'சம்பவாமி யுகே யுகே' -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

லகம் என்னைச் சும்மா இருக்க விடுகிறபாடாய்த் தெரியவில்லை. 
உலகம் என்று உங்களைத்தான் சொல்லுகிறேன்.
உங்களில் பலர், 'என்ன? புதிதாய் அரசியல் கட்டுரைகள் ஒன்றையும் காணோம்' என,
வெளிநாடுகளிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும்,
கேள்விமேல் கேள்வி கேட்டு  என்னைத் துளைத்தெடுக்கிறார்கள்.
கேள்வி கேட்பவர்களுக்கு அப்படி ஒன்றும்,
அரசியலில் உண்மை அக்கறை இருப்பதாய்த் தெரியவில்லை. 
அவர்களுக்கு பொழுதுபோக எனது கட்டுரைகள் உதவுகின்றன போல.
வெறும்வாய் சப்பமுடியாமல் என்னிடம் அவல் கேட்கிறார்கள், அவ்வளவுதான்.
அவர்களின் வால்முறுக்கல்களால் 'உருவேறி' என்பாட்டுக்கு நான் ஏதாவது எழுதப்போக,
இன்றைய சூழ்நிலையில் அதன் விளைவு என்னாகுமோ? என்று,
நினைக்கவே அச்சமாக இருக்கிறது.
🐚 🐚 🐚
அதுமட்டுமல்லாமல் நான் முன்பே சொன்னது போல,
அரசியல் எழுதி நான் கண்டமிச்சம் ஒன்றுமேயில்லை.
எனது கட்டுரைகளால் தலைவர்களும் திருந்துவதாயில்லை.
மக்களும் திருந்துவதாயில்லை.
பின் யாருக்காக எழுதுகிறேன்? என்ற கேள்வி.
அண்மைக்காலமாக என்னைக் குடைந்து கொண்டேயிருக்கிறது.
திருந்தாவிட்டால்க்கூட பரவாயில்லை.
திருந்துவதற்கான சாயலைக்கூட ஒருவரிடமும் காணமுடியவில்லை.
கல் ஒன்று கனிந்தாலும் கனியலாம்.
எங்கள் மனிதர்களின் உள்ளமும் உணர்வும் கனியுமாற்போல் தெரியவில்லை.
பின் எதற்கு இந்த வீண்வேலை? கேட்பீர்கள்.
🐚 🐚 🐚
ஏற்கனவே எனக்குக் கிடைத்திருக்கும் புகழை வைத்துக்கொண்டு,
சும்மா இருந்தாலே நான் மதிப்போடு வாழ்ந்துவிடலாம்.
அப்படித்தான் நண்பர்கள் பலரும் சொல்கிறார்கள்.
ஆனால் சாகும்வரை நான் அப்படி இருப்பேன் என்று தோன்றவில்லை.
இதுநாள் வரைக்கும் நான் அப்படி இருந்ததும் இல்லை.
எல்லோர்க்கும் நல்லவனாய்  இருந்து பொய்க்குத் துணைபோக,
என் அறிவு ஒருநாளும் சம்மதிக்காது.
அதனால்த்தான் அரசியலோ வேறெதுவோ?
என் மனதிற்குப் பட்டதை பட்டவர்த்தனமாய் எழுதிவருகிறேன்.
உண்மையைச் சொல்லப்போனால் அதனால்,
ஊரார் பகையைத் தேடியது ஒன்றுதான் நான் கண்ட மிச்சம்.
🐚 🐚 🐚
அதனால் பேசாமல் பழைய 'பௌராணிகர்கள்' போல,
ஏதாவது புராணங்கள் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றுகிறது.
'அது யார் பௌராணிகர்கள்' என்கிறீர்களா? 
எனது கஷ்டகாலம், அதற்கும் விளக்கம் சொல்லவேண்டியிருக்கிறது.
புராணங்களை பிரமாணங்களாய்க் கொண்டு இயங்குபவர்களே பௌராணிகர்களாம்.
