'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 36 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

🚩  🚩  🚩
எங்களின் இசை ஈடுபாடு

சிறு வயதிலிருந்தே எனக்கு இசை மீது பெரும் ஆர்வம் இருந்தது.
எங்கள் ஆசிரியரான வித்துவான் வேலன் அவர்கள்,
முத்தமிழும் படித்தாற்தான், தமிழ் படித்ததாய்ச் சொல்ல முடியும் என்று,
அடிக்கடி சொல்ல, அதன் பாதிப்பால்,
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடகியாய் இருந்த.
திருமதி சத்தியபாமா இராஜலிங்கம் அவர்களிடம்,
நானும் குமாரதாசனும், இரத்தினகுமாரும், வசந்தனும்,
ஐந்தாண்டுகளுக்கு மேலாக முறைப்படி சங்கீதம் படித்தோம்.
அதனால் எனது சங்கீத ஆர்வம் மேலும் மிகுந்தது.
எங்கள் சங்கீத ஆசிரியை சத்தியபாமா அவர்கள்,
இசை கற்பிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.
எங்கள் அறியாமைகளைச் சகித்து,
பொறுமையாய் இசையைப் போதித்தார்.
இன்று நாம் கழகத்தின் பெயரால் 
பல இசைவிழாக்களை நடாத்திவிட்டோம்.
தமிழ்நாட்டின் பிரபலமான இசைக்கலைஞர்கள் எல்லோரும்,
எங்கள் இசைவிழாக்களில் கலந்து சிறப்பித்து வருகின்றனர்.
அதனால் எங்களுக்கு நிறையப் பாராட்டு.
அந்தப் பாராட்டுக்கெல்லாம் காரணமானவர்,
எங்கள் இசையாசிரியை திருமதி சத்தியபாமா இராஜலிங்கம் அவர்களே.
அவர்களிடம் இசை கற்றது மட்டுமல்லாமல்,
அவரது தங்கையான புகழ்பெற்ற நாட்டிய ஆசிரியை,
திரிபுரசுந்தரி யோகானந்தம் அவர்களிடம்,
அக்காலத்தில் நாட்டியம் படிக்கவும் முயன்றோம்.
அதுபற்றிக் கேட்கச் சென்றபோது நாம் அணிந்திருந்த,
எங்களது 'டெனிம் ரவுசரைக்' கண்டும், 
அப்போது எமக்கிருந்த பரட்டைத் தலைமுடியையும் கண்டு பயந்த அவர்,
எங்களை மாணவர்களாய் ஏற்க மறுத்ததால் அம்முயற்சி தோற்றுப்போனது.
எங்கள் இசை ஆசிரியையிடம் கற்று,
வட இலங்கைச் சங்கீத சபையின்,
மூன்றாந்தரச்சோதனைவரை சித்தியெய்தினேன்.
பின்னாளில் சில காலம் சங்கீத பூஷணம் வேலாயுதபிள்ளைஅவர்களிடம் 
சங்கீதம் கற்று வட இலங்கைச் சங்கீத சபையின்,
நான்காந்தரச்சோதனையிலும் சித்தியெய்தினேன்.
நான்காந்தர இசைப் பரீட்சைக்கு நான் தோற்றுகையில்,
எனக்கு முப்பத்தைந்து வயதாகியிருந்தது.
பேச்சுலகில் நான் புகழ் பெற்றிருந்ததால்,
என்னை அங்கிருந்த இசை ஆசிரியர்களுக்குத் தெரிந்திருந்தது.
அந்த வயதில் நான் பரீட்சைக்கு வந்திருக்கமாட்டேன் என 
நினைந்த அவர்கள்,
'யாரையாவது சோதனைக்குக் கூட்டிக்கொண்டு வந்தனீங்களோ?' என்று,
என்னைக் கேட்க பெரிதும் நாணிப்போனேன்.
பிற்காலத்தில் சங்கீதத்திலிருந்த ஆர்வத்தால்,
சங்கீத பூஷணம் கணபதிப்பிள்ளை, சங்கீத பூஷணம் திலகநாயகம்போல், 
சங்கீத பூஷணம் பத்மலிங்கம், சங்கீத பூஷணம் மேரி சரோஜா ஜஸ்டின்,
ஆகியோரிடம் இடையிடையே படிக்க முயன்று,
அம் முயற்சிகள் தோற்றுப்போயின.
பின்னாளில், நானும் இரத்தினகுமாருமாகச் சேர்ந்து,
இளங்கலைஞர் மன்றத்தின் இசை விழா ஒன்றில்,
பக்கவாத்தியங்களோடு கச்சேரிகூடச் செய்திருக்கிறோம்.
🚩  🚩  🚩

