'ஆகமம் அறிவோம்' பகுதி 18: "சில சிரார்த்த விதிகள்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ங்களுக்கு, முக்கியமாக ஒன்றை நான் சொல்லவேண்டும்.
நான் எழுதும் இவ் 'ஆகமம் அறிவோம்' எனும் தொடரைப் படிப்பவர்களில் சிலர்,
நான் ஆகமங்களைக் கரைகண்டவன் என்று நினைப்பீர்கள்.
அந்த உங்கள் எண்ணம் தவறாம். 
ஆகம நூல்கள் பற்றிய மிக சொற்ப அறிவினையே நான் பெற்று வைத்திருக்கிறேன்.
அப்படியானால் இதுவரை நீங்கள் எழுதியதெல்லாம் வெறும் ஏமாற்று வேலைதானா?
கேட்க நினைப்பீர்கள், அப்படியும் இல்லை.
நூற்பிரமாணங்களோடு இருக்கிற விடயங்களைத்தான் நான் இத்தொடரில் எழுதி வருகிறேன்.
படித்து எழுதுவது வேறு, ஆட்சி பெற்று எழுதுவது வேறு.
நான் இத்தொடரில் எழுதுபவை படித்து, தேடி எழுதுபவையேயாம்.
 
🌷 🌷 🌷
 
இதுபற்றி முன்னர் பல நூல்களை எழுதியிருக்கும்,
அமரர் அச்சுவேலி குமாரசுவாமிக்குருக்கள் போன்ற பெரியவர்கள்,
தமது அறிவு நிலையில் நின்றே தம் நூல்களைப் படைத்திருக்கின்றனர்.
இன்றைய சமுதாயத்திற்கு அவர்கள் எழுதிய விடயங்களை,
வாசித்து, விளங்கும் அறிவுதானும் இல்லை என்பது திண்ணம்.
அதனால்த்தான் அவர்தம் நூல்களை அடிப்படையாய்க் கொண்டும்,
என் கைக்குக் கிடைத்த தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட,
ஆகம நூல்கள் ஓரிரண்டைப் படித்துமே,
இக்கட்டுரைத் தொடரை எழுதிவருகிறேன்.
 
🌷 🌷 🌷
 
ஐயங்கள் வருகிறபொழுது வேறு பல நூல்களில் தேடியும்,
திருப்பரங்குன்றம் சிவஸ்ரீ கார்த்திகேய சிவாச்சாரியார் போன்றவர்களிடம் கேட்டும்,
சரியான விடைகளைப் பெற்ற பின்பே அவற்றை இக்கட்டுரையில் பதிவு செய்கிறேன்.
தயைகூர்ந்து இவ் உண்மைகளைத் தெரிந்து கொண்டே,
இக்கட்டுரைத் தொடரில் பயணிக்கவேண்டும் என,
வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
 
🌷 🌷 🌷
 
கடைசியாக சிரார்த்தங்கள் பற்றிய சில விபரங்களைச் சொல்லி வந்தேன்.
அவை பற்றி வேறும் சில விடயங்கள் கிடைத்திருக்கின்றன.
அவற்றை இம்முறை இங்கு பதிவு செய்யவிரும்புகிறேன்.
 
🌷 🌷 🌷
 
ஸ்நானம் செய்தவர்களுடைய பாவங்களை நீக்கி,
அவர்களுக்கு வீடுபேறு உதவுவதற்காகவும், 
புண்ணிய காலங்களிலே தென்புலத்தாரைக் குறித்து,
தருப்பணம் முதலியவற்றைச் செய்து,
அவர்களைப் பிறவியாகிய சமுத்திரத்தில் இருந்து கரையேற்றுவதற்காகவும்,
சிவபெருமான் தமது திருவருளையே,
தீர்த்தங்களின் வடிவமாக்கி வழங்கினர் என்று நூல்கள் கூறுகின்றன.
தீர்த்தக்கரைகளில் சிரார்த்தங்களை செய்வதன் முக்கியத்துவத்தை,
இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
 
🌷 🌷 🌷
 
தர்ப்பணம் செய்யும் போது, 
இடத்தோளிலிருந்து வலப்பக்கம் அணியும் பூணூலைத் தரித்தவனாய்,
கைகளில் தருப்பையைக் குறுக்காகப் பிடித்து,
அத்தருப்பை மூலத்திலிருந்து (தொடக்கத்திலிருந்து),
சுட்டுவிரல், பெருவிரல் ஆகியவற்றின் மூலத்தால், 
விழும் எள்ளு நீரைக்கொண்டு,
'சுவாஹா' எனும் தொடரை முடிவாகக்கி,
பிதிர் நாமங்களைச் சொல்லித் திருப்தி செய்தல் வேண்டும்.
தருப்பணத்தின் முடிவிலே,
'என்குலப் பிதிர்களே, பூமியில் விடப்பட்ட இந்த நீரினால்,
நற்கதியையும் திருப்தியையும் அடையுங்கள்' என்று சொல்லி,
தருப்பையை எள்ளுடன் ஏதேனும் நீர்க்கரையில் போடுக என,
நூல்கள் சொல்கின்றன.
 
