'நல்லதோர் வீணை செய்து...': பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

(மறைந்த நாடக நடிகர் அருமைநாயகம் பற்றிச் சில எண்ண அலைகள்)

இவரது நாடக முயற்சிபற்றிச் சொல்வதல்ல என் நோக்கம்.  நாடகத்துள் மூழ்கி, ஞானக்கிறுக்கனாகித் திரிந்த இவர், ஏதோவகையில் என்னோடு தொடர்புபட்டார். அவரது ஞானக்கிறுக்கை உணர்த்திய சில சம்பவங்களை, இக்கட்டுரையில் வெளிப்படுத்த முனைகிறேன். இவரை நான் சந்தித்தபோது, நான் சொல்லப்போகும் சம்பவங்கள் யாவும் நடந்து முடிந்திருந்தன. அறிந்தவர்களும், அவரைக் கண்டு ஒதுங்கிய காலம் அது. பித்தன் போல் திரிந்த அவர், முதற்சந்திப்பிலேயே என் மனங்கவர்ந்தார். அச்சந்திப்புச் சுவாரஸ்யமானது.

   

ள்ளத்தில் அந்நினைவு பசுமையாய்ப் பதிந்திருக்கிறது.
1980 ஆம் ஆண்டு.
கம்பன் கழகத்தை அப்போதுதான் ஆரம்பித்திருந்தோம்.
எப்படியேனும்,
கழகத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் எனும் விருப்பு,
எம்மனதிற் கூர்மையுற்றிருந்தது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகில்,
ஓர் வீட்டின் மேல் மாடியில்,
எங்கள் ஆசிரியர் வித்துவான் வேலன் குடியிருந்தார்.
இளைஞர்களின் எண்ணங்களை வளர்த்து,
இலட்சியப் படுத்துவதில் விற்பன்னர் அவர்.
மாலையானால் நானும், நண்பன் குமாரதாசனும்,
அவர்களது மொட்டை மாடியில் தவறாது ஒன்றுகூடுவோம்.
அன்றாடம் அவரைச் சந்திப்பது எங்கள் வழமையாகியிருந்தது.
அறிவுப் பசியை அவர் தீர்ப்பார்.
வயிற்றுப் பசியை அவர் துணைவியார் தீர்ப்பார்.
அப்படி ஒருநாள் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

   

கம்பன் விழாவில் ஓர் நாடகம் போட்டால் என்ன?
ஆசிரியருடன் சேர்ந்து நாம் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுதே,
அருமைநாயகம் அங்கு வந்து சேர்ந்தார்.
பரட்டைத் தலை.
வீங்கிய கண்கள்.
அழுக்கான உடை.
இது அவரது புறத் தோற்றம்.
இராமாயணக் குகனை நினைவுபடுத்தினார்.
அவரைக் கண்டதும் வேலன் மாஸ்ரரது முகத்தில் ஆனந்தம்.
'வா! வா! அருமைநாயகம். நாடகத்தைப் பற்றி நினைக்க, நீ வருகிறாய்.
கம்பன் கழகத்துக்கு ஒரு நாடகம் போடவேணும். 
நீதான் அதைச் செய்யவேணும்.
என்ன சொல்லுறாய்?' என்றார் அவர்.

   

நாடகம் என்ற வார்த்தையைக் கேட்டதுமே,
அருமைநாயகத்தின் முகத்தில்,
ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலர்ந்தது.
ஆனந்தமாய்ச் சிரித்தபடி,
அப்போதே நாடகவேலைகளைத் தொடங்குபவர் போல்,
சப்பணம் போட்டு அமர்கிறார்.
'என்ன நாடகம்? இராமாயணத்தில எந்தப் பகுதி? எவ்வளவு நேரம்?
எவ்வளவு காசு செலவழிப்பீர்கள்?'
அருமைநாயகத்திடமிருந்து கேள்விக்கணைகள் பாய்கின்றன.

   

எங்கள் கையில் பணமிருக்காத காலமது.
அதனால் கடைசிக்கேள்வி எம்மைக் கஸ்டப்படுத்தியது.
பணமிருந்தால்தானே எவ்வளவு பணம் செலவழிக்கலாம் என்பது பற்றிச் சொல்ல.
எங்கள் நிலையுணர்ந்த ஆசிரியர் வேலன் குறுக்கிடுகிறார்.
'அருமைநாயகம், காசு கனக்கச் செலவழிக்க முடியாது.
நல்ல நாடகம் ஒன்று செய்யவேணும் அவ்வளவுதான்.'
அவர் இதைச் சொன்னதும் அருமைநாயகத்தின் முகம் கறுக்கிறது.
எங்கள் நிலையை ஆசிரியர் வெளிப்படுத்தியதில் எங்களுக்கு ஆனந்தம்.
அருமைநாயகத்தின் முடிவை அறிய ஆவலாய் அவரைப் பார்க்கிறோம்.