யாழில் எங்கள் காலத்து இசைநிகழ்ச்சிகள்

1970, 1980களில் யாழ்ப்பாணத்தில் இசை அமைப்புக்கள் பல இருந்தன.
ரசிகரஞ்சன சபா, அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம்,
இளங்கலைஞர் மன்றம் போன்ற இந்த இசை அமைப்புக்கள்,
ஆண்டுதோறும் இசை விழாக்கள் பலவற்றை நடாத்தி வந்தன.
ஆளுமை, சமூகத் தொடர்பு, மதியூகம் என்பவை பொருந்தி,
சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றிருந்த,
புங்குடுதீவைச் சேர்ந்த சங்கீதப் பூஷணம் பொன். சுந்தரலிங்கம் அவர்கள்,
இளங்கலைஞர் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கிய பிறகு,
அந்த அமைப்பே இசைத்துறையின் முதன்மைபெற்ற அமைப்பாய் 
விளங்கி வந்தது.
செல்வர்களையும் கலைஞர்களையும் ஒருங்கே ஈர்த்து,
அவர் அற்புதமாய்ச் செயற்பட்டார்.
1983இன் பின் நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களால்,
இந்த இசை நிகழ்ச்சிகள் மெல்ல மெல்ல நின்றுபோயின.
சங்கீத பூஷணம் பொன். சுந்தரலிங்கத்தின் இளங்கலைஞர் மன்ற செயற்பாடுகளும்,
முற்றாக ஸ்தம்பித்தது.
🚩  🚩  🚩

கம்பன் கழகத்தின் பத்தாண்டு பூர்த்தி நிகழ்வுகள்,
முதலாவது இசை ஆராதனை   (27.01.1991)

இசையில் பெரும் நாட்டம் கொண்டிருந்த எங்களுக்கு,
எமது கழகத்தின் மூலம் 
இசை நிகழ்ச்சிகளை நடாத்தும் விருப்பு உண்டாயிற்று.
இசைக் கலைஞர்களின் தொடர்பும் எமக்கிருந்ததால்,
இவ்வாண்டிலிருந்து  இசை நிகழ்வுகளையும் நடாத்த முற்பட்டோம்.
இவ்வாண்டில் எமது கழகம் தனது பத்தாவது ஆண்டைப் பூர்த்தி செய்தது.
அப்பத்தாண்டு நிறைவை ஒட்டிப் பல நிகழ்ச்சிகளை நடாத்த முடிவு செய்த நாங்கள், பத்தாண்டு நிறைவின் முதல் நிகழ்ச்சியாக,
ஸ்ரீ தியாகராஜசுவாமிகளின் பெயரில்,
இசையாராதனை நிகழ்ச்சியொன்றினை அமைத்தோம். 
எமது கம்பன் கோட்ட மேல்மண்டபத்தில்,
1991 ஜனவரி 27 அன்று இவ் இசை ஆராதனை நடைபெற்றது. 
காலையும் மாலையும் நடைபெற்ற இவ்விழாவின் 
காலை நிகழ்ச்சிக்கு,
சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தலைமை தாங்கினார். 
நாதஸ்வர வித்துவான்களான என்.கே. பத்மநாதன், எம். பஞ்சாபிகேஷன்,
எம்.பி. பாலகிருஷ்ணன், கே.ஆர். சுந்தரமூர்த்தி, 
வி.கே. பஞ்சமூர்த்தி, ஆர். கேதீஸ்வரன்,
காரை கே. கணேசன் ஆகியோரும்,
தவில் வித்துவான்களான, என்.ஆர். சின்னராசா, 
என்.ஆர்.எஸ். ரவீந்திரன்,  ரி. உதயசங்கர், 
கே.ஆர்.எஸ். ராமதாஸ் ஆகியோரும்,
ஒரே மேடையில் இசையாராதனை செய்தனர்.
யாழ்ப்பாணத்தின் பிரபல சங்கீத வித்துவான்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து,
பஞ்சரத்தினக்கீர்த்தனை இசைத்தனர்.
மாலை நிகழ்ச்சிகளுக்கு வித்துவான் க.ந. வேலன் தலைமைதாங்க,
பி.எஸ். பிச்சையப்பா, ரவி, ரஜி ஆகியோரது நாதஸ்வரக் கச்சேரியும்,
என். பத்மலிங்கம், பொன். சுந்தரலிங்கம், திலகநாயகம் போல் ஆகியோரது,
இசைக்கச்சேரிகளும் நடைபெற்றன.
நீண்ட நாட்களின் பின் யாழில் எமது கழகத்தின் மூலம்,
இசை முயற்சிகள் மீண்டும் துளிர்விடத் தொடங்கின.
தெய்வீகமான இந்நிகழ்ச்சியால் நாம் பெரிதும் மகிழ்ந்தோம்.
🚩  🚩  🚩

