'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 63 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
புலிகளின் நேரடித் தலையீடு

அக்கூட்டம் நடக்க இருந்த திகதியின் முதல் நாள் இரவு,
உதயன் நிறுவனர் சரவணபவனும், வித்தியாதரனும், 
எங்களை வரச் சொல்லிச் செய்தி அனுப்பினர்.
பதற்றத்தோடு நானும், ரத்தினகுமாரும் அங்கு சென்றோம்.
இரவு எட்டு மணியிருக்கும்,
அவ்விருவரும், 'புலிகள் இக்கூட்டம் நடத்துவது பற்றி,கடுமையாய் 
அதிருப்தியுற்றிருக்கின்றனர்.
இன்று மாலை பிரபாகரன் முக்கியமானவர்களோடு,
இதுபற்றி, ஒரு கூட்டம் நடத்துவதாய் செய்தி வந்திருக்கிறது.
இந்தக் கூட்டத்தை நீங்கள் நடத்துவது நல்லதல்ல' என்றனர்.
அப்போது நண்பர் சரவணபவன் எங்கள்மேல் அக்கறை கொண்டிருந்தார்.
அவர்கள் சொன்ன செய்தியால் உண்மையில் 
நாங்களும் சற்றுப் பயந்து போனோம்.
மறுநாள் நடக்க இருந்த கூட்டத்;தை நிறுத்தி விடலாம் என முடிவு செய்து,
அங்கிருந்தே கூட்டம் நிறுத்தப்பட்டதாய் ஒரு விளம்பரம் எழுதி நாம் கொடுக்க,
சரவணபவன் ஒரு பையனிடம் அச்செய்தியைக் கொடுத்து,
பத்திரிகை அலுவலகத்திற்கு உடன் அனுப்பி வைத்தார்.
போன பையன்  ஒரு சில நிமிடங்களில் திரும்பி வந்து,
அலுவலகத்திற்குப் புலிகள் வந்து, ஜெயராஜ் பேசுவது பற்றியோ? 
நடத்தப்பட இருக்கும் கூட்டம் பற்றியோ?
இனி எந்தச் செய்தியும் வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுச் சென்றதாயும்,
அதனால் கூட்டம்  நிறுத்தப்பட்ட செய்தியைக்கூட,
இனிப் போட முடியாது என்றும் சொல்லிப் போனான்.
'புலிகள் முதன்முதலாய் பத்திரிகை விடயத்தில் நேராய்த் தலையிட்டிருக்கின்றனர்.
இதை, பெரிய பிரச்சனையாய்த் தலைவர் எடுத்திருக்கிறார் போல'
என்று,
வித்தியாதரன் பதற்றப்பட்டான்.
அவனின் பதற்றம் எங்களை மேலும் பயப்படுத்தியது.
கூட்டத்தை ரத்துச் செய்வதாய் முடிவு செய்து வீடு திரும்பினோம்.
கோட்டத்தில் நானும், ரத்தினகுமாரும் மட்டும்தான் இருந்தோம்.
இரவில் என்னை யாரும் கடத்த வருவார்களோ என,
அஞ்சி நடுங்கியபடி அன்றிரவைக் கழித்தேன்.

🚩 🚩 🚩

நிறுத்தப்பட்ட கூட்டம்

மறுநாள் காலை, கழகப் பையன்கள் அனைவரும் வந்துவிட்டனர்.
நிலைமையைச் சொல்லிக் கூட்டத்தை நிறுத்தும் முடிவை அறிவித்தோம்.
கிருபா சோர்ந்து போனான்.
சிவராமலிங்கம் மாஸ்ரர், 'அவங்களுக்கென்ன பயப்பிடுறது,
நாங்கள் கூட்டத்தை நடத்துவோம்'
எனக் கொதித்தாராம்.
பின்னர் நிலைமையை உணர்ந்து அவரும் சம்மதிக்க,
ஆதீன வாசலில் கூட்டம் நிறுத்தப்பட்டதாய்,
ஓர் அறிவித்தல் பலகை வைக்கப்பட்டது.
புலிகளுக்குப் பயந்து,
கூட்டத்திற்கு அதிகம் பேர் வரமாட்டார்கள் என நினைந்தோம்.
ஆனால், துணிந்து பலரும் அக்கூட்டத்திற்கு வந்ததாய்,
இளைஞர்கள் சொன்னார்கள்.
அக் கூட்டத்தைப் படம் பிடிக்கவென,
புலிகளின் வீடியோக்காரர்களும் வந்து காத்திருந்தார்களாம்.
பின்னர் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டது என அறிந்து,
அவர்கள் நேராகச் சிவராமலிங்கம் மாஸ்ரரிடம் சென்று,
இக்கூட்டம் பற்றி அபிப்பிராயம் சொல்லும்படி கேட்டு,
வீடியோ பண்ணினார்களாம்.
மாஸ்ரர் இலக்கியப் பணியில் ஈடுபட்டிருக்கும் எங்களுக்கு,
ஆதரவு தருவதைவிட்டு விட்டு,
இயக்கம் இடைஞ்சல் தருவது பற்றி, 
துணிந்து கடுமையாகப் பதிலுரைத்தாராம்.
கூட்டம் ரத்தானதால், கூட்டத்திற்கு வந்தவர்கள் 
என்னைத் தேடி வருவார்கள் என ஊகித்து.
என்னை ஓர் அறையில் பூட்டி வைத்துவிட்டு,
வந்தவர்களை எல்லாம் ஜெயராஜ் இங்கில்லை என,
இளைஞர்கள் திருப்பி அனுப்பினர்.
இதனால் நான் கடத்தப்பட்டுவிட்டதாக யாழ் முழுவதும் செய்தி பரவியது.

