'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 65 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩  🚩  🚩
இராணுவம் புகுந்தது

நாம் பேசுவதை நிறுத்தி அடுத்தடுத்த வாரங்களில்,
இராணுவம் வேகமாய் முன்னேறியது.
அப்போது கந்தசஷ்டி விரதம் தொடங்கியிருந்தது.
அம்முறை விரதமேயிருந்து அறிந்திராத மணிமாறனையும்,
விரதமிருக்கச் செய்திருந்தேன்.
கந்தசஷ்டி விரதக் கடைசி நாள் அன்று,
அவர்களுக்காகப் பாறணைச் சமையல்; சமைத்திருந்தேன்.
சூரன் போர் முடிந்து அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில்,
இராணுவம் யாழ்ப்பாணத்திற்குள் நுழையப் போவதால்;,
எல்லோரையும் உடனே யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்படும்படி,
புலிகள் ஒலிபெருக்கியில் அறிவிக்கத்தொடங்கினார்கள்.
ஊரே கலவரப்பட்டுப் போனது.
அப்போது எங்கள் கோட்டத்தில்,
கிட்டத்தட்ட முப்பது நாற்பது பேர் தங்கியிருந்தனர்.
சண்டை நெருங்கியதும் வித்தகர் ஐயா, 
குடும்பத்தோடு கோட்டத்தில் வந்து தங்கினார்.
அதை விட பிரசாந்தன் குடும்பத்தார்,
குமாரதாசன் குடும்பத்தார், ரத்தினகுமார் குடும்பத்தார் என,
இன்னும் பலர் கழகத்தில் சரணடைந்திருந்தனர்.
இந்நிலையில் புலிகள் ஊரைவிட்டுப் புறப்படச் சொல்ல,
என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தோம்.

🚩  🚩  🚩

நிற்பதா? செல்வதா?

நாமும் யாழ்ப்பாணத்தை விட்டுச்செல்வதா? 
அல்லது கோட்டத்திலேயே தங்குவதா? என்று பெரிய குழப்பம் ஏற்பட்டது.
இராணுவம் 'ஷெல்' மழை பொழியத்தொடங்கியிருந்தது.
'ஷெல்' விழுந்து இறந்து போன தன் பிள்ளையைத் தூக்கியபடி,
திருநெல்வேலி காளி கோயிலடியிலிருந்து,
நல்லூர் நோக்கி ஓடி வந்த ஒரு தாயின் கதறல்,
இன்றும் என் நெஞ்சை உலுக்குகிறது.
என்ன செய்வதென்று தெரியாமல்,
உதயன் சரவணபவனிடம் சென்று ஆலோசிப்போம் என முடிவு செய்து,
ரத்தினகுமாரின் காரில் இருவரும் சரவணபவன் வீடு சென்றோம்.
அங்கும் பெரும் பரபரப்பாயிருந்தது.
அவர்கள் வீட்டருகில் 'ஷெல்' விழுந்து,
பத்திரிகையாளர் குருநாதனின் மனைவி காயப்பட்டதால்,
அங்குள்ளவர்கள் அந்தரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
அங்கு புலிகளின் ஆதரவாளரான டாக்டர் ஜெயகுலராஜாவும் நின்றார்.
யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்படுவதா? என,
அவர்களோடு நாம் ஆலோசித்த போது,
நில் என்றோ செல் என்றோ, அவர்களாலும் சொல்ல முடியவில்லை.
மனக் குழப்பத்துடன் வெளியே வந்தோம்.
அங்கே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

🚩  🚩  🚩

மீண்டும் குரங்கு வந்தது

சரவணபவன் வீட்டிற்குள் நாம் நுழைந்த போது,
அங்கு நடந்து கொண்டிருந்த பரபரப்பால்,
கார் கதவுக் கண்ணாடியை மூடாமலே நாம் உள்ளே சென்றிருந்தோம்.
வெளியே நாம் வந்து பார்த்தபோது,
திறந்திருந்த அக் கண்ணாடி யன்னலினூடாக,
உள்ளே நுழைந்த பெரிய கருநிறக்குரங்கொன்று,
'டிறைவர் சீற்றில்' உட்கார்ந்து கொண்டு,
காரின்,'ஸ்ரியறிங்கை' பிடித்துச் சுழற்றிக் கொண்டிருந்தது.
எமக்கு மெய்சிலிர்த்துப்போனது.
ஆஞ்சநேயர் ஊரைவிட்டுப் போகச் சொல்கிறார் என உணர்ந்து கொண்டோம்.

