'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 49 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
திருமதி இராசமலர்

எங்கள் கழகத்தின்மேல் அன்புகொண்ட மூதாட்டி இவர்.
காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்டவர்.
அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த,
'சங்கரப்பிள்ளை அன்ட் பிறதர்ஸ்' நிறுவனக் குடும்பத்தைச் சார்ந்தவர்.
கழக நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துகொள்வார்.
எங்களை அடிக்கடி கையுறைகளோடு வந்து காண்பார்.
அவர் வீட்டில் நல்ல உணவுகள் செய்தால்,
அவ்வுணவு எங்கள் கழகத்திற்கும் கட்டாயம் வரும்.
சிலகாலம் பெரியதொரு முச்சக்கர வண்டியைத் தமக்காக உருவாக்கி,
யாழ்ப்பாணம் முழுவதும் வேடிக்கை பார்க்கப்பார்க்க ஓடித்திரிந்தவர்.
ஆளுமைமிக்க பெண்மணி.
1995 இடப்பெயர்வின் பின் சிலகாலம்,
யாழ். கம்பன் கோட்டத்தைத் தனியொருவராக நின்று காத்தவர்.
பின்னாளில், கொழும்பில் கம்பன் பணிகளுக்கு,
துணை நின்று பணியாற்றி வரும் பாலேந்திரனை,
கழகம் நோக்கி நெறிப்படுத்தியவர்.
பாலேந்திரனின் மூத்த சகோதரி இவர்.
முத்தமிழின் மேலும் பற்றுக் கொண்டவர்.
தன்னை முதன்மைப்படுத்துதல், ஆணவம், புகழ் விருப்பம்,
அளவுக்கதிகமான பிடிவாதம், மற்றவர்களில் பிழை காணுதல்,
முதுமைக்கேற்பக் கனியாத்தன்மை என்பவை இவரது குறைகள்.
சமூகப் பணிகளின் மீதான நாட்டம் இவரது நிறை.
தனது உறவு அனைத்தையும் ஆட்டி வைக்கும் இவர்,
அன்பினால் அஞ்சுவது எனக்கு மட்டுமே.
கழகக் குடும்பத்தின்மேல் அக்கறை கொண்ட மூதாட்டி.

🚩 🚩 🚩
ச.ஆ.பாலேந்திரன்

நான் முன்னர் சொல்லியிருக்கிற இராசமலர் அக்காவின் தம்பி இவர்.
யாழ்ப்பாணத்தில் இருந்தபோது,
இவருக்கும், எமக்கும் அதிக தொடர்பு இருக்கவில்லை.
சிவராமலிங்கம் மாஸ்டரின் மாணவரான இவர்,
எம்மோடும் கழகத்தோடும் இணைய வேண்டும் என்று விரும்பினாராம்.
அவ்விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக,
அவர் பலவிதத்திலும் முயன்று இருக்கிறார்.
அப்போது மண்ணெண்ணெய்க்கு யாழில் பெரிய தட்டுப்பாடு.
கரண்டியால் அளந்து மண்ணெண்ணெய் விட்டு 
விளக்குக் கொளுத்துகிற காலமது.
எங்கள் நட்பைப் பெற வேண்டும் என்பதற்காகக் கிளிநொச்சியிலிருந்து,
ஒரு கலன் நிறைய மண்ணெண்ணெய் கொண்டு,
எங்கள் கோட்டத்திற்கு ஒரு நாள் வருகை தந்திருக்கிறார்.
வாசலில் நின்ற ரத்தினகுமார் 'என்ன அலுவல்?' என்று கேட்க,
'இல்லை, உங்களுக்கு மண்ணெண்ணெய் கொண்டு வந்தனான்' 
என்று பதில் சொல்லியிருக்கிறார்.
எவரோடும் அதிகம் கதைக்கும் இயல்பில்லாத ரத்தினகுமார்,
எண்ணெயை வாங்கிக்கொண்டு,
அவரை வாசலில் வைத்தே திருப்பி அனுப்பிவிட்டாராம்.
நாம் கொழும்பு வந்தபிறகு,
எங்களோடு இணைந்த பாலேந்திரன் சொல்லித்தான்,
இந்தக்கதையெல்லாம் எனக்குத் தெரியவந்தது.
பிற்காலத்தில் கொழும்பில்,
பாலேந்திரன், கம்பன் கழகத்தில் இணைந்து நிறையப்பாடுபட்டார்.
ஜெயராஜின் வலது கை இவர் தான் என்று மற்றவர்கள் சொல்லுமளவு,
பின்நாளில் கழகத்தில் முக்கிய இடம்பெற்றார்.
இவர்பற்றிய மற்றைய விடயங்களை அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.
🚩 🚩 🚩

ச.முகுந்தன்

இவன் போட்டிகள்மூலம் கழகத்தினுள் நுழைந்த கவிஞன்.
வயதிற்கு மிஞ்சிய கவிதை ஆற்றல் அவனுடையது.
கம்பன் மேடைகளை, தன் கவிதையாற்றலால் மிளிரச் செய்தவன்.
கராட்டி முதலிய பயிற்சிகள்மூலம் உடலைப் பலம் செய்தவன்.
ஆனால் இவனது உளத்தின் பலம் சற்றுத் தளர்வானதே.
கம்பன் கழக முத்திரை தனது வருங்காலத்தைப் பாதிக்கும் எனக் கருதி,
பல்கலைக்கழகத்தில் இருக்கும் வரை,
எங்கள் மேடைகளில் ஏற மறுத்தான்.
தேவைகளை நிறைவேற்ற,
உறவுகளை மறைத்த இவன் செயல்கண்டு சலிப்புற்றேன்.
இன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில்,
ஆற்றலுள்ள விரிவுரையாளனாய் இயங்கி வருகிறான்.
எட்ட நினைத்த உயரத்தைத் தொட்டபின்பு,
இப்போது மீண்டும் எங்கள் கவியரங்கங்களில் கலந்து கொள்கிறான்.
அவனால் நமக்கும் பெருமையே.