🚩 🚩 🚩

மாவை ஆதீனத்தின் ஆசி

இக் கூட்டம் நிறுத்தப்பட்ட அடுத்த நாள்,
ஓரு இரவு நேரத்தில் மாவை சண்முகநாதக் குருக்கள் அவர்கள்,
ஒரு தட்டு நிறைய வெற்றிலை, பழம், விபூதி எல்லாம், 
கொண்டு வந்து தந்து,
'உன்னுடைய முடிவு சரியானது நீ வெல்வாய்' என
என்னை ஆசீர்வதித்தார்.
துணிந்த அவரது செயல் கண்டு நெஞ்சுருகினேன்.

🚩 🚩 🚩

யாழ்ப்பாணத்தில் நிறைவுப் பேச்சு

அப்போது எனது தாயின் ஊரான சண்டிலிப்பாயில் அமைந்த,
ஐயனார் கோயில் திருவிழாவில் பத்து நாட்களாக,
பாரதம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
கூட்டம் நடக்கவிருந்த அன்றிரவு எனது கடைசிச் சொற்பொழிவு,
அன்றுடன்தான் நான் பேச்சை நிறுத்துவதாய் முடிவு செய்திருந்தேன்.
இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையிலும் அஞ்சாது,
அன்றும் சொற்பொழிவுக்குக் காரில் தனியே சென்றேன்.
அங்கு பெரிய கூட்டம் கூடியிருந்தது.
ஜெயராஜ் கடத்தப்பட்டுவிட்டார், வரமாட்டார் என,
பலரும் பேசிக்கொண்டிருந்தனர்.
நான் சென்று இறங்கியதும், எல்லோர்க்கும் மகிழ்ச்சி.
எனது பேச்சைப் பதிவு செய்ய, புலிகளின் புலனாய்வுத் துறையினர்,
அங்கங்கு ஒலிப்பதிவுக் கருவியுடன் நிற்பதாய், சிலர் வந்து சொல்லினர்.
நான் அதற்கு அஞ்சவில்லை.
அன்றைக்கு, 'பாஞ்சாலி சபதம்' என்பது தலைப்பு.
இரட்டுற மொழிந்து எனது சபதத்தையும் அன்று வெளியிட்டேன்.
கூடியிருந்த மக்கள் சிலிர்த்துப் போயினர்.
அதன் பிறகு நீண்ட நாட்கள் நான் யாழ்ப்பாணத்தில் பேசவில்லை.

🚩 🚩 🚩

திருவிழாக்கள் நின்று போயின

நான் பேச்சை நிறுத்திய ஒருவாரத்திற்குள்,
ராணுவம் யாழைச் சுற்றி வளைத்து,
எல்லைக்கிராமங்களுக்குள் நுழையத் தொடங்கிவிட்டது.
அவ்வூர் மக்கள் அகதிகளாய் யாழ் நோக்கி வந்தனர்.
கோயில் திருவிழா நிகழ்ச்சிகள் எல்லாம் நிறுத்தப்பட்டன.
என்மேல் அன்பு கொண்ட சிலர், 'பாருங்கோ அந்தாள் பேச்சை நிற்பாட்டினவுடன,
திருவிழாக்கள் எல்லாம் நிண்டு போச்சு'
என்று பகிரங்கமாய்ப் பேசத் தொடங்கினர்.
எனக்கும் இறைவன் என்னோடு இருப்பதான ஓர் உறுதி ஏற்பட்டது.

