'மயன் மகள்' - பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

யர் சீதைமேல் இராவணன் கொண்ட காதல்,
அகத்தில் நிறைந்திருந்ததென்றால், 
உட்புகுந்த இராமபாணம்,
உடனே அதைக்கண்டிருக்கும்.
எள்ளிருக்கும் இடமின்றி அப்பாணம் தேடியிருப்பதால்,
சீதைமேற் கொண்ட காதல்,
இராவணன் உள்ளிருக்கவில்லையென,
மறைமுகமாய் உணர்த்த முயலும்,
மண்டோதரியின் மதிநுட்பம்,
கம்பன் வார்த்தைகளூடு வெளிப்பட்டு,
நம்மை வியக்க வைக்கிறது.
தன் கணவன் இறந்து கிடக்கிறான்.
இனி, 
மங்கள மங்கையர்க்குரிய, பூவும், பொட்டும், தனக்கில்லை.
பூவிழந்து நிற்கும் தன் அவல நிலையிலும்,
எதிரியாம் இராமனின் மனைவியை,
பூவோடு இருக்க வாழ்த்துகிறது அப்பேதை நெஞ்சு.
மற்றவர் வாழவேண்டும் என நினைக்கும் அவளது மாண்பு,
'கள்ளிருக்கு மலர்க்கூந்தல் ஜானகி' எனும்,
அவள் வார்த்தைகளினூடு வெளிப்படுகிறது. 
🌾 🌾 🌾
அடுத்துவரும் மண்டோதரியின் புலம்பல்,
அவளின் நுண்ணுணர்விற்கோர் சான்றாய் அமைகிறது.
 
'ஆரா அமுதாய் அலை கடலில் கண்வளரும்
நாராயணன் என்று இருப்பேன் இராமனை நான்ளூ
ஓராதே கொண்டு அகன்றாய், உத்தமனார் தேவிதனைளூ
பாராயோ, நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம்?'
 
கம்பனது இராமகாதையில்,
இராமனைத் தெய்வமாய் உணர்ந்தோர் ஒரு சிலரே.
அந்நுண்ணுணர்வுடையார் வரிசையில்,
மண்டோதரியும் இணைகிறாள் என்பதை,
அவள் புலம்பல் உணர்த்துகிறது.
இராமன் நாராயணனே எனும் பேருண்மையை,
வீடணன் அறிவதற்கு முன்னரே மண்டோதரி அறிந்தனள் போலும்.
அங்ஙனமேல்,
அஃது உரைத்து இராவணன் தவறைத் தடுக்காது விட்டதேன்? 
கேள்வி பிறக்கும்.
நுண்ணுணர்வால் தான் உணர்ந்ததை,
அறிவுச்சான்றுகளோடு இராவணனிடம் நிறுவமுடியாமல்,
மௌனித்து மறுகுதலன்றி,
மற்றொன்றும் மண்டோதரியால் செய்ய இயலாமல் போயிற்று போலும்.
தன் கற்புநிலையால், தெய்வத்தையும் உணரும்,
மண்டோதரியின் நுண்ணுணர்வை,
இப்பாடலாற் புரிந்து மகிழ்கிறோம்.
🌾 🌾 🌾
வீழ்ந்து கிடக்கும் இராவணன் இவள் விரகம் தீர்த்தவன்.
மாண்ட தன் மணாளனின் மார்பில் வீழ,
வீரியமிக்க இராவணனின் அணைப்புக்கு ஆளான,
பழைய நினைவெல்லாம் அவள் நெஞ்சிற் பரவுகிறது.
தன் காதற்கணவனின் கவர்ச்சி நினைந்து கதறுகிறாள்.
'நாள் முழுதும்,
மன்மதன் மலர்க்கணை தொடுக்க வாழ்ந்தவனே' என்றும்,
'மாரனின் தனி இலக்கை மனிதர் அழித்தனரோ?' என்றும்,
மயங்கிக் கதறுகிறாள் அவள்.

'நார நாள் மலர்க் கணையால், நாள் எல்லாம்
தோள் எல்லாம், நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார்
அழித்தனரே, வரத்தினாலே!'
 
