'நன்மை பெற புத்தாண்டு எழுக மாதோ'! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

 
🎉 🔔 🎉 🔔 🎉 🔔 🎉 🔔
லகமெலாம் அன்பதனால் நிறைந்து நல்ல
ஒப்பற்ற பெருமைகளைக் காணவேண்டும்
திலகமென நம் தேசம் ஒளிர்ந்து இந்த
திகழ் இந்துமா கடலின் முத்தாய் மாறி
பலர் புகழப் பெருமைதனைக் கொள்ள வேண்டும்
பாரெல்லாம் பகை ஒழிந்து உறவு பொங்க
நலம் திகழும் சோதரராய் உலக மாந்தர்
நன்மை பெற புத்தாண்டு எழுக மாதோ!

புத்தாண்டு பிறக்கையிலே அனைவர் நெஞ்சும்
புறப்பகையும் அகப்பகையும் ஒழிந்து நல்ல
சத்தான நெறியதனைப் பேணி நிற்க
சகம் முழுதும் நன்மையது செழிக்கவேண்டும்
வித்தான தீமையெலாம் வீழவேண்டும்
விறலோடு மனிதர் அறம் பேணவேண்டும்
இத்தோடு தீயரெலாம் ஒழிந்தார் என்றே
இனிய ஒரு பொற்காலம் பிறக்கவேண்டும்.

விஞ்ஞானக் கருவிகளும் மனிதர் தம்மை
விழுங்குகிற பெருநாசம் தொலையவேண்டும்
பஞ்சாக மனிதர்களைப் பறக்கச் செய்யும்
பணத்தாசை எல்லையுற பண்பால் ஓங்கி
மெஞ்ஞானம் வளர்ந்திடவே மெல்ல மெல்ல
மேன்மைமிகு உயர்வெல்லாம் கிடைக்கவேண்டும்
அஞ்ஞானம் ஒழிந்தேதான் அவனியெங்கும்
அருள் மழையும் பொழிந்திடுக! புதிய ஆண்டில்.

எல்லோர்க்கும் என இறைவன் படைத்த இந்த
எழில் உலகை மனிதமனக் கீழ்மை தன்னால்
வல்லோர்கள் தம் கையில் எடுத்து நாளும்
வகை வகையாய்ப் பிரித்தே தம் உரிமை பேசி
மல்லாண்டு நல்லுலகை அழித்து நின்றார்
மானுடத்தை மனம் நோகச் சிதைத்து நின்றார்.
பொல்லாத அவர்தாமும் திருந்தி இந்தப்
புத்தாண்டில் உயர்ந்திடவே வேண்டி நிற்போம்.

மதத்தாலும் மொழியாலும் பிரித்து நல்ல
மானுடத்தைச் சிதைத்தேதான் மருட்சி செய்வோர்
விதைக்கின்ற தீமையெலாம் வீழவேண்டும்
விண்ணார்ந்து மனிதகுலம் ஓங்கவேண்டும்
சதிக்காக மக்களையே பிரித்து நிற்கும்
சண்டாள அரசியலார் திருந்தவேண்டும்
புதுக்காதல் அறம் நோக்கி புகுந்து பாய
புத்தாண்டில் அவராலும் நன்மை வேண்டும்.

வள்ளுவனார் வழி நின்று கம்பன் செய்த
வளமான காவியத்தைப் படித்து இந்த
நல்லுலகம் அறம் நோக்கி உயரவேண்டும்
நாளும் மண் விண்ணாக மாறவேண்டும்
எல்லையில்லா விரிந்த மனம் எவர்க்கும் வாய்த்து
இதயமெலாம் சங்கமிக்கும் உறவு வேண்டும்
புல்லரெலாம் திருந்திடவே கலியும் வீழ
புகழோடு கிருதயுகம் எழுக மாதோ!

🎉 🔔 🎉 🔔 🎉 🔔 🎉 🔔
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்