'முன்பு பின்பு' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

🚣🏿 🚣🏿 🚣🏿
ள்பொருள்களை மூன்றாய் உரைக்கிறது சைவசித்தாந்தம்.
இறை, உயிர், தளை எனும் மூன்றும்,
அனாதியானவை என்பது சைவ சித்தாந்தக் கொள்கை.
இவற்றுள்,
இறை முற்றறிவுப் பொருள்.
உயிர் சிற்றறிவுப் பொருள்.
தளை அறிவில் பொருள்.
அனாதியே தளையினால் பீடிக்கப்பட்டு,
சடநிலையை அடையும் உயிர்,
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும்,
ஐந்தொழில் புரியும் இறையின் பெருங்கருணையினால்,
அத்தளையிலிருந்து விடுபட்டு,
இறையோடு ஒன்றாகி பேரா இயற்கைநிலை பெறுகிறது. 
அதுவே முத்தியாம்.
🚣🏿 🚣🏿 🚣🏿
வீடடைய முயலும் ஆன்மா,
சக்தியின் துணையின்றி,
சிவனைச் சாரமுடியாதென்பது,
சைவ சித்தாந்திகளின் கொள்கை.
ஆணவத் தளையுள் அகப்பட்ட ஆன்மா,
அதினின்றும் விடுபட,
தனு, கரண, புவன போகங்களுக்குட்படுகிறது.
மாயா காரியமாகிய,
தனு, கரண, புவன போகங்களை,
ஆன்மாக்களுக்குச் சக்தியே உபகரிக்கிறாள்.
சிற்சக்தியாய்,
மாயையின் ரூபத்தில் செயற்பட்டு,
ஆன்மாக்களின் ஆணவத்தை வலியிழக்கச் செய்து,
பின் தூய்மையுற்ற ஆன்மாக்களை,
சிவசக்தியாகி நின்று,
இறைவனுடன் இணைப்பது,
அன்னையின் கருணைத் தொழிலாம்.
🚣🏿 🚣🏿 🚣🏿
சிவமும், சக்தியும் ஒன்றேயாம்.
சிவம், சக்தியென இருநிலைப்பட்ட ஒரே பரம்பொருளில்,
சிவம், சக்தியைவிடப் பெரிதென்றோ,
சக்தி, சிவத்தைவிடப் பெரிதென்றோ வாதிடுதல் தவறு.
ஒன்றேயான இருபொருள்களில் உயர்வு, தாழ்வு ஏது?
சக்தியும் சிவமும் ஒன்றெனத் தெளிந்தார்க்கு,
இவ்வுண்மை புலனாகும்.
தத்துவார்த்த விளக்கமுற்றார்,
சிவமும் சக்தியும் ஒன்றே என உணர்வர்.
ஒன்றான சுடரில் வெம்மை, ஒளி என,
இரு பண்புகள் இருக்குமாப்போல்,
இரண்டாய்த் தோன்றும் சிவமும், சக்தியும்,
பரநிலையில் ஒருபொருளேயாம்.
🚣🏿 🚣🏿 🚣🏿
சிவம், சக்தியென,
இருநிலைப்பட்ட ஒன்றேயான பரம்பொருளின் செயற்பாட்டில்,
விருப்பு, செயல், அறிவு எனச் சக்தி மூவகையாய்ப் பதிவள்.
இச்சை, கிரியை, ஞானம் என,
சக்தியின் இந்நிலைகளை வடமொழி பேசும்.
இம்மூவகைப்பட்ட சக்தியின் செயற்பாடுகளே,
உயிர்களை ஈடேற்றுகின்றன.
சக்தியின் துணையின்றி,
சிவத்தினைச் சாராமுடியாதென்பது,
சித்தாந்திகள் கொள்கை.
'தாயே ஆகி வளர்த்தனை போற்றி',
'முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருள்'

என்றெல்லாம் இந்நிலையை மணிவாசகம் பேசும்.
மொத்தத்தில்,
உயிர் சிவத்தைச் சார்வதான,
முத்திக்கு வித்திடுபவள் சக்தியே.
இது முடிந்த முடிபு.
🚣🏿 🚣🏿 🚣🏿
சைவத்தில் மட்டுமன்றி வைஷ்ணவத்திலும்,
தாயார் துணையின்றி,
ஐயன் அருள் கிட்டாது என்பதே சம்பிரதாயம்.
இவ்விரு மதத்திற்கும் ஒத்ததான,
சக்தியின் துணையின்றி,
சிவத்தைச் சார முடியாது எனும் கொள்கையை,
கம்பன் தன் இராமகாதையில் அற்புதமாய் விளக்கம் செய்கிறான்.
🚣🏿 🚣🏿 🚣🏿
கம்பன்,
இராமனையும் சீதையையும்,
திருமாலும்; மகாலட்சுமியுமென்றே,
வெளிப்பட உரைக்கின்றான்.
'கருங்கடற் பள்ளியில் கலவி நீங்கிப்போய்,
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?'
எனும்,
கம்பன் கூற்றே மேற்சொன்ன கருத்துக்காம் சான்று.
தெய்வ அவதாரங்களாய்,
இராமனையும், சீதையையும் வெளிப்பட உரைக்கினும்,
காவிய ஓட்டத்தில், அவர்தம்மை, 
மானுட நிலையிலேயே உலாவரச் செய்கிறான்; கம்பன்.
அங்ஙனம் மானுடப் பண்புகளுடன் நிற்கும்,
இராமன், சீதையெனும் இருபாத்திரங்களையும்,
சிவமாகவும், சக்தியாகவும் கொண்டும்,
காவிய ஓட்டத்தில், 
இராமனால் அங்கீகரிக்கப்பட்ட,
உடன்பிறவாச் சகோதரர்களான,
குகன், சுக்கிரீவன், வீடணன் ஆகியோரை,
இறையைச் சாரும் உயிர்களாய்க் கொண்டும்,
தத்துவவாதிகளுக்கு மட்டும் விளங்கும் வண்ணம்,
மேற்சொன்ன தத்துவார்த்தக் கருத்தினை,
குறிப்பினால் காட்டும் கம்பனின் உத்தி,
எண்ணி எண்ணி இரசிக்கத்தக்கது.
சிவத்தைச்சார,
சக்தியின் துணை தேவை எனும் பேருண்மையை,
குறிகளால் காட்டும் கம்பன் கைவண்ணம் காண்பாம்.
🚣🏿 🚣🏿 🚣🏿
கைகேயியின் வரத்தால் காடேகிய இராமன்,
விரிந்த தன் அன்புள்ளத்தால்,
உறவுகளைப் பெருக்குகிறான்.
கங்கைக் கரையில் மீனும் தேனும் கொணர்ந்து,
தன்தூய அன்பினால்,
இராமனை உயிரெனப்போற்றிநிற்கும் கங்கைவேடன் குகனை,
தன் உடன்பிறப்பென்கிறான் இராமன்.

