'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 56 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
பிரச்சினைகள் தொடர்ந்தன

விழா வேலைகளையெல்லாம் ஒருவாறு செய்து முடித்தோம்.
வழக்கமாக எங்களுக்குப் பந்தல் போடுகிறவர்,
கழகத்தின் மேல் பகைகொண்டவர்களின் தூண்டுதலால்,
முடிந்த ஆண்டில் பேசியதைவிட 
அதிகமான தொகையைக் கேட்க,
நாம் அவர் கோரிக்கையை மறுத்தோம்.
அவர் சுன்னாகத்திலிருந்த புலிகளின் காவல்துறையில் 
முறைப்பாடு வைத்தார்.
சூழ்நிலை எங்களுக்கு எதிராக இருந்ததால்,
பிரச்சினையை வளர்க்க விரும்பாமல்,
அவர் கேட்ட தொகையைக் கஷ்டப்பட்டுக் கொடுத்து,
அவரிடமிருந்து விடுபட்டோம்.
அதேபோல வழமையான லைட் எஞ்சின்கராரும்,
மற்றவர்களின் தூண்டுதலால் 
எங்களோடு வலிய முரண்பட்டு விலகியிருந்தார்.
இவை  நடந்திருந்ததால் இம்முறை,
பந்தல் போடவும், மின்சாரம்  போடவும் 
வேறாட்களைப் பிடித்திருந்தோம்.
எங்களின் மேல் அன்பு கொண்ட,
பட்டாசுமாமா என்கின்ற ஒலிபெருக்கிக்காரர்,
இவ்வேலைகளில் தன்னாலான உதவிகளையெல்லாம் செய்தார்.
கிடுகு வாங்குவதில் பிரச்சினை,
வெள்ளைகட்டுவதில் பிரச்சினை என,
பிரச்சினைகள் வரிசையாய் வந்தன.
ஒருவாறு அனைத்தையும் தாண்டி விழா ஆயத்தங்களைச்
செய்து முடித்தோம்.

🚩 🚩 🚩

எதிர்பாராத இடையூறு

விழாவிற்கு முதல்நாள்.
திடீரென மேகம் இருட்டத் தொடங்கியது.
மெலிதாய் மழைத்துளிகள் விழத்தொடங்கின.
ஓலைப்பந்தல் மழையைத் தாங்காது என்பதால்,
என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினோம்.
அன்றிரவு கழக இளைஞர்கள் எல்லோரும்,
கழகத்திலேயே தங்கியிருந்தனர்.
நடுச்சாமம் போலப் பேய் மழை பெய்யத் தொடங்கியது.
ஒருவருக்கும் நித்திரையில்லை.
விழாவை நிறுத்துவதா, நடத்துவதா என்று,
கூடி ஆராய்ந்து கொண்டே பொழுதைக் கழித்தோம்.
விடியற்காலையில் ஓரளவு மழை நின்றது.
பந்தல் முழுவதும் ஒரே வெள்ளம்.
எப்படியும் விழாவை நடத்துவதென முடிவு செய்தோம்.
கழக இளைஞர்களெல்லாம் பந்தலுக்குள் நின்ற நீரை,
சாக்குகளைப் போட்டு உறிஞ்சச் செய்து,
வெளியில் கொண்டுபோய்ப் பிழிந்து பந்தலைக் காயச் செய்தார்கள்.
மணல் பரப்பி, பந்தலைப் புதிதாய் ஆக்கினார்கள்.
அது அசுர வேலை.
இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.
பழையபடி விழாப்பந்தல் தயாரானது.

