'கம்பனில் உளவியல் கூறுகள்' - பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

த்தமனான இராமனிடம்,
முதல்நாள் ஆட்சிப்பொறுப்பேற்கும்படி வேண்டுகோள்.
மறுநாளே காடேகும்படி உத்தரவு.
முரண்பட்ட இம்முடிவுகள்,
எத்துணை அறிவுடையாரையும் தடுமாற வைக்கும்.
ஆனால் இராமன் அச்செய்தி கேட்டு,
அசையாது அறிவுத்தெளிவோடு நிற்கின்றான்.
இது இயல்பான மனித மனநிலையை மீறிய தன்மையல்லவா? 
இராமனைத் தன்னேரில்லாத் தலைவனாய்க் காட்ட,
இயல்பு மனித மனநிலையை மீறி,
கம்பன் பாத்திரம் அமைத்தானோ?
கேள்வி பிறக்கும். 

♦️ ♦️ ♦️

உனக்கே ஆட்சிப் பொறுப்பு எனத் தசரதன் கூறுகையில்,
இராமன் மகிழ்ந்தான் இல்லை.
இது தன் கடமை எனும் உணர்வாலும்,
தந்தைசொல் ஏற்றல் தன் கடப்பாடு எனும் உணர்வாலுமே,
அப்பொறுப்பை இராமன் ஏற்றான் என,
இக்கேள்விக்கான பதிலைக் கம்பன் முன்னமே பதிவுசெய்து விடுகிறான்.

தாதை அப்பரிசு உரைசெய்ய தாமரைக்கண்ணன்
காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும்
யாது கொற்றவன் ஏவியது அதுசெயல் அன்றோ
நீதி எற்கு? என நினைந்தும் அப்பணி தலை நின்றான். 
(கம். 1382)

♦️ ♦️ ♦️

கம்பனின் இப்பதிவினால்,
வரவிருந்த பதவி கண்டு இராமன் மனம் மகிழவில்லை என,
நாம் தெரிந்துகொள்கிறோம்.
பதவியால் மகிழாத இராமனின் மனம்,
பதவி இல்லை என்றதும் அதிராமல் சமநிலை பேணுகிறது.
ஒரு விடயத்தில் நம் மனம் வைக்கும் பற்றே,
அவ்விடயத்தை இழக்கும்போது நம்மை அதிரச்செய்கிறது.
பற்றற்றார்க்கு அதிர்வில்லை.
பற்றற்ற இராமனின் இயல்பான மனநிலையே,
அதிர்வற்ற அவன் நிலைக்குக் காரணம் என்பதை,
தெளிவுறத் தெரிந்து கொள்ள,
மானுடம் மீறாத பாத்திரமாகவே இராமனை,
கம்பன் படைத்தமை தெளிவாகிறது.

♦️ ♦️ ♦️

காடேகும்படியான திடீர் உத்தரவு,
இராமனை அதிரச் செய்யாதா? எனக் கேள்வி பிறக்கும்.
அரசைப் பாரமாய்க் கருதிய அவன் மனநிலையும்,
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை எனும் அவனது கருத்தும்,
குடும்பத்தில் ஏற்பட்ட விரிவை நேர்செய்ய,
அதுவே வழி எனும் அவனது முடிவும்,
அவ்விடயத்திலும் அவனை அதிராமல் காத்தன
எனக் கொள்ளல் வேண்டும்.

