'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 54 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩

சோதனைக்குள்ளாக்கிய 1995

இவ்வாண்டு கழகத்தைப் பொறுத்தவரை,
மிகப்பெரும் சோதனைக்காலமாக அமைந்தது.
முன்னைய ஆண்டுகளிலேயே கழகத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புக்கள்.
இவ்வாண்டில் ஒன்றாய்த் திரண்டு,
எமக்குப் பெரும் சங்கடத்தை உண்டாக்கின.
கழக வரலாற்றில் 1995 ஆம் ஆண்டுபோல,
வேறெந்த ஆண்டும் எமக்குத் துன்பம் தந்ததில்லை.
1995 தந்த துன்பங்களிலிருந்து நாம் மீண்டு வந்தது,
நிச்சயம் இறைவனுடைய திருவருளே.
அத்துன்பங்கள் பற்றிச் சொல்கிறேன்.

🚩 🚩 🚩
1995 அழைப்பிதழும், மலரும்

இந்த விழாவிற்காக அழகான ஒரு அழைப்பிதழைச் செய்ய நினைந்தோம்.
யாழ்ப்பாணத்தில் எந்த வசதியும் இல்லாத நேரமது.
அப்படியிருந்தும் எங்கள் கழகத்தின் மேல் அன்பு கொண்டிருந்த,
சங்கானையில் வாழ்ந்த ஞானம் ஐயா என்பவர்,
தனது தனிப்பட்ட முயற்சியால்,
ஓர் அழகிய அழைப்பிதழை, தயாரித்துத்தந்தார்
இது கழகத்தின் பதினைந்தாவது ஆண்டு நிறைவு என்பதால்,
ஓர் அழகிய மலரையும் தயாரிக்க வேண்டும் என நினைந்து,
மிகப்பெரிய ஓர் மலரை வெளியிட ஆயத்தம் செய்தோம்.

🚩 🚩 🚩

யுனி ஆர்ட்ஸ் நிறுவனம்

அம்மலரை, கொழும்பில் இருந்த 'யுனிஆர்ட்ஸ்' அச்சக உரிமையாளர்,
விமலேந்திரன் அவர்களைக் கொண்டு தயாரித்தோம்.
'யுனி ஆர்ட்ஸ்' நிறுவனம் ஆரம்பித்திருந்த காலமது.
எங்கள் மலர்தான் முதன் முதலில்.
அவர்களால் பெரிய அளவில் செய்யப்பட்ட மலர் என்று நினைக்கிறேன்.
அம்மலர் அவர்களுக்கும் நல்ல விளம்பரத்தைத் தேடித் தந்தது.
பின்னர் நாம் கொழும்பு வந்ததும்,
பலகாலம் அவர்களது அச்சகத்திலேயே,
எங்கள் அழைப்பிதழ்களையும், நூல்களையும் அச்சேற்றினோம்.
அவற்றை அழகுற வடிவமைப்பது என் பொறுப்பாய் இருந்தது.
அதனாலும் அந்நிறுவனத்திற்குப் பலரதும் தொடர்புகள் ஏற்பட்டன.
விமலேந்திரனுடனான நட்பு குடும்ப நட்பாய் நெருங்கி நின்றது.
ஆனால், பின்னாளில் எங்களது எளிமையை விளங்கிக் கொள்ளாது,
அவர்கள் செய்த அலட்சியத்தால்.
அந் நிறுவனத்தைவிட்டு நாம் விலகவேண்டி வந்தது.
கொழும்பு வருவதில் பிரச்சினை இருந்த அக்காலத்தில்,
1995 ஆண்டு மலருக்காக,
ரகுபரனும், கவிஞர் கல்வயல் குமாரசாமியும் பல சிரமங்களுக்கிடையில்,
கொழும்பு சென்று அம்மலர் வேலைகளைக் கவனித்தனர்.
அப்போதும் அவர்கள் இருவரையும்,
சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கைது செய்து,
ஒருநாள் முழுவதும் வெள்ளவத்தை பொலிஸ் ஸ்ரேஷனில் வைத்திருந்தது.