'துன்பு உளது எனினன்றோ சுகமுளது? அதுஅன்றிப்
பின்பு உளது இடை, மன்னும் பிரிவுளது என, உன்னேல்
முன்பு உளெம், ஒருநால்வேம் முடிவுளது என உன்னா
அன்புள, இனி, நாம்ஓர் ஐவர்கள் உளரானோம்'


பின், கிஷ்கிந்தையில்,
தன்னைச் சரணடைந்து வாழ்வு வேண்டி நிற்கும்,
சுக்கிரீவனின் அவலநிலை கண்டு இரங்கி,
அவன்பால் அன்புற்று,
அவனையும் சகோதரனாய் ஏற்றுக் கொள்கிறான் இராமன்.

'மற்று இனி உரைப்பதென்னே? வானிடை, மண்ணில், நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார் உன்கிளை எனது என்காதல்
சுற்றம், உன்சுற்றம் நீஎன் இன்உயிர்த் துணைவன் என்றான்.'


நிறைவாக, 
அறத்தின்பாற் கொண்ட நேசிப்பால்,
தன்உடன் பிறப்பான இராவணனைத் துறந்து,
தன்பால் வந்து சரண்புகுந்த,
வீடணனின் உயர்நிலை கண்டு உவந்து,
அவனையும் தன் சகோதரனாய் ஏற்கிறான் இராமன்.

'குகனொடும் ஐவரானேம் முன்பு பின் குன்று சூழ்வான் 
மகனொடும் அறுவரானேம் எம்முழை அன்பின் வந்த 
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவரானேம் 
புகல் அருங்கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை'


உலகை நேசிக்கும் இராமனின் உயர்ந்த உள்ளம்,
இம்மூன்று பாடல்களாலும் நமக்கு உணர்த்தப்படுகிறது.
'பேதமற்ற உலகு' எனும் கம்பனின் கனவு,
மேற்சொன்ன பாடல்களில்,
இராமனின் வார்த்தைகளூடு வலியுறுத்தப்படுகிறது.
மொழி, இனம், தேசம் கடந்து,
இராமன் உலக மனிதனாய் உயர்ந்து நிற்கிறான்.
குணக்கீழ்மையாற் தாழ்வுற்றோரை,
வேடரென்றும், விலங்கென்றும், அரக்கரென்றும்,
இழித்துரைப்பது உலகவழக்கு.
அவ்வேடரிலொருவனையும், 
விலங்குகளிலொருவனையும்,
அரக்கரிலொருவனையும், தன்உடன்பிறப்பாக்கி,
மானுட உயர்வுகாட்டி நிற்கிறான் கம்பராமன்.
🚣🏿 🚣🏿 🚣🏿
குகன், சுக்கிரீவன், வீடணன் ஆகிய மூவரையும்,
உடன்பிறப்பாய் ஏற்ற செய்தி,
வீடணனைச் சகோதரனாய் இராமன் ஏற்கும் பாடலில்,
ஒருமித்துச் சொல்லப்படுகிறது.
இப்பாடலில் பிரச்சினைக்குரியதான இரு சொற்களை,
கம்பன் அமைத்திருக்கிறான்.
மீண்டும் ஒருதரம் அப்பாடலைக் காணலாம்.

'குகனொடும் ஐவரானேம் முன்பு பின் குன்று சூழ்வான் 
மகனொடும் அறுவரானேம் எம்முழை அன்பின் வந்த 
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவரானேம் 
புகல் அருங்கானந்தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை'


இப்பாடலின் முதலடியில் வரும்,
'முன்பு, பின்' எனும் இருசொற்களும்,
பாடற்கருத்துக்குத் தேவையின்றி இடப்பட்டுள்ளன.
அவ்விருசொற்களைவிட்டுப் பாடலைப் பார்த்தாலும்,
பாடற்பொருளில் தவறேற்படப்போவதில்லை.

'குகனொடும் ஐவரானேம் குன்று சூழ்வான் 
மகனொடும் அறுவரானேம் எம்முழை அன்பின் வந்த 
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவரானேம் 
புகல் அருங்கானந்தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை'


அவ்விரு சொற்கள் எடுக்கப்பட்ட நிலையிலும்,
பாடற்கருத்து முழுமையுற்றிருப்பது தெளிவாகிறது.
அங்ஙனமாயின்,
அவ்விருசொற்களையும் இப்பாடலில் கம்பன் இட்டதேன்?
கேள்வி சிந்திக்கச் செய்கிறது?
🚣🏿 🚣🏿 🚣🏿
(தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்