'ஞானவதி' : பகுதி 01 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ளம் அதிரும்படியாகக் கணவன் சொன்ன வார்த்தை கேட்டும்,
ஞானவதியின் முகத்தில் பெரிதாய் எந்த மாறுதலும் இல்லை.
அவள் மௌனமாய்த் தலைகவிழ்ந்து நிற்கிறாள்.
வேறு பெண்களாக இருந்திருந்தால்,
திருநீலநக்கரின் சபதம் கேட்டு அதிர்ந்திருப்பார்கள்.
ஆனால் ஞானவதியோ கணவரின் சபதம் கேட்டும்,
பிரதிபலிப்பு ஏதுமின்றி அசையாது நின்று கொண்டிருக்கிறாள்.
அவள் முகம் சாந்த சொரூபமாகவே காட்சி தருகிறது.
 
⚜️ ⚜️ ⚜️
 
தன் மனைவியாகிய ஞானவதியின் முகம் பார்க்க விரும்பாமல், 
திருநீலநக்கர் வேறு திசையில் பார்த்துக் கொண்டிருக்க,
கோபத்தால் சிவந்த அவர் கண்கள்,
இன்னும்கூட நிறம் மாறாமல் அப்படியே இருக்கின்றன.
நடந்த சம்பவத்தால் உண்டான அதிர்வு,
அவர் உடலில் இன்னும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. 
இறைவர்க்கு எத்துணை அபகீர்த்தி ஏற்பட்டுவிட்டது என்பதை நினைத்து,
அவர் மனதில் ஏற்பட்ட துன்பம் மாறுவதாயில்லை.
இத்தனைக்கும் அந்தப் பாவச் செயலைச் செய்தவள்,
தன் மனைவிதான் என்று நினைத்தபோது,
அவரின் கோபம் எல்லையின்றிப் பெருகுகிறது.
 
⚜️ ⚜️ ⚜️
 
'இனி என்வாழ்நாளில் மனைவியாய் நினைந்து,
உன்னை ஒருநாளும் தீண்டமாட்டேன் இது சத்தியம்!' என்று,
தான் கடும் சபதம் செய்தபோதும்,
அதனால் எந்தப் பாதிப்பும் உறாதவள் போல்,
மௌனித்து நிற்கும் ஞானவதியைக் காணக் காண,
திருநீலநக்கரின் மனதில் எரிச்சல் பெருகுகிறது.
 
⚜️ ⚜️ ⚜️
 
திருநீலநக்கரும், அவர் மனைவி ஞானவதியும்,
திருமணமான நாள் முதல் ஒருவர் மனதை ஒருவர் எள்ளளவும் நோகச் செய்ததில்லை.
நாளுக்குநாள் காதல் பெருக வாழ்ந்த இலட்சியத் தம்பதியர்கள் அவர்கள்.
இன்று காலை நடந்த அந்தச் சம்பவம்தான்,
'உன்னைத் தீண்டேன்' எனச் சபதம் இடுகிற அளவுக்கு,
அவரைக் கோபமுறச் செய்தது.
தெரியாமல் நடந்து விட்ட அந்தச் சம்பவத்தால் கணவர் அடைந்த கோபத்தை,
எப்படிச் சமாதானம் செய்வது எனத் தெரியாமல் திகைத்து நிற்கிறாள் ஞானவதி.
 
⚜️ ⚜️ ⚜️
 
இன்று காலை அச்சம்பவம் நடைபெறும் வரை,
தானும் தன் கணவரும் ஒருவர்மேல் ஒருவர் கொண்டிருந்த காதலை,
நினைத்துப் பார்க்கிறாள் அவள்.
எவரின் கண்பட்டதோ காலையில் நடந்த அச்சம்பவத்தால்,
தன் குடும்பம் பிரியும் அளவுக்குப் போனதை நினைந்து ஞானவதி கலங்குகிறாள்.
அவள் மனதுள் இறந்தகால நினைவுகள் மெல்ல விரிகின்றன.
 
