"பாலை" : பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

லகின் வெவ்வேறுபட்ட இடங்களில்,
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பவை,
இயற்கையாய் அமைந்த நிலங்களாம்.
இப்பாலை நிலமோ இயற்கையாய் அமைந்த நிலம் அன்று.
அஃது செயற்கையாய் அமையும் நிலம். 
அதனால்தான் இயற்கை நிலவரிசையில் பாலை சேர்க்கப்படவில்லை.
செயற்கையான இப்பாலை நிலத் தோற்றத்தின் காரணத்தையும்,
தெளிவுற உரைத்தனர் நம் தமிழ்ச் சான்றோர்.
முல்லையும், குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
பாலை என்பதோர் படிவம் ஆகும்
என்பது,
அவர் உரைத்த சூத்திரம்.
🐪  🐪  🐪
மலையும் மலை சார்ந்த இடமும்,
காடும் காடு சார்ந்த இடமும்,
மழையின்மையால் வரண்டு மாற்றமுறும் நிலைமையே,
பாலை நிலமாம் என்பது அவர்தம் கணிப்பு.
வான் மழையின் தொடர்பற்று வறண்டு தாழ்வதாலும், 
செயற்கையாய் அமைவதாலும்,
இப்பாலை நிலம்,
நில வரிசையில் ஐந்தாவதாயிற்று.
இதனை ஆன்றோர் இடைநிலம் என்றே உரைத்தனர்.
🐪  🐪  🐪
நானிலங்களில்,
மருதம், நெய்தல் என்பவற்றைத் தவிர்த்து,
குறிஞ்சி, முல்லை எனும் இருநிலங்கள் மாத்திரம்,
மழையின்றி மாறுபட்டுப் பாலையாகும் என்றது எதனால்?
ஆராயப்பட வேண்டிய விடயம் இது.
🐪  🐪  🐪
இந் நானிலங்களில்,
முல்லையிலும், குறிஞ்சியிலும் வாழ்வோர்,
பெரும்பாலும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததாலும்,
வேட்டை, ஆ நிரை மேய்த்தல் எனும் அவர்தம் தொழிலுக்கு,
நீரைத் தேக்கி வைக்கும் அவசியம் இல்லாதிருந்ததாலும்,
இயற்கை பொய்க்கும் காலங்களில் அந்நிலங்களே வறண்டு பாலையாயின.
இதனால்தான் மழையின்மையால்,
முல்லையும், குறிஞ்சியும் மட்டுமே,
பாலையாகும் என்று உரைக்கப்பட்டது.
🐪  🐪  🐪
மருதத்தில் நீர் தேக்கப்படுதலாலும்,
நெய்தலில் நீர் கடலாய்த் தேங்கிக் கிடத்தலாலும்,
மழையின்மையால் அவை என்றும் பாலை ஆகாவாம். 
🐪  🐪  🐪
மற்றை நிலங்களில்,
மனித முயற்சியே செயற்கையைப் புகுத்திற்று.
இப்பாலையிலோ நிலமே செயற்கையாயிற்று.
அதனால்தான்; பாலைநிலம் நிலங்களுள் தாழ்ந்ததாம்.
இந்நிலத்திற்கு உரியவையாய் உரைக்கப்படும்,
வழிப்பறி போன்ற தொழில்கள்,
இந்நிலத்தின் கீழ்மையை உறுதி செய்வன. 
மற்றைய நானிலங்களும் ஒரு தேசத்தின் வளமுரைப்பவை. 
இப்பாலை நிலமோ ஒரு தேசத்தின் வறுமை உரைப்பது.
🐪  🐪  🐪
கம்பன் கவிச்சக்கரவர்த்தி.
கற்பனைக் கடலுள் மூழ்கித் திளைப்பவன் அவன்.
தன் இராமகாதையுள்,
இந் நானிலங்களையும்,
