'உலகெலாம்......': பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

'உலகெலாம்......': பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
 
(சென்றவாரம்)
சேக்கிழார் பெருமான் தில்லைதனைத் தேடிவந்தநோக்கம் இதுதான். சித்தாந்த அட்டகத்தைச் செப்பிப் புகழ்கொண்ட  உமாபதியார், முன்னாளில் ஓதிவைத்த,  சேக்கிழார் புராணம் செப்பும் கதையிது. சேக்கிழார் என்னும் அச்சீரோங்கும் மந்திரியின், நோக்கம் நிறைவேறியதா? உண்மையறிய எம் உள்ளம் விழைகிறது. அதற்காக, மீண்டும் தில்லையின் எல்லையுள், புகுவார் அவர்பின் புகுவோம்

💎💎💎💎

லகமாய் விரிந்திருக்கும் விராட புருடனின் மத்தியஸ்தானம்,
அருவமாய் நிற்கும் ஆகாயபூதத்தின் குறியாய் நிற்கும் கோயில்,
சிதம்பரம்.
கும்பிட்ட கைகளொடு அக்கோயிலின் வாசலில் சேக்கிழார் நிற்கிறார்.
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்,
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்  கண்டு,
பனித்த கண்களுடன் பரவசப்பட்டு நிற்கிறார் அவர்.
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள,
அளப்பரு கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக,
குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக,
கங்கைவாழ் சடையன் ஆடும் ஆனந்தத் தனிப்பெரும் கூத்தில்,
வந்த பேரின்ப வெள்ளத்துள் மூழ்கினார்.
தன்னை மறந்தார், தன்நாமம் கெட்டார்.

💎💎💎💎


சிவத்தோடு ஒன்றிய அந்நிலையில்,
மல மாசற்று உயிர் மாண்புறுகிறது.
அவ்வநுபூதி நிலையில்,
சீவகரணங்கள் சிவகரணங்கள் ஆக,
சிவனே சீவனுள் நின்று,
தன் தொண்டர்தம் பெருமையைப் பாடத் தொடங்குகிறார்.

💎💎💎💎

அன்பினால் தனைப் பிணைத்த அடியார்தம் பெருங்கதையை,
காவியமாய்ப்பாட அக்கடவுளே முன்வந்தாராம்.
தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே!
தொண்டர்களின் துலங்கும் நற்காதைகளை வண்டமிழில் வடிக்க,
நீல மிடற்றுடை நெற்றிக் கண்ணனவன்,
நீண்டநாள் நினைந்திருந்தானோ?
உலகெலாம் உவப்பெய்த,
'உலகெலாம்' என்று அவ்வொப்பற்ற சிவன் வாக்கு,
வானோசையாய் எழுந்து வருகிறது.
தெய்வச் சேக்கிழார்,
காலப்பெட்டகத்தைத் தன்கருத்தாலே தொட்டுவிட,
நீள நடந்த நிகரில்லாத் தொண்டர்கதை,
மூலமெலாம் அவர் தம்மின் மூளையிலே பதிகிறது.
காலங் கடந்த கதையெல்லாம் கருத்தாகி,
ஓலையிலே காவியமாய் ஓங்கி வளர்கிறது.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியன் என,
சேக்கிழார் எனும் பெயரில் சிவன் பாடத் தொடங்குகிறார்.

💎💎💎💎

அடியார் கதை என்னும் அருளமுதப் பெருங்கடலை,
சேக்கிழார் வடிவில் அச்சிவனே பிரசவித்தார்.
பெரியபுராணம் எனும் பேரின்ப நெறிநூலாய்,
சிவன் கருணை பாய்ந்து சீவர்களைச் சேர்கிறது.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய சிவன்,
தன்னைத் தன்னடியார், தாள் பற்றி உயர்தற்கும்,
வாழ்த்தி வணங்குதற்கும் வழியொன்று திறக்கின்றான்.
வேதநெறி தளைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க,
நாதவடிவாகி அந்நாதனே நலம் கொண்டு,
தெய்வப்புலவர் சேக்கிழார் நாக்கதனில்,
வல்ல தமிழை வாரியிறைக்கின்றான்.
திருத்தொண்டர்புராணமெனும் தேனாறு பாய்கிறது.