🚩 🚩 🚩

எஸ். சோமாஸ்

நெல்லியடி தயாபரனோடு வந்து,
எம்மோடு இணைந்தவன் இவன்.
பருத்தித்துறையைச் சேர்ந்தவன்.
உண்மை உழைப்பாளி.
பொய் அறியாதவன்.
கழகத்தின் உண்மை விசுவாசி.
சிலகாலம் வைமன் ரோட்டில் எங்களோடு வீட்டுப்பிள்ளையாய் வாழ்ந்தான்.
கடைசிவரை கழகத்திற்கு உண்மையாய் உழைத்தான்.
இடப்பெயர்வு அவனைச் சற்றுத் தூரக்கொண்டு சென்றது.
பின் அண்மையில் கனடா சென்று அங்கிருந்தும் அன்பைத் தொடர்கிறான்.

🚩 🚩 🚩

பொ. சோதிலிங்கம்

கழகத்தில் அன்பு கொண்டவர்.
நீர்வேலியைச் சேர்ந்தவர்.
பரம இரசிகர்.  நல்லவற்றைக் குதூகலித்து இரசிப்பார்.
இரசிப்பதை மிகைப்படுத்தி வெளிப்படுத்துவார்.
கழக இளைஞர்கள் பலரும் இவரது வாக்கு வசீகரத்திற்கு ஆட்பட்டவர்கள்.
தாம் செல்லும் இடமெல்லாம்,
கழகத்தின் கொள்கைப்பரப்புச் செயலாளராய்ச் செயற்படுவார்.
எம்மை எதிர்ப்பவர்கள் அவரது பகைவர் ஆவார்கள்.
அந்தளவிற்கு எம்மை நேசித்தவர்.
உரையாடலில் தன்னை மறப்பது இவரது குறை.
கழகத்தின் உண்மை விசுவாசி.
இன்று இவரது மகன் சுதன்,
கழகக் குழுவில் ஒருவனாய், புதிய நிர்வாகத்தில்,
பொருளாளர் பொறுப்பேற்று நெருங்கிச் செயற்படுகிறான்.

🚩 🚩 🚩

தணிகாசலம்

ஊரெழு நண்பன் இவன். தமிழில் பைத்தியமாய் இருந்தவன்.
அதனால், கழகத்தை உயிராய் நேசித்தவன்.
மீசை தாண்டிக் கொந்தளிக்கும் சிரிப்பு இவனது தனி முத்திரை.
தமிழறிஞர்களுக்குப் பணிவிடை செய்வதைப் பாக்கியமாய்க் கருதுபவன்.
பல தமிழறிஞர்கள் அவனது அந்தப் பணிவினை,
அவனது பலவீனமாய்க் கருதிப் பயன்படுத்தவும் செய்தார்கள்.
பின்னாளில் லண்டன் சென்று நிறைய உழைத்தான்.
அங்கும் தமிழ் நோக்கிய ஆசையில் நிறைய இழந்தான்.
அளவுக்கதிகமான உணர்ச்சிகரம் இவனது குறை.
உளச்சுத்தம் இவனது நிறை.
இன்று அவன் வாழ்க்கை லண்டனில்.
எங்களில் பதித்த அன்பு அப்படியே இருக்கிறது.

🚩 🚩 🚩

பபா, யோகநாதன், சிறீதரன்

பபா என்கின்ற கோகுலராஜ் திருகோணமலையைச் சேர்ந்தவன்.
யோகநாதன் வன்னியைச் சேர்ந்தவன்.
சிறீதரன் காரைநகரைச் சேர்ந்தவன்.
யாழில் கடைசியாய் நடந்த கம்பன் விழாக்களில் 
இவர்கள் எம்மோடு இணைந்தார்கள்.
பபா விழா நாட்களில் ஆர்வமாய்ப் பணியாற்றுவான்.
மற்றைய இருவரும் எங்கள் நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார்கள்.
மணிமாறன் இடையில் நாம் கொடுத்த கழகச் செயலாளர் பதவிiயை,
சரிவரச் செய்யாததால் சில காலம் சிறீதரனை அப்பதவியில் நியமித்தோம்.
பின்னர் அவனும் அப்பதவியில் நிலைக்காமல் போனான்.
இன்று சிறீதரனும், யோகநாதனும் அரசில் பெரும் பதவி வகிக்கின்றனர்.
1995 இல் நாம் இடம்பெயர்ந்தபின்பு இவர்களது தொடர்பு குறைந்து போயிற்று.
🚩 🚩 🚩

க. மணிகண்டன், ச. மயூரன் 

இவ்விருவரும் இக்காலத்தில் கம்பன் கழகத்தில்,
இணைந்து செயற்பட்டார்கள்.
மணிகண்டன் சுருவில் மாணிக்கத்தின் மருமகன்.
மயூரன் என் அக்காவின் மகன்.
ஆனால் தம் வாழ்வென்று வந்ததும்,
கழகம்பற்றிய அக்கறையை முற்றாய்க் கைவிட்டு,
சுயநலமாய் நடந்து கொண்டனர்.
இன்று இவ்விருவரும் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்