திகட்டத் திகட்ட வர்ணித்து மகிழ்ந்த அவனுக்கு,
வறட்சி உரைக்கும் அப்பாலை நிலத்தையும்,
வர்ணிக்கும் விருப்பம் தோன்றுகிறது.
அவ்வெண்ணம் நிறைவேற்றுவதில் இடருண்டாக,
திகைக்கிறான் கம்பன்.
அவ்விடர்தான் என்ன?
அறியப் புகுவோம்.
🐪  🐪  🐪
கம்பன் முதலில் உரைக்கும் நகரம் அயோத்தி.
அயோத்தி, தசரதனால் அறநெறிப்படி ஆளப்பட்ட தேசம்.
அறநெறி நின்று ஒழுகியதால் அந்நகரில்,
மழையின்றிப் போக காரணம் இல்லையாம்.
அதுவுமன்றி சம்பரயுத்தத்தின் போது,
இந்திரனுக்குத் துணையாய்ச் சென்று போர் புரிந்தவன் தசரதன்.
மழைக்கடவுளாம் இந்திரனின் நட்பு அவனுக்கிருந்ததாலும்,
அயோத்தியில் மழை பெய்யாதிருந்திராது.
இக்காரணங்களால் அயோத்தியில் பாலைநிலம் இருக்க நியாயமில்லை.
அதனால் அயோத்தி நகரத்தில்,
கம்பனால் பாலை நில வர்ணனை பாட முடியாமற் போயிற்று.
🐪  🐪  🐪
கம்பன் அடுத்து உரைக்கும் நகரம் கிஷ்கிந்தை.
அதனை வாலி ஆள்கிறான்.
தேவர்க்குப் பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்துக் கொடுத்தவன் அவன்.
ஆதலால் அவன் நகர்க்காம் அனைத்து இயற்கையையும்,
அத்தேவர் வழங்காதிருக்க நியாயமில்லை.
அஃதன்றி, பொருதுவோரின் பாதிப்பலம் பெறும் வரம் பெற்றிருந்ததால்,
தேவர், அவனுக்கு அஞ்சும் நிலையிலேயே இருந்தனர்.
இதைவிட, 
மழைக்கு உரிய தெய்வமான வர்ணன் முதலியோர்க்குத் தலைவனான,
இந்திரனின் புதல்வனாயும் அவன் இருந்தனன்.
எனவே அந்நாட்டிலும் மழையின்மையையும்,
அதனால் உருவாகும் பாலையையும்,
பாடமுடியாது இடர் கொண்டான் கம்பன்.
🐪  🐪  🐪
இலங்கையோ எனின், 
இராவணன் கட்டளைக்கு அஞ்சித் தேவர் வாழ்ந்த நகரம் அது.
அங்கு மழையின்மை எனும் பேச்சுக்கே இடமில்லை.
எனவே அங்கும், மழையின்மையையும், பாலையையும்,
பதிவுசெய்ய முடியாத நிலைமை.
🐪  🐪  🐪
தான் படைத்த மூன்று தேசத்திலும்,
பாலையைப் பாடமுடியாச் சங்கடம் கம்பனுக்கு.
எனினும் வறண்ட அந்நிலத்தையும் வர்ணித்துப் பாட,
கம்பனின் மனம் காமுற்றது.
தனது கற்பனை முழுமையுற,
பாலை பாடவேண்டிப் பரிதவிக்கிறான் கம்பன்.
நிறைவில் இவ்விடர் தீர்க்க,
கம்பன் கையாண்ட உத்தி சுவாரஸ்யமானது.
அதனைக் காண்பாம். 
🐪  🐪  🐪
பாலகாண்டம்.
தனது யாகம் காக்க,
இராம, இலக்குவரை அழைத்துச் செல்கிறார் விஸ்வாமித்திரர்.
சரயு நதியைக் கடந்து செல்லும் அவர்கள்,
கண்ணுதலோன் காமனைத் தகனம் செய்த,
காமனாச்சிரமம் இருந்த இடத்தில் ஒருநாள் தங்கி,
பயணத்தைத் தொடர்கின்றனர்.
வழியில் ஒரு பெரிய வெம்மையான பாலை தோன்றுகிறது.

