'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 61 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩  🚩  🚩
திலீபன் நினைவு தின விழாவில் முரண்பட்டேன்

திலீபன் மறைவையொட்டி அவர் உண்ணாவிரதம் 
இருக்கத்தொடங்கிய நாளிலிருந்து,
மறைந்த நாள் வரை ஆண்டு தோறும் இயக்கம் நல்லூர் வீதியில்,
பெரிய அளவில் நினைவுக்கூட்டத்தை நடத்தி வந்தது.
எல்லா ஊர்களிலிருந்தும் புலிகளின் ஆதரவாளர்கள் வந்து,
நல்லூரில் விடிய விடிய பஜனை, வில்லுப்பாட்டு என 
நிகழ்ச்சிகளை நடத்தினர்.
ஊர் முழுவதிலும் ஒலிபெருக்கிகள் இராப்பகலாய் கதறியபடி இருந்தன.
அருகிலிருந்த எங்களுக்கு அது பெரிய தண்டனை.
அந்நிகழ்வில் கலந்து கொண்டோர் பலரும்,
உண்மை அனுதாபம் இன்றி இயக்கத்திற்கு வால் பிடிக்கவே 
நிகழ்ச்சிகளை நடத்தினர்.
நாளொன்றுக்கு, சில ஊர்கள் வீதம்,
கடைக்காரர்கள் கடையைப் பூட்டிவிட்டு வந்து உட்கார வேண்டும் என்று,
இயக்கத்தால் கட்டளை இடப்பட்டிருந்தது.
வந்து உட்கார்ந்தவர்கள் பலரது முகத்திலும் அனுதாபத்திற்குப் பதிலாக, 
கட்டாயப்படுத்தியதால் வந்த வெறுப்பே நிறைந்திருந்தது.
சில ஆதரவாளர்கள் சற்று 'ஓவராக' காவடி, பறவைக்காவடி என,
விளையாடத் தொடங்கியிருந்தனர்.
இவையெல்லாம் என் மனதில் வெறுப்பை நிறைத்திருந்தன.
இந்நிகழ்வின் நிறைவு நாளில்.
பெரிய மேடையிட்டு எல்லா ஊர்களிலிருந்தும் ஆட்களைக் கூட்டி,
பெரிய அளவில் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
எங்களை இயக்க எதிர்ப்பாளர்களாக சிலர் பிரசாரம் செய்திருந்த வேளை அது.
உண்மையில் நாம் எதிர்ப்பாளர்களா என அறியவோ என்னவோ?
அவ்வாண்டு நிறைவு நாள் நிகழ்ச்சிப் பட்டிமண்டபத்தை நடாத்தும் படி,
புலிகள் எம்மிடம் கேட்டனர்.
உட்புகைந்த இயக்கப்பகையை வாய்ப்பாக்கி,
எம் எதிரிகள் சிலரும், ஆதரவாளர் சிலரும் கூட,
எம்மைப் பகைக்கத் தொடங்கியிருந்த நேரம் அது.
அதனால், இயக்கத்தோடு தனிப்பகை ஏதும் இல்லை என,
நிரூபிக்க வேண்டிய தேவை எமக்கிருந்தது.
சம்மதித்து நிகழ்ச்சி நடத்தப் போனோம்.
வியாபாரிகள், பொது மக்கள், மாணவர்கள் எனப் பெரும் கூட்டம் கூடியிருந்தது.
திலீபனின் பெரிய 'பனர்' வைத்து, பக்கத்தில் பெரிய மேடை போட்டிருந்தார்கள்.
'திலீபனின்தியாகம் தமிழ் மக்களால் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதா? இல்லையா?' 
எனும் தலைப்பில் பட்டிமண்டபம் நடாத்திக்கொண்டிருந்தோம்.
திருநந்தகுமார், சிவகுமார், குமாரதாஸ், பிரசாந்தன், செல்வவடிவேல்,
ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஏதோ ஒரு ஊரிலிருந்து ஒரு தூக்குக் காவடி வந்தது.
அமைதியாய்க் கேட்டுக்கொண்டிருந்த மக்களை விலத்தி
அத்தூக்குக்காவடி உள்வர, சபையில் சலசலப்பு.
நிகழ்ச்சியைக் குழப்புகிறார்களே எனும் எரிச்சல் எனக்கு.
தூக்குக் காவடியிலிருந்து இறங்கியவர்,
முதுகில் செடிலோடும், கையில் வேப்பிலையோடும்