💎💎💎💎

கருத்தறிந்த புலவர் பலர் கடவுட்செயல் உணர்ந்து,
திருத்தொண்டர் புராணமெனும் திருப்பெயராம் அதை நீக்கி,
சிவனருளால் வெளிவந்த தெய்வமாக்கதை அதற்கு,
பெரியபுராணம் எனப் பெயரிட்டுத் தாம் மகிழ்ந்தார்.
தெய்வக்கருத்தைத் தன் சிந்தைதனில் பதித்திட்ட,
சேக்கிழார்தமை வணங்கித் தெய்வப்புலவர் என,
வாக்கினால் புகழ் சேர்த்து வணங்கியது உலகமெலாம்.

💎💎💎💎

சிவன் பாடிய சீவகதை

சிவன் தான் இச்சீவர்கதை செய்தான்,
உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.
சிவன் செய்த காவியத்தின் சீரெல்லாம் உணர்தற்கு,
'உலகெலாம் உணர்ந்தோதற்கரியன்' எனும்,
ஒப்பற்ற பாடலதால் ஒருசோற்றுப் பதம் காண்போம்.

💎💎💎💎

இக்காவியத்தைச் சிவனே செய்தான் என்பதற்கு,
தக்க இரு சான்றுகள் உள.
அவற்றை முதலில் காண்பாம்.

💎💎💎💎

சைவ மரபில்,
அடியார்கள்; ஆண்டவனைப் பாடுகையில்,
பாதந்தொடங்கித் தலைவரை வர்ணனை செய்து,
'பாதாதி கேசமாய்' பாடுவதே வழக்கமாம்.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியன் எனும்,
பெரிய புராண முதற்பாடலோ,
இம்மரபை மீறிய பாடலாய் அமைந்துள்ளது.
நிலவையும், கங்கையையும் தலையிற் சூடியவன் எனத்தொடங்கி,
மலர்ந்த திருவடியை வாழ்த்தி வணங்குவாம் என இப்பாடல் முடிகிறது.
தலையில் தொடங்கிப் பாதம்வரை பாடப்பட்டதால்,
இது 'கேசாதி பாதமான' வருணனையாம்.
மரபையும் சைவநெறியையும் நன்குணர்ந்த சேக்கிழார்,
இங்ஙனம் மரபு மீறிப் பாடியிருப்பாரா?
கேள்வி எழுகிறது.
பதில் காணும் முன் மற்றொரு கேள்வியையும் தரிசிக்கின்றோம்.

💎💎💎💎

பெருங்காப்பிய மரபுரைக்கும் நம் இலக்கணநூல்கள்,
தன் நேர் இல்லாத் தலைவனை உடைத்தாய்,
அக்காவியங்கள் அமையவேண்டும் என வலியுறுத்துகின்றன.
பெரியபுராணத்தில் தன்னேர் இல்லாத் தலைவராய்த் திகழ்பவர் யார்?
கேள்விக்கு விடைகாண விளைகிறது நம்மனம்.
காவியத்தை ஊன்றிப் படிக்க ஓர் உண்மை புலனாகிறது.
தனக்கு உவமை இல்லாச் சிவனார் இக்காவியத்துள் இருக்கவும்,
அவருக்கு அத்தலைமைப் பாத்திரப் பதவி வழங்கப்படவில்லை.
ஒப்பற்ற சிவனைத் தம் உண்மை அன்பினால்,
ஓலமிட வைக்கும் சிவனடியாரே,
பெரியபுராணப் பெருங்காப்பியத்தின்,
தன்னேர் இல்லாத் தலைவர்களாய்க் காட்டப்படுகின்றனர்.