இயக்கம் நடத்திய முத்தமிழ் விழா

1991 ஆம் ஆண்டில் இயக்கம் ஓரு முத்தமிழ் விழாவை,
பெரிய அளவில் நடத்தியது.
இந்திய இராணுவம் போன பின்பு,
தலைமறைவு வாழ்க்கையிலிருந்து புலிகள் மீண்டிருந்தனர்.
நீண்டநாட்களின் பின் எங்களைச் சந்தித்த புதுவை இரத்தினதுரை,
கழக உறவைப் பெரிதாய்ப் போற்றினார்.
அக்காலத்தில் புலிகளின் சாயலை தம்மேல் பூசிக் கொள்ள,
அறிஞர்;கள் யாரும் பெரிதாய் விரும்பவில்லை.
பல்கலைக்கழகத்தார் அதைத் துளியும் விரும்பவில்லை.
அந்நேரத்தில்த்தான் புலிகளால்,
இம்முத்தமிழ் விழா நடாத்தப்பட்டது.
அவ்விழாவில் இயல் நிகழ்ச்சிகளை நடாத்தும் பொறுப்பை,
புதுவையின் வேண்டுகோளின் பெயரில்,
கம்பன் கழகம் ஏற்றுக்கொண்டது.
மானிப்பாய், சாவகச்சேரி எனப்பல இடங்களிலும்,
அவ்விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிறைவு நிகழ்ச்சி யாழ் முற்றவெளியில் நடைபெற்றது.
நான் திருநந்தகுமார், சிவராமலிங்கம் மாஸ்ரர், புலவர் போன்றோர்,
அந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல பட்டிமண்டபங்களை நடாத்தினோம்.
முற்றவெளியில் நடந்த நிறைவு நிகழ்ச்சியில்,
வழக்காடு மன்றம் ஒன்று நடைபெற்றது.
லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் அந்நிகழ்வு நடைபெற்றது.
நானும், சுப்ரமணியஐயரும் அதில் மோதிக்கொண்டோம்.
எனக்குப் புகழ் தேடித்தந்த நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்று.
பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் பாலசுந்தரமும், 
சுப்ரமணியஐயரும் மட்டுமே எங்களையும் இயக்கத்தையும் மறுக்கமுடியாமல்,
இவ்விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இயக்கம் இவ்விழாவை நடாத்தியது.
1993 இல் நடைபெற்ற முத்தமிழ்விழாவில்,
இயக்கம் எங்களை முற்றாக நிராகரித்திருந்தது.
அப்படியிருந்தும் புதுவை தலைமையில் நடந்த கவியரங்கத்தைக்கேட்க,
கழகத்தார் அனைவரும் சென்றிருந்தோம்.
🚩  🚩  🚩