🌷 🌷 🌷
சிரார்த்த காலத்தில் 'துடக்கு' ஏற்பட்டால் செய்யும் விதி
 
பிறப்பு, இறப்புத் துடக்குக் காலங்களிலே சிரார்த்தம் வந்தால்
துடக்கு நீங்கும் தினத்திலேயே சிரார்த்தம் செய்தல் வேண்டும். 
விதவை, தான் வீட்டுக்கு விலக்காயிருக்கும்போது,
தன் கணவனுடைய சிராத்த தினம் வந்தால்,
ஐந்தாம் நாள் சிரார்த்தம் செய்தல் வேண்டும்.
சிரார்த்தத்திற்கான சமையல் செய்யத் தொடங்கியபின்
ஒருவருக்குத் துடக்குவருமானால்,
அச்சிரார்த்தம் முடியும் வரையும் அத்துடக்கு,
சிரார்த்தம் செய்பவரைப் பற்றாது என்பது நூல்கள் கூறும் முடிவு.
 
🌷 🌷 🌷
 
ஒருவர் மறைந்த காலவிபரம் தெரியாத போது?
🏺ஒருவர் இறந்த மாதம் தெரியாமல் தினம் மாத்திரம் தெரிந்தால், 
ஆடி, மாசி, மார்கழி, புரட்டாதி என்னும் மாதங்களுள்,
ஏதேனும் ஒன்றில் வரும் அத்தினத்தில் சிரார்த்தம் செய்க! என்றும்
 
🏺இறந்தநாள் தெரியாமல் மாதம் தெரிந்தால், 
அம்மாதத்தில் வரும் அமாவாசையில் அல்லது,
தேய்பிறை அட்டமியிலோ, தேய்பிறை ஏகாதசியிலோ சிரார்த்தம் செய்க! என்றும்,
 
🏺பட்சம் தெரியாதாயின் தேய்பிறையில் சிரார்த்தம் செய்க! என்றும்,
 
🏺இறந்தமாதம், பட்சம், திதி இவைகளுள் ஒன்றும் தெரியாதாயின், 
இறந்த செய்தி கேள்விப்பட்ட மாதத்து அமாவாசையில் சிரார்த்தம் செய்க! என்றும்,
 
🏺தாய், தகப்பன் இருவருக்கும் ஒரே நாளில் சிரார்த்தம் வந்தால்,
ஒன்றாக சமையல் செய்து இரு சிரார்த்தங்களையும் செய்க! என்றும்,

'கால ஆதர்சம்' முதலிய நூல்கள் கூறுகின்றன.
 
🌷 🌷 🌷
சற்பாத்திரர் யார்?

இறை சாத்திரங்களை ஓதி அதன் பொருளை அறிந்து,
பாவங்களை விலக்கித் தருமங்களை அநுட்டித்து,
கடவுளை மெய்யன்போடு வழிபடுவோரும், 
தம்மைப் போலப் பிறரும் உயர்கதிபெற்று உய்யவேண்டும் என்று கருதி,
அவருக்கு நன்னெறியைப் போதிப்பவருமாய் உள்ளவரே சற்பாத்திரர் எனப்படுவர். 
இத்தகைய சற்பாத்திரர் என்று சொல்லப்படும் அந்தணருக்கே,
சிரார்த்த காலத்தில் தானம் முதலியவற்றை வழங்கவேண்டும் என்பது விதியாம்.
 
🌷 🌷 🌷
அசற்பாத்திரர் யார்?
 