💎💎💎💎

அதுமட்டுமன்று,
கதாநாயகனின் பெருமையுணர்த்தவென,
மறுதலைப்பண்புகள் கொண்டு படைக்கப்படும் வில்லன் பாத்திரமாகவே,
பெரியபுராணத்தில் சிவனின் பாத்திரம் அமைக்கப்படுகிறது.
காமுகராய், கபால சந்நியாசியாய்,
ஓடு கொடுத்து ஒழித்து விளையாடும் வஞ்சகத்துறவியாய்,
நம் நெஞ்சகத்து அமர்த்தப்படுகிறார் சிவன்.
மாற்றுச் சமயத்தார் மனத்தாலும் நினைக்க முடியாத புரட்சி!
சிவன் வில்லன், சீவன் கதாநாயகன்.
தொண்டர்தம் பெருமையைச் சொல்ல,
அண்டர்நாயகர் அவமதிக்கப்படுகிறார்.
உண்மைச் சிவனடியார் ஒருவர் இங்ஙனம் காவியம் பாடுவாரா?
மீண்டும் நம்மனத்துள் கேள்வி.

💎💎💎💎

இரண்டு கேள்விக்கும் விடை ஒன்றேயாம்.
மரபை மீறியும், சிவனைத் தாழ்த்தியும்,
சிவனடியார் ஒருவர் காவியம் செய்வாரா?
நிச்சயம் செய்யார்!
அங்ஙனமாயின்,
சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தில்,
இவ்விருநிலையும் வந்ததெங்ஙனம்?
பதிலில் முன்சொன்ன உண்மை வலியுறுத்தப்படுகிறது.
காவியத்தைப் பாடியவர்,
சேக்கிழார் அல்லர், சிவனே என்று உணர்கிறோம்.
தன்னைத்தான் பாடும் சிவனார்,
கேசாதி பாதமாய்ப் பாடின், அது தவறன்றே,
தொண்டர்தம் பெருமையுரைக்க,
தன்னைத் தாழ்த்தி அடியாரை உயர்த்திய,
இறைவன்தன் எளிவந்த பெருமை அவன்தனக்கு ஏற்றமன்றோ!
இவ்வுண்மை உணர உவப்பெய்துகிறது நம் மனம்.

💎💎💎💎

அநுமானப் பிரமாணமாய் அமைந்த,
மேற்சொன்ன இருகாரணங்கள் மட்டுமன்றி,
இப்பெரியபுராணத்தை ஆக்கியவர் சிவனே என்பதற்காம்,
ஆகமப் பிரமாணம் ஒன்றினையும் நாம் அறியலாம்.
நம் சைவத்தில் புராணங்கள் பலவாய் விரிந்தன.
புராண நாயகரின் பெயர்கொண்டே,
புராணங்களுக்குப் பெயரிடப்படுதல் மரபு.
சிவபுராணம், கந்தபுராணம், விநாயகபுராணம் என்பவை,
இவ்வுண்மைக்காம் உதாரணங்கள்.

💎💎💎💎

இம்மரபையொட்டியே,
சேக்கிழாரால்,
'தொண்டர்புராணம்' என இந்நூலுக்குப் பெயரிடப்பட்டது.

இங்கிதன் நாமம் கூறின் இவ்வுலகத்து முன்னால்
தங்கிருள் இரண்டின் மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்குகின்ற
செங்கதிரவன் போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம் என்பாம். 

நூலாசிரியரால் இடப்பட்ட இப்பெயரை நிராகரித்து,
சைவ உலகம்,
'பெரியபுராணம்' என இந்நூலுக்கு மறுபெயர் இட்டு மகிழ்ந்தது.

💎💎💎💎

மரபோடு பொருந்திய நூலாசிரியர் இட்ட பெயரை,
ஆன்றோர் நீக்கிய காரணம் யாது?
சிந்தனையுள் வினாப் பிறக்கிறது.
மற்றைய புராணங்களெல்லாம்,
சீவர்கள் பாடிய சிவக்கதைகள்.
தொண்டர்புராணமோ,
சிவன் பாடிய சீவர்கதை.
ஆதியும் அந்தமும் இல்லா அப்பெரிய ஆண்டவனே,
இப்புராணம் செய்தான் என்பதை உணர்த்தவே,
பெரியபுராணம் எனப் பெரியோர் இந்நூலுக்குப் பெயரிட்டனர் போலும்.
ஆன்றோர்தம் வாக்கினால் விழைந்த இவ்வாகமப் பிரமாணமே,
இந்நூலைச் செய்தவன் சிவனே என்பதற்காம் மற்றைச் சான்றாம்.

💎💎💎💎💎💎💎💎
                                                                                                       (சேக்கிழார் தொடர்ந்து வருவார்)
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.