'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 26 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

சோதனைமேல் சோதனை!

புலிகள் தலைமறைவாகி இருந்த நேரம் அது.
புலிகளின் தொடர்பு இருந்தவர்களையெல்லாம்,
இந்திய இராணுவமும்இ மாற்று இயக்கங்களும் அழித்துக்கொண்டிருந்தன.
அந்நேரத்தில் ஒரு நாள் என்னைச் சந்திக்க வந்த இளைஞன் ஒருவன்,
புலிகளின் தலைவர் ஒருவர் என்னைச் சந்திக்க விரும்புவதாகவும்,
அடுத்த நாள் காலை நீர்வேலிக் கந்தசாமி கோயிலடிக்கு,
நான் வர வேண்டும் என்றும் கட்டளையாய்ச் சொல்லிப் போனான்.
பெரிய குழப்பம் ஏற்பட்டது.
சந்தித்தால் இராணுவத்தினரின் எதிரிகளாவோம்.
சந்திக்காவிட்டால் புலிகளின் எதிரிகளாவோம்.
என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பித் தெளிந்து,
அடுத்த நாள் பிரசங்கத்திற்குப் போவது போல,
வேட்டி, சால்வையுடன் காரில் யாருக்கும் தெரியாமல் நீர்வேலி சென்றேன்.
அப்போது என்னைப் பிரசங்கங்களுக்கு அழைத்துச் செல்லும்,
கார்க்காரரான 'மகான்',
துணிந்து என்னை அவ்விடத்திற்குக் கூட்டிச் சென்றார்.
அங்கு வந்த புலி உறுப்பினரான ராஜன் என்பவர்,
எம்மைத் தமக்கு மறைமுகமாக உதவும்படி கேட்டுக்கொண்டார்.
இலக்கியச் சேவையே எமது நோக்கம் என்பதை அவருக்கு விளங்கப்படுத்தி,
எம்மால் இவ்விடயங்களில் ஈடுபட முடியாது என்பதை,
நாசூக்காய்க் கூறிவிட்டுத் திரும்பி வந்தேன்.
⚓️ ⚓️ ⚓️

இராமனைத் தந்தேன்!

இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்குமிடையிலான சண்டை தொடங்கி,
இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்பு,
நாம் முழுமையாய்க் கட்டி முடிக்காமல் வைத்திருந்த,
எங்கள் கம்பன் கோட்டத்தின் கீழ்ப்பகுதியில்,
இந்திய இராணுவம் முகாம் அமைத்தது.
வைமன் ரோட்டில் எதுவும் செய்யமுடியாத நிலையில் நாம் இருந்தோம்.
கிட்டத்தட்ட பத்து மாதங்கள் முடிந்த பின்பு,
அதை மீட்டுத் தரவும் ஆணையாளர் சிவஞானமே துணைசெய்தார்.
இராணுவ அதிகாரிகளோடு பேசி,
ஒருநாள் கம்பன் கோட்டக் கட்டிடத்துக்கு,
அவர் என்னை அழைத்துச் சென்றார்.
கோட்டத்தின் நிலை கண்டு அதிர்ந்தேன்.
கோட்டத்தின் நடுக்கூடத்தில் பீரங்கியின் நீளக்குழாய் ஒன்று,
தனியே கழற்றி வைக்கப்பட்டிருந்தது.
சுற்றிவர இராணுவ வீரர்கள் அரைகுறை ஆடையோடு,
தூங்கிக் கொண்டிருந்தனர். 
என் வழிபாட்டு அறையைப் பார்க்க வேண்டும் என்று கேட்டு,
உள்ளே சென்றேன்.
சிவஞானம் வெளியில் இராணுவ அதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்தார். 
நான் உள்ளே சென்றதும் இரண்டு இராணுவ வீரர்கள் என்னருகில் வந்தனர்.
வடநாட்டவர்களான அவர்களுக்குத் தமிழ் தெரிந்திருக்கவில்லை.
என்னருகில் வந்த அவர்கள்,
எனக்குப் புரியாத பாஷையில் ஏதேதோ பேசத் தொடங்கினர். 
முதலில் நான் சற்றுப் பயந்து போனேன்.
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை.
அங்கிருந்த இராமர் படத்தைக் காட்டிக் காட்டி 
அவர்கள் ஏதோ சொன்னார்கள்.
அந்தப் படத்தைத் தங்களுக்குத் தரும்படி,
அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள் என்பது பின்னர் தான் தெரியவந்தது.
விட்டாற்போதுமெனச் சம்மதமாய்த் தலையசைத்து விட்டு 
ஓடிவந்துவிட்டேன்.
பின்னர், ஆணையாளரின் தலையீட்டால் 
இராணுவம் அங்கிருந்து வெளியேறியது.
⚓️ ⚓️ ⚓️

