"உலகெலாம்...": -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

"உலகெலாம்...": -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
 
வி பிறந்த கதை
உலகெலாம் அதிசயித்தது.
அரசியலைத் துறந்து அருட்பணிக்காக,
ஒரு முதலமைச்சர் தில்லை செல்கிறார்.
இப்படியும் ஒரு புதுமையா?
உலகியலார் வியப்பெய்தினர்.
அருளாளர்கள் ஆனந்தக் கண்ணீர் பொழிந்தனர்.
திருத்தொண்டர்புராணத் தீந்தமிழைப் பெறப்போகும் மகிழ்ச்சியில்,
உலகம் ஒருதரம் சிலிர்த்துக்கொண்டது.
அதோ!
பக்தி நிறைந்த நெஞ்சோடும்,
உச்சி குவிந்த கையோடும்,
தில்லையதன் திசைநோக்கி,
தன்னை மறந்து தளர்நடைபோடும் அவர்தாம்,
அருள்மொழித்தேவர்.
தவறு! தவறு!
சிவனடியார் சீருரைத்து,
செழுந்தமிழைத் தெய்வநிலைக்கு உயர்த்தப்போகும்,
சேக்கிழார் என்னும் செம்மல்.

🎈🎈🎈🎈


இதோ!
தில்லையின் எல்லை.
கண்ணீரால் மெய்குளித்து,
காண்பரிய சிவப்பொருளைக் காணும் ஏக்கம் உள்ளமெலாம் நிரம்ப,
உவப்பெய்தித் தனைமறந்து,
மெய்சோரத் தில்லையதன் நிலம் சேர்ந்து,
மேனியெலாம் அருள் நிரம்ப,
உய்யுமோ தன்நோக்கம்? என உழலும் மனத்தோடு,
தில்லை அம்பலவன் திருவடி காண விரைகிறது அவர் பாதங்கள்.
சேக்கிழார்தம் சிந்தை மருள்விக்கும் அந் நோக்கந்தான் என்ன?
அரசபதவியைத் துறந்து இவ்வமைச்சர்,
தில்லையதன் எல்லை சேர்ந்தது எதற்காக?
அறிய விழைவார்க்காய் சற்றுப் பின்செல்வோம்.

🎈🎈🎈🎈

சோழ அரண்மனை.
அரசவையில் முதலமைச்சர் அருள்மொழித்தேவர் அமர்ந்திருக்கிறார்.
அவரைச் சூழ்ந்து ஆன்றோர் பலர்.
அவ்வான்றோர்தம் அகச்சோர்வை அவர்தம் முகச்சோர்வு காட்டுகிறது.
அத் தக்கார் தம் தாள் பணிந்து,
அருள்மொழித்தேவர் பேசத்தொடங்குகிறார்.
'செழுந்தமிழில் உளம்பதித்து, சிவப்பொருளே சிந்தையதாய்,
தேசத்தில் நேசங்கொண்டு அறமே வாழ்வான ஐயன்மீர்!
கண்ணுரைக்கும் கருத்ததனால்,
உங்கள் அகங்கொண்ட அவலம் உணர்ந்தேன்.
ஏதுக்காய் இவ்வருத்தம் என இயம்புக!'
பணிவோடு கூடிய உத்தரவு அமைச்சரிடம் இருந்து பிறக்கிறது.

🎈🎈🎈🎈

அமைச்சரின் உரைகேட்ட ஆன்றோர் ஒருவரையொருவர் பார்க்க,
அவர்தம் முகக்குறிப்பறிந்த மூத்த பெரியார் ஒருவர்,
மெல்ல எழுகிறார்.
எந்நாட்டார்க்கும் அருள்செய்யும்,
தென்னாடுடைச் சிவனை எண்ணாது,
நம் மன்னனவன்,
இன்பத்துறை உரைக்கும்,
'சிந்தாமணி' நூலில் சிந்தைதனைப் பதித்து மயங்கினான்.
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
வளவன் இன்பவழி நாடின்,
உலகமும் அவ்வழிதனையே நாடும்.
சிவனில் நேசம் சிதைந்தால், தேசம் சிதையும்.
தடுப்பது நும்கடன் செப்புவது எம்கடன்.
இயம்பி விடைகொண்டார் சான்றோர்.

🎈🎈🎈🎈

மன்னனின் மாண்ட பெரும்புகழை மங்காது காத்தல்,
தன் நீண்ட கடனென்று உணர்ந்த
நேச நெடுநெஞ்சர் அருள்மொழித்தேவர்,
ஆன்றோர் உரைதன்னை அகத்திருத்தி,
அவனி வேந்தன் அநபாயச் சோழன் தன் அவை சேர்ந்தார்.