♦️ ♦️ ♦️

கைகேயியின் உத்தரவைக் கேட்டு,
இராமன் பேசத் தொடங்குகிறான். 
அப்பேச்சுத் தடுமாறி நிற்கும் ஒருவரின் மனநிலையறிந்து,
அவரை மேலும் குழப்பமுறச் செய்யாது ஆறுதல் செய்யும்,
உளவியல் நிபுணத்துவம் அமைந்த பேச்சாய் அமைகிறது.
இவ் உத்தரவு கேட்டுத் தான் வருந்தின்,
தன்மேல் உள்ளூர அன்புகொண்ட கைகேயி,
அதனால் மேலும் குழப்பமுறுவாள் என நினைகிறான் இராமன்.
எனவே, முதலில் இச்செய்தி தன்னை வருத்தவில்லை எனவும்,
மாறாய் மகிழ்வித்தது எனவும் உரைத்தால்,
அவள் குற்றவுணர்வு குறையும் எனக் கருதி,
அவ் உத்தரவுபற்றிய தன் கருத்தை,
அவளை ஆறுதல் செய்யும் வண்ணம் உரைக்கிறான். 
தந்தை பணி அன்றாயினும்,
இம்மகிழும் பணியை நீயுரைப்பினும் மறுப்பனோ? எனக்கேட்டு,
இப்பணி தனக்கு மகிழ்வு தருவதற்காம் காரணத்தைத் தொடர்ந்து கூறி,
அப்பணியைத் தான் ஏற்றுக்கொள்வதாயும் உறுதி செய்து,
கைகேயியின் குற்றவுணர்ச்சியைக் குறைக்க முயல்கிறான் இராமன்.

மன்னவன் பணி ஈன்றாகின் நும்பணி மறுப்பெனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ
என் இனி உறுதி அப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன்.
  (கம். 1604)

♦️ ♦️ ♦️

மேற்கூறிய தொடர்களால்.
கைகேயியின் குற்றவுணர்வைக் குறைத்த இராமன்,
தொடர்ந்து தான் காடேகுவது பற்றிய  ஐயப்பாட்டினை நீக்கி,
கைகேயியை ஆறுதல் செய்ய நினைக்கிறான். 
காடு தனக்குத் துன்பமானது அன்று என்றும்,
அக்கானகத்துக்கு இன்றே போகிறேன் என்றும்,
விடைபெறக் கூட மீண்டும் வரேன் எனவும் உரைத்து,
தன் கருத்துப்பற்றி  ஐயமுறாமல்,
கைகேயியை ஆறுதல் செய்கிறான்.
மின்னொளிர் கானம் 
இன்றே போகின்றேன் 
விடையும் கொண்டேன்  

இம் மூன்று தொடர்களைக் கொண்ட பாட்டின் ஈற்றடி
மேற்சொன்ன இராமனின் குறிப்புக்களை உறுதிப்படுத்துகிறது. 
இங்ஙனமாய்த் தன் வார்த்தைகளால்,
கைகேயியின் குற்றவுணர்ச்சியையும் ஐயத்தினையும் நீக்கும்,
இராமனின் உரையாடல்த் திறம்,
அவனை ஒரு உளவியல் நிபுணனாய் நம்மனதில் நிலைநிறுத்துகிறது. 

♦️ ♦️ ♦️

காட்சி தொடர்கிறது. 
கைகேயியிடம் விடைபெற்ற இராமன் சற்று நிதானித்துச் சிந்திக்கின்றான்.
கைகேயியின் வரங்களின் பாதிப்பை,
சமநிலையுற்ற தன் மனநிலையால்,
தான் சமாளித்து விடினும்,
தன்னைச் சார்ந்தோர்,
அங்ஙனம் இப்பிரச்சினையை எதிர்கொள்வரா? என அவன் ஐயுறுகிறான்.
கைகேயியின் வரத்தைத் தன்னைச்சார்ந்த எவரும் மறுதலித்தால்,
அம் மறுதலிப்பு,
தனது மறுதலிப்பாகவே மற்றவர்களால் பதிவு செய்யப்படும்,
என உணர்ந்த இராமன்,
இச்செய்தி அறிந்து தன்னைச் சார்ந்த மற்றவர்கள் குழப்பமுறுமுன்,
அவர்களைச் சமாதானம் செய்வது தன் கடமை என உணர்ந்து, 
அங்ஙனம் சமாதானம் செய்ய வேண்டியோரை,
அவசியம் பற்றி வரிசைப்படுத்துகிறான். 