இராவணனால் தான் பெற்ற இன்பம் நினைந்து,
மறுகி மயங்கும் மண்டோதரியைக் கண்டு,
மனங்கலங்கி நிற்கிறோம் நாம்.
🌾 🌾 🌾
தொடர்கிறது மண்டோதரியின் புலம்பல்.
கணவனோடு கலவியிற் களித்த,
பழைய எண்ணங்களால் ஏக்குற்று,
கதறிக் கணவனை அழைக்கிறாள்.
அவ்வெண்ணம் தந்த ஏக்கம் தீர,
இராவணன் மார்பினை,
கைகளாற் தழுவித் தழுவிக் கலங்குகிறாள்.
பின், ஏதோ நினைந்தவளாய்,
கூடி அரற்றும் மங்கையர் கூட்டத்தினின்றும் விலகி,
தனித்தவளாய் நின்று, 
இராவணனை அழைத்து மயக்கமுறுகின்றாள், 
மாள்கிறாள்.

'என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து, அவன் 
பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்
தன் தழைக் கைகளால் தழுவி, தனி
நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள்.'
 
இறப்பதன்முன்,
மண்டோதரி,
மற்றவர்களை விட்டு விலகி தனிநின்று ஏதோ அழைத்தாள். 
அவ்வழைப்பால் உயிர்த்து உயிர் நீங்கினாள் என்கிறான் கம்பன். 
தனிநின்று மண்டோதரி யாரை அழைத்தாள்? 
எங்ஙனம் அழைத்தாள்?
ஏன் அவ்வழைப்பால் அவள் உயிர் நீங்கிற்று?
கேள்விகள் பிறக்கின்றன.
கம்பகாதையுள் மூழ்கிக் கைநிறைய முத்தெடுத்து,
கற்றோர் நெஞ்சைக் களிக்கச்செய்த,
மறைந்த பேராசிரியர் திருச்சி இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள்,
வியக்கத்தக்க விடைதருகிறார்.
கலவியின் உச்சநிலையில்,
கணவன் மனைவியையும்,
மனைவி கணவனையும், 
அவர்;க்கே உரித்தான சங்கேத வார்த்தைகள்கொண்டு,
அழைத்து மகிழ்தல் இயல்பு.
மண்டோதரியும், 
இன்ப நிலையில் இராவணனை,
ஏதோ ஒரு தனிப்பெயரிட்டு,
அழைக்கும் வழக்கைக் கொண்டிருந்திருப்பாள்.
இறந்த இராவணன் மார்பில் விழுந்து,
தழுவி அழுத மண்டோதரி,
அவன்,
முன்பு தன்னை அணைந்த காலத்தை எண்ணி, 
மகிழ்கிறாள்.
அந்நிலையில், 
தனக்கே தனியுரித்தான அச்சங்கேத வார்த்தைகொண்டு, 
இராவணனை அழைக்கவிரும்பினாள் போலும்.
தனக்கும் அவனுக்குமே உரித்தான,
அச்சங்கேத வார்த்தையினை,
பலரும் கூடியழும் இடத்திற் பகர விரும்பாமல்,
விலகிச் சென்று தனித்துநின்று அவளுரைக்க,
அவள் உள்ளம் முன்னை இன்பநிலையில் மூழ்கிற்று.
கற்பனை தந்த மகிழ்ச்சியால் மயக்கமுறுகிறாள்.
அவ்வின்ப நிலையிலேயே,
கற்பரசியான அக்காரிகையின் உயிர் பிரிகிறது.
மானுட உணர்வு சார்ந்த பேராசிரியரின் இப்பெருவிளக்கம்,
கம்பசூத்திரத்தின் நுட்பத்தை விளக்கம் செய்து, 
களிப்பூட்டுகிறது.
🌾 🌾 🌾
மேற்சொன்ன நான்கே காட்சிகளில்,
மண்டோதரியின் அகப்புற அழகுகளை,
அற்புதமாய்க் காட்டுகிறான் கம்பன்.
