'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 59 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
உதயன் சரவணபவன்

இவர் இப்போது 
பாராளுமன்ற உறுப்பினராய் இருக்கின்றார்.
நாங்கள் கம்பன் கழகம் ஆரம்பித்த 
பல காலத்தின் பின்தான்,
வித்தியாதரன் எனக்கு இவரை 
அறிமுகம் செய்து வைத்தான்.
அப்பொழுதுதான், 
வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு,
அவர் யாழ்ப்பாணம் வந்திருந்தார் என்று நினைக்கிறேன்.
இவருடைய 
தமக்கையின் கணவர்,
'ஷப்ரா' என்கின்ற 
நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார்.
அந்நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளையினைப் பொறுப்பேற்று,
சரவணபவன் யாழ் வந்திருந்தார்.
ஆற்றல் உள்ளவர்களைத் தனதருகில் வைத்திருக்க விரும்புபவர் இவர்.
அந்த வகையில், எப்படியோ வித்தியாதரனைக் கண்டுபிடித்து,
தன் நிறுவன முன்னேற்றத்திற்கு 
ஆலோசனைகள் பெற்றிருந்தார்.
பத்திரிகையில் தொழிலாற்றிவிட்டு 
வந்திருந்த வித்தியாதரனுக்கு,
யாழில் ஒரு பத்திரிகை தொடங்க வேண்டுமென்ற 
விருப்பம் இருந்தது.
அவனுடைய தூண்டுதலால்தான்,
சரவணபவன் 'உதயன்' பத்திரிகையை ஆரம்பித்தார்.
பின்னர், வித்தியாதரனின் தங்கையையே அவர் திருமணம் செய்தார்.
'ஷப்ரா' நிறுவனம் இடையில் முறிந்துபோய்விட,
'உதயன்' பத்திரிகையே பின் இவ்விருவரதும் தொழிற்களமாயிற்று.
வித்தியாதரனின் எழுத்தாற்றலும் 
சரவணபவனின் வியாபார மூளையும் ஒன்றுசேர,
உதயன் பத்திரிகை வளரத் தொடங்கியது.
இடைக்காலத்தில், புலிகளால் 'ஈழநாடுப்' பத்திரிகை தடைசெய்யப்பட,
உதயன் யாழ். பத்திரிகைகளில் முதலிடத்தை 
இலகுவாகப் பிடித்துக்கொண்டது.

🚩 🚩 🚩

சரவணபவனுடனான முதற் சந்திப்பு

எங்களோடு இருந்த நட்புக் காரணமாக,
ஒருமுறை வித்தியாதரன் நல்லூர்த் திருவிழாவின்போது,
ஒரு விளம்பரம் சம்பந்தமாக ஆலோசனைபெற,
என்னை இவரிடம் அழைத்துச் சென்றான்.
அன்றிலிருந்து இவரது தொடர்பு ஆரம்பமானது.
என்னையும் கழகத்தையும் இவர் இனங்கண்டுகொண்டு,
நல்லபடி நட்பைப் பேணினார்.
கழக முயற்சிகளுக்கு, தனது பத்திரிகை மூலமும் 
செல்வத்தின் மூலமும் நல்ல ஆதரவு தந்தார்.
யாருக்கும் தலை வணங்காத எங்கள் கழகத்தாரது இயல்பு 
அவருக்குப் பிடித்திருந்தது.
அதனால், எங்களைத் தன்னோடு வைத்திருக்க விரும்பினார்.
எங்களுடன் பழகத்தொடங்கிய பிறகு,
சரவணபவனுக்கு எங்களை நிரம்பவே பிடித்துப்போயிற்று.
சுயமும், ஆளுமையும் உள்ளவர்களை 
அவர் எப்போதும் விரும்புவார்.
ஆனால் அவர்கள் தன்வயப்பட்டு இயங்க வேண்டும் என ஆசைப்படுவார்.
அவரது ஆசைக்கு என்றுமே நாங்கள் இணங்கவில்லை.
அதுவே அவருக்கு எங்கள் மேலான விருப்புக்கூடக் காரணமாயிற்று.
துரைத்தனமாக வாழ விரும்புபவர் இவர்.
அக்காலத்தில் பெரிய மனிதர்களுடன் சமப்பட்டு வாழும் தகுதியை,
யாழில் உயர்ந்த பதவியிலிருந்தவர்களும் இழந்திருந்தனர்.
அதனால் சரவணபவனின் மேற்பண்பு எனக்கும் பிடித்திருந்தது.
இவரிடமிருந்த ஒரு குறைபாடு எல்லோரையும் ஆள நினைப்பதுவே.
தனக்கு ஆட்படுவாருக்கு வேண்டிய உதவிகள் எல்லாம் செய்வார்.
வித்தியாதரனின் துணிவும் ஆற்றலும் இவருக்குத் துணை செய்ய,
மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்தைத் தன்வயப்படுத்தினார்.