'பிரமாணங்கள் என்றால் என்ன?' என்று யாரோ அடுத்து கேட்கத் தொடங்குமாப்போல் தெரிகிறது.
எனக்குக் கெட்டகோபம்தான் வருமாக்கும்.
இனி உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை என,
எனக்குள் நான் சத்தியப்பிரமாணம் எடுத்துவிட்டேன்.
இப்போதாவது பிரமாணம் என்றால் என்ன என்று விளங்கியதா?
இப்போதும் விளங்காதவர்கள் பேசாமல் புராணக்கதை கேட்க வாருங்கள்.
🐚 🐚 🐚
பசுமாசுரன் என்று ஓர் அசுரன்.
அவனுக்கு தன் அதிகாரங்களைப் பெருக்கி,
எல்லோரையும் அடக்கி ஆளவேண்டும் என்று ஆசை.
அதற்காக சிவனை நோக்கிப் பல்லாண்டுகள் தவம் செய்கிறான்.
தேவர்களாலும் அவன் தவத்தைக் குழப்பமுடியவில்லை.
குழப்பமுயன்ற ஒருசில தேவர்களும் தோற்றுப் போகின்றார்கள்.
இறுதியில் அவன் முயற்சி வெற்றி பெற, அவன் முன் சிவன் காட்சி அளிக்கிறார்.
பசுமாசுரனின் தவத்தை மெச்சி, 'வேண்டும் வரம் கேள்' என்று சிவன் சொல்ல,
'சாகாவரம் வேண்டும்' என்று கேட்கிறான் அவன்.
சிரிக்கும் சிவன் 'உலகம் முழுவதற்குமான ஒரு நியதி இருக்கிறது,
அந்த நியதியை மீறி உனக்கு வரம் தரமுடியாது.
உலகக் கட்டுப்பாட்டை மீறினால் அதன் விளைவு பயங்கரமாய் இருக்கும். 
எனவே அதைத்தவிர வேறு வரம் கேள்' என்கிறார்.
🐚 🐚 🐚
பசுமாசுரனின் புத்தி கடுமையாக வேலை செய்கிறது.
சிவனை ஏமாற்றி உலகநியதியை மாற்ற நினைக்கிறான் அவன்.
தனக்கு ஏற்றாற்போல் அடிப்படைச் சட்டங்களை மாற்ற நினைந்து,
'சாகாவரம் தராவிட்டால் பரவாயில்லை.
நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் சாம்பலாகப் போகவேண்டும்.
அந்தவரத்தைத் தாருங்கள்.' என்கிறான்.
புத்திசாலித்தனத்தால் இயற்கையை மீற நினைக்கும் அவனைக்கண்டு,
சிவனுக்குச் சிரிப்பு வருகிறது.
கேட்டவரத்தை அளித்துவிடுகிறார்.
🐚 🐚 🐚
சிவனது வரத்தால்,
மற்றவர்களால் அசைக்க முடியாத பெரும் (பான்மை) பலம் பெற்றுவிட்ட,
பசுமாசுரனின் ஆணவம் அதிகரிக்கிறது.
'வரம் தந்தவர் சிவனார் - அவரையே அழித்துவிட்டால்?
பிறகு கேட்பாரின்றி ஆட்டம் போடலாம்' என  நினைக்கிறான் அசுரன்.
வரம் தந்த சிவன் மறுபுறம் திரும்புமுன்,
அவன் கை அவர் தலைநோக்கியே நீள்கிறது.
தன்னிடம் அதிகாரம் பெற்று தன்னையே அழிக்கவரும் பசுமாசுரனைக் கண்டு,
காலக் கொடுமை நினைந்து பதறி ஓடுகிறார் சிவனார்.
🐚 🐚 🐚
காக்கும் கடவுளான திருமால் இந்நிகழ்வை உணர்கிறார்.