பேசுகிற எங்களையோ, கேட்கிற சபையையோ கவனிக்காதவர் போல,
நேராக மேடைக்கருகிலிருந்த திலீபனின் படத்திற்கு முன் வந்தார்.
அவர் குடித்திருக்கிறார் என்பது தெரிந்தது.
புலிகளின் முக்கியஸ்தர்கள் எல்லாம் மேடையைச் சூழ்ந்திருந்தார்கள்.
அவர்களைத் திருப்திப்படுத்த நினைந்த அந்த மனிதன்,
திலீபன் படத்திற்கு முன்னால் நின்று 
உருவந்தவர் போல் ஆடத்தொடங்கினார்.
அவரது பொய்மை கண்டு எனக்குக் கடுங்கோபம்.
மேடையிலிருந்தபடி கைகாட்டி அவரை விலத்தச்செய்தேன்.
அடுத்தது எனது தீர்ப்புரை.
அன்றைக்கு நான் பேசிய பேச்சு, 
என் வாழ்க்கையில் நான் பேசிய உயர் பேச்சுக்களில் ஒன்றாய் அமைந்தது.
இயக்கப்பகை, நிற்கும் மேடை, நடக்கும் நிகழ்வு அனைத்தையும் மறந்து,
உணர்ச்சிவயப்பட்டுப் பேசினேன்.
திலீபனின் உண்மைத்தியாகத்தை உணர்வுபூர்வமாக எடுத்துச்சொல்லி,
அந்த உயிர்த் தியாகத்தை நாம் கொச்சைப்படுத்துவதாய்,
கடுமையாய்க் கண்டித்தேன்.
அவன் உண்ணாவிரதம் இருந்து இறந்த இந்த மண்ணைத் தொட்டு,
நெற்றியில் வைத்து,
நெஞ்சத்தால் ஒரு துளி கண்ணீர் வடித்துச்செய்வதே,
திலீபனுக்கு நாம் செய்யும் உண்மை அஞ்சலி.
அதை விடுத்து, கட்டாயப்படுத்தி ஆட்களைக் கொணர்வதும்,
கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் கூத்தாடுவதும்,
காவடி, தூக்குக்காவடியென நாடகமாடுவதும்,
அந்த ஆத்மாவுக்குச் செய்யும் அவமரியாதை என்று விளாசினேன்.
நாங்கள் யாரையும் ஏமாற்றுவோம்.
தேவையற்ற கூத்துக்களால் ஏற்கனவே சமயத்தை நாசமாக்கி வைத்திருக்கிறோம்.
உயிரைத் துறந்து மண்ணுக்காய்ப் போராட வந்த நீங்கள்,
எங்கள் ஏமாற்று வித்தைக்கு ஏன் பலியாகிறீர்கள்?
மக்கள்தான் திலீபனின் தியாகத்தை உணரவில்லை.
போராளிகளாவது அதை உணர்ந்து மதிக்கப் பழகுங்கள்,
என்று கண்டபடி திட்டினேன்.
இயக்கத்தைக் கண்டித்து இப்படி ஒருவர் பேசுவதா என,
சபை நடுங்கிப்போய்விட்டது.
பேச வந்தவர்கள் விறைத்துப்போய்க் கேட்டுக் கொண்டிருந்தனர்.
சத்தியம் பேசிய திருப்தியில் எனது மனதிலோ பெரும் நிறைவு.
சத்தியத்தின் வெற்றியை அன்று நேரில் கண்டேன்.
நிகழ்ச்சி முடிந்து மேடையால் நாம் இறங்கிய பொழுது.
மேடையைச் சுற்றி இருந்த இயக்கப் போராளிகள் எல்லாரும்,
என்னைக் கண்டதும் மரியாதையாய் எழும்பி நின்றனர்.
அடுத்தநாள் ஊரெல்லாம் என்னைக் கடத்திவிட்டதாகவும், 
புலனாய்வுத்துறை எனது பேச்சு ஒலிநாடாவை எடுத்து ஆராய்வதாகவும்,
தலைவருக்கு அதைக் கொண்டுபோய், போட்டுக்காட்டியதாகவும்,
பரபரப்பான பேச்சு அடிபட்டது.
நான் கூட, சற்றுப் பயந்துதான் போனேன்.
ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.
ஆச்சரியப்படத்தக்க ஒன்று அடுத்த திலீபன் நினைவு நாளில் நடந்தது.
அந்நிகழ்வில் காவடி, தூக்குக்காவடி என ஒன்று கூட கொண்டு வரப்படவில்லை.
என் நெஞ்சத்தின் சத்தியம்,
மேலிடம் வரை சென்று பாதித்ததை அனுமானித்து மகிழ்ந்து போனேன்.

