'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 64 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
மீண்டும் மறுத்தேன்

மீண்டும் ஒருவாரம் கழித்து அவன் வந்தான்.
'மேலிடத்தில் நீங்கள் சொன்னதைச் சொன்னேன்.
அவர்களைப் பேச வேண்டாம் என்று,
நாங்கள் ஒருநாளும் சொல்லவில்லையே,
பின்னர் அவர்களைப் பேசுங்கள் என்று,
நாங்கள் ஏன் சொல்ல வேண்டும்?'
என்று,
மேலிடத்தில் பதில் சொன்னதாய்ச் சொன்னான்.
'தம்பி! நாங்கள் குழந்தைகள் இல்லை,
வெளிப்படையாக நீங்கள் சொல்லாவிட்டாலும்,
கழகத்தோடு இயக்கத்திற்கு ஏதோ முரண்பாடு இருப்பதை,
எங்களால் உணர முடிகிறது.
உங்களின் பெரிய ஆட்கள் எல்லாரிடமும் என்ன பிரச்சினை?' என்று,
கேட்டுப்பார்த்து விட்டேன்.
ஒருவரும் வெளிப்படையாய்ப் பேச முன்வருகிறார்கள் இல்லை.
ஏதேதோ சொல்லி மழுப்புகிறார்கள்.
எனவே உண்மைப் பிரச்சனை தெரிய வரும் வரையும்,
அல்லது, உங்களுடைய முடிவெடுக்கும்,
மேலிடத்தார் என்னோடு பேசும் வரையும்,
நான் பேசப்போவதில்லை'
எனச் சொல்லி அவனை அனுப்பிவிட்டேன்.

🚩 🚩 🚩

பொட்டம்மானின் அழைப்பு

ஓரிரு நாட்களில் தயங்கித் தயங்கி வந்த மற்றொரு போராளி,
புலிகளின் புலனாய்வுத் துறைத் தலைவர் பொட்டம்மான்,
என்னைச் சந்திக்க விரும்புவதால், 
அடுத்த நாள் மாலை நான்கு மணிக்கு,
என்னைத் தயாராய் இருக்கும்படியும்,
தான் வந்து அழைத்துச் செல்வதாகவும் கூறிச் சென்றான்.
என்ன நடக்கப்போகிறதோ என்று தெரியாமல்,
பழையபடி பதற்றம் தொற்றிக்கொண்டது.
மாலை அனைவரும் சந்தித்து ஆலோசித்தோம்.
எல்லோரும் 'இனிப்பயந்து பிரயோசனம் இல்லை.
துணிந்து போங்கோ! என்ன நடக்குது என்று பார்ப்பம்' என்றார்கள்.
நானும் செல்வதாய் முடிவு செய்தேன். 
அதற்கும் ஒரு காரணம் இருந்தது.