🚩 🚩 🚩

கல்லெறிபட்டோம்

இக்கால கட்டத்தில் மற்றொரு மனவேதனை தரும் சம்பவமும் நிகழ்ந்தது.
மின்சாரம் இல்லாத காலம் அது.
இயக்கத்தினர் ஜெனரேட்டர் வைத்து,
தமது தேவைக்கு, 'கரண்ட்டை' எடுத்து வந்தனர்.
தமக்கு மேலதிகமான 'கரண்டை' ஒரு சிலருக்கு அவர்கள் வழங்கினர்.
அவ்வளவு முரண்பாடுகளுக்கிடையிலும் எமது கம்பன் கோட்டத்திற்கும்,
ஆச்சரியமாய் அவர்கள் 'கரண்ட்' தந்திருந்தனர்.
இரவில் 'கரண்ட்' இருக்காது.
அப்போது குமாரதாசனுக்குத் திருமணம் முடிந்திருந்தது.
கம்பன் கோட்டத்தில் நானும், ரத்தினகுமாரும் தான் தங்குவோம்.
ஒரு நாள் இரவு திடீரென்று,
'சிலீர்' எனக் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது.
பயந்து ஓடிப்போய், பார்த்தால்,
எங்களின் யன்னல் கண்ணாடிகள் ஓரிரண்டு உடைந்து கிடந்தன.
இருட்டில் யாரோ ஓடுவது தெரிந்தது.
இச் சம்பவம் அடுத்தடுத்த நாட்களிலும், தொடர்ந்து நடக்கத் தொடங்கியது.
புதிதாய் கட்டிய கட்டிடத்தின் கண்ணாடிகள் உடைவது கண்டு மிக வருந்தினேன்.
புலிகளின் 'பொலிஸில்' முறைப்பாடு செய்தேன்.
ஒருவரும் வந்து ஏனென்றும் கேட்கவில்லை.
புலிகளின் 'பொலிஸ்' பகுதிக்குப் பொறுப்பாளராய் இருந்த நடேசனையும், 
அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனையும் நேரில் சந்திக்க முயற்சித்தேன்.
ஆனால், என்மேல் அன்பு கொண்டிருந்த அவர்கள் கூட,
என்னைச் சந்திப்பதைத் தவிர்த்தனர்.
இத் தொல்லை சில காலம் தொடர்ந்தது.

🚩 🚩 🚩

புலனாய்வுத்துறை சந்தித்தது

இதற்கிடையில் புலிகளின் புலனாய்வுத்துறையிலிருந்து,
ஓர் இளைஞன் என்னைச் சந்திக்க வந்தான்.
'உங்களை நாங்கள்தான் பேச வேண்டாம் என்று சொல்லி விட்டதாய்,
பலரும் கதைக்கிறார்கள்.
இது எங்களுக்குத் தேவையில்லாத பழி.
நீங்கள் திரும்பப் பேசத் தொடங்க வேண்டும்'
எனக் கூறி,
நான் பேச்சை நிறுத்தியதற்கான காரணத்தைக் கேட்டான்.
நடந்த எல்லாவற்றையும் அவனிடம் விரிவாய்ச் சொன்னேன்.
அவன் 'புதுவையின் கவிதை பற்றி,
நீங்கள் கவலைப்பட வேண்டாம்'
என்று கூறி அவரைக் குறையாய்ப் பேசினான்.
நான் அவனிடம், 'தம்பி! கருத்தளவில் புதுவைக்கு,
எங்களால் உடன் பதில் சொல்ல முடியும்,
இப்ப புதுவையைக் குறை சொல்லி எங்களோடு கதைக்கிற நீங்கள்.
புதுவைக்கு நாங்கள் பதில் சொன்னால்,
அதை இயக்கத்திற்குச் சொன்ன பதிலாய் எடுத்து,
இன்னும் எங்களோடு பகைப்பீர்கள்.
எனவே, உங்கள் இயக்கத்தில்,
முடிவெடுக்கும் தகுதியுள்ளவர்கள் யாரேனும் நேரடியாக எங்களைச் சந்தித்து.
பேசச் சொன்னால் மட்டுமே அதுபற்றி நாம் யோசிப்போம்'
என்றேன்.
மேலிடத்தில் பேசிவிட்டு வருவதாய் அவன் திரும்பிப் போனான்.

🚩 🚩 🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்