"கம்பவிளக்கு!" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

"கம்பவிளக்கு!" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 

யர் கம்ப இலக்கியத்தைக் கற்பதன் பயன் யாது?
இன்று இளையோர் பலர் கேட்கும் கேள்வி இது.
தமிழறிவு, இலக்கியச்சுவை, கவிதானுபவம், அறப்படிவு என,
இவ்வினாவுக்குப் பல பதில்கள் கற்றோரால் சொல்லப்படுகின்றன.
இப்பதில்களைக் கடந்தும்,
இன்று கம்பனைக் கற்க வேண்டிய,
மிக முக்கிய காரணம் ஒன்று உண்டு.
அக்காரணத்தை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாம்.


 

இக்கட்டுரை இலக்கியச்சுவை நோக்கி எழுதப்படுவதல்ல.
சிந்தனையின் அடிப்படையில் எழுதப்படுவது.
எனவே இதயத்தைக் கடந்து புத்திக்கு வேலைதரும் விடயங்களை,
இக்கட்டுரையில் ஆழமாய்ப் பதிக்கவேண்டியுள்ளது.
எனவே இக்கட்டுரையைப் படிப்போர்,
சற்று நுட்பமான அறிவாராய்ச்சி மனநிலையோடு,
இக் கட்டுரையுள் நுழையவேண்டுமென,
ஆரம்பத்திலேயே பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

   
நாள், வாரம், மாதம், ஆண்டு என,
காலத்தைப் பகுத்துரைக்கும் வழக்கம் நமக்குளது.
ஆன்ம ஞானத்தால் அனைத்தும் உணர்ந்த நம் ஞானியர்,
'யுகம்' என்பதனையும் இக்காலப்பிரிவுகளுள் ஒன்றாய் வகுத்தனர்.
கிருதயுகம், திரேதாயுகம், துவாரகாயுகம், கலியுகம் என,
யுகங்கள் நான்கு உள என்பது அவர்தம் கருத்து.
இந்த யுகங்கள் ஒவ்வொன்றும்,
கோடிக்கணக்கான ஆண்டுகளை உட்கொண்டவை.
இந்த யுகங்களே காலப்பகுப்பின் மிக நீண்டபகுதியாய்,
நம் ஞானியரால் கருதப்பட்டன.

   
கருத்தும், கருவிகளும் தொடமுடியா,
மிக நீண்ட காலதூரத்தையுடைய,
இந்த யுகங்கள் எனும் காலப்பகுப்பு இருப்பது உண்மையா?
இன்றைய இளையோர் கேள்வி எழுப்புவர்.
தம்மால் அறியப்படாத அல்லது விஞ்ஞானத்தால் அங்கீகரிக்கப்படாத,
எவையும் இல்லை என்பதே அவர்தம் கருத்தாம்.
விஞ்ஞானியர் கூறும்,
மாற்றம் அடையக்கூடிய, ஐயக்கருத்துக்களை,
உண்மையென ஏற்று மகிழும் இவர்கள்,
மெய்ஞ்ஞானியர்தம் மாற்றமிலா உயர் உண்மைக் கருத்துக்களை,
ஐயக்கருத்தாய்க் கருதி அங்கீகரிக்க மறுத்து நிற்கின்றனர்.
இஃதே கலியின் விளையாட்டு!

   
எல்லையற்று மிக நீண்டு கிடக்கும் இந்த யுகப்பிரிவுகளை,
நம் ஞானியர் கண்டது எங்ஙனம்?
இஃது முதற் கேள்வி.
நம்மால் அறியப்படும் கோடை, மாரி போன்ற கால மாற்றங்கள்,
இயற்கை வேறுபாடுகளை உட்கொண்டன.
யுகம் எனும் காலப்பகுப்பு இருப்பது உண்மையாயின்,
அக்கால வேறுபாட்டில் பொதிந்துள்ள இயற்கை மாறுபாடு எது?
இது இரண்டாவது கேள்வி.
அறிவியலே அனைத்தும் என நம்பும்,
இன்றைய இளையோர்தம் ஐயத்திற்காக மட்டுமன்றி,
நம் அறிவுக்காகவும் அதுபற்றி ஆராய்தல் கடமையாகிறது.