♦️ ♦️ ♦️

அவ்வரிசையில் தன்னை ஈன்ற தாயாகிய கோசலையை முதல் நிலையிலும்,
தன்மேல் எல்லையற்ற அன்புகொண்ட,
முன்கோபத் தம்பியாகிய இலக்குவணனை இரண்டாம் நிலையிலும்,
தன் சிறியதாயாராகிய சுமித்திரையை மூன்றாம் நிலையிலும்,
தன் காதல்த் துணையாகிய சீதையை நான்காம் நிலையிலும் நிறுத்தி,
அவ்வரிசைப்படி உடன் அவர்களைச் சந்திக்கச் செல்கிறான்.

♦️ ♦️ ♦️

இவ்வரிசையிற் கூட உளவியல் உணர்ந்த,
இராமனின் நுண்மாண்நுழைபுலம் தெளிவாகிறது.
கோசலையை முதலில் சந்திக்க இராமன் எடுத்த முடிவுக்காம் காரணங்கள் இரண்டு.
உறவுநிலையில் தன்னை ஈன்றவள் என்ற முதல் உரிமை அவற்றுள் ஒன்று.
மகன் என்ற பாசத்தால் அவள் தடுமாறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதுவும்,
மூப்புநிலையில் உள்ள அவளிடம்,
தடுமாற்றம் ஏற்படும் வாய்ப்புக்கான காரணம் அதிகம் என்பதுவும் மற்றொன்று.
அவள் தடுமாறி ஏதும் உரைத்தால் அக்கூற்று தன்னதாம் என,
மற்றவர் கருதுவர் என்பதாலும்,  
மூப்பால் பேரதிர்வைத் தாங்காத மனநிலை,
அவளுக்கு ஏற்படுவதற்காம் வாய்ப்பு அதிகம் என்பதாலும்,
கோசலை சந்திப்பை இராமன்  முதனிலைப்படுத்துகிறான்.

♦️ ♦️ ♦️

உறவு நிலையால் அவன் முதலிடம் கொடுத்து,
அடுத்து அவன் சந்திக்கவேண்டியவள் சீதையே. 
எனினும் அடுத்து இராமன் சீதையைச் சந்திக்காமல்,
இலக்குவனைச் சந்திப்பதற்காம் காரணம் உண்டு.
ஒத்த மனநிலைகொண்ட தன் வாழ்க்கைத்துணை,
தன் முடிவு எதனையும் மறுக்காமல் ஏற்பள் எனும் உறுதிபட்ட மனநிலையால்,
தன்மேல் எல்லையற்ற காதல் கொண்டவனும்,
அளவுக்கு அதிகமான உணர்ச்சி வயப்பாடு உடையவனுமான,
இலக்குவனைச் சந்தித்தலின் அவசியம் நோக்கி,
அவனை இராமன் இரண்டாவதாய்ச் சந்திக்கிறான்.

♦️ ♦️ ♦️

மேற்சொன்ன காரணம் கொண்டே மூன்றாம் சந்திப்பிலும் சீதையைக் காணாமல்,
தான் காடேகின் இலக்குவன் காடேகுவான் என உறுதியாய்த் தெரிந்து,
தனக்காகவும், தன் மைந்தனுக்காகவும் வருந்தக்கூடிய சுமித்திரையை,
மூன்றாவதாய்ச் சந்தித்து, 
பின் சீதையை நான்காவதாகச் சந்திக்கும் இராமனின் சிந்தனை,
அதிர்வுற்ற வேளையிலும் நிதானித்துச் செயல்படும்.
அவனின் தெளிவுற்ற மனநிலையை நமக்கு மேலும் உறுதி செய்கிறது. 

♦️ ♦️ ♦️

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்