🚩 🚩 🚩

1995 இல் புதிய நிர்வாக அறிமுகம்

இக்காலத்தில் நாம் வைத்த போட்டிகள்மூலம் 
கழகத்துடன் தொடர்புபட்ட,
த. சிவசங்கர், ஸ்ரீ. பிரசாந்தன், ச. மணிமாறன், த. ஜெயசீலன் ஆகியோர்,
எம்மோடு நெருங்கியிருந்தனர்.
தினமும் மாலை நேரங்களில் 
கம்பன்கோட்டத்தில் நடைபெறும் சந்திப்புக்களில்,
இவ் இளைஞர்களும் கலந்து கொண்டு,
உறவாய் எம்மோடு ஒன்றாகினர்.
இவர்களது தமிழ் ஆர்வத்தையும், உண்மைத்தன்மையையும் கருத்தில் கொண்டு,
இவ்வாண்டில் கழகத்திற்குப் புதிய ஒரு நிர்வாகத்தை,
அறிமுகம் செய்ய விரும்பினேன்.
திருநந்தகுமார், குமாரதாசன், ரத்தினகுமார் ஆகியோரோடு,
இதுபற்றி நான் ஆலோசித்தபோது,
அவர்கள் எந்தவித விகல்பமும் இல்லாமல்,
எனது முடிவை அங்கீகரித்தனர்.
அதன்படி 
சிவசங்கரைத் தலைவராகவும், பிரசாந்தனை அமைப்பாளராகவும்,
மணிமாறனைச் செயலாளராகவும், 
ஜெயசீலனைப் பொருளாளராகவும் நியமித்து,
புதிய நிர்வாகம் ஒன்றை அமைத்தோம்.
ஐந்தாண்டுகள் அவர்கள் எம்மோடு சேர்ந்து இயங்குவதென்றும்,
கழகத்தின் இருபதாம் ஆண்டு நிறைவின்போது,
அவர்களே முழுப்பொறுப்பையும் ஏற்பதென்றும்
எமக்குள் முடிவு செய்து கொண்டோம்.
அம்முடிவு கழகத்திற்குள் இருந்த.
மூத்த உறுப்பினர் ஒருசிலருக்கு வெறுப்பைத் தந்தது.
தம்மிடம் அப்பொறுப்புத் தரப்படவில்லையென,
அவர்கள் வருந்தியதாய் அறிந்தேன்.
நாம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி,
பழைய உறுப்பினர்கள் இருபதாம் ஆண்டு முடிவில்,
விலகிச் சென்றனர்.
புதிய உறுப்பினர்கள் அழைப்பிதழ்களிலும், மேடைகளிலும் மட்டும்,
அப்பதவியை தாங்கி நிற்கின்றனர்.
ஆனால் கழகப்பாரம் முழுவதும் இன்றும் என் தோள்களில்த்தான்.
அவர்களின் அன்பில் எக்குறையுமில்லை. 
ஆனால் கழகத்தைத் தாங்கும் பொறுப்புணர்ச்சி,
இன்றும் அவர்களுக்கு வந்தபாடாயில்லை.
தமிழ்த்தொண்டிலும் அதற்கான தியாகத்திலும்,
பின்னவர்கள் பின்னவர்களாகவே இருக்கின்றனர்.
இன்று 35 ஆண்டுகள் முடிந்த நிலையில்,
செ. சொபிசன், அ. வாசுதேவா, சோ. சுதன், செ. மதுரகன் என,
கழகத்தில் மற்றுமொரு புதிய நிர்வாகம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.
அவர்களின் செயற்பாட்டை ஆர்வமாய்க் கவனித்து வருகிறேன்.
எனக்குப் பாரம் குறைகிறதோ இல்லையோ,
புதிய தலைமுறைகள் கழகத்திற்குள் பொறுப்பேற்று வருவது,
மகிழ்ச்சியைத் தரத்தான் செய்கிறது.

🚩 🚩 🚩

பதினான்காவது கம்பன் விழா 1995

இந்தக் கம்பன் விழாத்தான்,
யாழ்ப்பாணத்தில் நாமிருந்தபோது செய்த கடைசி விழா.
நெருப்பில் நின்று நடாத்துமாற்போல்தான் இவ்விழாவை நடாத்தினோம்.
ஒரு பக்கம் புலிகளினுடைய நெருக்கடி,
மறுபக்கம் பல்கலைக்கழகத்தாருடைய நெருக்கடி.
இன்னொரு பக்கம் பொன். சுந்தரலிங்கத்தினுடைய நெருக்கடி.
இப்படிப் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்விழாவினை நடாத்தினோம்.
புலிகளினுடைய முரண்பாட்டைத் தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு,
அடங்கிக் கிடந்த பல எதிரிகளும்,
இக்காலத்தில் தமது விஸ்வரூபம் காட்ட முயன்றனர்.
இந்தச் சூழ்நிலையில் தான் இவ்விழா நடைபெற்றது.
மே மாதம் 5 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெற்ற,
இவ்விழாவின்போது நாம் உற்ற இன்னல்களுக்கு ஓர் அளவில்லை.
இக்காலத்தில் என்ன என்று தெரியாத,
ஏதோ ஒரு பகையை வைத்துப் புலிகள் இயக்கத்தினர்,
எங்களை விட்டு மிகத் தூர விலகி இருந்தனர்.
புதுவை இரத்தினதுரை கூட,
முடிந்தவரை எங்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தார்.
ஆனாலும் கம்பன்விழாவை நடத்துவதென முடிவு செய்து,
ஒருநாள் புதுவை அவர்களின் அலுவலகத்திற்குச் சென்று,
விழா நடத்த அவரிடம் அனுமதி கேட்டோம்.
அவர் பிரச்சினை ஏதுமே இல்லை என்றாற் போலப் பேசி,
விழா நடத்தும்படி வலிந்து சொன்னார்.
'தலைவரிடம் பேசி ஓர் அனுமதிக் கடிதம் வாங்கித்தாருங்களேன்'
என்று இம்முறையும் கேட்டோம்.
சரி என்று சம்மதித்தவர் கடிதத்தைத் தராமல் பலநாள் இழுத்தடித்தார்.
நாங்கள் விழா வேலைகளைத் தொடங்கினோம்.

🚩 🚩 🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்