'கம்ப நாடகம்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகம் போற்றும் நம் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன்,
முத்தமிழ்த்துறைகளிலும் முறை போகிய உத்தமன்.
தன் காவியத்தில் இயற்றமிழ், இசைத்தமிழ் நுட்பங்களைப் போலவே,
நாடகத்தமிழின் நுட்பங்களையும் வியக்கும் வண்ணம் பதிவாக்கியுள்ளான்.
அங்ஙனம் கம்பனால் கையாளப்பட்ட,
நுட்பமிகுந்த நாடக உத்தி ஒன்றை இனங்கண்டு காட்டுவதே,
இக்கட்டுரையின் நோக்கமாம்.

🎭 🎭 🎭

நவீன நாடக வல்லுநர்கள், தம் நாடகப் பாத்திரங்களை,
தனித்துவமாய் இனங்காட்டி இரசிகர்தம் கவனிப்பில் கொண்டுவர,
குறித்தவொரு அங்கசேஷ்டையை, அப்பாத்திரத்தின் இயல்பாய்,
நாடகம் முழுவதிலும் காட்டுவதை ஓர் உத்தியாய்க் கையாள்கின்றனர்.
தலையைக் கோதுதல், விரலைச் சொடுக்குதல், 
கழுத்தை வளைத்து நெட்டி முறித்தல் என,
இன்றைய சினிமாத்துறையிலும்,
இவ் உத்தி பரவலாய்ப் பயன்படுத்தப்படுகிறது.
காவிய அமைப்பில் இந்த உத்தியை,
புலவர்கள் யாரும் கையாண்டதாய்த் தெரியவில்லை.
இவர்களிலிருந்து வேறுபட்டுத் தன் காவியத்துள்,
மேற்சொன்ன தனித்துவ அங்கசேஷ்டையை,
ஒரு பாத்திரத்தில் பொருத்தி,
அன்றே கம்பன் காட்டியிருப்பது விந்தையாம்.
கம்ப காவியம்,
கம்ப நாடகமாய் நின்று நிலைப்பதற்கு,
கம்பன் உள்வாங்கிய இத்தகு நாடக உத்திகளும் காரணமாயின போலும்.
குறித்த பாத்திரத்தில் இவ்வுத்தியைக் கம்பன் அமைத்த திறத்தினை இனிக்காண்பாம்.

🎭 🎭 🎭

இந்திரசித்தன்

இராவணன்தன் மூத்த மைந்தன் இவன்.
இந்திரனைச் சிறைப்பிடித்து வந்ததால்,
மேகநாதன் எனும் அவன் இயற்பெயர் ஒழிந்து,
இந்திரசித்தன் எனும் காரணப்பெயரே அவனது புகழ்ப்பெயராய் நிலைத்துப் போயிற்று.
'வில்லாளரை எண்ணின், விரற்கு முன்நிற்கும் வீரன்'
எனப் புகழப்படும் இப்பாத்திரத்தை அமைக்கும் கம்பன்,
அப் பாத்திரத்தின் இயல்பாய் குறித்த ஒரு அங்கசேஷ்டையை,
அறிமுகத்திலிருந்து முடிவு வரை திட்டமிட்டு அமைத்திருப்பது விந்தையிலும் விந்தையாம்.
உணர்ச்சி வயப்படும் போதெல்லாம் உதட்டைப் பற்களால் அதக்குதலை,
இப்பாத்திரத்தின் தொடர்ப்பழக்கமாய் அமைத்துக் காட்டுகிறான் கம்பன்.
அவன் காட்டும் ஆரம்ப இடத்தைக் காண்பாம்.

🎭 🎭 🎭

சுந்தரகாண்டம்

சீதையை சந்தித்து தூதுரைத்த பின் அனுமன்,
இராவணனைச் சந்திக்கும் உள்நோக்கத்தோடு,
அசோக வனத்தை அழிக்கிறான்.
அவனைப் பிடிப்பதற்காய் அரக்கர் பலர் முயன்று தோற்கின்றனர்.
அனுமனைப் பற்றுவதற்காய் வந்த,
இராவணனின் புதல்வன் அக்ககுமாரன் அழிந்து போகிறான்.
தன் தம்பி இறந்தது கேட்டு,
கடுங் கோபத்துடன் போருக்கு எழுவதாய்,
இந்திரசித்தனின் பாத்திர அறிமுகம் நிகழ்கிறது.
இவ்வறிமுகத்திலேயே மேற்குறித்த அவ் அங்கசேஷ்டையை,
இந்திரசித்தனின் இயல்பாய்ச் சுட்டுகிறான் கம்பன்.