இராணுவம் தந்த தொல்லை

இந்திய இராணுவம் வெளியேறுமுன் 
அவர்களால் நாங்கள் பட்டபாடு பெரும்பாடு.
அப்போதெல்லாம் மாலை ஆறு மணிக்கே ஊரடங்கிவிடும்.
இந்திய இராணுவம் எங்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்,
ஒரு வாரமாகத் தினமும் இரவு 7 மணிபோல,
சில இராணுவவீரர்கள் ஒன்று சேர்ந்து தோளில் துப்பாக்கியுடன் நடந்து,
எங்கள் வைமன் ரோட் வீட்டுக்கு வருவார்கள்.
நாய்கள் எல்லாம் ஊளையிட்டுப் பெரிய குரலெடுத்துக் குரைக்கும்.
அந்தச் சத்தம் கேட்டு 
அண்டை அயலெல்லாம் பயத்தோடு எட்டிப்பார்க்கும்.
உள்ளே நுழையும் அவர்கள் பெரிய சத்தத்தில் 
ஹிந்தியில் ஏதோ கேட்பார்கள்.
என்ன கேட்கிறார்கள் என்று தெரியாமல் நாங்கள் திகைப்போம்.
சத்தம் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.
இது இரண்டு மூன்று நாட்களாய்த் தொடர,
இராணுவம் கம்பன் கழகத்துக்கு இரவில் வந்துபோவதாய்,
ஊரார் சிலர் கதை கட்டத் தொடங்கினர்.
இராணுவத்தோடு தொடர்பு வைத்தவர்களைப் போராளிகள் 
கொன்றுவந்த காலமது. 
பயந்து போனோம். 
கடைசியிற்தான் அவர்கள் ஏன் வந்தார்கள் என்ற உண்மை தெரியவந்தது.
முகாமிட்டிருந்த கட்டிடங்களுக்கு வாடகை கொடுக்க வேண்டும் என்பது,
அவர்களின் இராணுவச் சட்டமாம்.
எங்களுக்கு எந்தவிதமான வாடகையையும் அவர்கள் தரவில்லை.
ஆனால், அவ் வாடகையை நாங்கள் பெற்றுக்கொண்டதாக,
கையெழுத்து இடும்படி கேட்டே அவர்கள் வந்திருக்கிறார்கள்.
உண்மை தெரிந்ததும் 'தப்பினாற்காணும் சாமி!'  என்று,
அவர்கள் நீட்டிய பத்திரங்களில்,
கேட்ட இடங்களிலெல்லாம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தோம்.
⚓️ ⚓️ ⚓️