சிவனைக் காக்க வேண்டும், அசுரனை அழிக்கவேண்டும்.
அதற்கான வழி தேடும் திருமால்,
ஓடும் சிவனுக்கும் துரத்தும் பசுமாசுரனுக்கும் இடையில்,
அழகான மோகினியாய் வந்து குதிக்க, தடுமாறுகிறான் அசுரன்.
வரம் தந்த சிவனையே அடக்கியாயிற்று எனும் திமிரில் அவன் புத்தி.
அந்தத் திமிர் அவனைச் சிந்திக்கவிடாமல் செய்கிறது.
கவர்ச்சி காட்டி வந்து நிற்பவள் யார்? என அறியக்கூட முடியாமல்,
இடையில் வந்த மோகினியில் மயங்கி அவளை அடைய முயல்கிறான் அவன்.
🐚 🐚 🐚
'என்னைப் போல நடனமாடவேண்டும்' - மோகினி நிபந்தனை விதிக்க,
அவள் இஷ்டப்படி இவனும் ஆடத் தொடங்குகிறான்.
அவனை ஆட்டுவித்த மோகினி ஓர் எல்லைக்கு அப்பால்,
நாட்டிய முத்திரையாய் கையைத் தன் தலைமேல் வைக்க,
பெற்ற வரம் மறந்த பசுமாசுரன் தானும் தன் தலையில் கை வைக்கிறான்.
அடுத்த நிமிடமே சாம்பலாகி வீழ்கிறான்.
🐚 🐚 🐚
அளவுக்கதிகமான அதிகாரம் பெற்று,
தன்னை உயர்த்தியவரையே வீழ்த்த நினைத்தவன்,
அவ் அதிகாரத்து ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு,
நிறைவில் தான் பெற்ற வரமே சாபமாய்ப் போக அழிந்து வீழ்கிறான்.
இது முதல் புராணக்கதை.
🐚 🐚 🐚
என்ன, புராணக்கதை ரொம்ப 'போர்' அடிக்கிறதா?
உங்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே.
ரொம்பச் சுவாரஸ்யமாய்க் கேட்குமாப்போல் அல்லவா தெரிகிறது.
நான் சொல்லும் கதைக்குள் நீங்கள் வேறு எதையோ புகுத்திச் சிந்திக்கிறீர்கள் போல,
அது உங்கள் இஷ்டம்!
நான் இன்னொரு புராணக்கதையையும் சொல்லப்போகிறேன்.
விரும்பியவர்கள் என்னோடு வரலாம்.
🐚 🐚 🐚
இரணியாட்சதன் என்று ஓர் அசுரன்.
முதல் சொன்ன பசுமாசுரனைப் போலவே,
அவனுக்கும் உலகத்தை அடக்கி ஆளவேண்டும் என்ற ஆசை.
அதனால் அவனும் கடும் தவம் செய்தான்.
அவனின் கடும் தவத்தால் மகிழ்ந்த பிரமன்,
அவனுக்குக் காட்சி கொடுக்கிறார்.
அவனும் முன்னவனைப் போலவே,
சாகாவரம் கேட்டு கிடைக்காமல் போகவே,
அழியாமல் நின்று ஆட்சி செய்ய புத்தியால் வழி தேடுகிறான்.
🐚 🐚 🐚
சாகாவரத்திற்குப் பதிலாக அதற்கு ஒப்பான,
சில சட்டதிருத்தங்களுடன் கூடிய புதிய வரமொன்றை வரைவு செய்தான்.
சாகாவரமான அதே முன்னை வரத்தை அடையும் நோக்குடன்,
வேறுவிதமாய் வார்த்தைகள் போட்டு தன் வரத்தைத் தயார் செய்தான்.
இரவிலும் சாகக் கூடாது! பகலிலும் சாகக்கூடாது!
வீட்டின் உள்ளும் சாகக்கூடாது! வெளியிலும் சாகக்கூடாது!