🎭 🎭 🎭

அக்ககுமாரன் இறந்தது கேட்டுக் கோபத்தினால் உணர்ச்சி மேலிட,
தன் உதடு மடித்துக் கடித்துச் சிரிக்கிறானாம் இந்திரசித்தன்.
இங்ஙனமாய் அவனை அறிமுகம் செய்கிறான் கம்பனாடன்.

தம்பியை உன்னுந் தோறும் தாரை நீர் ததும்பும் கண்ணான்
வம்பு இயல் சிலையை நோக்கி, 'வாய் மடித்து உருத்து நக்கான்'
கொம்பியல் மாய வாழ்க்கைக் குரங்கினால், குரங்கா ஆற்றல்
எம்பியோ தேய்ந்தான்? எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது என்றான்.

இஃது இந்திரசித்தனின் அறிமுகக் காட்சி.

🎭 🎭 🎭

தம்பியை அழித்த அனுமனைப் பிடிப்பதற்காக,
போர்க்களம் புகுகிறான் இந்திரசித்தன்.
ஆற்றல் மிக்க தன் படைவீரர்களும், உறவினர்களும்,
இறந்து கிடப்பது கண்டு வருந்துகிறான்.
அவ் உணர்ச்சி வயப்பாட்டின்போது மீண்டும் அவனிடம்,
அதே அங்கசேஷ்டையைப் பதித்துக் காட்டுகிறான் கம்பன்.

கண் அனார் உயிரே ஒப்பார் கைப் படைக்கலத்தின் காப்பார்
எண்ணல் ஆம் தகைமை இல்லார், இறந்து இடைக் கிடந்தார் தம்மை
மண்ணுளே நோக்கி நின்று 'வாய் மடித்து உருத்து' மாயாப்
புண்ணுளே கோல் இட்டன்ன மானத்தால் புழுங்குகின்றான்.

இஃதே, மேற்சொன்ன அங்கசேஷ்டையை,
இந்திரசித்தனிடம் கம்பன் பதிவு செய்யும் இரண்டாம் இடம்.

🎭 🎭 🎭

இலங்கையை எரியூட்டி அனுமன் செல்ல,
மயனை அழைத்து இலங்கையைப் புதுப்பித்தபின்,
மந்திராலோசனை நடாத்துகிறான் இராவணன்
கும்பகர்ணன் ஆலோசனைப்படி,
இராம இலக்குவர் மேல் படையெடுத்துச் செல்வதாய்,
முடிவு செய்த இராவணனைத் தடுத்து,
தனித்து அவர்களை வென்று வருவேன் எனக்கூறி,
தந்தையின் அடியிறைஞ்சி கோப வயப்பட்டு நிற்கிறான் இந்திரசித்தன்.
அவ்வுணர்ச்சி வயப்பாட்டில் அவனிடம் மீண்டும் அவ் அங்கசேஷ்டை வெளிப்படுகிறது.

என்று அடி இறைஞ்சினன்,  எழுந்து 'விடை ஈமோ
வன்திறலினாய்' எனலும், வாள் 'எயிறு வாயில்
தின்றனன்' முனிந்து, நனி தீவினையை எல்லாம்
வென்றவரின் நன்று உணரும் வீடணன் விளம்பும்.

குறித்த இவ் அங்கசேஷ்டையை,
இந்திரசித்தனிடம் கம்பன் பதித்துக் காட்டும் மூன்றாமிடம் இது.

🎭 🎭 🎭

இராம, இராவண யுத்தம் தொடங்குகிறது.
யுத்தகளம் புகுந்த இராவணனின் புதல்வன் அதிகாயன்,
இலக்குவனின் நான்முகப் படையால் தலையறுபட்டு விழுகிறான்.
அதிகாயன் மாண்டான் என்பதறிந்து அரக்கியர் அழுது புலம்புகின்றனர்.
அவ்வழுகை கேட்டுக் கொதித்தெழும் இந்திரசித்தன்,
நடந்ததென்ன? என்று தந்தையிடம் வினவுகிறான்.
கும்ப, நிகும்பரொடு அதிகாயனும் விண்ணடைந்தான் என இராவணன் விபரமுரைக்க, 
கோபத்தால் உணர்ச்சி வசப்படுகிறான் இந்திரசித்தன்.
இவ்விடத்தில் மீண்டும் அவனிடம் அவ் அங்கசேஷ்டையை 
பொருத்திக் காட்டுகிறான் கம்பன்.

சொல்லாத முன்னம் சுடரைச் சுடர் தூண்டு கண்ணான்
'பல்லால் அதரத்தை அதுக்கி' விண்மீது பார்த்தான்
எல்லாரும் இறந்தனரோ என ஏங்கி நைந்தான்
வில்லாளரை எண்ணின் விரற்கு முன் நிற்கும் வீரன்

குறித்த அங்கசேஷ்டையை இந்திரசித்தனிடம்,
கம்பன் பதித்துக் காட்டும் நான்காம் இடமாம்.

