'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 25 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦


இந்திய இராணுவம் யாழினுள் புகுந்தது

ந்திய இராணுவ வருகையின்போது நடந்த,
சில நிகழ்ச்சிகள் மறக்கமுடியாதவை.
1987 ஒக்ரோபர் மாதமளவில்,
புலிகளுக்கும் இந்திய இராணுவத்தினருக்கு மிடையிலான பகை தொடங்கிற்று.
அப்போது நாங்கள் வைமன் ரோட் அலுவலகத்தில் இருந்தோம்.
பயங்கரமாய்ச் சண்டை நிகழ்ந்தது.
பேராசிரியர் சண்முகதாஸ், 
அவரின் மாமனார், அவருடைய மைத்துனி குடும்பத்தினர்,
கவிஞர் காரை. சுந்தரம்பிள்ளை குடும்பத்தினர்,
பேராசிரியர் டாக்டர் பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர்,

எங்கள் கழக உறுப்பினர் விமலா குடும்பத்தினர் எனப் பலரும்,
அச்சண்டைக்குப் பயந்து,
எங்கள் கழக அலுவலகத்தில் பலநாட்கள் தங்கியிருந்தனர்.
நூற்றுக்கணக்கான 'ஷெல்கள்' விசில் சத்தத்துடன் ஆகாய வழியாக வரும்.
நாமனைவரும் அச்சத்தத்தைக் கேட்டதும்,
நிலத்தில் விழுந்து குப்புறப் படுத்துக் கொள்வோம்.
வந்த 'ஷெல்கள்' விழுந்து பெரும் சத்தத்துடன் வெடித்ததன்பின்தான்,
அச்'ஷெல்கள்' எம்மேல் விழவில்லை என்பதையறிந்து நிம்மதிப்படுவோம்.
போர் முற்றி இந்திய இராணுவம் முன்னேறிவர,
நல்லூர் வட்டார மக்களனைவரும் நல்லூர்க் கோயிலில் தஞ்சம் புகுந்தனர்.
நாங்களும் கோயிலுக்குச் சென்று, அங்கு இடமில்லாதிருந்ததால்,
அரைகுறையாய்க் கட்டப்பட்டிருந்த,
அருகிலிருந்த எங்கள் கம்பன் கோட்டத்திற்குள் தஞ்சமடைந்தோம். 
அப்பொழுது என் தாய், தந்தை, தங்கை ஆகியோர்,
நல்லூர்ப் பின் வீதியில் எங்கள் கம்பன் கோட்டத்திற்கு முன்னாலிருந்த,
நல்ல லஷ;மி ஒழுங்கையில் வாடகை வீட்டில் இருந்தனர்.
இந்திய இராணுவம் ஒக்ரோபர் 24இல் நல்லூருக்குள் புகுந்தது.
அன்று எனது பிறந்த நாள்.
அது ஒரு விடியற்காலை நேரம்.
எங்கும் ஒரே நிசப்தம்.
அப்போது கேட்ட இராணுவச்சப்பாத்துச் சத்தங்களால்,
இராணுவம் உள் நுழைந்து விட்டது என்பதைத் தெரிந்து கொண்டோம்.
மனதுக்குள் நடுக்கம்.
பலகாலம் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்துவிட்டு,
அப்போதுதான் அதிலிருந்து விலகியிருந்த,
எங்கள் நண்பன் ஈஸ்வரநாதனும் எங்களோடு அப்போது தங்கி இருந்தான்.
இயக்கத்தின் சில நடவடிக்கைகளால் மனக் கசப்புற்றிருந்த அவனை,
இயக்கத்திலிருந்து விடுவிக்க நானும் துணை செய்தேன்.
அவனையும் பாதுகாக்க வேண்டுமே எனும் பதற்றம் எங்களுக்கு.
🚩 🚩 🚩