🚩 🚩 🚩

தந்தை இறந்த மறுநாளே 
சரவணபவனுக்காகக் கொழும்பு சென்றேன்

சரவணபவனுக்கும் எமக்குமான தொடர்பின் நெருக்கத்தைக் உரைக்க,
ஒரு செய்தியை இங்கு பதிவாக்க விரும்புகிறேன்.
சரவணபவனின் வேண்டுகோளுக்கிணங்கி,
கொழும்பில் நடந்த அவர்களது 'ஷப்ரா' நிதி நிறுவனத்தின் 
விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பட்டிமண்டபத்தினை
நடாத்தச் சம்மதித்திருந்தேன்.
அந்நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களின் முன் என் தந்தை மறைந்தார்.
எனது தந்தையின் ஈமக்கிரியைகளை நானே செய்ய வேண்டி இருந்தது.
மறுநாளே சரவணபவனின் கொழும்பு நிகழ்ச்சி.
அவர் என்னிடம் எதுவும் கேட்க முடியாமல், சங்கடப்பட்டதை உணர்ந்து, 
என் தாயிடம் அனுமதி பெற்று,
தந்தையின் இறுதிக்கிரியைகளுக்கு அடுத்தநாளே 
அவருக்காகக் கொழும்பு சென்று பட்டிமண்டபத்தை நடாத்திக் கொடுத்தேன்.
தந்தை இறந்த செய்தியை மேடையில் வெளிப்படுத்தாமலே,
அந்நிகழ்ச்சியை நடத்தினோம்.
நிகழ்ச்சி முடிந்த பின்பு செய்தி தெரியவர,
அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அதிர்ச்சி அடைந்து
சபையினரை எழுந்து நிற்கச் செய்து, என் தந்தைக்கு அஞ்சலி செய்ய வைத்தார்.
திரும்பி வந்தபின்பே என் தந்தையின் மிகுதிக் கிரியைகளைச் செய்தேன்.

🚩 🚩 🚩

கழகத்தை விட்டுக் கொடுக்கவில்லை

நாங்கள் அவரோடு நல்ல தொடர்பில் இருந்தோம்.
ஆனாலும், அவரது ஆளுகைக்கு முற்றாக அடிபணியவில்லை.
அது அவருக்கு, சற்றுக் குறையாக இருந்தது.
ஒருமுறை, கம்பன் விழாச் செய்திகளை 
உதயனுக்குத் தந்த பிறகுதான்,
மற்றைய பத்திரிகைகளுக்குத் தர வேண்டும் என்று என்னை நிர்ப்பந்தித்தார்.
உதயன் தொடங்குவதற்கு முன்னமே, கம்பன் கழகம் இயங்கி வருகிறது.
அதனால், அப்படிச் செய்ய முடியாது என அவர் கோரிக்கையை மறுத்தேன்.
நட்பால் எங்கள் பத்திரிகைதான்,
உங்கள் கழகத்தை வளர்த்து வருகிறது என்று,
மறைமுகமாக என்னைப் பயமுறுத்தினார்.
நீங்கள் சொல்வது உண்மைதான்.
ஆனால், வளரக்கூடிய எம்மைத்தான் 
உங்கள் பத்திரிகையால் வளர்க்க முடியும்.
முடிந்தால் வேறொரு கழகத்தை,
உங்கள் பத்திரிகையால் வளர்த்துப் பாருங்களேன் என்று,
நான்  அவர்க்குப் பதில் சொன்னேன்.
அப்போது யாழ். ரவுணிலிருந்த அவர்களது அலுவலகத்தில்,
இந்தச் சர்ச்சை நடந்தது.
அதன் பின்பும், எங்கள் நட்பு நல்லபடியேதான் தொடர்ந்தது.
அவருக்கு ஆட்பட்டவர்களைவிட,
எங்கள்மேல்தான், அவர் அதிக அன்பும் நட்பும் வைத்திருந்தார்.

🚩 🚩 🚩

சரவணபவன் குமாரதாசனுக்குச் செய்த உதவி

அக்காலத்தில் கழகத்தார் அனைவருடனும்,
ஓர் குடும்ப நண்பராகவே அவர் இணங்கி நடந்தார்.
அவர் நடத்திய 'ஷப்ரா' நிதி  நிறுவனம்  அக்காலத்தில் முறிவடைந்தது.
குமாரதாசன் என் தங்கையைத் திருமணம் செய்தபோது,
எங்கள் வீட்டார் சண்டிலிப்பாயில் ஓர் சிறிய வீட்டையும்,
வெறுமனே ஒரு லட்சம் ரூபாய் பணத்தையுமே கொடுத்திருந்தனர்.
அந்தப் பணத்தையும் நட்பின் காரணமாக,
குமாரதாசன் 'ஷப்ரா' விலேயே போட்டிருந்தார்.
நிறுவனம் முறிவடைந்ததும் சரவணபவன்,
குமாரதாசனின் நிலை உணர்ந்து அவர் போட்ட பணத்தை,
தனது சொந்தப் பணத்தில் இருந்து 
பகுதி பகுதியாகக் கொடுத்து முடித்தார்.

