'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 29 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

🚩 🚩 🚩
தயைகூர்ந்து மன்னியுங்கள்!

இனி நான் சொல்லப்போகும்,
என் விரிவுரைகள் பற்றிய செய்திகளை,
தயைகூர்ந்து வாசகர்கள் தற்புகழ்ச்சியாய்க் கருதக்கூடாது என, தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.
பின்னர் ஏன் இப்பதிவு 
எனக் கேட்பீர்கள்?
என் வாழ்விலும் சரி,
யாழ்ப்பாணப் பேச்சுலக வரலாற்றிலும் சரி,
இக்காலத்தைப் பொற்காலம் என்றே பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
ஆயிரக் கணக்கான மக்கள் கூடி,தனிச் சொற்பொழிவினைக்   
 கேட்ட வரலாறு,
அப்போதுதான்,  
முதன்முதலாக யாழில் 
நடந்தது என்று நினைக்கிறேன்.
அதுமட்டுமன்றி, ஒரு சொற்பொழிவாளன் கேட்ட தொகையை,
நிகழ்ச்சி ஒழுங்கு பண்ணியவர்கள்,
எந்தவிதத் தயக்கமுமின்றித் தரத் தயாராக இருந்ததும்,
அதற்கு மேலாகத் தங்கப் பதக்கங்கள், பட்டங்கள் என 
அள்ளிக் குவித்ததுவும்,
பேச்சாளன் விதித்த நிபந்தனைகளுக்கு எவ்வித மறுப்புமின்றி உடன்பட,
உபயகாரர்கள் தயாராயிருந்ததுவும்,
மேடைகளில் சொற்பொழிவாளன் காட்டிய நிமிர்வுக்கு,
மற்றையோர் அடங்கிப் போனதுவும்,
மற்றைய நிகழ்ச்சிகளைவிட, சொற்பொழிவுக்கு,
விழாக்காரர்கள் முதன்மை கொடுத்ததுவும்,
இக்காலத்தில்தான் யாழ் மண்ணில் நடந்தது.
அந்தப் பேச்சாள வெற்றி அதற்கு முன்பும் கிடைத்ததில்லை,
பின்பும் கிடைக்கவில்லை.
அது எனது தனி வெற்றியல்ல, தமிழ் வெற்றி.
ஆகவேதான், எனது புகழும் கலந்த அப்பகுதியை,
நாணம் இன்றி இங்கு பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது.
🚩 🚩 🚩

எனது தொடர் சொற்பொழிவுகள்

இக்காலகட்டத்தில் ஆலயங்களில் நான் செய்த,
இராமாயண, மகாபாரதத் தொடர் சொற்பொழிவுகள்,
எனக்குப் பெரும்புகழைத் தேடித்தந்தன.
அப்போது யாழ்ப்பாணத்தில் மின்சாரம் இருக்கவில்லை.
அதனால் தொலைக்காட்சி, சினிமா எனும்,
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இல்லாதிருந்ததாலும்,
போர்ப்பாதிப்பால் மக்கள் மனக்குழப்பம் அடைந்திருந்ததாலும்,
அவர்களுக்கு மன ரீதியான ஓர் ஆறுதல் தேவைப்பட்டது.
அவ்வாறுதலை இராமாயணம், பாரதம் போன்ற அறநூல்கள்,
ஓரளவு தந்தனபோலும்.
அதனால், இந்நிகழ்ச்சிகளுக்கு மக்கள்,
பெருங்கூட்டமாய் வரத்தொடங்கினர்.
எங்களுக்கு முன்பாக ஆலய நிகழ்ச்சிகளில்,
சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களின்,
வில்லிசை நிகழ்ச்சியே புகழ்பெற்ற நிகழ்ச்சியாய் இருந்தது.
கலைத்தன்மையோடு நான் காவியங்களை,
தொடர் சொற்பொழிவுகளாய்ச் செய்யத் தொடங்க,
புதிதான அந்நிகழ்ச்சிக்குப் பெரிய மவுசு உண்டாயிற்று.
🚩 🚩 🚩