வானத்திலும் சாகக்கூடாது! நிலத்திலும் சாகக்கூடாது!
மனிதனாலும் சாகக்கூடாது! விலங்காலும் சாகக்கூடாது!
எந்த ஆயுதத்தாலும் சாகக்கூடாது!
இவ்வாறு இரணியன் வரம் கேட்க,
பிரமன் புன்சிரிப்போடு அதனைத் தந்து செல்கிறார்.
🐚 🐚 🐚
இரணியனோ பிரமனை நினைந்து மனதினுள் சிரித்துக் கொண்டான்.
சாகாத வரத்தைத் தர மறுத்த பிரமன் அதற்கு நிகரான வரங்களைத் தான் கேட்க,
சிந்தனையே இல்லாமல் அதனைத் தந்துவிட்டாரே என அவனுக்குள் ஏளனம்.
நாலு தலை இருந்தும் பிரமனுக்குப் புத்தி இல்லை என நினைந்து கொண்டான் அவன்.
அரிதாய்க் கிடைத்த தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி,
அத்தனை பேரையும் அடக்கத் தொடங்கினான் இரணியன்.
அவன் பெற்ற பெரும்பலத்திற்கு அஞ்சி,
தேவர், அந்தணர், அறிஞர் என எல்லோரும்,
அவனை வழிமொழிவதைத்தவிர வேறுவழியின்றித் தவித்தனர்.
🐚 🐚 🐚
வரம் பெற்ற இரணியன்,
அதுவரை ஊரிலிருந்த ஒழுங்குகளை எல்லாம் மாற்றுகிறான்.
பாடப்புத்தகங்களில் தானும் தன் கருத்தும்தான் இருக்கவேண்டும் என்றும்,
வழிபாட்டுத்தலங்களில் இருந்த எல்லாத் தெய்வங்களையும் அகற்றிவிட்டு,
தன் வடிவினைத்தான் அங்கு சமைத்து வழிபடவேண்டும் என்றும்,
தனது நாமத்தைத்தான் மந்திரமாய் உச்சரிக்க வேண்டும் என்றும்,
புதிய புதிய சட்டங்களை அவன் வகுக்கிறான்.
எதிர்க்க நினைத்தவர்கள் எல்லாரையும் சிறையிட்டுக் கொடுமைப் படுத்துகிறான்.
அவனது வரபலத்தின் வலிமையால் ஒன்றும் செய்யமுடியாமல் உலகம் மௌனித்து நிற்கிறது.
பெரும்பான்மை பலம் பெற்றுவிட்ட தன்னை,
இனி எவராலும் ஏதும் செய்யமுடியாது என்னும் நினைவால்,
மமதைக் களிப்பேற இரணியனின் அட்டூழியம் தொடர்கிறது.
🐚 🐚 🐚
வெளியிலிருந்து இனி எதிரிகள் இல்லை என்ற நிலையில் இரணியன் களித்திருக்க,
வீட்டுக்குள்ளேயே அவனது எதிரி உண்டாகிறான்.
அவன் பிள்ளைக்கும் அவனுக்கும் முரண்பாடு உண்டாகிறது.
அவன் பிள்ளை அப்பனின் ஆட்சியை மாற்ற நினைக்கிறான்.
அதனால் அப்பனை அழிக்க நினைக்கிறான்.
இச் செய்தி புலனாய்வாளர்களால் அப்பனுக்குத் தெரியவருகிறது.
கொதித்துப் போகிறான் அப்பன்.
அரசியல், அதிகாரம் என்று வந்துவிட்டால்,
அப்பனாவது? பிள்ளையாவது?
அதானால், பிள்ளையையே கொலை செய்ய சூழ்ச்சிகள் செய்கிறான் அப்பன்.
🐚 🐚 🐚
முரண்பாடு முற்றுகிறது.
கடைசியில் தன் எதிரியாய் யாரை இரணியன் நினைத்தானோ,
அவனுடனேயே பிள்ளை கூட்டு வைத்து,
ஒருநாள் அப்பனை முழுமையாய் வீழ்த்தி வெற்றி கொள்கிறான்.