   

கொஞ்சநேரம் யோசித்து விட்டு,
வேலன் மாஸ்ரரைப் பார்த்து அருமைநாயகம் பேசத்தொடங்குகிறார்.
'சேர், பேசாம நாடகத்தை விட்டிட்டு,
இராமாயணத்தை நீங்கள் பேசிவிடுங்கோ அதுதான் சுகம்.'
குத்தல் கலந்த அவரது பேச்சால் சற்று அதிர்ந்து,
'ஏண்டாப்பா அப்படிச் சொல்லுகிறாய்' என்கிறார் வேலன்.
அருமைநாயகம் அவரைப் பார்த்து,
'சேர், தசரதன் அத்தாணி மண்டபத்தில் இருந்தான் என்பதை,
நாடகத்தில காட்டவேணும் எண்டால்,
அத்தாணி மண்டபம் செய்யவேணும்.
சிம்மாசனம் செய்யவேணும்.
அரசனுக்கு முடி, நகைகள் செய்யவேணும்.
அதுக்கெல்லாம் காசு வேணும்.
நீங்கள்தரவளி பேசுறதெண்டால்,
அழகிய ஓவியமயமான அத்தாணி மண்டபத்தில்,
தங்கச் சிம்மாசனத்தில், நவரத்தின முடிசூடி, 
தசரதன் இருந்தான் என, 
வாயால அடிச்சு விட்டிடுவீங்கள். 
அதுக்குக் காசு தேவை இல்லை.
நாடகத்துக்குக் காசு தேவை எண்டபடியால்,
காசில்லாமற் செய்ய உங்கட பேச்சுத்தான் சரி.'
'சீரியஸாய்'ச் சொல்லிவிட்டு,
அலட்சியமாய் எழுந்து போகிறார் அருமைநாயகம்.

   

ஆசிரியரும் நாங்களும் அசடுவழிகிறோம்.
அம் முதற் சந்திப்பிலேயே,
தன் கிறுக்குத்தனமான, உண்மை நிறைந்த பதிலால்,
என் மனம் நிறைந்தார் அருமைநாயகம்.
எங்கள் நட்புத் தொடர்ந்தது.

   

கம்பன்கழகத்துக்காக ஒரு சிறுஅறையை வாடகைக்கு எடுத்து,
கந்தர்மடத்தில் அப்போது நான் குடியிருந்தேன்.
அருமைநாயகத்துடன் பழகிய ஆரம்பக்காலம் அது.
அவர் கிறிஸ்தவர் என்பது அப்போது எனக்குத் தெரியாது.
நல்லூர்த் திருவிழா நடந்துகொண்டிருந்தது.
பகற் திருவிழாவுக்குப் போக நான் ஆயத்தமாகிக்கொண்டு இருக்கிறேன்.
தன் பழைய சயிக்கிளில் வந்து இறங்குகிறார் அருமைநாயகம்.
அவர் சைவம் என்று நினைத்து,
'அண்ணை கோயிலுக்குப் போவம் வாறீங்களே?' என நான் கேட்க,
கொஞ்சம் யோசித்துவிட்டு,
'அதற்கென்ன, நான் வேட்டி உடுத்துக்கொண்டு வரயில்லை.
என்னசெய்வம்?' என்கிறார்.
நான் வேட்டி கொடுக்க, வாங்கிச் சந்தோசமாய் உடுக்கிறார்.
'கோயிலுக்குப் போக விபூதி பூசவில்லையோ?'- நான் கேட்க, 
விபூதி வாங்கி நெற்றி நிறையப் பூசுகிறார்.
இரண்டுபேருமாய் நல்லூர் போகிறோம்.
நல்லூர் முருகனைக் கண்டு உருகி வணங்கும்,
அருமைநாயகத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன்.
'அடிக்கடி நீங்கள் கோயிலுக்குப் போகலாமே அண்ண.'
வீடுவந்ததும் நான் கேட்க,
'இடக்கிடை போறனான்.' சுருக்கமாய்ப் பதில் வருகிறது.
'எந்தக் கோயிலுக்கு?' என் கேள்வி தொடர,
'நவாலிச் சேர்ச்சுக்கு' என்று பதிலுரைக்கிறார்.
'என்ன, சேர்ச்சுக்குப் போறனீங்களோ?
சேர்ச்சுக்குக் வேதக்காரர்களெல்லோ போறது?' - மீண்டும் என்கேள்வி.
'ஓம். உண்மைதான்.'- இது அருமைநாயகம்.
'அப்ப நீங்களேன் அங்கபோறியள்?' - மீண்டும் நான் கேட்க.
சிறிது நேர மௌனம்.
மௌனம் உண்மை உணர்த்தச் சற்றுக் குழப்பத்துடன்,
'அப்ப நீங்கள் வேதக்காரரே?'- எனக் கேட்கிறேன்.
'ஓம் ஓம்' என்கிறார் சாதாரணமாக
'ஐயோ அதுதெரியாம உங்களைத் திறுநீறு பூசி,
கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போயிட்டேன்.'
என்று நான் பதற,
சிரிக்கிறார் அருமைநாயகம்.
'முருகனைப் பார்த்து நல்லா அழுது கும்பிட்டீங்களே அது எப்படி?'
மீண்டும் நான் கேட்க,
'யேசுநாதரும் முருகனும் வேறவேறயோ?'
கேள்வியை அருமைநாயகம் பதிலாக்க,
அதிர்ந்துபோகிறேன் நான்.
எனக்குள் ஒரு ஞானக்கண் திறக்கிறது.
சித்தன் போல் சிரித்து நிற்கிறார் அவர்.

   

(அடுத்த வாரமும் அருமைநாயகம் வருவார்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்