   
தமது யோக முயற்சியால் வாய்த்த யோகக்காட்சியினால்,
கருவிகளின்றிக் காணும் திறம் வாய்க்கப்பெற,
உடலுள் அகப்பட்டுக் கிடக்கும் அறிவுப் பொருளாகிய ஆன்மாவை,
இப்பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கச் செய்து -
காலம் கடந்தவற்றையும் காணும் ஆற்றலை நம் ஞானியர் பெற்றனர்.
அவ்வாற்றல் கொண்டே எல்லையற்று நீண்டு கிடக்கும் இந்த யுகப்பிரிவுகளை,
நம் ஞானியர் கண்டு வகுத்தனர்.
இது முதற் கேள்விக்காம் பதில்.
யோகக்காட்சி என்பது யாது?
மீண்டும் கேள்வி பிறக்கும்.
அது பற்றி 'கம்பனில் பிரமாணம்' எனும் இந்நூற் கட்டுரையில்,
சற்று விரித்துரைத்துள்ளேன்.
அறிவோர் அறிக!

   
தம் யோகக்காட்சியால் யுக மாற்றத்தை உணர்ந்த நம் ஞானியர்,
யுக வேறுபாடுகளில் பொதிந்துள்ள இயற்கை மாற்றங்களையும்,
நன்குணர்ந்து உரைத்தே உள்ளனர்.
யுக வேறுபாட்டில் நிகழும் இயற்கை மாற்றம்,
அறமாற்றமே என்பது அவர்தம் கருத்தாம்.
தாம் உணர்ந்த அந்த யுகமாற்ற அறவேறுபாட்டை நாம் விளங்குதற்காய்,
எளிமையாய் ஓர் உதாரணத்தின் மூலம் அவர்கள் உரைத்தனர்.
அறத்தினை ஒரு பசுவடிவாய்க் கற்பனை செய்து,
அதனது நிலைத்தல் தன்மையைப் பின்வருமாறு அவர்கள் உரைக்கின்றனர்.
முதலாவதாகிய கிருதயுகத்தில் அறப்பசு நான்கு கால்களிலும்,
இரண்டாவதாகிய திரேதாயுகத்தில் அறப்பசு மூன்று கால்களிலும்,
மூன்றாவதாகிய துவாரகாயுகத்தில் அறப்பசு இரண்டு கால்களிலும்,
நான்காவதாகிய கலியுகத்தில் அறப்பசு ஒரு காலிலும் நிற்குமென்பதே,
அவர்கள் உரைத்த உவமையாம்.
இஃதே, இரண்டாவது கேள்விக்காம் பதில்.

   
யுகம் என்ற காலப்பகுப்பு இல்லை என மறுக்க விழைவோர்க்கு,
நான் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு.
ஒரு சில நிமிட உயிர்வாழ்க்கை பெற்ற ஜீவராசிகள் ஒரு நாளை அறியா.
ஒரு சில நாட்கள் உயிர்வாழ்க்கை பெற்ற ஜீவராசிகள் ஒரு மாதத்தை அறியா.
இத்தொடர்பு பற்றி,
ஒரு வாரம் உயிர் வாழ்பவை ஒரு மாதத்தையும்,
ஒரு மாதம் உயிர் வாழ்பவை ஒரு வருடத்தையும்,
அறிய மாட்டா என்பதை நாம் உணர்தல் கூடும்.
இவ் அடிப்படையிலேயே நூற்றாண்டு வாழ்வு பெற்ற மானிடரும்,
கோடிக்கணக்கான ஆண்டுகளைக் கொண்ட யுகத்தினை,
அறிவினால் அறிதல் ஆகாதாம்.
அதனாற்றான் யுகம் என்னும் காலப்பகுப்பை அறியமுடியாது நாம் அவதியுறுகிறோம்.
எனவே, நாம் யுகம் என்னும் காலப்பகுப்பை மறுப்பது,
முன்னர் சொல்லப்பட்ட மறுப்புக்கள்போல் ஆகுமேயன்றி நிஜமாகாதாம்.