என்று, அவ் அந்தணன் இயம்பலும், வியந்து, அவ்வயின்
சென்று, வந்து எதிர் எழும் செந் நெறிச் செல்வரோடு
அன்று உறைந்து, அலர் கதிர்ப் பரிதி மண்டிலம் அகன்
குன்றின் நின்று இவர, ஓர் சுடு சுரம் குறுகினார்.

❖ ❖ ❖ ❖
இராமனுக்கோ பெரிய ஆச்சரியம்.
இக்கொடிய பாலை இங்கு எப்படித் தோன்றியது என வியக்கிறான்.
காமன் ஆச்சிரமத்தை அண்மித்திருந்ததால்,
காமனை எரித்த போது,
சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த அக்கினியால்,
இப்பாலை தோன்றியதோ?
அன்றி இப்பாலை தோன்ற வேறு காரணங்கள் உண்டோ?
என முனிவனைக் கேட்ட இராமன்.
பழிபடாத மன்னவனாகிய தசரதனது நாட்டுக்குள்ளே,
இத்தகு பாலை தோன்றிய காரணம் என்ன? என்று வினவுகிறான்.

சுழிபடு கங்கை அம் தொங்கல் மோலியான்
விழிபட வெந்ததோ? வேறுதான் உண்டோ?
பழிபடா மன்னவன் பரித்த நாட்டினூங்கு 
அழிவது என் காரணம்? அறிஞ! கூறு என்றான்.

பல பதிப்புக்களில் இப்பாடலின் மூன்றாம் அடி,
பழிபடு மன்னவன் பரித்த நாட்டினூங்கு என்று பதிவாகியுள்ளது.
தலை சிறந்த உரையாசிரியராகிய,
வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் அவர்கள்.
தன் நூலில் அங்ஙனமே பாடலைப் பதிப்பிப்பினும்,
பாடலுரையில் பழிபடா மன்னவன் என உரைத்து,
அது தசரதனைக் குறிப்பதாய் உரைப்பினும்,
அது பொருந்தும் என்று எழுதியுள்ளார்.
அக்கருத்து நோக்கியே,
அறநெறிப்பட்ட மன்னனின் நாட்டில்,
விதிவயத்தாலன்றி பாலை தோன்றாது.
என முன்னர் எழுதினேன்.
❖ ❖ ❖ ❖
இராமனின் வினாவுக்குப் பதில் கூறத்தொடங்குகிறார் விசுவாமித்திரர்.
தாடகையின் வரலாற்றை விரிவாய் உரைத்த அவர்,
தாடகையால்தான் இப்பாலை தோன்றியது என்கிறார்.
இஃது விசுவாமித்திரரின் மிகைக் கூற்றோ! எனின், அன்றாம்.
முனிவரே அதற்காம் காரணத்தையும் உரைக்கிறார்.
முன்னர் உரைத்தபடி,
பாலை,
குறிஞ்சியிலும், முல்லையிலும் தோன்றுவதே இயல்பாம்.
அஃது வறட்சியால் தோன்றும் பாலை,
ஆனால் இப்பாலை வறட்சியால்,
குறிஞ்சியும், முல்லையும் வற்றித் தோன்றிய பாலை அன்று.
இங்கு மருதமே பாலையாயிற்று என்கிறார் முனிவர்.
🐪  🐪  🐪
அச்செய்தியை அவர் சொல்லும் அழகு அற்புதமானது.
ஒருவனது மனத்தில் தோன்றும் உலோபம் என்கின்ற,
துர்க்குணம் ஒன்று மாத்திரமே
அளவிட முடியாத நற்குணங்களையெல்லாம் அழியச் செய்வது போல,
சொல்லுதற்கு முடியாத கொடுந்தன்மையுடைய,
அரக்கியாகிய தாடகை ஒருத்தியால்,
வளங்கள் நிரம்பிய மருதமே,
இங்கு பாலையாயிற்று என்கிறார் விசுவாமித்திரர்.
🐪  🐪  🐪
அவரின் பதிலினூடு நாம் இரண்டு செய்திகளைப் பெறுகிறோம்.
ஒன்று, தசரதனின் அற ஆட்சியில்,
வறட்சியும், மழையின்மையும் இருக்கவில்லை என்பது.
மற்றையது, தாடகையின் கொடுமையால்,
பாலையான மருதம்,
மற்றைப் புலவர்கள் பாடும் மருதம் அன்றாம் என்பது.
தான் சொன்ன ஒரே செய்தியால்,
தசரதனது அற உயர்வையும்,
தாடகையது மறத்தாழ்வையும்,
சித்தாந்தப்படுத்தி விடுகிறார் விசுவாமித்திரர்.