🚩 🚩 🚩

இடையில் நின்ற விழா

மாலையில் வானம் இருண்டு எப்போதும் மழை வந்துவிடலாம் 
என்ற நிலையில்,
விழாவினை ஆரம்பித்தோம்.
டாக்டர் ஜெயகுலராஜா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்.
அவருக்காக, கிறிஸ்தவர்கள் பலர் வந்திருந்தனர்.
வழமைபோல பெரிய கூட்டம்.
வழமையை விட அதிகமாக நாதஸ்வர, தவில் 
வித்துவான்கள் வந்திருந்தனர்.
விழா சிறப்புற ஆரம்பமானது.
மழை எந்தநேரமும் வந்து விடலாம் என்ற பயம் 
மனதினுள் இருக்க,
விருது வழங்கும் வைபவத்தை மிகச் சிறப்பாக நடத்தினோம்.
மகர யாழ் விருது வழங்கும் வைபவமும்,
அறிஞர்களைக் கௌரவிக்கும வைபவமும்
மிகச் சிறப்பாக நடந்தேறின.
பந்தல் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
வித்துவான் எப்.எக்ஸ்.சி. நடராஜா, பண்டிதர் வீரகத்தி,
ஆத்மஜோதி முத்தையா, பண்டிதர் வைத்தீஸ்வரக் குருக்கள், 
எழுத்தாளர் சு.வே., ஓவியர் மணியம் ஆகியோர்,
இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
பன் மதத் தலைவர்கள், சிவத்தமிழ்ச்செல்வி, 
மாவை ஆதீனம் போன்ற,
பலரும் ஆசி வழங்க ஜெயகுலராஜா விருது பெற்றார்.
அதன் பின்னர், நடன ஆசிரியை லீலா செல்வராஜா 
அவர்களுடைய மாணவர்களின்,
நாட்டிய நாடகம் நடக்கத் தொடங்கியது.
ஆனால் அந்த நேரம் பார்த்து மழை கொட்டத் தொடங்க,
அந்த நிகழ்ச்சியை அன்று நிறுத்தவேண்டியதாயிற்று.
விருது வழங்கல் வைபவத்தோடு அன்றைய விழாவை இடைநிறுத்தினோம்.

🚩 🚩 🚩

மூன்று நாட்கள் தள்ளி 
விழாவைத் தொடர்ந்தோம்

அன்றிரவுபூராகவும் மீண்டும் கடும்மழை.
சித்திரை இருபத்தெட்டில் சிறுமாரி என்பார்கள்.
நீண்ட காலத்திற்குப்பின் 
யாழ்ப்பாணத்தில் அம்மாரி பெய்தது.
நிச்சயம் மறுநாள் 
விழாவை நடத்த முடியாது என்று தெரிந்து போக,
இரண்டு, மூன்று நாட்கள் ஒத்திவைத்து,
விழாவை நடத்தலாம் என முடிவுசெய்தோம்.
நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதை 
எப்படி மற்றவர்களுக்கு அறிவிக்கப்போகிறோம் என்பதில் 
குழப்பம் ஏற்பட்டது.
நடுச்சாமத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால்,
அடுத்தநாள் பத்திரிகையிலும் அறிவிக்க முடியவில்லை.
கழக இளைஞர்கள் அடுத்தநாள் காலை,
சைக்கிளில் நனைந்தபடி சென்று நிகழ்ச்சியாளர்கள் அனைவருக்கும்,
விழா ஒத்தி வைக்கப்பட்ட செய்தியை அறிவித்தனர்.
அடுத்தநாள் பத்திரிகையில் 
பொதுமக்களுக்கு அச்செய்தியை அறிவித்தோம்.
இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது.
மூன்றாம் நாள் மழை விட்டுக் கடும் வெயில் அடிக்க 
இயல்பு நிலை திரும்பிற்று.
பழையபடி பத்திரிகையில் அறிவித்து,
மிகுதி விழா நிகழ்ச்சிகளைச் சிறப்புற நடத்தி முடித்தோம்.
நிறைவுநாளில் மீண்டும் நடனநிகழ்ச்சியும் முழுமையாய் நடந்தது.
மிகப்பெரும் கூட்டத்தோடு சிறப்புற நடந்த விழா இது.

🚩 🚩 🚩

ஆச்சரியம் ஆனால் உண்மை

இவ்விழாவின்போது இயக்கம் முரண்பட்டு நின்றதால்,
அவர்களைத் திருப்திப்படுத்தும் முயற்சிகளையும் நாம் எடுத்தோம்.
இவ்விழாவில் வெளியிட்ட மலரையும், விழா அழைப்பிதழையும், 
பிரபாகரனுக்கு முகவரியிட்டு அனுப்பி வைத்தோம்.
ஆச்சரியமாக ஒருசில நாட்களில் பிரபாகரன் சார்பாக,
மலர் கிடைத்த செய்தியும், விழாவுக்கான வாழ்த்தும்,
அவரது தனிச்செயலாளர் பதுமனிடமிருந்து வந்து சேர்ந்தது.

தொடரும்...

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்