சிரார்த்தம் முதலிய தானங்களை,
ஒழுக்கமற்ற பிராமணருக்கு கொடுத்தல் கூடாது.
குருடரும், செவிடரும், ஊமையும், உறுப்புக்குறைந்தவரும், 
கோள் சொல்லுபவரும், பொறாமை கொள்ளுபவரும், 
குண்டகரும் (விபச்சாரி பெற்ற மகன்), 
கோளகரும் (விதவை பெற்ற மகன்), 
பதி சாஸ்திரத்தில் விருப்பில்லாதவரும், 
சிவநிந்தை, குருநிந்தை, சிவனடியார் நிந்தை, சிவ சாஸ்திர நிந்தை செய்பவரும்,
ஆசாரம் இல்லாதவரும், குரூரரும், விபச்சாரம் செய்பவரும், 
வைத்தியம் செய்பவரும், வாணிபம் செய்பவருமாகிய இவர்களே அசற்பாத்திரர் ஆவர்.
இவர்களைக் கொண்டு பிதிர் காரியங்களைச் செய்வித்தல் குற்றமாகும். 
அசற்பாத்திரருக்குக் கொடுத்தவர்கள், 
காயாத மண் பாத்திரத்தில் விட்ட நீரைப்போல,
தாம் செய்த தானத்தின் பலத்தை இழப்பர்.
அன்புடன் கொடுத்த தானங்களைத் திருப்தியுடன் ஏற்காதவர்களும் அசற்பாத்திரரேயாம்.
இச் செய்திகளை சுவாயம்பு ஆகமம், காரண ஆகமம் முதலியவற்றில் காணலாம்.
 
🌷 🌷 🌷
சிரார்த்த யோக்கியரை நியமித்தல்
 
சிரார்த்தம் செய்பவர் சிரார்த்தத்தின் பொருட்டு,
முதல் நாளயினும் அல்லது சிரார்த்த தினத்திலாயினும்,
யோக்கியர்களாகிய பிரமாணர்களை அடைந்து வணங்கி,
'அடியேன் செய்கின்ற சிரார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அருள் செய்க,
யான் இவ்விரதத்தின் வழியில் நிற்பேன்' என்று பிரார்த்தித்து,
அவர்களை சிரார்த்த யோக்கியராய் நியமித்தல் வேண்டும். 
சிவசத்தியின் அதிட்டிப்பால் பிதிர்தேவர்கள் அப் பிராமணர்கள்பால் சேர்ந்து நின்று,
அச்சிரார்த்தத்தை ஏற்று அருள் செய்வார்கள்.
அவ்வகையில் 
விசுவதேவர் (தேவ சாதி வகையினர்) பொருட்டு இருவரையும்,
பிதிரர் பொருட்டு மூவரையும் நியமித்தல் வேண்டும். 
அறிந்த விருந்தினர் (அதிதி) அறியப்படாத விருந்தினர் (அப்பியாகதர்) 
எனும் இவர்களின் பொருட்டும் இருவரையும் நியமித்தல் வேண்டுமாம்.
 
🌷 🌷 🌷
 
சிரார்த்த யோக்கியர் இத்தொகையினர் கிடையாதவழி,
விசுவதேவர் பொருட்டு ஒருவரையும்,
பிதிர்கள் பொருட்டு ஒருவரையும் வருவித்தல் வேண்டுமாம்.
இருவரும் கிடையாத  இடத்து,
விசுவதேவர்களையும், பிதிர்களையும் கூர்ச்சங்களிலே (தர்ப்பை முடிச்சு),
முறையாலே பூசைசெய்து பிண்டமிட்டு,
இயன்ற தட்சணையை வேறு இடத்திலுள்ள,
தெரிந்த சிரார்த்த யோக்கியரை நினைந்து நீர் வார்த்துக் கொடுக்க வேண்டும். 
பின்னர் அத்தட்சிணையைத் தப்பாமல் அவரிடத்தே கொண்டுபோய்க் கொடுத்தல் வேண்டும். 
அவர் இறந்திருந்தால் அவரது புத்திரரிடத்துக் கொடுக்கவேண்டும்.
அவருக்குப் புத்திரர் இல்லாவிடின் தேவாலயத்துக்கு அதனைக் கொடுத்தல் வேண்டும்என்று,
நூல்கள் கூறுகின்றன.
 
🌷 🌷 🌷
 
சிரார்த்தத்திற்கு நியமிக்கும்போது, 
பிதிரர் பொருட்டு ஆசாரியரையும் (மூன்று தீட்ஷைகளும், ஆச்சாரிய அபிஷேகமும் பெற்றவர்), 
விசுவதேவர் பொருட்டுச் சாதகரையும் (மூன்று தீட்ஷை பெற்றவர்) நியமிக்க. 
ஆசாரியரும், சாதகரும்  கிடையாதபொழுது, 
சமய, விசேட தீட்ஷை மட்டும் பெற்றதால் 'புத்திரர்' என்று அழைக்கப்டுகின்ற ஒருவரை நியமிக்கலாம்.
அவரும் கிடைக்காத போது சமயியையாவது (சமயதீட்ஷை பெற்றவர்) நியமிக்கலாம்.
பிதிரர் பொருட்டு, இறந்தவரை விட உயர்ந்த தீட்ஷை உடையவரை,
அல்லது அவரோடு ஒத்த தீட்ஷை உடையவரைத்,
தப்பாது நியமித்தல் வேண்டுமாம்.
 
🌷 🌷 🌷
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்