🚩  🚩  🚩

ஆதீன ஊர்வலம்

இக்காலத்தில் எங்களை எதிர்த்தவர்கள் பலர்,
தமக்குள் ஒன்றுசேரத் தொடங்கியிருந்தனர்.
மகாராணி சோமசுந்தரம், பொன். சுந்தரலிங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து,
நல்லை ஆதீனத்திற்கு பணம் சேர்த்து,
அதை ஆதீன முதல்வரிடம் வழங்குவதற்காக,
ஒரு விழாவை ஒழுங்கு செய்தனர்.
அப்போதுதான் வெளிநாட்டிலிருந்த வந்திருந்த,
திருமதி மனோன்மணி சண்முகதாசையும் அவர்கள் தம் வயப்படுத்தயிருந்தனர்.
பெரியளவிலான ஓர் ஊர்வலத்தினை ஒழுங்குசெய்து,
அவ்வூர்வலத்தில் நல்லை ஆதீனத்தை அழைத்துச்சென்று,
இளம் கலைஞர் மன்றத்தில் வைத்து,
சேர்த்த பணத்தை நல்லை ஆதீன முதல்வரிடம் வழங்க ஒழுங்கு செய்தனர்.
அவ்வூர்வலம் எங்கள் கம்பன் கோட்டம் வழியாகத்தான் செல்வதாக இருந்தது.
அந்த வீதியிலுள்ள எல்லா வீட்டுக்காரரையும் நேரில் சந்தித்து,
கும்பம் வைத்து ஆதீனத்திற்கு மரியாதை செய்யும்படி கேட்டுக்கொண்ட மேற்படி குழுவினர்,
எங்களுக்கு விழாவிற்கான அழைப்பைத் தானும் தரவில்லை.
அந்தணர்கள், நாதஸ்வர வித்துவான்கள், பேராசிரியர்கள், சமூகப் பிரமுகர்கள் என,
பலரையும் கூட்டி அவ்வூர்வலம் நடத்தப்பட்டது.
எங்களுக்குச் சொல்லாததால் என்ன செய்வதென்று குழம்பினோம்.
முடிவில் ஊர்வலத்தில் வரும் ஆதீன முதல்வருக்கு கம்பன் கோட்ட வாசலில்,
கும்பம் வைத்து, கால் கழுவி மரியாதை செய்வது என்றும்,
விழாவில் கலந்துகொள்வதில்லை என்றும் நாங்கள் முடிவு செய்தோம்.
ஊர்வலம் தொடங்கி வந்துகொண்டிருந்தது.
எங்களுக்கு எதிரானவர்களால் இவ்வூர்வலம் நடத்தப்படுவது தெரிந்து,
ஊர்வலத்தில் வந்த பலரும் சங்கடப்பட்டனர்.
கம்பன் கோட்ட வாசலுக்கு ஊர்வலம் வந்தபொழுது,
திருநந்தகுமார் குருமுதல்வரின் பாதங்களைக் கழுவினான்.
அந்த நேரம் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.
இறந்த போராளி ஒருவனுடைய உடலைத் தாங்கிய,
இயக்கத்தின் வாகனம் ஒன்று எதிர்த்திசையில் வந்தது.
உடனே, மேளம் நாதஸ்வரம் எல்லாம் நிறுத்தப்பட்டன.
ஊர்வலத்தில் இருந்த யாரோ ஒருவர் 'பிரேதம் வருகிறது,
சுவாமி அதில் முழிப்பது நல்லதல்ல.
எல்லோரும் உள்ளே செல்லுங்கள்' என்று சத்தமாய்ச் சொல்ல,
ஆதீன முதல்வரும் உடன் வந்த அத்தனைபேரும்,
எங்கள் கம்பன் கோட்டத்திற்குள் வரவேண்டியதாயிற்று.
உள்ளூர எங்களுக்குச் சந்தோசம்.
இவர்களுக்கு எதிராய் முருகன் எங்களை அங்கீகரித்ததாய் நினைத்தோம்.
சில நிமிடங்களின்பின் 
எங்கள் கோட்டத்திலிருந்து பழையபடி ஊர்வலம் தொடங்கிற்று.
அன்றைய கூட்டத்தில், திருமதி சண்முகதாஸ் கம்பன் கழகத்தைக் கண்டித்துப் பேச,
அச்செய்தி அறிந்து கடுங்கோபங்கொண்ட நான்,
திருமுருகனின் மோட்டார்சைக்கிளில் அன்றிரவே அவர்களின் வீட்டிற்குச் சென்று,
அவர்களுடன் கடுமையாய்த் தர்க்கப்பட்டேன்.
சண்முகதாசை நேரடியாக நான் எதிர்த்துப் பேசியது அன்றுதான்.
மூத்தவர்களான அவர்களைக் கடுமையாகப் பேசியதால் 
மனம் கவலைப்பட்டது.
ஒரு காலத்தில் எங்களை அன்பாய் ஆதரித்தவர்கள்.
அவர்களை அப்படி நான் பேசியிருக்கக் கூடாது என நினைந்து,
அடுத்த நாள் பிரசங்கத்திற்குச் செல்லும்போது,
அவர்கள் வீடு சென்று, கால்தொட்டு மன்னிப்புக் கோரினேன்.

🚩  🚩  🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்