'ஞானவதி' : பகுதி 02 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

யர் அந்தண குலத்தில் தோன்றிய கணவர்,
தன் குலவழக்கிற்கு ஏற்பச் சிவன்மேல் எல்லையற்ற காதல் கொண்டிருந்ததையும்,
கிரியைநெறியில் அவர் எல்லையில்லாத பற்றுக் கொண்டிருந்ததையும்,
ஆகமமுறைப்படியான பூசை அநுட்டானங்களைப் பேணுவதில்,
அவர் கடுமையான அக்கறை கொண்டிருந்ததையும்,
நஞ்சினை மிடற்றில் வைத்த சிவனார்மேல் பேரன்பு பூண்டதால்,
அவரை நீலநக்கர் என்று உலகம் போற்றியதையும்,
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தன் கணவரின் அன்புக்கு ஆட்பட்டு,
தம் இல்லம்வரை வந்து சென்றதையும்,
ஞானவதியின் மனம் மீட்டிப் பார்க்கிறது.
 
🌾 🌾 🌾
 
எங்கோ கேட்ட ஒரு சாக்குருவியின் அலறல் ஓசை,
ஞானவதியின் எண்ணங்களைக் கலைக்கின்றது.
வானில் தெரிந்த நட்சத்திரங்களை வைத்து நேரத்தைக் கணித்து,
காலம் நடுச்சாமத்தைக் கடந்துவிட்டதை உணர்கிறாள் அவள்.
சிறிது நேரத்தில் கோபம் தணிந்து,
கணவர் தன் அருகில் வருவார் என நினைத்திருந்தவளுக்கு,
மனத்தினுள் பெருத்த ஏமாற்றம்.
தன்னை முற்றாக மறந்து, ஆழ்ந்த துயிலில் இருக்கும் கணவரைக் காண,
உண்மையிலேயே அவர் தன்னைத் துறந்துவிடுவாரோ! எனும் அச்சம்,
அவள் உயிர்வரை சென்று வருத்துகிறது.
தூக்கம் வராமல் மறுபக்கமாய்ப் புரண்டு படுக்கிறாள் அவள்.
மீண்டும் அவளது எண்ணக் குதிரைகள் ஓடத் தொடங்குகின்றன.
 
🌾 🌾 🌾
 
கணவனார் இன்று காலை திருவாதிரை வழிபாட்டிற்காக,
தன் பூசையை முடித்துவிட்டு,
'அயவந்தி' எனும் திருக்கோயிலில் வீற்றிருக்கும்,
சிவனை வழிபடலாம் என தன்னை அழைத்ததையும், 
மூதாட்டியான தன் மாமியாரும்,
'பிள்ளாய் எப்போதும் வீட்டு வேலைகளையே செய்து கொண்டிருக்கிறாய்,
அவனோடு நீ எங்கும் செல்வதில்லை. 
இன்றேனும் அவனோடு சென்று சிவனை வழிபட்டு வா!' என்று,
தாய்மையோடு சொன்னதையும் நினைத்துப் பார்க்கிறாள் ஞானவதி.
 
🌾 🌾 🌾
 
ஞானவதியின் உள்ளத்தில் ஏற்பட்ட களிப்பிற்கு அளவேயில்லை.
மாட்டுப் பெண்களை மாடாகவே நினைத்து வேலை வாங்கும் மற்றையவீடுகளில் இருந்து,
தன் புகுந்தவீடு எவ்வளவு மாறுபட்டிருக்கிறது என்று நினைத்து அவள் உள்ளம் நெகிழ்கிறது.
தன் மகள்போல நினைந்து கணவனாருடன் தன்னைக் கோயிலுக்குப் போய் வரும்படி வலியுறுத்தும்,
மாமியாரில் தன் தாயின் வடிவம் தெரிய அவள் கண்கள் கசிகின்றன.
மாமியார் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு,
நொடிக்குள் உடைமாற்றி, பூசைப் பொருட்கள் அனைத்தையும் கையில் எடுத்துக் கொண்டு,
கணவரின் அடிபற்றி நடக்கத் தொடங்குகிறாள்
 
🌾 🌾 🌾
 
அவ் ஆலயத்திற்கு மனைவியுடன் சென்ற திருநீலநக்கர்,
மெய்யுருகும் அன்போடு இறைவன் வீற்றிருக்கும் கருவறையினுள் சென்று, 
தன் பூசையைத் தொடங்குகிறார்.
ஞானவதி அருகிருந்து பூசைப் பொருட்களை வரிசைப்படி எடுத்துத்தர,
தன் வழமைப்படி பூசையைச் செய்ய ஆரம்பிக்கிறார்.
 
🌾 🌾 🌾
 
திருநீலநக்கரின் பூசை தொடர்கிறது.
யோக, ஞான நிலைகளை உணர்ந்திருந்தாலும்,
அவளுக்கும் கிரியா வழிபாட்டில் ஈடுபாடு இருந்ததால்,
ஞானவதியும் கணவனாரின் பூசையில் மனதைப் பறிகொடுத்து நிற்கிறாள்.
பூசை முடியும் நேரம், கருவறையின் மேல் பகுதியில் நின்றிருந்த ஒரு சிலந்தி,
கால் வழுகி சிவலிங்கத்தின் மேல் தொப்பென விழுகிறது.
அக்காட்சியைத் தம்பதியர் இருவரும் கண்டு திகைக்கின்றனர்.
 
🌾 🌾 🌾
 
லிங்கத்தின் தூய்மை கெடாது,
அச்சிலந்தியை எப்படி அப்புறப்படுத்துவதென,
திருநீலநக்கனார் சிந்திக்கத் தொடங்க,
இறையை உறவாக நினைத்த ஞானவதி,
தன் குழந்தைமேல் சிலந்தி விழுந்தாற்போல் உணர்ந்து பதறி,
எந்தச் சிந்தனையும் இல்லாமல் உடனடியாக,
தன் வாய் எச்சிலும் சிதறும்படியாக அச்சிலந்தி மேல் வேகமாய் ஊதுகிறாள்.
மனைவியின் அச்செயல் கண்டு மருண்ட திருநீலநக்கரின் மனம்,
கோபத்தால் குமுறுகிறது.
எண்ண ஓட்டத்தில் மனம் லயித்திருந்த ஞானவதி,
மீண்டும் திடுக்கிட்டு நிமிர்கிறாள். 
 
🌾 🌾 🌾
(ஞானவதி தொடர்ந்து வருவாள்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்