இரண்டாவது பி.எஸ். நினைவுச்சொற்பொழிவு (03.03.1991)

மறைந்த யாழ். இந்து அதிபர் பி.எஸ். குமாரசாமி அவர்களின், 
இரண்டாவது நினைவுப் பேருரை 1991 மார்ச் 03 இல்,
எங்கள் கம்பன் கோட்ட மேல்மண்டபத்தில் நடைபெற்றது.
அப்போது எமது மேல்மண்டப வேலைகள் பூரணப்பட்டிருக்கவில்லை.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தின் இரண்டு பேரறிஞர்களை,
ஒன்றுசேர்த்து மேடையேற்ற விரும்பினோம்.
ஒருவர் யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபரும்,
'ஈழநாடு' பத்திரிகை ஆசிரியருமான, என். சபாரட்ணம் அவர்கள்.
மற்றவர் ஹாட்லி, சென். ஜோன்ஸ் கல்லூரிகளின் முன்னைநாள் அதிபரான,
பூரணம்பிள்ளை அவர்கள்.
அப்போது என். சபாரட்ணம் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
தனது மைந்தனான டாக்டர் சிவகுமார் அனுமதி தந்தால்த்தான்,
தான் விழாவில் கலந்து கொள்ளமுடியும் என்று அவர் சொல்ல,
நாங்கள் டாக்டர் சிவகுமார் அவர்களிடம் சென்று,
அதிபரைக் கதிரையில் வைத்து,
மேல்மாடிக்கு பத்திரமாகத் தூக்கிச் செல்வதாக உறுதியளித்து,
விழாவில் அவர் கலந்து கொள்ள அனுமதிபெற்றோம்.
அன்றைய நினைவுச் சொற்பொழிவுக்கு,
அதிபர் என். சபாரத்தினம் அவர்கள் தான் தலைமை தாங்கினார்.
அம்முறை நினைவுச்சொற்பொழிவை ஆற்றவேண்டுமெனக் கேட்டு,
பூரணம்பிள்ளை அவர்களை அணுகினோம்.
'பாடசாலை நிர்வாகம் - இலட்சியமும் நடைமுறையும்'
எனும் தலைப்பில்  நினைவுச் சொற்பொழிவாற்ற அவர் சம்மதித்தார்.
பூரணம்பிள்ளை அவர்களுடனான சந்திப்பு அனுபவம் மறக்கமுடியாதது.
கல்வி பற்றி ஆயிரம் கனவுகளோடு அவர் இருந்தார்.
அந்த வயதிலும் தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றையும்,
திட்டமிட்டே செயற்படுத்தினார்.
முதல்நாள் நான் அவரைச் சந்தித்துவிட்டு,
இரண்டாந்தரம் சந்திக்கச் சென்றபோது,
என்னைப் பெயர் சொல்லி அழைத்து  ஆச்சரியப்படுத்தினார்.
அவரோடு நீண்டநேரம் பேசி அவரது கல்விச் சிந்தனைகளையும்,
திட்டமிட்ட ஆளுமை வளர்ச்சி பற்றிய எண்ணங்களையும்,
நிறையத் தெரிந்துகொண்டேன்.
அதுபற்றி எழுதுவதானால் ஒரு தனி நூல் எழுதவேண்டும்.
விரிவஞ்சி விடுகிறேன்.
சமுதாயத்திலிருந்து ஒதுங்கி வாழ்ந்த அப்பேரறிஞர்;கள் இருவரையும்,
ஒன்றுசேர்த்து நாம் நடத்திய நினைவுப்பேருரை,
எமது கழகத்திற்கு பெருமதிப்பை உருவாக்கித்தந்தது.
கல்வித்துறை சார்ந்த பல அறிஞர்களும் அந்நிகழ்வைக்காண,
ஆர்வத்துடன் வந்து சேர்ந்தனர்.
எண்பது வயதைக் கடந்திருந்த, கல்விச் சிந்தனை மிகுந்த,
யாழ்ப்பாணத்தால் மதிக்கப்பட்ட அப்பேரறிஞர்கள் இருவரும்,
ஒரே மேடையில் தோன்றிய காட்சி பலருக்கும் சிலிர்ப்பூட்டியது.
அன்றைய அவ்விருவரது உரைகளும்,
ஆழமும், சிந்தனையும், நகைச்சுவையும், தீர்க்கதரிசனமும், 
மிகுந்ததாய் அமைந்தன.
🚩  🚩  🚩