🚩 🚩 🚩

கழகமும்-றோட்டறிக் கழகமும்

சரவணபவன் யாழ்ப்பாண றோட்டறி அமைப்பின் தலைவரானபோது,
எங்கள் கழகத்திலிருந்த, திருநந்தகுமார், குமாரதாசன், 
ரத்தினகுமார் ஆகிய மூவரையும், 
அவ் அமைப்பில் இணைத்துக்கொண்டார்.
இத்தனை நெருக்கம் இருந்தாலும், இடையிடை எங்களையும், 
தனது ஆளுகைக்குள் விழுங்கப்பார்ப்பார்.
அதற்கு இடம் கொடுக்காமல் நான் நிமிர்ந்தே நின்றேன்.
அவர்களுக்கு உதயன் பத்திரிகையூடாக,
புலிகள் இயக்கத்திலிருந்த செல்வாக்கின் காரணமாக,
சரவணபவன் தான் நடத்திய றோட்டறி விழாவிற்கு,
தென்பகுதியிலிருந்து ஜானக எதிரிசிங்க, குசில் குணசேகர, 
சுரேஸ் மல்வானி ஆகிய சிங்கள பிரமுகர்களை அழைத்திருந்தார்.

🚩 🚩 🚩

சிங்கள றோட்டறி உறுப்பினர்களுக்கு 
நாம் அளித்த விருந்து

சிங்களவர்கள் எவரும் யாழ் மண்ணுக்கு வரமுடியாத காலமது.
நாங்கள் தமிழ்மரபை கழகத்தில் நல்லபடி பேணிவந்தோம்.
அதே நேரத்தில் எனது குடும்பப் பழக்கத்தினால்,
மேல்நாட்டுப்பாணி விருந்துகளையும் இடையிடையே நடத்துவோம்.
அந்த வகையில் சரவணபவனின் சிங்கள நண்பர்களையும்,
எங்கள் கழகத்திற்கு அழைத்து ஓர் காலை விருந்தினை அளித்தோம்.
புதிதாகக் கட்டப்பட்டிருந்த எங்கள் கம்பன் கழகத்தின் 
கலைவடிவைக் கண்டும், எங்கள் உபசாரத்தைக் கண்டும் 
அவர்கள் மகிழ்ந்து போயினர்.
கழக வரலாற்றோடு பெரிதாய்த் தொடர்பில்லாத இவ்விடயத்தை,
முக்கியப்படுத்தி இவ்விடத்தில் நான் சொல்வதற்கு 
ஒரு காரணம் இருக்கிறது. அதுபற்றிப் பின் சொல்கிறேன்.

🚩 🚩 🚩

மன முறிவை மன்னித்தோம்

சரவணபவனோடு இருந்த நெருங்கிய தொடர்பு,
பின்னாளில் நான் கொழும்பு சென்றதும் சிறிது சிதைந்தது.
அக்காலத்தில், சரவணபவன் எங்களை
பகைவர்களாகவே கருதிச் செயற்பட்டார்.
கழகத்தை வீழ்த்த நினைந்து, தனது உதயன் பத்திரிகையூடாக,
தர்மம் மீறிய பல செயல்களையும் செய்வித்தார்.
கொழும்பில் நாங்கள் கட்டிக் கொண்டிருந்த ஆலயத்திற்காக,
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எம்மைத் தேடிவந்து
நிதி உதவி செய்ய, 
அச்செய்தியை பெரிதுபடுத்தி, ஐந்து  லட்சம் ரூபாவிற்காக
நாம் அமைச்சரிடம் சரணடைந்து விட்டோம் என்பதாய்ச் 
செய்தி பரப்பியதோடு, தனது பத்திரிகையில் 
அமைச்சருக்கு நாம் நன்றி உரைப்பது போல, 
ஒரு முழுப்பக்க விளம்பரத்தைத் தானே வெளியிட்டு, 
சட்டப்பிரச்சினை வரக் கூடாது என்பதற்காக,
கீழே 'கம்பன் குடும்பத்தார்' எனப் போட்டு வஞ்சனை செய்தார்.
உடன் அதுபற்றி, நாம் கடுமையாய்க் கோபித்தாலும்,
அவர் முன் செய்த உதவிகள், 
பின் செய்த தீமையைவிட அதிகமாய் இருந்ததால்,
பழைய உறவுபற்றி அவற்றை நாம் மறந்தோம்.
இன்றும் அவருடனான தொடர்பு நீடிக்கிறது.

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்