உளப்பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றுமே
அளப்ப அரும் குணங்களை அழிக்குமாறு போல்
கிளப்ப அருங் கொடுமைய அரக்கி கேடிலா
வளப்பரு மருத வைப்பு அழித்துமாற்றினாள்

🐪  🐪  🐪
தமிழர்தம் மரபுக்கு மாறாய்,
பாலையான மருத நிலத்தைக் காட்டி,
அது தோன்றியதற்கான காரணத்தையும் உரைத்து,
தன் எண்ணம் நிறைவேற்றிய கம்பன்,
கற்பனைக் கதிர்களை விரித்து,
ஆசைதீர பன்னிரண்டு கவிகளில்
பாலை நில வர்ணனை செய்கிறான்.
அவற்றுள் ஒரு சோற்றுப் பதமாய்,
கம்பனின் கற்பனையின் ஓர் துளியை இங்கு காணலாம். 
🐪  🐪  🐪
கவிச்சக்கரவர்த்தி கம்பன் எப்போதும்,
முரண் நிலைகளை ஒன்றாக்கிச் சுவை விளைப்பவன்.
அஃது கம்பன் செய்யும் வம்பு.
பாலையின் பசையற்ற தன்மையை உரைக்க,
அத்தகைய முரண்பட்ட இரண்டு உவமைகளை,
எடுத்தாளுகிறான் கம்பன்.
துன்பத்திற்குக் காரணமாகிய நல்வினை, தீவினைகளை ஒழித்து,
காமம், வெகுளி, மயக்கம் எனும்,
மூன்று வகைப் பகையாகிய மதில்களைத் தாண்டி,
முத்தி அடைய விரும்பும் ஞானியரது மனம் போலவும்,
தன்னை விற்று பொன்னைக் கொள்ளும்,
வேசை மாதரது நெஞ்சம் போலவும்,
அப்பாலைவனம் பசையற்று கிடந்தது என்கிறான் கம்பன்.
மிக உயர்ந்த, மிகத் தாழ்ந்த எல்லைகளில் நின்றார் இருவரை,
ஒரே விடயத்திற்கு உவமையாக்கும்,
கம்பன்தன் கவித்திறத்தை என் என்பது?
தா வரும் இரு வினை செற்று, தள்ள அரும்
மூவகைப் பகை அரண் கடந்து, முத்தியில்
போவது புரிபவர் மனமும், பொன் விலைப்
பாவையர் மனமும், போல் பசையும் அற்றதே!
🐪  🐪  🐪
மேற் சொன்ன இடம் தவிர,
மற்றோரிடத்திலும் கம்பன் பாலையைப் பாடுகிறான்.
பரதன் சுற்றம் சூழ,
இராமனை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருதற்காய்,
கானகம் செல்கிறான்.
குகனைச் சந்தித்த பின்,
கானகத்துள் பரத்துவாச முனிவரின் ஆசி பெற்று,
சித்திரகூடம் நோக்கி அவர்கள் செல்கின்றனர். 
🐪  🐪  🐪
அவ்விடத்திலும் பரதனும் சேனையும்,
ஓர் பாலையைக் கடப்பதாய்ப் பாடுகிறான் கம்பன்.
அப்பாலை முல்லையும், குறிஞ்சியும் முறைமையில் திரிந்த,
மரபுப்படியான பாலையாம்.
அப்பாலை வர்ணனையை,
மூன்றே பாடல்களில் முடித்துக் கொள்கிறான் கம்பன்.