புத்தாண்டுக் கவிதைப் பட்டிமண்டபம் (14.04.1991)

கழகத்தின் பத்தாண்டு நிறைவு நிகழ்ச்சித் தொடரின் 
இரண்டாம் நிகழ்ச்சியாக,
எமது கம்பன் கோட்டத்தின் மேல்மண்டபத்தில் 1991 ஏப்ரல் 14 இல்,
புத்தாண்டினை ஒட்டிக் கவிதைப் பட்டிமண்டபம் 
ஒன்றினை நடாத்தினோம்.
இந்நிகழ்வில் என்.கே. பத்மநாதன், எஸ்.கேதீஸ்வரன், 
என், ஆர். சின்னராசா,
கே. ஆர். புண்ணியமூர்த்தி, ரி. உதயசங்கர் ஆகியோர் 
மங்கல இசை வழங்கினர்.
இப்பட்டிமண்டபத்திற்கு வித்துவான் வேலன் தலைமை தாங்கினார்.
'நாமிருக்கும் நாடு நமது என்று அறிந்தோமா?' எனும் தலைப்பில்,
கவிதைப் பட்டிமண்டபம் நடந்தது.
காரை சுந்தரம்பிள்ளை, சோ. பத்மநாதன், கல்வயல் குமாரசாமி,
ச.வே. பஞ்சாட்சரம், ஜே.கி.ஜெயசீலன், நாக.சிவசிதம்பரம் ஆகியோர்,
இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
🚩  🚩  🚩

மறக்க முடியாத கவிஞர்கள்

எமது முதற் கம்பன் விழாக் கவியரங்கில்,
அருட்கவி சி. விநாசித்தம்பி அவர்கள் கவிதை பாடினார்.
வரகவியாகக் கவிதை பாடும் வல்லமை பெற்றவர் அவர்.
நிறைந்த அருளாளர்.
கடைசி வரை என்மேலும் கழகத்தின்மேலும் 
பெரிய அன்பு பாராட்டி வந்தார்.
இவர்போலவே கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களும்,
எங்கள் கவியரங்கத்தைப் பெரிதும் சிறப்பித்தவர்.
மிக எளிமையானவர். மிகப் பெரிய இரசிகர்.
எம்மை, கம்பன் பணியில் தூண்டி வளர்த்தவர்களில் இவரும் ஒருவர்.
அதே போல, கவிஞர் பா. சத்தியசீலன் அவர்களும்,
கழக கவியரங்கங்களைச் சிறப்பித்த கவிஞர்களுள் ஒருவராவர்.
எங்கள் கம்பன் அரங்கில் கவிதை பாடி,
இனங்காணப்பட்ட கவிஞர்களுள் நாக. சிவசிதம்பரமும் ஒருவன்.
இளைஞனான இவன் ஆரம்ப காலத்தில் எங்கள் கவியரங்கத்தில்,
ஆழமான கவிதைகள் பாடி சபையை இரசிக்கச் செய்தான்.
இடைக்காலத்தில், முற்போக்குச் சிந்தனை சார்ந்து சற்றுத் தூர நின்றாலும்,
எங்கள்மேல் கொண்ட அன்பில் குறைவின்றித் திகழ்ந்தான்.
பின்னாளில், கவிஞர்கள் பண்டிதர் பரந்தாமனும், பொன். கணேசமூர்த்தியும்,
நாவண்ணனும் தமது கவிதைகளால் 
எங்கள் கவியரங்குகளைச் சிறப்பித்தனர்.
கழக அரங்குகளைச் சிறப்பித்த இக்கவிஞர்களை மறக்க முடியாது.
🚩  🚩  🚩

இசைநாடகம் (19.05.1991)