அத்தோடு நில்லாமல்,
எழுதிய காட்சிகளாலன்றி,
எழுதாத காட்சி ஒன்றினால்,
மண்டோதரியின் ஏற்றம் உரைக்க முற்படுகிறான் அவன்.
எழுதாத காட்சி ஏற்றம் உரைக்குமா?
வியப்பால் உயர்கிறது உங்கள் விழிகள்.
மண்டோதரியின் ஏற்றமுரைக்கும், 
எழுதப்படாத அக்காட்சிதான் யாது?
காண்பாம்.
🌾 🌾 🌾
இராமநாடகத்தில்,
உணர்ச்சி மிகுந்த ஒப்பற்ற பல காட்சிகளை அமைத்து,
மகிழ்வு தந்தவன் கம்பன்.
நாடகாசிரியனான கம்பன்,
உணர்ச்சி மிகுந்த காட்சி ஒன்றினையும்,
அமைக்கத் தவறினான் அல்லன்.
எனினும், 
அற்புதமாய் அமைக்கப்பட்டிருக்கக் கூடிய,
ஓர் அரிய காட்சியை,
கம்பன் வேண்டுமென்றே தவறவிடுகிறான்.
கணவன்மேல் எல்லையற்ற காதலும், 
புதல்வன்மேல் எல்லையற்ற பாசமும் கொண்டவள் மண்டோதரி.
அதுபோலவே,
தந்தைமேல் எல்லையற்ற மதிப்பும்,
தாய்மேல் எல்லையற்ற விருப்பும்கொண்டவன் இந்திரசித்தன்.
தன் அன்புத் தாய்க்குப் போட்டியாய்,
சீதையை இராவணன் சிறையெடுத்துக் கொணர்ந்த பின்பு,
மண்டோதரியும், இந்திரசித்தனும்,
சந்தித்தாய ஒரு காட்சிதானும்,
கம்பராமாயணத்தில் இல்லை.
சீதை வருகையின்பின்,
தாயும் மகனும் சந்தித்திருப்பின்,
உணர்ச்சி மிகுந்த அற்புதமான ஒரு சந்திப்பு,
இலக்கிய நெஞ்சங்களுக்கு விருந்தாய்க் கிடைத்திருக்கும்.
அச்சந்திப்பைக் கம்பன் கையாளாமல் விட்டது ஏன்?
படைத்த காட்சிகளூடு பாத்திரங்களை விளக்கம் செய்த கம்பன்,
படைக்காத இக்காட்சியூடும்,
தன் பாத்திரமான மண்டோதரியின் இயல்பை,
நமக்கு உணர்த்த நினைத்தனன் போலும்.
இராவணனை,
உயிரினும் மேலாய் நேசித்தவள் மண்டோதரி.
இராவணனோ, சீதையை விரும்பிச் சிறையெடுக்கின்றான்.
மாற்றாளைத் தன் மணாளன் விரும்பினான் எனும் செய்தி,
மண்டோதரியின் மனதை வருத்தியிருக்கும்.
தன்மேல் எல்லையற்ற அன்புகொண்டவனான,
மைந்தன் இந்திரசித்தன் தன்னைக்காணின், 
தன் அகவருத்தத்தை, முக உணர்வால் தெரிந்து கொள்ளல் கூடும்.
தாய் வருந்துவது தெரிந்து,
தந்தையை எதிர்க்கத் தனயன் தலைப்பட்டால்,
தன் மணாளனின் மாண்பழியும் எனக்கருதி,
சீதையை இராவணன் சிறையெடுத்த நாள்முதல்,
தன் பாசமகனைப் பார்ப்பதையே தவிர்த்தனள் மண்டோதரி என,
எழுதாத காட்சி மூலம் நம்மை உணர வைக்கிறான் கம்பன்.
இறந்தான் மகனெனக் கேட்டபின்பே,
ஏங்கி வந்து அவன் உடலம் காண்கிறாள் அவள்.
இங்ஙனம் படைக்காத ஒரு காட்சியூடும்,
மண்டோதரியின் மாண்புரைக்கும்,
கம்பனின் கற்பனைத்திறம், 
கற்றோரை வியக்க வைக்கிறது.
🌾 🌾 🌾
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்