🚩 🚩 🚩

சுவாரஸ்யமான ஒரு நீண்ட 'ப்ளாஸ்பாக்'
முன்னைய சிவசங்கர்

பிற்காலத்தில் கம்பன் கழகத் தலைவர் பொறுப்பேற்ற சிவசங்கரை விட,
ஆரம்பத்திலும் எங்கள் தொண்டனாய் ஒரு சிவசங்கர் இருந்தான்.
இந்துக்கல்லூரியில் நான் படிக்கும்போதே,
இலக்கிய ஆர்வத்தால் ஒரு சில பேர் நண்பர்களாகியிருந்தோம்.
அந்நண்பர்களில் சிவகுமாரும் ஒருவன்.
நாயன்மார்க்கட்டு அவனது ஊர்.
ஒரு பின்தங்கிய கிராமம் அது.
அங்குள்ள இளைஞர்கள் வேகமானவர்கள்.
அவர்களுக்குள் என் நண்பன் சிவகுமார்,
ஏதோ விதத்தில் முதன்மைப்பட்டான்.
சிவகுமாருக்கு என்மேல் அளவற்ற அன்பும், மதிப்பும் இருந்தது.
சிவகுமார்மேல் அவ்வூர் இளைஞர்களுக்கு அன்பும், மதிப்பும் இருந்தது.
அதனால் அவ்வூர் இளைஞர்கள் அவனால் மதிக்கப்பட்ட என்;மேலும்,
அன்பும், மதிப்பும் கொண்டிருந்தனர்.
அவனுக்குச் சிவசங்கர் என்று ஒரு தம்பி இருந்தான்.
உற்சாகமானவன், கொஞ்சம் குழப்படிக்காரன்.
அக்காலத்தில் படிப்பையும் குழப்பியிருந்தான்.
ஒரு முறை அண்ணன் சிவகுமார் அடித்து விட்டான் என்பதற்காக,
'பொலிஸில்' போய் முறையிட்ட முற்கோபி அவன்.
அவனுக்கும் நான் ஜெயா அண்ணாதான்.
ஒருமுறை எங்கள் கம்பன்விழாவுக்காக அடித்த 'போஸ்டர்கள்' சிலவற்றை,
அவனிடம் கொடுத்து வீதியோரங்களில் ஒட்டும்படி கேட்டுக்கொண்டேன்.
அடுத்தநாள் வீதியோரங்களில் ஒட்டப்பட்டிருந்த 'போஸ்டர்களில்',
ஈழத்துரோகிகளுக்கு எதற்குத் தமிழ் விழா? என்று,
பேனையால் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.
அது வெளிப்பட இயக்கங்கள்  ஆரம்பிக்கப்படாத காலம்.
தனித்தமிழ் ஈழ உணர்ச்சி கூட்டணியால்; அப்போதே விதைக்கப்பட்டிருந்தது.
யார் இதை எழுதியிருப்பார்கள் என்று எங்களுக்குள் பரபரப்பு.
அந்தப் 'போஸ்டர்களில்' ஒன்றைக் கிழித்துக்கொண்டுவந்து ஒரு நண்பன் தந்தான்.
ஆழமாக அவதானித்ததில் அதிலிருந்தது,
நாங்கள் 'போஸ்டர்' ஒட்டச்சொன்ன,
சிவசங்கரின் கையெழுத்துதான் என்பது தெரியவந்தது.
அவன் எனக்கு எழுதியிருந்த கடிதம் ஒன்றை வைத்து அதைக் கண்டுபிடித்தோம்.
அவனைக் கூப்பிட்டு கடுமையாகப் பேசினேன்.
சிரித்தபடி தலைகுனிந்திருந்து விட்டுச் சென்றுவிட்டான்.
அவன் அப்படிப் போஸ்டர்களில் எழுதியதற்கு ஒரு காரணம் இருந்தது.
அகில இலங்கைக் கம்பன்கழகம் என,
எங்கள் கழகத்திற்குப் பெயரிட்டதில் அவனுக்கு உடன்பாடில்லை.
ஈழக் கம்பன்கழகம் எனப் பெயரிட வேண்டும் என்பது அவன் விருப்பம்.
நடைமுறைச் சாத்தியப்பாடின்மையை எவ்வளவு நான் விளங்கப்படுத்தினாலும்,
அவன் அதை ஒத்துக்கொள்ளமாட்டான்.
அம்முரண்பாடு காரணமாகத்தான்,
அவன் அப்படி எழுதியதாய்ப் பின்னர் அறிந்தேன்.
இது நடந்தது 1981 இல்.