   
காலப்பகுப்புக்களில் இயற்கையில் மாற்றங்கள் பதிவாவது,
யதார்த்தம் என முன் கண்டோம்.
காலையின் இயல்பு, மாலையில் இருப்பதில்லை.
பகலின் இயல்பு, இருளில் இருப்பதில்லை.
கோடையின் இயல்பு, மாரியில் இருப்பதில்லை.
இவ் உண்மையின் அடிப்படையில்,
யுக மாற்றங்களிலும் வேறுபாடுகள் இருக்க வேண்டும் என உணர முடிகிறது.
யுக மாற்றத்தில் நிகழும் அவ் இயற்கை வேறுபாடு,
அற மாற்றம் என முன் கண்டோம்.
அது பற்றி மேலும் அறிதல் அவசியமாகிறது.

   
அறமானது யுகம் தொறும் தேய்ந்து தேய்ந்து,
இறுதியான கலியுகத்தில் அற்றுப்போகும் அளவிற்கு மெலிவுறும்.
ஆனால், நிலைத்த அறமானது என்றும் அற்றுப்போகாதாம்.
கலி முற்ற முற்ற அறம் மெலிவுற்று,
இறுதியில் அற நலிவால் இப்பிரபஞ்சம் சிதையும்.
இரவின் பின் பகல் தோன்றுமாப்போலும்,
கோடையின் பின் மாரி தோன்றுமாப்போலும்,
அச்சிதைவின் பின் மீண்டும் இப்பிரபஞ்சத்தில்,
கிருதயுகம் தோன்றும் என்பது உயர் ஞானியர் உரைக்கும்
உறுதியான கருத்து.
இவ் அடிப்படையை விளங்கியே நம் பாரதியாரும்,
'கிருதயுகம் எழுகமாதோ!' எனப்பாடினார்.

   
கலியுகத்தில் அறம் மெலிவுறும் எனக் கண்டோம்.
அம் மெலிவு கலி நீள நீள முதிர்ந்து செல்லுமாம்.
இன்று நாம் வாழும் யுகம் கலியுகம் என்பது உயர்ந்தோர் கருத்து.
அதனாற்றான் இன்று நாளுக்கு நாள் அறம் தேய்வுற்று வருகிறது.
மாரியில் மழையைத் தவிர்க்க முடியாதது போல்,
கோடையில் வெயிலைத் தவிர்க்க முடியாதது போல்,
காலமாற்றத்தால் நிகழும் இத் தீங்கையும்,
யாராலும் மாற்ற இயலாதாம்.
அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில்,
சந்ததி தோறும் நாம் சந்தித்து வருபவை,
அறத்தேய்வின்; அம்சங்களைளேயாம்.

   
மருந்துகளிலும், குளிர்பானங்களிலும் மது கலக்கப்படும் நிலையில்,
இன்று மது உண்ணாதார் யாரும் இலர்.
நம்மைச் சுற்றிப் புகைபிடிப்போர் எப்போதும் இருக்கும் சூழலில்,
இன்று புகை பிடியாதார் எவரும் இலர்.
வீட்டினுள்ளேயே தொலைக்காட்சி மூலம்,
சிற்றின்பக்காட்சிகள் ஒளிபரப்பப்படும் சூழ்நிலையில்,
மனத்தாலேனும் ஒழுக்கம் தவறாதார் இன்று எவரும் இலராம்.
ஒழுக்கம் நாளாந்தம் இயல்பாய்த் தேய்வுற்று வருதற்கு,
இஃது ஒரு உதாரணம்.
நாம் விரும்பாமலேயே நம்மை மறவழிப்படுத்தும் இன்றைய இயற்கை,
கலியுகத்தின் கைங்கரியம்.
இதனைத் தடுக்க இயலாதோ? எனின், இயலாதாம்!
காரணம் பின் உரைக்கப்படுகிறது.