🚩  🚩  🚩

யாழை விட்டுப்  புறப்பட்டோம்

உடனே எல்லாரையும் தயார்ப்படுத்தி,
பகுதி பகுதியாகப் புறப்படத்தொடங்கினோம்.
இரவு நேரம் கடும் இருட்டு,
ரத்தினகுமாரின் காரில் நான்;கே பேர்தான் போகலாம்.
முதியவர்களான இரத்தினகுமாரின் அம்மா, அப்பா, 
முழங்கால் நோவுள்ள குமாரதாசனின் அப்பா, 
முதியவரான வித்தகர் ஐயா, கால் நடக்க மாட்டாத சிவராமலிங்கம் மாஸ்ரர்,
படுக்கையாய்க் கிடந்த பிரசாந்தனின் தாத்தா, பாட்டி என,
பலரும் எம்மோடு இருந்தனர். 
இவர்களில் யாரைக் காரில் ஏற்றுவது பெரிய மனக் குழப்பம் ஏற்பட்டது.
அப்போது நாங்கள் மூன்று நாய்களையும், ஐந்து முயல்களையும் வளர்த்து வந்தோம்.
அவற்றை விட்டுப் போகவும் மனம் ஒப்பவில்லை.
ரத்தினகுமார் கார் ஓட்ட நான் அருகிலிருந்து,
மூன்று நாய்களையும் பிடித்துக்கொண்டேன்.
முயல்களை 'டிக்கி'யில் போட்டுக்கொண்டோம்.
பின் 'சீற்றில்' படுக்கையாகக் கிடந்த,
பிரசாந்தனின் தாத்தாவையும், பாட்டியையும், 
பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த ரத்தினகுமாரின் அம்மாவையும்,
ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம்.
அதிலும் பலர் என்னைக் குறை சொன்னதாய் அறிந்தேன்.
ரத்தினகுமாரின் அப்பாவை ஏற்றவில்லை என்றும், 
வித்தகர் ஐயாவை ஏற்றவில்லை என்றும்,
குமாரதாசனின் அப்பாவை ஏற்றவில்லை என்றும், 
சிவராமலிங்கம் மாஸ்ரரை ஏற்றவில்லை என்றும், 
பலரும் என்னைத் தூற்றினார்களாம்.
கார் ஓட்ட ரத்தினகுமார் அவசியமாய்த் தேவைப்பட்டார்.
நாய்களை அவற்றோடு பழகிய என்னால் மட்டுமே வைத்திருக்கமுடியும்,
மற்றைய மூவரும் நடக்கவே முடியாத நோயாளிகள்.
இந்நிலையில் அதைத்தவிர வேறு தேர்வு எமக்கு இருக்கவில்லை.
அப்போது நான் செய்த நீதி சரியானது தான் என,
இறைவன் அங்கீகரிப்பான் என்ற நம்பிக்கை இப்போதும் எனக்குண்டு.

🚩  🚩  🚩

நாய் படாப்பாடு

நடக்க முடியாத வயோதிபர்கள், குழந்தைகள்,
நாய், பூனை, ஆடு, மாடு என அனைத்தையும் காவிக்கொண்டு,
யாழ்ப்பாணத்தை விட்டு எட்டு லட்சம் மக்கள் சாவகச்சேரி நோக்கி,
சாரி சாரியாக நடக்கத்தொடங்கியிருந்தனர்.
சனக்கூட்டத்தால் பத்தடி நடக்க அரை மணி நேரம் எடுக்கும் சூழ் நிலை,
எங்கு போகிறோம் என்ற இலக்கில்லாத பயணம்,
நடைக் களையும், சன வெக்கையும், இருட்டும், மரண பயமுமாக,
மக்கள் நடந்து கொண்டிருந்தனர்.
எங்களைப் போல ஒரு சில பேரே வாகனத்தில் சென்றோம்.
வாகனங்களும் அங்குலம் அங்குலமாய்த்தான் நகர வேண்டியிருந்தது.
பெற்றோல் கிடைக்காததால்,
வாகனங்கள் மண்ணெண்ணையில் ஓடியகாலமது.
அதனால் திடீர் திடீரென வாகனங்கள் நின்று விடும்.
அங்ஙனம் நின்ற வாகனங்களை,
வீதிக்கரைகளிலிருந்த பள்ளங்களுக்குள் தள்ளி விட்டு,
சனக் கூட்டம் முன்னேறிக் கொண்டிருந்தது.
எங்களுக்குப் பெரும் பதற்றம்.
கார் இஞ்சிஞ்சாக நகர்கிறது.
கார் ஏறிப் பழகாத நாய்கள் ஒரு பக்கம் பிராண்டுகின்றன.
'டிக்கி' க்குள் இருக்கும் முயல்களுக்குக் காற்றுப்போதுமா? என,
மனதுக்குள் குழப்பம்.
பின் சீற்றில் கிடத்தப்பட்ட பிரசாந்தனின் தாத்தா,
வசதியில்லாத இருக்கையில் கிடத்தப்பட்டிருந்ததால்,
உடம்பு வலிக்க குழறியபடி இருந்தார்.
பிரசாந்தனின் பாட்டிக்கு ஒன்றுக்கு வந்துவிட,
உடனே தன்னை இறக்கும் படி அவர் கத்தியபடி இருந்தார். 
இத்தனை 'ரென்ஷனையும்'  தாங்கிக் கொண்டு மூன்று, நான்கு மணிநேரம் கார் ஓடி,
சாவகச்சேரி, கவிஞர் கல்வயல் குமாரசாமி வீட்டடிக்கு வந்து சேர்ந்தோம்.
சிறுநீர்கழிக்க அவசரப்பட்ட பிரசாந்தனின் பாட்டியை அவசர அவசரமாகக் கீழ் இறக்க,
தாங்க முடியாமல் என் கால்களிலேயே அவர் சிறுநீர் கழித்தார்.
அன்று நான் பட்ட பதற்றத்தை இன்று நினைக்கவும் பயமாயிருக்கிறது.

🚩  🚩  🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்