ஒருநாளும் பொருந்த முடியாது என பலரும் நினைந்த,
சிங்கத்தலையும், மனித உடலும் பொருந்திய வடிவம் கொண்ட,
நரசிம்ம அவதாரத்தால் இரணியன் வீழ்த்தப்படுகிறான்.
இது இன்னொரு புராணக்கதை.
🐚 🐚 🐚
என்ன புராணக்கதையில் ரொம்பத்தான் ஆர்வம் காட்டுகிறீர்கள்.
எப்போதும் புராணம் என்றாலே இழிவாய்ப் பார்க்கும் உங்கள் முகத்தில்,
இப்போது இப்புராணக்கதைகளைக் கேட்கும் போது மட்டும் என்ன இவ்வளவு பிரகாசம்?
ஆனால் உங்கள் சிரிப்புத்தான் சரியாக இல்லை.
சரி! சரி! அதுபற்றி விசாரிக்க இப்போது எனக்கு நேரமில்லை.
இன்னுமொரு கதை சொல்லவேண்டியிருக்கிறது.
🐚 🐚 🐚
இந்தக் கதை ஆங்காங்கே புராணங்களில் வந்தாலும்,
இதிகாசக்கதை என்றே இதனைப் பெரும்பாலும் சொல்கிறார்கள்.
அது எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்.
நமக்குக் கதைதானே முக்கியம்.
வாருங்கள் அதனைப் பார்க்கலாம்.
🐚 🐚 🐚
வேறொன்றுமில்லை, இராமாயணக்கதைதான் அது.
இராவணன் என்ற அரக்கன்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தன் தவபலம் பெருக்கி,
இறையிடம் தனக்கு வாய்ப்பான வரங்கள் பெற்றுக் கொள்கிறான்.
அவனுக்கு இரண்டு சகோதரர்கள்.
ஒருவன் புத்திசாலி. மற்றவன் பலசாலி.
இவர்களது துணையோடு, குபேரனுக்குச் சொந்தமான,
இலங்கையைப் பறித்துக் கொள்கிறான் இராவணன்.
உலகமும் மௌனித்து நின்றதால்,
அவனுக்குப் பணிந்து போவதைத் தவிர,
குபேரனுக்கு வேறு வழியில்லாமல் போகிறது.
பறித்த இலங்கை, தன் உரித்து இலங்கை என்று கூறி,
இராவணன் அதிகார உச்சவரம்பைத் தாண்டுகிறான்.
தேவர்களை முடிந்த அளவு வதைக்கிறான்.
🐚 🐚 🐚
அவன் தேவர்களை வதைக்க வதைக்க,
அரக்கர்களின் பெரும்பான்மை ஆதரவு அவனுக்கு அதிகரிக்கிறது.
வெற்றிக்களிப்பில் நிலைதடுமாறும் இராவணன்,
வெற்று மானிடர்களால்,
பெரும்பான்மை பலம் கொண்ட தன்னை என்ன செய்யமுடியும் என்ற துணிவில்,
காட்டிலிருந்த இராமனின் மனைவியாகிய சீதையைக் கவர்ந்து,
இராமனின் அடிப்படை மனித உரிமையில் கை வைக்கிறான்.
🐚 🐚 🐚
இராவணன் எதிர்பாராத விதமாக, இராமனின் பின்னால்,
ஆங்காங்கு கானகத்தில் நின்ற குரங்குகளும் கரடிகளும் ஒன்று சேர்ந்து,
பெரும்படையை உருவாக்குகின்றன, அப்படை இலங்கைக்குள் புக, 
அவர்களுக்குத் தேவர் முதலியோரது ஆதரவும் கிடைக்கிறது.
ஒருவழியாக சேது சமுத்திரத்தை நிரவி கடற்பாலம் கட்டி முடித்து,
கடல்தாண்டி சென்ற இராமனின் படை இலங்கைக்குள் புகுகிறது.
