'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 55 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
வெள்ளை கட்டுவதிலும் பிரச்சினை

இம்முறையும் நல்லூர் வீதியில் பந்தல் போட ஆயத்தங்களைச் செய்தோம்.
அதிலும் பல பிரச்சினைகள் வந்தன.
பந்தலுக்கு வெள்ளை கட்டுகிற பொறுப்பைத் தன்னிடம் தரச்சொல்லி,
எங்கள் கழகத்தின் சலவைத் தொழிலாளி கெஞ்சிக் கேட்க,
சரி என்று சம்மதித்து அப்பொறுப்பை அவனிடம் கொடுத்தோம்.
ஆனால் விழாவிற்கு முதல் நாட்களில் வெள்ளை கட்டத் தொடங்கிய அவன்,
கொண்டுவந்த வெள்ளை போதாமல் எங்களிடமே வந்து கைபிசைந்தான்.
இருந்த எங்களது வேட்டி சால்வைகளைக் கொடுத்து,
ஒரு மாதிரி அப்பிரச்சினையைத் தீர்த்தோம்.

🚩 🚩 🚩

ஆபத்தில் உதவிய அப்பர் அண்ணை

எங்கள் கழகத்தின் இரசிகர் இவர்.
யாழ். கலட்டி அம்மன் ஆலயத்தில் தலைவராய் இருந்தவர்.
இவரது சொந்தப் பெயர் தர்மராஜா.
அப்பர் அண்ணை என்ற பெயரில்த்தான் அனைவராலும் அறியப்பட்டிருந்தார்.
பெரும் ஆளுமையாளன்.
அவரது ஆலய கும்பாபிஷேகத்தையொட்டி, 
எனது இராமாயணச் சொற்பொழிவுக்கு ஒழுங்கு செய்தார்.
அச்சொற்பொழிவு குடாநாடு முழுவதும் பேசப்பட்டது பற்றி,
முன்னரே சொல்லியிருக்கிறேன். 
அந்நிகழ்ச்சிக்கு எவ்வளவோ செலவானபோதும் அதைப் பற்றிக் கவலைப்படாது,
அந்த எழுச்சியைத் தன் சொந்தச் செலவில் ஊக்கப்படுத்தினார். 
கழக முயற்சிகளில் இணைய விரும்பித் தானாக எம்மிடம் வந்துசேர்ந்து,
எமக்குத் துணைபுரிந்துவந்த 
மகாராணி புடவைக்கடை உரிமையாளர், திரு. சோமசுந்தரம் 
கம்பன் விழாவில் தனக்கு முக்கியத்துவத்தை எதிர்பார்க்க,
கழகம் அதை நிராகரித்தது. 
அதனால் அவர் கழகத்திற்கு எதிரியானார். 
கழக முயற்சிகளுக்குப் பொருட்துணைபுரிந்த பல வர்த்தகர்கள்,
அவரால் தடுக்கப்பட்டனர்.
அப்போதும் நாம் பாதிக்கப்படவில்லை.
யாழ்ப்பாணம் எஸ்.வி. முருகேசு கடையில் மனேஜராய் இருந்த தியாகு,
அந்நேரத்தில் தானாக முன்வந்து 
பலரதும் ஆதரவை எமக்குத் தேடித் தந்தார். 
பின்னர், அவரும் கழக முயற்சிகளுக்கு,
ஆதரவுதர நிபந்தனைகள் விதிக்கத் தொடங்கினார்.
அதனை நாம் மறுக்க அவரும் வெளியேறினார். 
அப்போது எங்களோடு நின்று தன் முழுச் செல்வாக்கையும் பயன்படுத்தி,
எங்கள் கழக நிதி முயற்சிகளுக்கு,
கடைசிவரை துணையாய் தர்மராஜா இருந்தார்.
புலிகள் முதன் முதலில் பவுண் சேர்த்தபொழுது,
தானாகவே இருபத்தைந்து பவுணை,
கொண்டு போய்க் கொடுத்த தேசப்பற்றாளன்.
பின்னாளில் இந்திய இராணுவம் இவரது ஆளுமையால் ஈர்க்கப்பட்டு,
இவரை அடிக்கடி சந்திக்க,
புலிகளால் துரோகியாய்க் கருதப்பட்டு சுடப்பட்டு இறந்தார்.
எம்மால் மறக்க முடியாத மனிதர்களுள் இவரும் ஒருவர்.

🚩 🚩 🚩

பந்தலில் அடிபட்ட தியாகு

சென்ற ஆண்டு விழாவுக்கு ஆதரவு தந்து,
இந்த ஆண்டு விழாவில் சற்று விலகி இருந்த தியாகு,
நாங்கள் தன்னைத் தேடி வருவோம் என எதிர்பார்த்து வராததால்,
ஒருநாள் இரவு, எங்களுக்குப் புத்தி சொல்லும் எண்ணத்துடன்,
நல்லூர் வீதியால் வந்திருக்கிறார்.
அப்போது வீதியில் போடப்பட்டிருந்த எங்கள் விழாப் பந்தல் தடியில்,
இருட்டில் அடிபட்டுக் காயப்பட்டுப் போனார்.
அதனால், அவரே சற்றுப் பயந்து போனார் என்று நினைக்கிறேன்.
தலையால் இரத்தம் வழிய கோட்டத்திற்கு அவலமாக வந்த அவருக்கு,
முதலுதவிகள் செய்து அனுப்பி வைத்தோம்.
எதுவுமே பேசாமல் திரும்பிச் சென்றுவிட்டார்.
🚩 🚩 🚩