⚜️ ⚜️ ⚜️
 
அந்தணரான திருநீலநக்கரின் கைபிடித்து,
சோழநாட்டின் 'திருச்சாத்தமங்கை' எனும் ஊருக்கு,
வந்தது நேற்றுப்போல் இருக்கிறது.
கணவர் தன்மேல் காட்டிய காதல், நேசம் எல்லாவற்றையும் கடந்து,
அவர் சிவன்மேல் கொண்டிருந்த பக்தியால்,
தான் ஈர்க்கப்பட்டதை நினைத்துப் பார்க்கிறாள் ஞானவதி.
பிறந்தநாள் தொட்டு தன் இல்லத்தில்,
தந்தை, தாயரைப் பின்பற்றித் தானும் சிவவழிபாட்டில் மூழ்கிய சம்பவங்கள் எல்லாம்,
அவள் மனதில் காட்சிகளாய் விரிகின்றன.
 
⚜️ ⚜️ ⚜️
 
திருமணம் நிச்சயமானதாய்ச் சொல்லப்பட்டதும்,
வரப்போகும் கணவர் எப்படி இருப்பார்? என்றுகூட நினையாமல்,
புகுந்த வீட்டிலும் இங்கு போலவே தன்னால் சிவவழிபாடு இயற்றமுடியுமா? 
என்ற கவலை உதித்ததை இப்போதுகூட அவளால் மறக்கமுடியவில்லை.
திருமணமாகிப் புகுந்த வீடு வந்ததும்,
அங்கிருந்தவர்கள் தங்கள் இல்லத்தைவிட அதிக ஈடுபாட்டோடு,
சிவவழிபாட்டை இயற்றுவதைக் கண்டு தான் மகிழ்ந்ததையும்,
அதனால் புகுந்தவீடு தனக்கு நிரம்பப் பிடித்துப் போனதையும்,
மனதுள் மீட்டிக் கொள்கிறாள் அவள்.
 
⚜️ ⚜️ ⚜️
 
நாட்கள் செல்லச் செல்லத்தான் பிறந்த வீட்டின் வழிபாட்டிற்கும்,
புகுந்த வீட்டின் வழிபாட்டிற்கும் இடையில் இருந்த வேற்றுமையை அறிந்து,
தான் சற்றுக் குழம்பியதையும் அவள் மனம் நினைத்துப் பார்க்கிறது.
தன் பிறந்த வீட்டில் சரியை, கிரியை எனும் நிலைகளைக் கடந்து,
யோக, ஞானமார்க்கத்தை ஏற்றுத் தன் தாய், தந்தையர்கள் வழிபாடு செய்வதையும்,
புகுந்த வீட்டிலோ சரியை, கிரியை நெறிகளைக் கடக்க விரும்பாமல்,
பிடிவாதமாய் அவர்கள் வழிபாடு செய்வதையும் அறிந்து,
முதலில் தான் மருட்சி அடைந்தது ஞானவதியின் நினைவில் வருகிறது.
 
⚜️ ⚜️ ⚜️
 
திருநீலநக்கர் தன்னைத் தனியே விட்டுவிட்டு வீடுநோக்கி செல்லத் தொடங்க, 
ஞானவதியின் எண்ண ஓட்டம் தடைப்படுகிறது.
ஏதும் பேசாமல் அவளும் அவரைப் பின் தொடர்கிறாள்.
இல்லம் சேர்ந்ததும் அவரின் கோபம் தணியலாம் என எதிர்பார்த்தவளுக்கு,
பெருத்த ஏமாற்றம்.
ஆலயத்தில் இட்ட சபதத்தின்படியே,
தன்னை யாரோ மூன்றாவது மனுஷியாய் நினைந்து,
நடந்து கொள்ளும் கணவனாரின் செய்கையை ஜீரணிக்க முடியாமல்,
அவள் மனம் தத்தளிக்கிறது.
 
⚜️ ⚜️ ⚜️
 
இரவு வர வழமையான படுக்கையைவிட்டு,
வேற்றிடத்தில் சென்று படுக்கும் கணவனின் செயலால்,
மனம்வாட, தனித்துக் கிடக்கிறாள் ஞானவதி.
மீண்டும் அவள் மனதில் எண்ண ஓட்டங்கள்.
அப்படி என்னதான் நடந்துவிட்டது என்று இவர் இப்படிக் கோபிக்கிறார்.
நடந்த அச்சிறிய சம்பவத்திற்கு இத்தனை கோபமா?
ஞானவதியின் கடைக்கண்களில் நீரோட்டம்.
காலையில் நடந்த சம்பவத்தை,
அவள் மனம் மீண்டும் அறிவில் பதிவு செய்கிறது.
 
⚜️ ⚜️ ⚜️
 
(ஞானவதி தொடர்ந்து வருவாள்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்