'ஒப்பற்ற பெருந்தொண்டன் உயர்ந்து வாழ்க!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகமெலாம் பெரும் புகழைத் தேடிக் கொண்ட
உத்தமர்க்கு மணிவிழவாம் வயதால் மூத்தும்
நிலமதனில் ஒருபொழுதும் நில்லாதென்றும்
நேசத்தால் தொண்டியற்றும் நெடிய அன்பன்
தளமதனில் கதியிழந்து வாழும் மக்கள் 
தம்முடைய கடவுளென நினைந்து போற்றி
உளமதனில் பதித்தேதான் உவந்து நிற்கும்
ஒப்பற்ற திருமுருக! உயர்ந்து வாழ்க!
 
துர்க்கை அவள் ஆலயத்தைத் துணிந்து ஏற்று
துலங்கத்தான் கோபுரங்கள் பலவும் செய்தான்.
அர்த்தமுள தன் உரையால் அகிலமெல்லாம்
ஆண்டேற்ற பொருளெல்லாம் கொணர்ந்து கொட்டி
நர்த்தனங்கள் புரிந்தான் தன் தொண்டினாலே
நானிலமும் கைகூப்ப உயர்ந்து நின்றான் 
கர்த்தன் இவன் மணிவிழவைக் காணும் பேறால்
கற்றோர்கள் மனம் நிறைந்தார், காக்கும் தெய்வம்!
 
மூத்தவரைக் காத்தேதான் முறைகள் செய்தான்
மொட்டான இளையோர்க்கும் வழிகள் செய்தான்
சேத்திருந்த பொருள் அனைத்தும் செலவு செய்து
சிறப்புடனே நம்வாத வூரார் தந்த
பூத்த திரு வாசகத்தின் பெருமை தன்னை
பூமியெலாம் பறை சாற்றிப் புகழும் சேர்க்க
காத்திருந்து அரண்மனையும் கட்டி வைத்தான் 
காலத்தால் அழியாத பணிகள் செய்தான்.
 
போரதனால் சிதைந்திட்ட யாழ்ப்பாணத்தை
பொன் மகனாய் வந்துதித்து நிமிரச் செய்தான்.
வேரதென நின்றேதான் நம் மண் தாங்கி 
வெற்றிகளைக் குவித்தேதான் விளங்கி நின்றான்
காரதென அன்பு மழை பொழிந்தே நின்று
கைகொடுத்து ஏழைகளின் துயரம் தீர்த்தான்
ஆரிதனைச் செய்திடுவார் அவனிதன்னில்
அன்னையவள் அருளாலே ஆயிற்றம்மா!
 
ஓதுகின்ற தமிழ்மொழிக்குப் பெருமை செய்தான்
ஒப்பற்ற திறங்கொண்ட நாவினாலே
பூதலத்தில் அறப்பணிகள் பலவும் செய்தான்
போற்றுகிற தமிழ்தந்த செல்வத்தாலே
நாதவடிவானவளாம் துர்க்கை அன்னை
நற்பணிகள் செய்தான் தன் பக்தியாலே
சாதனைகள் கல்வியிலும் இளையோர் கொள்ள
தனி வழிகள் காட்டினனாம் அறிவதாலே
 
கம்பனது கழகமதில் கனிந்து நல்ல
கற்போடு பற்பலவாம் பணிகள் செய்தான்
நம்பியிவன் துணையதனால் நாமும் நல்ல
நற்பணிகள் பல இயற்றிப் புகழும் கொண்டோம்.
எம்முடைய பிள்ளை இவன் என்றே பேசி
இன்றிவனால் தலைநிமிர்ந்தோம், ஏற்றங்கொண்டோம்.
தெம்புடனே பல்லாண்டு வாழ்ந்து இந்த
தேசமெலாம் புகழ்ந்திடவே நிமிர்க ஐயன்!
 
மங்களமாய் நூறாண்டு வாழ்க ஐயன்!
மனம் நிறைந்து வாழ்த்துகிறேன் மகிழ்ந்து போற்றி!
பொங்குகிற பெருவாழ்வு இவனுக்காகி
பொலிந்திடவே வேண்டுமெனப் போற்றி நின்றேன்.
எங்களுடை கழகத்தில் இருந்து இன்று
ஏற்றத்தால் விண்ணதனைத் தொட்டு நிற்கும்
தங்கமிவன் பெரும் புகழும் தரணிதன்னில்
தழைத்தேதான் ஓங்கிடுக! தமிழ்த்தாய் காப்பாள்.
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்