெற்ற தாயொருத்தி, தன் பிள்ளையின் உயர்வு கண்டு,
மகிழ்தல் அன்றி மறுகுதல் எங்ஙனம்?
நம் மனதுள் அடுத்தடுத்துக் கேள்விகள் பிறக்கின்றன.

🍁 🍁 🍁

தெளிவிக்கிறான் நம் கம்பநாடன்.
இராமனுக்கு முடிசூட்ட ஆயத்தமாகும் வசிட்டர் நிலையை,
கற்பனை செய்த கோசலை மனம் துணுக்குறுகிறது.
இராமன் தலையிற் சூட்டுவதற்கான முடியை
எங்கிருந்து எடுக்கப் போகிறார் முனிவர்? சிந்திக்கிறது அவள் கற்பு மனம்.
முனிவர் எடுக்கப்போகும் முடி இருப்பது,
தங்கத் தட்டிலல்ல, தசரதன் தலையில் எனும் எண்ணம்,
அவள் மனதில் தோன்றுகிறது. 

🍁 🍁 🍁

தன் மைந்தன் தலையில் ஏறப் போகும் முடி,
தன் கணவன் தலையிலிருந்து இறங்கப் போவதை நினைக்க,
நாளை தன் கணவன் முடியிழப்பான் எனும் நினைப்பு,
தாரமாய் அவளைத் திகைக்கச் செய்கிறது.
தாயாய் மகிழ்ந்த உள்ளம் தாரமாய் மருள்கிறது.
நிகழப்போகும் சம்பவம் ஒன்று.
அச்சம்பவத்தால் உணர்ச்சி வசப்படும் பாத்திரமும் ஒன்று.
எனினும் அப்பாத்திரம், தாயாய், தாரமாய்; இருவகைப்பட்டதால்,
ஒரே சம்பவத்தால் இரண்டு உணர்ச்சிகளுக்கு உள்ளாகி குழப்பமுற்று நிற்கின்றது.

🍁 🍁 🍁

உணர்ச்சிகளின் கலவைத் தன்மையை வெளிப்படுத்திய திருப்தியோடு,
கம்பன் கவிதையை முடிக்கிறான்.

சிறக்கும் செல்வம் மகற்கெனச் சிந்தையுள்
பிறக்கும் பேருவகைக் கடல் பெட்புற
வறக்கும் மா வடவைக் கனல் ஆனதால்
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே.

🍁 🍁 🍁

இப்பாடலில்,
முடி துறக்கும் என்று உரைக்காமல்,
துறக்கும் எனத் தனிச் சொல்லிட்டு,
கம்பன் பாடியதிலும் ஒரு காரணம் இருக்கிறது.
கற்புக் கரசியாகிய கோசலையின் உள்ளத்தில்,
மறுநாள் தசரதன் உயிர் துறக்கப் போகிறான் என்ற,
உள்ளுணர்வான அச்சமும் தோன்றியமையையே,
இந்தத் துறக்கும் என்ற சொல்லால் கம்பன் உணர்த்த நினைந்தனன் போலும்.
தசரதன் முடி துறப்பான் என்ற அர்த்தமும்,
தசரதன் உயிர் துறப்பான் எனும் அர்த்தமும் ஒருமித்து வரும்படியாக,
'துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே' என்று பாடிய,
கம்பனின் நுட்பம் வியக்கத்தக்கதேயாம்.

🍁 🍁 🍁

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்