ஈஸ்வரநாதன்

இந்த இடத்தில் மேலே நான் சொன்ன ஈஸ்வரநாதன் என்கின்ற
ஈசனைப் பற்றி,
கொஞ்சம் சொல்ல வேண்டும்.
இவன் எங்களோடு இந்துக் கல்லூரியில் படித்தவன்.
கல்லூரிக் காலத்தில், இரத்தினகுமாரோடு இவன் நெருக்கமாய் இருந்தான்.
இருவரும் உறவினர்கள்.
படிக்கும் காலத்தில் என்னோடு இவன் நெருக்கமாய் இருக்கவில்லை.
உண்மையானவன்.
மென்மையானவன்.
எல்லோரையும் நேசிப்பவன்.
தேசப்பற்று மிகுந்தவன்.
1983 இல் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் நடந்த குண்டுவெடிப்பில்,
13 இலங்கை இராணுவத்தினர் இறந்துபோனதைத் தொடர்ந்து,
இராணுவத்தினர் அருகிலிருந்த வீடுகளுள் எல்லாம் புகுந்து,
வெறியாட்டம் நடத்தினர்.
இவனது வீடும் அதன் அருகில்தான் இருந்தது.
இராணுவத்தின் அவ்வெறியாட்டத்தில், 
இவனது அக்காவின் கணவனும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதனால் ஏற்பட்ட பாதிப்பில்,
தனது 'எக்கவுண்டன்' தொழிலையும் விட்டுவிட்டு,
இவன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தான்.
தனது நேர்மையால், அங்கும் மதிக்கப்பட்டு,
இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளனாய் வன்னியில் செயற்பட்டான்.
இந்திய சமாதானப் படை வருகையோடு,
ஈழத்தில் சுமுக நிலை ஏற்பட்டு விடும் எனும் நம்பிக்கையாலும்,
இயக்கத்தில் ஏற்பட்ட சில 
கசப்பான அனுபவங்களைச் சகிக்க முடியாததாலும்,
இயக்கத்திலிருந்து விலகுவதென முடிவுசெய்து,
அவன் யாழ் வந்திருந்தான்.
அவனது பெற்றோர்க்கும், 
தமக்கைக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி.
ஆண் துணையில்லாது அவர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்.
அந்த இடைக்காலத்தில்,
இரத்தினகுமார்தான் அவர்களின் குடும்பத்திற்குத் துணையாய் இருந்தான்.
துணையற்று இருந்த அவர்கள்,
ஈசன் திரும்பி வந்ததும் பெரிய நிம்மதியடைந்தனர்.
ஆனால், இயக்கத்தை விட்டு வெளிவந்தது தவறோ எனும் எண்ணத்தால்,
ஈசன் பெரிதும் குழப்பமுற்றிருந்தான்.
அவனது நேர்மைத் தன்மையினால்,
அவன் மனம் பெரிதும் குழம்பியிருந்தது.
'திரும்பி அவன் இயக்கத்திற்குப் போய் விடுவானோ?' எனும் 
தமது அச்சத்தை,
அவனது குடும்பத்தார் இரத்தினகுமாருடன் பகிர்ந்துகொள்ள,
இரத்தினகுமார் அவனை,
எங்களது கழக அலுவலகத்திற்கு அழைத்துவந்து தங்க வைத்தான்.
அதிலிருந்துதான், ஈசனுக்கும் எனக்குமான நட்பு விரிந்தது.
குழப்பமுற்றிருந்த அவனை நான் மனதளவில் தெளிவித்து 
நிம்மதிப்படுத்தினேன்.
அப்போது, அவன் இயக்கம் கொடுத்த கைத்துப்பாக்கியை 
வைத்திருந்தான்.
அதனை இயக்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டியிருந்தது.
அதைத் திருப்பிக்கொடுக்க அவன் இயக்க அலுவலகம் சென்றால்,
அவனை அவர்கள் மீண்டும் தம்வயப்படுத்தி விடுவார்கள் என 
வீட்டார் அஞ்சினர்.
அச்சூழ்நிலையில், நாயன்மார்க்கட்டு மனோகரைச் (காக்கா) சந்தித்து,
(புலிகள் இயக்கத்தில் இருந்த 
இவனைப்பற்றி முன்னமே சொல்லியிருக்கிறேன்.)
சூழ்நிலையை விளங்கப்படுத்தி,
ஈசனுக்கு உதவும்படி நான் கேட்டுக்கொண்டேன்.
என் வேண்டுகோளை ஏற்று மனோகர் எங்கள் அலுவலகம் வந்து,
ஈசனிடம் துப்பாக்கியைப் பெற்றுக்கொண்டான்.
🚩 🚩 🚩