🐚 🐚 🐚
தூது போன அனுமன் இலங்கைக்குத் தீ மூட்டுகிறான்.
தன் தலைவன் மீதான உறுதியான பற்றுதலோடு நின்ற சீதையை,
இராவணனால் அனுபவிக்கவும் முடியவில்லை. 
மனித உரிமைமீறல், அதிகாரமீறல் என்பவற்றை செய்து,
பழி தேடியதைத்தவிர இராவணன் பெற்றது ஒன்றும் இல்லாமல் போகிறது.
🐚 🐚 🐚
அதுவரை அண்ணனின் செயல்களை எதிர்க்காமல் நின்ற,
இராவணனின் புத்தசாலித் தம்பி, அனுமனின் அதிரடி கண்டு,
இராவணனைக் கைவிட்டு இராமன் பக்கம் வந்துவிடுகிறான்.
இராம, இலக்குவரது பலம், 
கட்சிமாறி வந்த விபீடணனது உதவி,
இராவணனால் முதலே துன்புறுத்தப்பட்ட தேவர்களது ஆதரவு,
குரங்குச் சேனையின் விசுவாசம் என, பலவும் ஒன்றாக,
இராவணனின் பலம் குன்றுகிறது.
🐚 🐚 🐚
பெரும்போர் மூழ்கிறது.
முடிவு? இராமனின் உரிமையை மீளக் கொடுத்து, 
தன் உரிமையையும் இழக்கிறான் இராவணன்.
இது இதிகாசத்தில் ஒன்றான இராமாயணத்தின் கதை.
🐚 🐚 🐚
மேற் சொன்ன புராணக்கதைகள் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?
மனித மூளையாலும், பலத்தாலும் எத்தனை கெட்டித்தனம் செய்தாலும்,
அறம் மீறிய அக்கெட்டித்தனங்களை,
யாரும் எதிர்பாராதவிதத்தில் இயற்கை அழித்து ஒழித்துவிடும்.
எவரேனும் மற்றவரைத் துன்புறுத்த,
அளவுக்கதிகமாய் அறம்மீறி நடக்கத் தலைப்பட்டால்,
அவர்களை வீழ்த்த இயற்கையின் பெயரால் இறைவனே செயற்பட்டு,
அவர்தம் அட்டூழியங்களுக்கு ஒரு முடிவு கட்டுவான்.
இதனைத்தான் கீதையில்,
அனாதரவாய் இருக்கும் நல்லவர்களை வருத்தி தீயவர்கள் அட்டூழியம் செய்தால்,
அவர்களை வீழ்த்த நான் யுகம்தோறும் அவதரிப்பேன் என்கிறான் கண்ணன்.
🐚 🐚 🐚
இதனை உணர்ந்துதான் நம் ஊர் பெரியவர்கள்,
'மா புளித்தால் அப்பத்திற்கு நல்லது' என்று சொன்னார்கள்.
எங்கெல்லாம் மா விரைவில் புளிக்கிறதோ,
அங்கெல்லாம் அப்பம் விரைவில் சுடப்படப்போகிறது என்பதே,
இதன் அர்த்தமாம்.
🐚 🐚 🐚
உங்களின் கதை கேட்கும் ஆர்வத்தைப் பார்த்தால்,
பேசாமல் நானும் பௌராணிகனாகவே இருந்துவிடலாம் போல் தோன்றுகிறது.
ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
அரசியல், அரசியல் என்று 'அவா'ப்படும் உங்களில் எவரேனும் ஒரு 'குசும்பர்',
எனது இந்த புராண, இதிகாச கதைகளுக்கும் ஏதாவது அரசியல் வியாக்கியானம் செய்து,
என்னை மாட்டிவிட நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை என்பதை மட்டும்,
இப்போதே அழுத்திச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
🐚 🐚 🐚
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்