எமது பத்தாண்டு நிறைவு நிகழ்ச்சித் தொடரின் மூன்றாம் நிகழ்ச்சியாக,
இந்நிகழ்வு 1991 மே 19 இல்,
எமது கம்பன் கோட்ட மேல்மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்வில்,
முதன்முதலாய் 
நம் பாரம்பரிய இசை நாடகக் கலைஞர்களைச் சந்தித்தேன்.
அவர்கள் ஆற்றல் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
முறைப்படியான இசைக்கல்வி ஏதுமின்றியும், 
சுத்தமாக அவர்களுக்கு வாய்த்திருந்த இசைஞானம் கண்டு வியந்தேன். 
இத்தனைக்கும் அவர்கள் சாதாரண கூலித் தொழிலாளர்கள். 
அக்காலத்தில் பெண் வேடமிட்டு நடித்துவந்த அரியாலை செல்வரட்ணம்,
இராஜபாட் வேடத்தில் நடித்துவந்த சண்டிலிப்பாய் சின்னச் செல்வராஜா, 
இணுவில் கனகரட்ணம் ஆகியோர் 
இந்நிகழ்வின் மூலம் எமக்கு நெருங்கிய உறவாயினர்.
இவர்களின் கலை, கற்றோர் அரங்கில் போற்றப்படாதிருந்தது.
அவர்கள் ஆற்றலை எங்கள் சபையில் அரங்கேற்ற நினைத்து,
இந்நிகழ்ச்சியை ஒழுங்குசெய்தோம். 
அந்நிகழ்வில் கோவலன், பூதத்தம்பி, வள்ளி திருமணம், நல்லதங்காள், 
சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திர மயான காண்டம் 
ஆகிய நாடகங்களிலிருந்து முக்கிய பகுதிகளை இவர்கள் 
மேடையேற்றினர்.
சபையிற் பெருங்கூட்டம்.
வேஷங்கள் போடாமல் பெறுமனே இவர்கள் நடித்தும்
அவர்கள் நடிப்பைக் கண்டு சபை கண்ணீர்விட்டது.
அக்கலைஞர்களும் அச்சபையால் ஈர்க்கப்பட்டு,
எம்மேற் பெரும் நன்றி பாராட்டினர்.
🚩  🚩  🚩

க. கனகசபை ஐயா

கொழும்புத்துறையைச் சேர்ந்த இவர்,
அரச உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றவர்.
இசைநாடகப் பிரியர். 
இசை நாடகக் கலைஞர்களைப் போஷித்து வந்தவர்.
அவர்களைச் சமூகத்தில் உயர்த்த வேண்டுமென நினைத்துப் பாடுபட்டவர்.
இசை நாடகக் கலைஞர்களை, தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
கழகம் அக்கலைஞர்களுக்குத் தந்த ஏற்றங்கண்டு 
எங்களோடு இணைந்தார்.
எங்கள்மேல் கொள்ளைப்பிரியம் வைத்திருந்தார்.
அவர் கழகத்தின்மேலும், என்மேலும் காட்டிய அன்பை,
என்றும் மறக்கமுடியாது. 
தற்செயலான ஒரு சந்தர்ப்பத்தில் தற்கொலைக்கு முயன்று,
உயிருக்குப் போராடி வைத்தியசாலையில் அவர் 
அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரைச் சென்று பார்த்து,
'எங்களுக்காக வாழ வேண்டுமென்று நினைத்திருக்க வேண்டுமல்லவா?' 
என்று கோபித்தேன்.
'நான் உயிர் தப்பி மீண்டும் கழகத்திற்தான் வந்திருப்பேன்' 
என்று சொல்லி அழுதார்.
அடுத்த நாள் மாண்டுபோனார்.
அவரது இறுதிக் கிரியையில் கழகத்தார் அனைவரும் கலந்துகொண்டு,
ஓர் உறவைப் பிரிந்தாற்போல் கண்ணீர் வடித்ததைக் கண்டு,
அந்த ஊரே அதிசயித்தது.
🚩  🚩  🚩

தொடரும்...

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்