தடுத்தாட்கொண்டேன்

அதன் பிறகு ஒருநாள், ஈசனை அவனது வீடு சென்று சந்தித்த,
புலிகள் இயக்க உறுப்பினரான குகன் (பொன்னம்மான்) என்பவர்,
(இவர் புலிகள்இயக்கத்தின் முக்கிய உறுப்பினராய் இருந்த 
யோகியின் தம்பியாவார்) 
ஈசனை மீண்டும் இயக்கத்தில் இணையும்படி வலியுறுத்தி,
மறுநாள் வந்து அழைத்துச் செல்வதாக சொல்லிச் சென்றிருக்கிறார்.
அன்று மதியம் தற்செயலாக ஈசனை வீட்டில் சந்தித்த நான்,
முகக்குறிப்பைக் கொண்டு அவன் குழம்பியிருப்பதை அறிந்து,
அவனை வலியுறுத்திக் கேட்டபொழுது,
நடந்ததை ஈசன் எனக்குச் சொன்னான்.
மீண்டும் நெடுநேரம் அவனோடு பேசி,
அவனைத் தெளிவடையச் செய்து,
வீட்டிலிருந்தால் அவர்கள் அவனை 
அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்பதால்,
எங்கள் அலுவலகத்திற்கு உடனேயே அவனைக் கூட்டிவந்து விட்டேன்.
அதனால், அவனை அழைக்க வந்தவர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.
அந்த, குகன் என்பவர்,
பின்னாளில் கைதடியில் நடந்த தண்ணீர்த் தாங்கிக் குண்டுவெடிப்பில்,
தன் குழுவினருடன் இறந்துபோனார்.
அதன்பின், எங்களுடனேயே இருந்த ஈசன்,
உதயன் பத்திரிகையில் 'எக்கவுண்டனாக' சில காலம் வேலை செய்தான்.
புலிகளுக்கும் இந்திய இராணுவத்தினருக்கும்
இடையிலான சண்டையின்பின்,
நாங்கள் இருந்த வீட்டின் சொந்தக்காரர் திரு. இராஜலிங்கம் அவர்கள்,
எங்கள் வேண்டுகோளை ஏற்று, இக்கட்டான அச்சூழ்நிலையில், 
துணிந்து இவனைத் தன்னோடு கொழும்புக்கு அழைத்துச் சென்றார்.
அங்கிருந்து லண்டன் சென்ற இவன்,
இன்று அங்கு 'எக்கவுண்டனாகத்' தொழில் பார்த்து நல்லபடி வாழ்கிறான்.
பிற்காலத்தில் நாங்கள் கொழும்பு வந்து,
கம்பன் கழகத்திற்கென நிலம் வாங்கியபோதும்,
ஐஸ்வர்ய லக்ஷ்மியின் புதிய ஆலயத்தை அமைத்தபோதும்,
இவன் எங்களுக்குப் பேருதவி புரிந்தான்.
அங்கிருந்தாலும், அவன் அன்று போலவே இன்றும் எம்மேல் அன்பு செலுத்துகிறான்.
🚩 🚩 🚩

நல்லூரில் தஞ்சம்

மீண்டும் விட்ட இடத்திற்கு வருகிறேன்.
கோயிலுக்குள் இந்திய இராணுவம் எல்லோரையும் அனுப்பியது.
கோட்டத்தில் தங்கியிருந்த நாமனைவரும் 
கோயிலடிக்குச் சென்றுவிட்டோம்.
நெடுநேரமாகியும் என் தாய், தந்தை, சகோதரி ஆகியோர்,
கோயிலுக்குள் வராததால் பெரும் பதற்றப்பட்டேன்.
பின்னர், பேராசிரியர் சண்முகதாஸூம் நானுமாக 
ஷெல்கள் வெடிக்க வெடிக்க,
தலைக்குமேல் கைகளை உயர்த்தியபடி சென்று,
வீட்டினுள் பயந்து பதுங்கியிருந்த அவர்களை,
கோயிலுக்குள் அழைத்து வந்தோம்.
நல்லூர்க் கோயிலுக்குள் 
கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேர் வரை தங்கியிருந்தனர்.
அசையக்கூட இடமில்லாமல் நெருங்கியிருக்க வேண்டியிருந்தது.
உண்ண உணவு இல்லை, உடுக்க உடை இல்லை. 
கேணிப்படியில் ஒரு சிறிய இடம் எங்களுக்குக் கிடைத்தது.
அப்போது நல்ல மழைக்காலம்.
மழையில் நனைந்து நனைந்து இருக்கவேண்டிய சூழ்நிலை.
மழையினால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் 
வயிற்றுப்போக்கு ஆரம்பித்து,
அனைவரும் பெரிய சிரமப்பட்டனர்.
புனிதமான நல்லூர் கோயில் முழுவதிலும்,
ஆஸ்பத்திரி மலசலகூடத்தின்  நாற்றம் வீசியது.
எனது தந்தை இருதய நோயாளி.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வெளிச்செல்ல வேண்டும்.
வீதி நிரம்ப படுத்துக்கிடந்த மக்களைத் தாண்டித்தாண்டி,
கைத்தடியோடு வெளியிற்சென்றுவர அவர் பட்ட பாட்டை,
இப்போது நினைத்தாலும் மனம் வருந்துகிறது.
ஆனாலும், அதற்குள்ளும் பாடிச் சிரித்து, பொழுதுபோக்கினோம்.
பேராசிரியர் சண்முகதாஸூம் எங்களுடனேயே இருந்தார்.
பல சோதனைகளைத் தாங்கி ஐந்து நாட்கள் கோயிலிலேயே தங்கியிருந்து,
பின் பழையபடி வைமன் ரோட்டு அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம்.
🚩 🚩 🚩