   
மானுட இயக்கம் இரண்டு ஊடகங்களினூடு நடக்கிறது.
அவ்வூடகங்களுள் ஒன்று இடம், மற்றது காலம்.
இடம் தூலமானது. காலம் சூக்குமமானது.
தூலமான இடம் காட்சிக்கு உட்படுவது.
சூக்குமமான காலம் காட்சிக்கு உட்படாதது.
அதனாற்றான்,
நமது இயக்கம் இடத்தினூடு நடப்பதை நன்கு அறியும் நாம்.
காலத்தினூடு நடப்பதை, சிறிதும் அறிவதில்லை.
எங்ஙனம், இடமின்றி நம் இயக்கம் நிகழாதோ
அங்ஙனமே காலமின்றியும் நம் இயக்கம் நிகழாதாம்.
அது பற்றி இன்னும் சற்று விரிய அறிவோம்.

   
ஒருவன் தனது இயக்கத்தினால்,
குறிப்பிட்ட தூரத்தைக் கடக்கும்போது,
குறிப்பிட்ட காலத்தையும் கடக்கின்றான்.
அவனது இயக்கத்தில் தூர இயக்கம் நின்றால் கால இயக்கம் நிற்கும்.
இதனை நாம் நன்கு அறிவோம்.
அதுபோலவே கால இயக்கம் நின்றாலும் தூர இயக்கம் நின்றுபோகும்.
தூரம் நம்மால் கடக்கப்படுவது.
காலம் நம்மைக் கடந்து செல்வது.
நாமாக நமது தூர இயக்கத்தை நிறுத்துதல் போல்,
கால இயக்கத்தை நிறுத்த அறிந்திலேம்.
அதனாற்றான் கால இயக்கத்தால் வரும் மாற்றத்தை,
நம்மால் கடக்க முடிவதில்லை.
இதுவே நாம் கலியின் வலியில் கட்டுண்டு கிடக்கும் காரணமாம்.

   
மேற்கருத்தை இன்னும் சற்றுத் தெளிவாய்ச் சொல்வதானால்,
ஓர் மனிதன் ஐந்து மைல் தூரத்தை,
ஒரு மணி நேரத்தில் கடக்கிறான் என வைத்துக்கொள்ளுங்கள்.
அம்மனிதன், ஐந்து மைல் தூரத்தைக் கடக்கும் அதே நேரத்தில்,
ஒரு மணி நேரத்தையும் கடக்கிறான்.
தூரத்தைக் கடக்க நேரம் தானாய்க் கடக்கப்படுகிறது.
அங்ஙனமே நேரத்தைக் கடப்பின் தூரம் தானாய்க் கடக்கப்படும்.
ஒருவன் தூரத்தை தன் விருப்பப்படி  கடக்குமாப்போல்,
நேரத்தையும் தன் விருப்பப்படி கடக்கும் ஆற்றல் பெறுவானாயின்,
நேரத்தைக் கடப்பதன் மூலம்  தூரத்தை  தானாய்க் கடந்திடுவான்.
இஃது ஆழ்ந்த சிந்தனைக்குரிய விடயம்.

   
இடத்தில் முன்பின் இயங்கப் பழகியிருக்கும் மனிதன்,
காலத்தில் அங்ஙனம் இயங்கும் ஆற்றலை இதுவரை பெற்றானல்லன்.
அவ்வாற்றலையும் மனிதர் பெறலாம் என்பது நம் ஞானியர்தம் கருத்து.
காலம் கடக்கும் விடயம் பற்றி மேற்குலகார்,
இன்று கற்பனை செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.
அவர்தம் கற்பனை பல சினிமாக்களில் பதிவாகியுள்ளது.
இஃது அறிவியல் ஆராய்ச்சிக்குரிய விடயம்.
உட்சென்று காண விழைவோர்,
இது பற்றிய உண்மைகளை மேலும் கண்டறியலாம்.

   
மேற் சொன்ன காலத்திற்கும், இடத்திற்கும், இயக்கத்திற்குமான
தொடர்பு பற்றிய,
அடிப்படையை உணர்ந்தே நமது இலக்கண ஆசிரியர்கள்,
வினைச்சொல் காலம் காட்டும் என அன்றே தெளிந்து உரைத்தனர்.
காலமின்றி வினையில்லை என்பது அவர்தம் உறுதிபட்ட முடிவாம்.
இவ்விடயத்தில் நம் தமிழ்ச் செம்மொழி,
ஆச்சரியம் தரும் இரகசியங்களை உள்ளடக்கி இருக்கிறது.