இவ்விடத்தில் கம்பன் பாலையைப் பாடுதற்காம் காரணம் உண்டு.
பாலைக்குரிய பண்பாய் உரைக்கப்படுவது,
பிரிதலும், பிரிதல் நிமித்தமுமாகும்.
பிரிவுத்துயரில் வாடும் பரதனின் பண்பை,
தெளிவுற வெளிப்படுத்தும் நிலப் பின்னணியை ஏற்படுத்தவே,
இவ்விடத்தில் பாலை வர்ணனையைக் கம்பன் பாடுகிறான்.
🐪  🐪  🐪
இவ்விடத்திலும் கம்பன் செய்யும் ஓர் புதுமை உண்டு.
முன்பு பாலையைப் பாடும் போது,
மருதத்தைப் பாலையாக்கி புதுமை செய்தான் கம்பன்.
அக் குறையைத் தீர்க்க,
கம்பனின் மனம் விரும்பியது போலும்.
அவ்விடத்தில் அற்புதமான ஒரு கற்பனை செய்கிறான்.
பெரிய அரச செல்வத்தை நீ ஏற்றுக்கொள் என்று கூறிய,
தன் தாயாகிய கைகேயி இடத்தில் கோபம் கொண்டதனால்,
முகம் சிவந்து திருமேனி கறுத்து நின்ற பரதனைக் கண்டு,
செம்மையும் கருமையும் கொண்ட பாலை நிலம்,
அவன் மேல் காதல் கொண்டு உருகத் தொடங்க,
பாலைவனத்தில் பட்டுப் போயிருந்த மரங்களின் தொகுதிகள்,
தளிர்த்து துளிர்த்துச் செழிக்கலாயினவாம்.
பெருகிய செல்வ நீ பிடி என்றாள் வையின்
திருகிய சீற்றத்தால் செம்மையாய் நிறம்
கருகிய அண்ணலைக் கண்டு காதலின் 
உருகிய தளிர்த்தன உலவை ஈட்டமே
அத்தோடு கம்பன் நிறுத்தினான் இல்லை .
மருதத்தை பாலையாக்கிய மரபு மீறலை,
சரி செய்ய நினைக்கிறான் அவன்.
இங்கும் தசரதச் சக்கரவர்த்தியின் அறத்தையும்,
அறம் இருக்கும் இடத்தில் பாலை தோன்றாது எனும் தன் கருத்தையும்,
மீளவும் சித்தாந்தப்படுத்துகிறான்.
சத்தியத்தையே பேசி இறந்த தசரதச் சக்கரவர்த்தியினது,
ஒப்பில்லாத சேனை பாலை நிலத்தை மருதநிலமாய் கடந்து சென்றது. 
என்று பாடி முடிக்கிறான்.
பரதனைக் கண்டு பாலையிலுள்ள மரங்கள் துளிர்த்ததால்
அந்நிலை எய்திற்று என்க.

வன் தெறு பாலையை மருதமாம் எனச்
சென்றது சித்திர கூடம் சேர்ந்ததால்
ஒன்று உரைத்து உயிரினும் ஒழுக்கம் நன்றென
பொன்றிய புரவலன் பொரு இல் சேனையே

மருதத்தைப் பாலையாக்கி பின்னர்,
பாலையை மருதமாக்கும் விந்தையை,
கவிச்சக்கரவர்த்தி கம்பனை அன்றி,
வேறுயார் செய்வார்?

🐪  🐪  🐪

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்