அளவெட்டிக் கும்பிளாவளைப் பிள்ளையார் கோயில்

முதன்முதலாக
அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார் ஆலயத்தில்த்தான்,
இராமாயணத் தொடர்சொற்பொழிவை நிகழ்த்தினேன்.
ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அந்நிகழ்ச்சியை இரசித்து,
பெரும் வரவேற்பளித்தனர்.
நிறைவு நாளில் நான் சீதா கல்யாணம் சொன்னபோது,
கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும்
என் வேண்டுகோளையேற்று,
வானத்தில் மலர் தூவி மகிழ்ந்த காட்சி மறக்க முடியாதது.
தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்த பெண்கள்,
நிறைவு நாளில் திருமண வீட்டிற்கு வருமாற்போல், பட்டுடுத்தி வந்து,
சீதா கல்யாணத்தை நிஜக் கல்யாணம்போல் ஆக்கினர்.
அதன் பின்னர், பல கோயில்களிலும் இம்முறை தொடர்ந்து நடைபெற்றது.
🚩 🚩 🚩

சுன்னாகம் ஐயனார் கோயில்

எனது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் சில மறக்க முடியாதவை.
சுன்னாகம் ஐயனார் கோயிலில்,
நான் இராமாயணத் தொடர் விரிவுரை ஆற்றியபோது,
என்னைப் பேச்சுக்கு அழைத்துச்செல்ல வாகன வசதி இல்லாதிருந்ததால்,
உபயகாரர்கள் விசித்திரமான ஓர் ஒழுங்கினைச் செய்தனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றின் பக்கத்தில் பூட்டும்,
சிறு கார் போன்ற ஒன்றினுள் என்னை உட்கார வைத்து,
ஆலய நண்பரொருவர் தினமும் அப்பேச்சுக்கு 
என்னை அழைத்துச் செல்வார்.
விநோதமான அந்த வாகனத்தில் நான் போகும் காட்சியை,
ஊரெல்லாம் வியந்து இரசிக்கும்.
கோயிலடிக்கு நான் சென்று சேர்ந்ததும்,
சிறு பிள்ளைகளெல்லாம் என்னையும், 
அவ்வாகனத்தையும் சூழ்ந்து நின்று,
வேடிக்கை பார்ப்பார்கள்.
இன்றும் அவ்வனுபவத்தை மறக்க முடியவில்லை.
அங்கு கூடிய கூட்டத்திற்கு ஒரு அளவில்லை.
அவ் ஆலயத்தின் தலைவரான குமாரவேல் அவர்களுக்கு 
அளவற்ற உற்சாகம்.
நிறைவு நாளில் ஓர் பட்டிமண்டபத்தினை ஒழுங்கு செய்திருந்தார்.
ஆளுயரத்திற்கும் அதிகமான உயரத்தில் மேடை போட்டிருந்தார்கள்.
அருகிலிருந்த வயல்வெளிகளெல்லாம் சனக்கூட்டத்தால் நிரம்பிவிட்டது.
கிட்டத்தட்ட அரை மைல் தூரத்திற்கு கயிறுகட்டிப் பாதை அமைத்து,
எங்களை மேடைக்கு அழைத்துப் போனார்கள்.
மறக்கமுடியாத நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.
🚩 🚩 🚩

இணுவில் பிள்ளையார் கோயில் நிகழ்ச்சி

இணுவில் பிள்ளையார் கோயிலில்,
நான் இராமாயணத் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தியபோது,
மெயின் வீதி வரை சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது.
நிறைவு நாளில் நான் பட்டாபிஷேகம் சொன்னபோது,
தவில் வித்துவான் புண்ணியமூர்த்தி அவர்கள்,
ஒரு பெரிய தாம்பாளம் நிறையச் சில்லறைக் காசுகளை நிரப்பி,
எனக்குக் கனகாபிஷேகம் செய்தார்.
பணக்குவியலுக்கு மத்தியில் அன்று நான் அமர்ந்திருந்த காட்சியை,
இன்றும் நினைத்துப் பார்ப்பேன்.
யாழில் வேறெந்தப் பேச்சாளனுக்கும் கிடைக்காத பேறு அது.
🚩 🚩 🚩