போராளி மலரவன்

மலரவன் எங்கள் கழகத்தின் ஆதரவாளரான திருநாவுக்கரசரின் மகன்.
திருநாவுக்கரசு ஒரு கால் ஊனமானவர்.
புன்னாலைக்கட்டுவனில் புகையிலைக்குடில் வைத்திருந்தார்.
அற உணர்வுள்ள செல்வர்.
அவருக்கு மூன்று ஆண்பிள்ளைகள்.
மூவரையும் சென்ஜோன்ஸ் கல்லூரியில் சேர்த்துப் படிப்பித்தார்.
கல்லூரியில் படிக்கும் போதே எனது ரசிகனாயிருந்தவன் மலரவன்.
தமிழ்க்காதலும், தேசப்பற்றும் மிகுந்தவன்.
இயக்கத்தில் சேர்ந்து கலைப் பண்பாட்டுக் கழகத் தலைவனாயிருந்தான்.
இவன் தான் எங்கள் கம்பன் விழாவில்,
புதுவையின் கவிதையைக் கேட்டு மயங்கி,
அவரோடு தொடர்பு கொண்டு,
மெல்ல மெல்ல அவரை இயக்கத்திற்கு இழுத்துச் சென்றான்.
இவனது உதவியாளராய்த் திரிந்த புதுவை,
இடையில் இவன் காயப்பட்டு இந்தியா செல்ல,
இவனது பதவிக்கு வந்து செல்வாக்காய் இருந்தார்.
மலரவன் என்மேல் பெரும் மதிப்புக் கொண்டவன்.
ஒரு முறை இவனும்  இவனது குழுவினரும்,
தம்மை எதிர்த்த கரையூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை,
தாக்கிக் கொன்று விட்டதாய் அறிந்து,
அப்போது அவன் வின்சர் தியேட்டரில் நடத்திய,
கலை நிகழ்ச்சியிலிருந்து எழுந்து வந்துவிட்டேன்.
அன்றிரவே புதுவையுடன் வீடு தேடி வந்து மன்னிப்புக்கேட்டான்.
நான் திட்டத்திட்ட தலை குனிந்து கண்ணீர் வடித்துக் கேட்டுக்கொண்டான்.
பின்னாளில் இந்திய இராணுவம் யாழைக் கைப்பற்றியபோது,
இயக்கத்தில் இருப்பதா, விடுவதா என்று குழப்பமுற்றான்.
இவனும் தமையனுமாக வைமன் றோட்டில் என்னைச் சந்தித்தனர்.
நீண்ட நேரம் பல விடயங்களையும் என்னுடன் பேசினர்.
அவையெல்லாம் தணிக்கைக்குரிய விடயங்கள்.
பின்னர் என் ஆலோசனையையும் பெற்று,
இயக்கத்திலிருந்து விடுபட்டுச் சென்றான்.
இன்று வெளிநாட்டில் நிறைவாய் வாழ்கிறான்.

⚓️ ⚓️ ⚓️

போராளி ராஜன்

மலரவனால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவன் ராஜன்,
யாழ்அரசியல் பொறுப்பாளராக ஒரு காலத்தில் இருந்தான்.
இந்திய இராணுவம் யாழில் நின்றபோது மறைந்து துணிந்து இயங்கியவன்.
அக்காலத்தில் புலிகள் சார்ந்த அனைவரையும்,
இந்திய இராணுவமும், மாற்று இயக்கங்களும்,
கொலை செய்து கொண்டிருந்த நேரத்தில்,
என்னை ரகசியமாய் நீர்வேலிக்கு அழைத்துச் சந்தித்தவன் இவனே.
பின் நாளில் இவனும் இயக்கத்தால் படியிறக்கப்பட்டான்.
பின்னர் இயக்கத்திலிருந்து விலகி,
ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை செய்தான்.
போர் எல்லாம் முடிந்த பிறகு கொழும்பில் பல தரம் என்னைச் சந்தித்தான்.
அப்போது நடந்து முடிந்த சம்பவங்களில் 
இயக்கத்தின் குறைபாடுகள்பற்றி,
என்னோடு மனம் திறந்து பேசினான்.
இப்போது எங்கிருக்கிறானோ தெரியவில்லை.