🚩 🚩 🚩

இரத்தப் பொட்டிட்டான் சிவசங்கர்

பின்னர் 1992இலோ 1993இலோ மீண்டும் ஒருதரம்,
அவனைத் திட்டும் வாய்ப்புக் கிடைத்தது.
தந்தை செல்வநாயகத்தின் நினைவுத்தூபித் திறப்புவிழாவின்போது,
இளைஞர்களின் ஈர்ப்புக்குரியவராயிருந்த எம்.பி. யோகேஸ்வரன் அவர்களுக்கு,
தன் கையைக் கிழித்து இவன் இரத்தப்பொட்டு இட்டதைக் கேள்விப்பட்டு,
மிகக் கோபப்பட்டிருந்தேன்.
கூட்டணியினரின் சத்தியத்தில்,
எனக்கு நம்பிக்கையில்லாதிருந்த காலம் அது.
இவன் செயற்பாட்டால் என் கோபம் அதிகரித்தது.
நாயன்மார்க்கட்டில் இவர்களுக்கு வேறொரு வீடும் இருந்தது.
அந்த வீட்டில் சிவசங்கரும், மனோகரும்,
அவர்களோடு சில நண்பர்களும் தங்கியிருந்தார்கள்.
அங்கு சென்று சிவசங்கரைத் திட்டோ திட்டென்று திட்டினேன்.
அத்தனையையும் அவனும் அவன் நண்பர்களும்,
சிரித்துக்கொண்டு மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
திட்டிக்களைத்த எனக்கு அவனும் அவன் நண்பர்களுமாக,
ஒரு பெரிய 'கிளாஸ்' நிறைய  எலுமிச்சஞ்சாறு கரைத்துத் தந்தனர்.
குடித்துவிட்டு வந்துவிட்டேன்.
அன்று நான் திட்டியபோது கேட்டுக் கொண்டிருந்த அத்தனைபேரும்,
விடுதலைப்புலிகளின் ஆரம்ப உறுப்பினர்கள் என்பது,
பின்னாளில் தான் தெரியவந்தது.
அது விடுதலைப்புலிகள் அமைப்பு,
வெளித்தெரியாமல் இயங்கி வந்த காலம்.

🚩 🚩 🚩

போராளி சிவசங்கர்

நான்கைந்து வருடங்களின் பின் இதே சிவசங்கர்,
எங்கள் இரண்டாவது கம்பன்கழக அலுவலகத்தில் நாங்கள் இருந்தபோது,
மீண்டும் ஒருதரம் எம்மைச் சந்தித்தான்.
அப்போது அவன் பயிற்சி பெற்ற ஒரு போராளி.
நாங்கள் இருந்த அறைக்கு வந்து உரிமையாய் உரையாடினான்.
நாங்கள் கேட்டுக்கொள்ள, 
தான் வைத்திருந்த 'ரிவோல்வரை' எடுத்துப் பிரித்துக்காட்டி,
விளக்கமெல்லாம் சொன்னான்.
அச்சந்திப்பின் பின் கிட்டத்தட்டப் பத்தாண்டுகளின் பின்னர்தான்,
அவனைச் சந்திக்க முடிந்தது.

🚩 🚩 🚩

சிவசங்கர்தான் பொட்டம்மான்

ஒன்றைச் சொல்ல மறந்துபோனேன்.
சிவசங்கரின் இயக்கப்பெயர் என்ன என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது.
ஆச்சரியப்படாதீர்கள்.
அவன் தான் பொட்டம்மான்.
கையைக் கீறி இரத்தப்பொட்டிட்ட காரணத்தால் தான்,
பின்னர் அவனுக்கு அப்பெயர் இடப்பட்டதாம்.