திருநெல்வேலி தலங்காவில் பிள்ளையார் கோயில் நிகழ்ச்சி

திருநெல்வேலி தலங்காவில் பிள்ளையார் கோயிலில் 
இராமாயணம் சொன்னபோதும்,
அதேபோல, பெருங்கூட்டம் கூடியது.
தேர் சிற்பக் கலைஞரான சீவரத்தினம் ஆசாரி அவர்கள்,
அத்தொடர் முடிவின்போதுதான் எனக்கு,
'கம்பவாரிதி' எனும் பட்டத்தினைத் தந்தார்கள்.
எத்தனையோ பட்டங்களை ஆலயக்காரர்கள் எனக்குத் தந்தபோதும்,
இப்பட்டமே பிற்காலத்தில் எனக்கு நிலைத்த பட்டமாயிற்று.
இந்நிகழ்வின்போது மறக்க முடியாத மற்றொரு
 நிகழ்ச்சியும் நடந்தது.
சொற்பொழிவின் நிறைவு நாளில்,
சபையில் இருந்த யாரோ ஓர் அம்மையார் தன்னை வெளிப்படுத்தாமல்,
எங்கள் கழக உறுப்பினரான திரு. சோதிலிங்கம் என்பவரைக் கொண்டு,
மூன்று பவுன் கனத்தில் எனக்கு ஒரு தங்கப் பதக்கத்தினைப் போடுவித்தார்.
பின்னர், அதனைப் போட்டவர்,
எங்கள் கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை அவர்களின் உறவினரான,
திருமதி. இராஜரட்ணம் அவர்கள்தான் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
அந்த அம்மையாரும் என்மேல் 
பிள்ளைபோல் அன்பு காட்டியவர்களில் ஒருவராவார்.
அதன்பிறகு, 
எல்லாக் கோயில்களிலும் தொடர் சொற்பொழிவு நிறைவுநாளில்,
தங்கப்பதக்கம் போடுவதும், பட்டந் தருவதும் ஒரு வழக்கமாயிற்று.
இருபதிற்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கினேன்.
பின்னர், கம்பன் கோட்டத்தைப் புதுப்பிக்கும் செலவிற்காக,
அம்மையார் தந்த பதக்கத்தைத் தவிர, 
மிகுதி அத்தனை பதக்கங்களையும் விற்றேன்.
🚩 🚩 🚩

திருநெல்வேலி சிவன் கோயில் நிகழ்ச்சி

இதுபோலவே, திருநெல்வேலி சிவன் கோயிலில்,
முப்பது நாட்களாய் நான் செய்த மகாபாரதச் சொற்பொழிவும் 
மறக்க முடியாதது.
அங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த நேரத்தில் கூடி,
பாரதக் கதையை, தம் சொந்தக் கதைபோல்,
சுவாரசியம் காட்டிக் கேட்டனர்.
எங்கள் ஆசிரியர் சிவராமலிங்கம் பிள்ளை அவர்கள்,
தினமும் தனது மூன்று சக்கரச் சைக்கிளில் வந்து,
மாணவன் பேசுவதை 
எதுவித ஆணவமுமில்லாமல் ஆனந்தமாய்க் கேட்பார்.
அந்தச் சொற்பொழிவில் படித்தவர்களை என்னால் மிரள வைக்க முடிந்தது.
ஆனால், சுருட்டுக் கொட்டிலில் பாரதம் கேட்டுப் பழகிய,
சில சாதாரண மனிதர்களை,
திருப்தி செய்ய நான் கடுமையாய்ப் படித்துவிட்டுப் பேசவேண்டியிருந்தது.
அந்த சொற்பொழிவின் முடிவிலும் சீவரத்தினம் ஆசாரியார்,
எனக்குப் பெரிய தங்கச் சங்கிலியையும் பதக்கத்தையும்,
தனது சொந்தச் செலவில் போட்டார்.
🚩 🚩 🚩

தொடரும்...

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்