பிள்ளைப்பேறு பார்த்தோம்!

நாங்கள் தனியார் வகுப்பொன்றில்,
கம்பன் கழகத்தை ஆரம்பித்தது பற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன்.
அந்த வகுப்பினை நடாத்திய எங்களின் இரசாயன ஆசிரியை கமலாசினி,
இந்திய இராணுவச் சண்டையின் போது மகப்பேற்றிற்காய்,
இடம்பெயர்ந்து மூளாய் வைத்தியசாலைக்குச் சென்றிருக்கிறார்;
குழந்தைப்பேறு தொடங்கி பன்னீர்க்குடம் உடைந்த நிலையில்,
அங்கும் இராணுவத் தாக்குதல்கள் ஆரம்பித்திக்கிறது,
அதற்குப் பயந்து கணவரது சைக்கிளில் ஏறி வந்துகொண்டிருக்கையில்,
ஆனைக்கோட்டையில் வீதியோரத்தில் குழந்தை பிறந்திருக்கிறது.
பின்னர் அவர் குழந்தையுடன் அங்கிருந்த,
அகதி முகாமில் தங்கி அவர் இடர்ப்படுவதை அறிந்து மிக வருந்தினோம்.
அவர் எங்களோடு ஒரு சகோதரி போல் பழகியவர்.
அவரது திருமணம் உட்பட அவர்கள் வீட்டு விசேஷங்கள் 
எல்லாவற்றையும்,
நாங்கள்தான் முன்னின்று நடத்துவோம்.
தகவலறிந்ததும் செய்தியனுப்பி,
அவர்களைக் குடும்பத்தோடு வரவழைத்து,
எங்களோடு வைத்துப் பராமரித்தோம். 
சரக்கு அரைத்துக் கொடுப்பதிலிருந்து,
அவருக்கான அனைத்து உதவிகளையும் நாங்களே செய்தோம்.
இடையில் குழந்தைக்கு செங்கமாரி வந்துவிட்டது.
நல்ல காலமாய் குழந்தைப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் இராமதாஸ்,
எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருந்த,
அவர்களது உறவினரான,
வக்கீல் பாலசுப்ரமணியம் வீட்டில் வந்து தங்கியிருந்தார்.
அவரது உதவியுடன் குழந்தையைக் காப்பாற்ற முடிந்தது.
அக்காலத்தில் பேராசிரியர் சண்முகதாஸ்,
செய்த உதவிகளை மறுக்க முடியாது.
இன்று, கமலாசினி ரீச்சர் உயிரோடு இல்லை.
பின்னாளில் ஒரு வருடப் பிறப்பின் முதல்நாள்,
யாழ். 'டவுணுக்குள்' நடந்த குண்டுவெடிப்பில் அவர் இறந்து போனார்.
வீதியில் பிறந்த அவரது மகன்,
மிகக் கெட்டிக்காரனாய்ப் படித்து,
பேராதனைப் பல்கலைக்கழகம் சென்று,
இன்று ஓர் 'எஞ்சினியராய்' விளங்குகிறான்.
🚩 🚩 🚩

உயிர் தப்பிய ரத்தினகுமார்!