🎭 🎭 🎭

இங்ஙனமாய் இந்திரசித்தனிடம்,
இவ்வியல்பை கம்பன் தொடர்ந்து காட்டியபோதும்,
இதனை அப்பாத்திரத்தின் சிறப்பியல்பாய் கொள்ளல் கூடுமா? என,
நம் மனதில் ஓர் ஐயம் தோன்றுகிறது.
இந்திரசித்தனிடம் இவ்வியல்பை கம்பின் திட்டமிட்டு அமைத்தானா?
அன்றேல் இது தற்செயலாய் அமைந்த ஒன்றா?
இதுவே நம்மனதில் தோன்றும் ஐயமாம்.

🎭 🎭 🎭

இவ் ஐயம் தோன்றுவதற்கு ஒரு காரணமும் உண்டு.
வாய் மடித்துக் கடித்தலை வீர உணர்ச்சியின் மெய்ப்பாடுகளில் ஒன்றாய்,
இலக்கணநூல்கள் உரைக்கின்றன.
எனவே, வீர உணர்ச்சி வெளிப்படும் இடங்களில்,
இந்திரசித்தனிடம் நிகழும் இந்த அங்கசேஷ்டையை, 
வீரத்தின் மெய்ப்பாடாய் மட்டும் கொள்ளாமல்,
குறித்த பாத்திரத்தின் தனி இயல்பாய்க் கொள்ளுதல் பொருந்துமா?
நவீன நாடக உத்தியின்படி ஓர் பாத்திரத்தை அடையாளப்படுத்தும் அங்கசேஷ்டையாய்,
இந்திரசித்தனின் இவ் இயல்பை,
கம்பன் திட்டமிட்டு அமைத்ததாய்க் கொள்ளல் கூடுமா?
நம்மனதில் கேள்விகள் பிறக்கின்றன.

🎭 🎭 🎭

கம்பனோ!
இந்திரசித்தனின் இவ் இயல்பை,
வெறுமனே வீரத்தின் மெய்ப்பாடாய் மட்டுமன்றி,
அப் பாத்திரத்தின் தனித்த இயல்பாய்க் காட்டுவதை,
பின்னால் உறுதி செய்கின்றான்.
இதழ்களை மடித்துப் பற்களால் கடிக்கும் பழக்கம்,
இந்திரசித்தனிடம் இயல்பாய் அமைந்திருந்த ஓர் பழக்கம் என்பதை,
நிறைவுக் காட்சியில் கம்பன் பதிவு செய்வதைக் காண்பாம்.

🎭 🎭 🎭

போர்க்களம்

இலக்குவனின் கணையால் இந்திரசித்தனின் தலை அறுபட்டு வீழ்கிறது.
தன் கணையால் அறுபட்ட இந்திரசித்தனின் தலையை,
இராமன் திருவடிகளில் கொண்டுவந்து வைக்கிறான் இலக்குவன்.
அவ்வாறு அவன் கொண்டு வந்து வைத்த இந்திரசித்தன்தன் உயிரற்ற தலையும்,
வாய் மடித்துக் கடித்த படியே கிடப்பதாய்க் கம்பன் காட்ட.
பிரமிக்கின்றோம் நாம்.

விழுந்து அழி கண்ணின் நீரும் உவகையும் களிப்பும் வீங்க
எழுந்து எதிர் வந்த வீரன் இணையடி முன்னர் இட்டான்.
கொழுத்து எழும் செக்கர்க் கற்றை வெயில் விட, 'எயிற்றின் கூட்டம்
அழுந்துற மடித்த பேழ் வாய்'த்தலை அடியுறை ஒன்று ஆக.

இறந்துகிடக்கும் இந்திரசித்தனின் தலை,
வாய் மடித்துக் கடித்துக் கிடப்பதாய்க்காட்டி,
பல்லால் வாய்மடித்துக் கடிக்கும் அவ் அங்கசேஷ்டை,
வெறுமனே வீரத்தின் மெய்ப்பாடு மட்டும் அன்று.
அது அவனது இயல்பான தனித்த வழக்கமே என,
நிரூபணம் செய்து விடுகிறான் கம்பன்.

🎭 🎭 🎭

இங்ஙனமாய் இன்றைய நாடகவியலாளர்கள் கடைப்பிடிக்கும் நாடக உத்தியை, 
தன் காவியப் பாத்திரத்தில் திட்டமிட்டு அமைத்து,
நாடகத்துறையிலும் தன் ஆற்றலைப் பதிவு செய்து,
வியத்தகு நாடக ஆசிரியனாய் நம் நெஞ்சம் நிறைகிறான் கம்பன்.
 

🎭 🎭 🎭

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்