⚓️ ⚓️ ⚓️

கோட்டத்தில் தங்கிய நாதஸ்வர வித்துவான்

இந்திய இராணுவம் கட்டிடத்தை எம்மிடம் ஒப்படைத்ததும்,
அதில், தம்மைத் தங்கவிடும்படி,
நல்லூர்க் கோயில் நாதஸ்வரக்காரரான,
சுப்புசாமி அவர்கள் எம்மைக் கேட்டுக்கொள்ள,
நாம் வைமன் ரோட்டில் தங்கியிருந்ததால்,
அவர்கள் குடும்பத்தைக் கோட்டத்தில் தங்க அப்போது அனுமதித்தோம்.
அவர்கள் கழகத்தை நல்லபடி பராமரிக்கவில்லை.
பின் மிகச் சிரமப்பட்டே அவர்களை அங்கிருந்து எழுப்ப வேண்டியிருந்தது.
அப்போது சிறு பையனாக இருந்த,
சுப்புசாமியின் மகனான பாலமுருகன்,
இன்று ஈழத்தின் பிரபல நாதஸ்வர வித்துவான்களில் 
ஒருவனாகத் திகழ்கிறான்.
தமிழகம் வரை கூட அவனது புகழ் இன்று பரவியிருக்கிறது.
பின்னாளில் நடந்த எங்களது கொழும்புக் கம்பன் விழாவில்,
அவனுக்கு 'ஏற்றமிகு இளைஞன் விருது' கொடுத்துக் கௌரவித்தோம்.
புகழ்பெற்ற இன்றைய நிலையில்,
அவன் எங்கள் கழகத்திற்குப் பெரும் துணையாய் நின்று,
நாம் கேட்கும்போதெல்லாம் 
எமது நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்து வருகின்றான்.
இன்று அவனைக் காணும் போதெல்லாம்,
அவனது குழந்தைப் பருவத்தில்,
அவர்களைக் கழகத்திலிருந்து வெளியேற்ற நேர்ந்ததை நினைந்து 
சங்கடப்படுவேன்.
⚓️ ⚓️ ⚓️

கொலை செய்யப்பட்ட வித்துவான் சபாரட்ணம்

இக்காலத்தில் காரைநகர்க் கம்பன்கழகத்தைச் சேர்ந்த,
வித்துவான் சபாரட்ணம்,
இந்திய இராணுவத்தோடு தொடர்பு கொண்டாரென, பழி சுமத்தப்பட்டு,
அநியாயமாகப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ளக்கூட, பலரும் அஞ்சினர்.
ஆனால், அதுபற்றிக் கவலைப்படாமல் நானும் கழக உறுப்பினர் சிலருமாக,
அந்தப் பதற்றச் சூழ்நிலையிலும்,
அவரது இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டோம்.
அங்கு நடந்த அவரது அஞ்சலிக் கூட்டத்திலும் நான் உரையாற்றினேன்.
⚓️ ⚓️ ⚓️

மீண்டும் குரங்குகள் வந்தன

என் குருநாதரின் சொற்பொழிவின்போது நல்லை ஆதீனத்தில்,
குரங்கொன்று வந்த கதையினை முன்பு சொல்லியிருக்கிறேன்.
பின்னாளில் பல முக்கியமான நேரங்களில் எல்லாம் அக் குரங்குத்தரிசனம்,
அடிக்கடி நிகழ்ந்தது என்றும் 
அவைபற்றி இடையிடையே சொல்வேன் என்றும்,
முன்பு சொல்லியிருந்தேன் அல்லவா.
இப்போது இரண்டாவது குரங்குத்தரிசனம் பற்றி, சில வார்த்தைகள்.
இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான,
சண்டை கடுமையாய் நடந்து கொண்டிருந்தது.
அப்போரில் பல உயிர்கள் பறிக்கப்பட்டன.
எங்களோடு தங்கியிருந்த விமலாவின் தந்தையும்,
கல்வியங்காட்டில் அவர்கள் வீட்டில் இறந்து கிடந்தார்.
இந்நிலையில் கழகத்தைச் சேர்ந்த எவருக்கும்,
உயிராபத்து வந்துவிடுமோ? என 
நிமிடத்திற்கு நிமிடம் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள் காலைப் பொழுது,
திடீரென எங்கள் வீட்டு முற்றத்திலிருந்த மாமரங்கள் 
சலசலத்து அசைந்தன.
என்னவென்று பார்த்தால் அம்மாமரக்கிளைகளில்,
சிறியதான மூன்று குரங்குகள் பாய்ந்து விளையாடிக்கொண்டிருந்தன.
நான் முன்பு சொன்னது போல 
அந்த வட்டாரத்தில் குரங்குகள் இருந்ததில்லை.
திடீரெனக் குரங்குகள் வீட்டிற்கு வந்ததும்,
அதை ஆஞ்சநேய தரிசனமாகவே நான் நினைத்தேன்.
அந்தக் கடும்போரிலும் கழகத்தார் எல்லாரும் உயிரிழப்பின்றி தப்பினர்.
ஆஞ்சநேயரே காத்தார் என நம்பினேன்.
⚓️ ⚓️ ⚓️

தொடரும்...

 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்