யாருக்கு விருது வழங்குவது

நாங்கள் 'மகரயாழ் விருது' கொடுக்கத் தொடங்கியதன் பின்னர்தான்,
புலிகள் இயக்கத்தினர்,
'மாமனிதர் விருது' என்ற 
ஒரு விருதை வழங்கத்தொடங்கினர்.
பொருத்தமில்லாதவர்களுக்கும் 
அவ்விருது வழங்கப்பட்டதால்,
அவ்விருது அதிகம் மதிப்பைப் பெறவில்லை.
கழகம் தக்கவர்களைத் தேர்ந்தெடுத்து 
விருதுகளை வழங்கியதால்,
அவ்விருது சமூகத்தால் மதிக்கப்பட்டது.
புலிகள் முரண்பட்டு நிற்கும் இவ்வேளையில்,
இம்முறை யாருக்கு விருதை வழங்கலாமென, குழம்பினோம்.
இவ்விருதை வைத்து, புலிகளின் முரண்பாட்டையும் 
சற்றுத் தணிக்க நினைத்தோம்.
அப்போது டாக்டர் ஜெயகுலராஜா என்பவர்,
புலிகளோடு மிக நெருக்கமாய் இருந்தார்.
புலிகளால் நடத்தப்பட்டதாய்ச் 
சொல்லப்பட்ட மருத்துவக்கல்லூரிக்கு,
அவரே பொறுப்பாய் இருந்ததாய் அக்காலத்தில் பேச்சு அடிபட்டது.
அன்ரன் பாலசிங்கம் போன்றவர்கள் வந்து,
அடிக்கடி சந்தித்துச் செல்லும் மனிதர் அவர்.
சமூக அக்கறையாளர்.
எனவே சற்று ஆழமாய்த் திட்டமிட்டு,
இம்முறைக்கான மகரயாழ் விருதினை,
டாக்டர் ஜெயகுலராஜா அவர்களுக்கே 
வழங்குவதாய் முடிவு செய்தோம்.
விருதை நாங்கள் அறிவித்ததும் 
புலிகளும் சற்றுக் குழம்பிப் போயினர்.
அவர்களின் ஆதரவாளரான டாக்டரின் விருதை,
அவர்களால் நிராகரிக்கவும் முடியவில்லை.
விருது அறிவிக்கப்பட்டதுமே பத்திரிகைகளில்,
அவரை வாழ்த்தி, பலரும் அறிக்கை விடத்தொடங்கினர்.
அவர் வருவதால் விழாவுக்கு எந்த இடையூறும் 
வராது என்ற நம்பிக்கையில்,
விழா வேலைகளில் உற்சாகமாய் இறங்கினோம்.

🚩 🚩 🚩
மித்திரபேதம்

ஆரம்பத்தில் எமக்கு உதவிய 
மகாராணி புடைவைக்கடை உரிமையாளர்,
தமது விருப்புகள் அனைத்திற்கும் நாம் இடந்தராததால்,
பின்னாளில் எங்களோடு பகைகொண்ட,
பொன் சுந்தரலிங்கம் அவர்களோடு சேர்ந்து,
பல காரியங்களையும் செய்யத் தொடங்கினார்.
இவர்களது தூண்டுதல்களால்,
எங்களது முன்னாள் லைற் மெஷின்காரரும்,
விழாப் பந்தல் போட்டவரும் 
எங்களோடு பகைத்து பிரச்சினை தந்தனர்.
மேற்குறிப்பிட்டவர்களில் சிலரை திருப்திப்படுத்தி,
எங்களோடு பகைப்பிப்பதற்காக, அவர்களை
பொன். சுந்தரலிங்கம்  
தனது விழாக்களில்,
மங்கலவிளக்கேற்றவும், 
தலைமையுரையாற்றவும் போட,
அவர்கள் எங்கள் கழகம் அப்படிச்செய்யவில்லை என்று,
குறை சொன்னதாய் அறிந்தேன்.
அதனால் இவ்வாண்டு விழாவில்,
இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, 
எங்களுக்கு மறைமுகமான 
இடைஞ்சல்களைக் கொடுத்தனர்.
நாதஸ்வர வித்துவான் பத்மநாதனை 
எங்களோடு பகைப்பித்து,
இவ்விழாவில் அவரைக் கலந்து கொள்ளாமல் செய்த 
பொன். சுந்தரலிங்கம்,
மற்றைய நாதஸ்வர வித்துவான்களையும்,
இவ்விழாவில் கலந்து கொள்ளக் கூடாது எனத் தடுத்தார்.
யார் காரணமாக அவருக்கு எங்கள்மேல் பகை பிறந்ததோ,
அந்தக் காரணரான பஞ்சமூர்த்தி அவர்களே,
அம்முயற்சியில் அவரோடு துணை நின்றது,
எமக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது.
ஆனால் அவ்விருவரதும் கோரிக்கையை நிராகரித்து, 
அம்முறை அனைத்து நாதஸ்வர வித்துவான்களும்,
மழையையும் பொருட்படுத்தாமல்,
எமது விழாவில் கலந்து சிறப்பித்து எம்மை நெகிழச் செய்தனர்.

🚩 🚩 🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்