🚩 🚩 🚩

பொட்டம்மானைச் சந்தித்தேன்

பொட்டம்மானுக்கும் எனக்குமான தொடர்பு மிகப் பழையது.
அவன் இயக்கத்தில் சேரும் முன்னரே என்னோடு தொடர்புபட்டிருந்தான்.
அதுபற்றி விரிவாய் பின்னே சொல்லியிருக்கிறேன்.
மேற் சொன்ன உறவுரிமை இருந்ததால் பொட்டம்மானைச் சந்திப்பதில்,
எனக்குப் பெரிய பதட்டம் ஏதும் இருக்கவில்லை.
சொன்னது போலவே முதல் நாள் வந்த இளைஞன்,
குறித்த நேரத்தில் வந்து, என்னை மோட்டார் சைக்கிளில் அழைத்துப்போனான்.
கண்டி வீதியில் ஒரு மேல் வீட்டின் முன் நிறுத்தினான்.
'கேற்' திறந்ததும் தெரிந்த சிறு முற்றத்தில், 
வீதியைப் பார்த்தபடி ஒரு 'பஜிரோ' நிறுத்தப்பட்டிருந்தது.
அதன், முன் இருக்கையிலிருந்து,
பொட்டம்மான் ஏதோ வாசித்துக் கொண்டிருந்தான்.
அந்த இளைஞன் பஜிரோவைத் தாண்டி,
என்னை உள் அழைத்துச் சென்றான்.
ஆனால் பொட்டம்மான் என்னைக் கண்டதாகவே காட்டிக்கொள்ளாமல்,
தொடர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தான்.
அப்போது அவனுக்கு உலகளாவிய பெரிய முக்கியத்துவம் வந்திருந்தது.
புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்தவனாக அவன் கருதப்பட்டான்.
இவ் உயர்வுகளால் அவன் என்னை மதிக்கமாட்டானோ? என்றும், 
இயக்க முரண்பாடுபற்றி என்னை எச்சரிப்பானோ? என்றும் நினைத்து,
பதற்றத்தோடு உள்ளே தனியே உட்கார்ந்திருந்தேன்.
சிறிது நேரத்தில் பரபரப்பாய் உள்ளே நுழைந்த அவன்,
என்னை அதுவரை காணாதவன் போல,
'அண்ணை வந்து கன நேரமா? நான் கவனிக்கவேயில்லை' என்று,
பழைய உறவோடு இயல்பாய்ப் பேசத்தொடங்கினான்.
நான் பேச்சை நிறுத்தியதற்கான காரணம் கேட்டான்,
மனதில் இருந்தவற்றையெல்லாம் கொட்டித்தீர்த்தேன்.
'உங்களைச் சுற்றி வால் பிடிக்கிறவர்கள் தான் இருக்கிறார்கள்.
அத்தகையோர் உங்கள் கருத்தை இரட்டிப்பாக்கி மக்களிடம் திணிப்பதுவும்,
மக்கள் கருத்தை உங்களிடம் வராமல் செய்வதையுமே,
தங்களின் வேலையாகச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
எனவே பிழைகளை எடுத்துச் சொல்லக்கூடிய நல்லவர்களை,
மாதம் ஒரு தரமாவது சந்தியுங்கள் என்றும்,
எதிரிகளோடு புத்தியால் பழகலாம் ஆனால்,
உங்கள் மக்களோடு இதயத்தால் பழகுங்கள்'
என்றும் புத்தி சொன்னேன்.
'கட்டாயம் அப்படிச் செய்யிறம் அண்ணை' என்று சொல்லிப் போனான்.
ஆனால், அதுபற்றி எந்த நடவடிக்கையும் அவன் எடுக்கவுமில்லை.
அதன் பின் அவனை நான் சந்திக்கவும் இல்லை.
இன்று அவன் என்ன ஆனான் என்று தெரியாத நிலை.

🚩 🚩 🚩

பெரியோர்களும் கைவிட்டனர்

புலிகள் எங்களோடு முரண்படத் தொடங்கிய அக்காலத்தில்,
எங்களோடு தொடர்பு வைத்தால்,
புலிகள் தங்களையும் கண்டிக்கக்கூடும் என நினைந்து,
கழகத்தோடு நெருங்கியிருந்த பலர் எங்களை விட்டு விலகத்தொடங்கினர்.
அந்த அனுபவம் மறக்கமுடியாதது.
எங்களின் மீது அளவற்ற அன்பு கொண்டு,
இலக்கணவித்தகர் நமசிவாய தேசிகர் ஐயாவும்,
கலைப்பேரரசர் ஏ.ரி. பொன்னுத்துரை ஐயா அவர்களும்,
ஓரிரண்டு ஆண்டுகள் கம்பன்கழகத்திலேயே எங்களோடு வந்து தங்கியிருந்தனர்.
அது எங்களது பொற்காலம்.
புலிகள் எங்களோடு முரண்படத் தொடங்கியதும்,
அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் சற்றுப் பயந்து போயினர்.
சில காரணங்களை உருவாக்கிச் சொல்லி,
அப்பெரியார்களும் தங்கள் வீடுகளுக்கே திரும்பிச் சென்றபோது,
உண்மையில் மிகவும் மனம் வருந்திப் போனோம்.

🚩 🚩 🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்