🎈🎈🎈🎈

மன்னன் அவை.
அகம் வாட அரசன் முன் நிற்கிறார் அமைச்சர் அருள்மொழித்தேவர்.
வானமே இடிந்தாலும் வாடாத தன் அமைச்சரின் முகவாட்டம் கண்டு,
மன்னனின் மனதில் மருட்சி.
'என்ன குறை இயம்பிடுக!' ஏந்தல் உத்தரவிடுகின்றான்.
மன்னவனைப் பணிந்து,
தன் மனவாட்டம் உரைக்கின்றார் மந்திரியார்.
'இன்பத்துறை உரைக்கும் ஏற்றமிலாச் சிறுநூலாம் 'சிந்தாமணி'யதனில்,
மன்னர் மனம் பதிந்தீர்! மக்கள் வழி தொடர்ந்தார்.
கூத்தன் திருவடியைக் கொண்டாடி, நும்குலத்தோர்,
ஏற்றமுறச்செய்த எழில் சைவ மரபெல்லாம்,
இக்கருத்தால் மாற்றமுறும்;!
மருண்டுரைத்தார் ஆன்றோர்கள்.
ஆன்ற பேரரச! ஆன்றோர் தம் குறையகற்றி,
மீண்டும், சைவநெறி துலங்கச் சகத்தை நெறிசெய்வீர்!'
தன்னுயிர்க்கு இறுதியெண்ணாது தலைமகன் வெகுண்டபோதும்,
வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும்,
மாண்புமிகு மந்திரியார் மனக்கருத்தை உரைத்திட்டார்.

🎈🎈🎈🎈

செவி கைக்கச் சொற்பொறுக்கும் மன்னர் மன்னன் தவறுணர்ந்தான்.
மேற்சென்று இடித்து,
தன்னை நெறிசெய்த மந்திரிமேல் மதிப்புயர்ந்தது.
தன் அகத்தில் ஒளி துலங்கித் தயைபொங்கப் பேசுகிறான் அவன்.
'பிழையகற்றி என்னைப் பெரும்பாவம் தனில் வீழாது,
நிலையுணர்த்தி நின்று ஆண்டீர்.
நேசத்தால் நெகிழ்கின்றேன்.
சிற்றின்ப நெறிகாட்டும் சிந்தாமணி விடுத்து,
பேரின்ப நெறியுணர்த்தும் பெருங்காதை எதுவென்று,
நீர் உரைத்து நெறி செய்வீர்!'
மன்னன் வேண்ட மந்திரியார் மனதில் மகிழ்ச்சி.
கூடும் அன்பதனால் கூத்தன் திருவடியை,
கும்பிட்டு உயர்வடைந்;த,
வீடும் வேண்டா விறலுடையார் தம்கதையை,
ஓதி உணர்ந்தால் உய்திடலாம்.
வழியுரைத்தார் மந்திரியார்.

🎈🎈🎈🎈

மன்னன் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி,
'ஒப்பில்லா அடியார்தம் உயர்கதையை உலகெல்லாம்,
ஓதி, உணர்ந்து, உயர்வடையக் காவியமாய்,
நீரே சமைத்து நெறிசெய்ய வேண்டும்'என,
மன்னன் உரைக்க, மனம் பதறி,
'ஏற்றமிகு தொண்டர்கதை நின்றுரைக்க வல்லனோ? இந்நீசன்' என மருண்டு,
நெஞ்சம் நடுநடுங்க, நீரருவி கண்சோர,
கும்பிட்டு நின்றார் அக்குன்றத்து முனிவரவர்.
கும்பிட்டு நின்றவரைக் கும்பிட்டான் மன்னவனும்.
'அன்பிற் சிறந்த ஐயனே! உமையன்றி,
மெய்த்தொண்டர் கதையுரைக்க மேதினியில் வல்லார் யார்?'
வினாவால் பதிலுரைத்து வேந்தன் தொடருகிறான்.

🎈🎈🎈🎈

'ஒப்பரிய தொண்டர் கதை,
உளம் நிரம்ப, உயிர் உயர, செவி நானீட்ட,
தப்பில்லாக் காவியமாய்த் தாமியற்றித் தரல் வேண்டும்'
என்றுரைத்தான் மன்னன்.
ஏற்றமுறப் பொருள் கொடுத்தான்.
நின்றவரின் தாள்தன்னில் நெடுங்கிடையாய்த் தான்வீழ்ந்து,
அன்றுமுதல் அமைச்சர் அலர் அவர் என்று அகத்துணர்த்தி,
குன்று பெயர்ந்தாற்போல அக்கோமகனும் சென்றனனாம்.

🎈🎈🎈🎈

மன்றாடும் சிவன்தாள்கள் மனம் கொண்டார் மந்திரியார்.
தில்லைதனில் நின்றாடும் சிவன்தாள்கள் நெறிசெய்தால் அன்றி,
அடியார்தம் கதை சொல்ல அறிவாலே ஆகிடுமோ?
உண்மைதனை உணர்ந்து தன் உளநோக்கம் நிறைவேற்ற,
தில்லைதனை நோக்கி அச்சிவனடியார் ஓடுகிறார்.

🎈🎈🎈🎈

சேக்கிழார் பெருமான் தில்லைதனைத் தேடிவந்த,
நோக்கம் இதுதான்.
சித்தாந்த அட்டகத்தைச் செப்பிப் புகழ்கொண்ட
உமாபதியார், முன்னாளில் ஓதிவைத்த,
சேக்கிழார் புராணம் செப்பும் கதையிது.
சேக்கிழார் என்னும் அச்சீரோங்கும் மந்திரியின்,
நோக்கம் நிறைவேறியதா?
உண்மையறிய எம் உள்ளம் விழைகிறது.
அதற்காக,
மீண்டும் தில்லையின் எல்லையுள்,
புகுவார் அவர்பின் புகுவோம்

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
                                                                                                     (சேக்கிழார் தொடர்ந்து வருவார்)
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.