அப்போது இரத்தினகுமாருக்குத் 
திடீரென கடுமையான காய்ச்சல் ஒன்று வந்தது.
கிட்டத்தட்ட ஒருமாதத்திற்குமேல் விடாமல் காய்ச்சல் காய்ந்தது.
இந்திய இராணுவத்தினரால் யாழ். வைத்தியசாலை தாக்கப்பட்டு,
பல பெரிய டாக்டர்கள் சுடப்பட்டு இறந்திருந்த காலமது. 
அதனால், யாழ். வைத்தியசாலை அப்போது இயங்கவில்லை.
மருத்துவ வசதி இல்லாத அந்நிலையில்,
இரத்தினகுமாரின் காய்ச்சல் கூடிக்கொண்டே போனது.
104-105 வரை காய்ச்சல் ஏறும்.
உடனுக்குடன் ஈரம் துடைத்து காய்ச்சலைத் தணிவிப்பேன்.
ஒரு மணித்தியாலத்துள் மீண்டும் காய்ச்சல் ஏறும்.
ஒரு மருந்துக்கும் காய்ச்சல் நின்றபாடில்லை.
'அவன் தப்புவானா?' என்று பயந்தே போனோம்.
என்னென்னவோ மருந்துகள் எல்லாம் எடுத்த பிறகு,
இறுதியில் ஒரு டாக்டர் தந்த மருந்தினால்,
இறையருள் கூட காய்ச்சல் தணிந்தது.
என்மேல் வைத்த நம்பிக்கையால், 
காய்ச்சலின் போதும், மாறிய பிறகும்,
எனது வேண்டுகோளை ஏற்று,
அவனை எங்களோடு இருக்க அவன் தாயார் அனுமதித்தார்.
உயிர்ப்பயமான நிலையிலும் என்னை நம்பி மகனை,
எங்களோடு இருக்க அனுமதித்த அத்தாயின் கருணையை என்சொல்ல.
🚩 🚩 🚩

குமாரதாசனும் உயிர் தப்பினார்

இந்திய இராணுவம் யாழில் நின்றபொழுது,
ஒருநாள் ஈழநாடு பத்திரிகை நிறுவனத்திற்கு,
புலிகளால் குண்டு வைக்கப்பட்டது.
நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்காரர் திரு. இராஜலிங்கம் அவர்கள்,
அப்போது அப்பத்திரிகையின் முகாமையாளராய் இருந்தார்.
இந்திய இராணுவத்தின் வருகையின் பின்னரான சமாதானச் சூழ்நிலையில்,
இராஜலிங்கமும் துணைவியாரும் மீண்டும் யாழ் வந்தனர்.
அவர்கள் வந்ததும் நாங்கள் 
கம்பன் கோட்டத்திற்குப் புறப்படத் தயாரானோம்.
ஆனால், அவர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை.
எங்களைத் தங்களோடு தங்கியிருக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி,
கேட்டுக்கொண்டனர்.
அவர்கள் அன்புக்குக் கட்டுப்பட்டு,
நாம் தொடர்ந்தும் அவர்கள் வீட்டிலேயே தங்கினோம்.
ஈழநாட்டு அலுவலகத்தில் குண்டு வெடித்ததும்,
ஆத்திரத்துடன் இந்திய இராணுவம்,
இராஜலிங்கத்தை ஏற்றிச்செல்ல எங்கள் வீட்டுக்கு வந்தது.
வந்த இராணுவத்தினர் மிக முரட்டுத்தனமாய் நடந்து கொண்டனர்.
அப்போது இராஜலிங்கம் வீட்டில் இருக்கவில்லை.
'அவர் வெளியே சென்றுவிட்டார்' என்று நாம் சொன்னதை நம்பாமல்,
இந்திய இராணுவத்தினர் வீட்டிலிருந்த குமாரதாசனை,
முரட்டுத்தனமாய் தங்கள்  'ஜீப்பில்' ஏற்றிக்கொண்டு போனார்கள்.
குமாரதாசனது உயிருக்கு என்னாகிற்றோ என்று நடுநடுங்கிப் போனோம்.
என்ன செய்வதென்றே தெரியவில்லை.
நல்லகாலமாக இராஜலிங்கம் சிறிது நேரத்தின்பின் வந்துவிட்டார்.
நடந்ததை அறிந்து உடனேயே என்னையும் ஏற்றிச் சென்று,
ஈழநாட்டு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த,
குமாரதாசனை மீட்டுத் தந்தார்.
அன்று இராணுவத்தினருக்கு இருந்த ஆவேசத்தில்,
குமாரதாசன் உயிர் தப்பியது கம்பன் அருளே!

🚩 🚩 🚩

தொடரும்...

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்