   
மேற்சொன்ன விடயம் மிகவிரிந்த சிந்தனைக்குரியது.
அஃது கட்டுரை நோக்கத்திற்கு அப்பாற்பட்டதென்றதால்,
மற்றொன்று விரித்தல் எனும் குற்றம் வரும் என அஞ்சி,
இக்கட்டுரைக்குத் தேவையான அளவை மட்டும் கொண்டு,
இவ்விடயத்தை இந்தளவில் விடுகிறேன்.

   
நாம் செல்லும் பாதை,
குன்றும், குழியுமாய் இருப்பின்,
எத்துணைச் சிறந்த வாகனத்தில் நாம் சென்றாலும்,
அப்பயணம் இடர் தருவதாகவே இருக்கும்,
இதிலிருந்து பயணத்தின் சுகம்,
இட ஊடகத்தில் தங்கியிருப்பதை நாம் நன்கு அறியலாம்.
நமது இயக்கம் இட ஊடகத்தில் மட்டுமல்லாது,
கால ஊடகத்திலும் தங்கியிருப்பதாய் முன்னர் கண்டோம்.
எனவே, இட ஊடகத்தில் நிகழும் குறைகளால்,
நம் இயக்கத்தில் உண்டாகும் பாதிப்பினைப் போலவே,
கால ஊடகத்தில் நிகழும் குறைகளாலும்,
நமது இயக்கத்தில் பாதிப்பு விளையும் என்பதனை,
மேற் தொடர்பு பற்றி அனுமானத்தால் நாம் ஊகித்து உணரலாம்.

   
அந்த, கால ஊடகப் பாதிப்பு எது?
எனும் கேள்விக்காம் விடை கலியுகம் என்பதாம்.
கலியில் ஒற்றைக்காலில் நிற்கும் பசுவாய்,
அறம் தடுமாறும் எனக் கண்டோம்.
இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அறத்தேய்வின் காரணம்,
கலி என்னும் காலஊடகப் பாதிப்பேயாம்.

   
தூலமான இட, ஊடகக் குறைகளை நீக்க,
இன்று வீதிகள், பாலங்கள், சுரங்கங்கள் போன்ற,
புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் வந்துவிட்டன.
ஆனால் சூக்குமமான கால ஊடகக் குறைபாடுகளை நீக்க,
நமக்கு இன்று வரை வழி தெரியவில்லை.
கண்ணுக்குத்தெரியாக் கால ஊடகத்தில்,
மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் இல்லாததாற்றான்;,
கால ஊடகப் பாதிப்புக்களிலிருந்து,
தம்மை நிரந்தரமாய்க் காக்க வழியில்லாது,
மனித இனம் தடுமாறுகிறது.

   
கால மாற்றத்தால் அறச் சிதைவு நிகழ்கிறது எனக் கண்டோம்.
அறம் என்பது இயற்கையேயாம்.
அஃது உணர, அறச்சிதைவு என்பது,
நாம் இயற்கையைச் சிதைப்பதேயாம்.
இன்றைய அறிவியல் இயற்கையோடு முரண்படும் காரியத்தையே,
விஞ்ஞான வெற்றியாய்க் கொண்டாடுகிறது.
அவர்தம் அறியாமையை என்னென்பது?
இயற்கையோடு நாம் முரண்பட, இயற்கை நம்மோடு முரண்படும்.
இஃதே பஞ்சபூதங்கள் இன்று கிளர்ந்தெழுதற்காம் காரணம்.

   
கால ஊடகத்தில் மாற்றம் செய்ய முடியாவிடினும்,
அதன் பாதிப்புக்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள,
சில கருவிகளின் துணையை  நாடிப்பயன் கொள்வது யதார்த்தம்.
மாரியில் குடையும், கோடையில் செருப்பும், பனியில் போர்வையும்,
எங்ஙனம் கால மாற்றப் பாதிப்புக்களை நிவர்த்திக்க,
நமக்குத் தற்காலிகமாய்த் துணை செய்கின்றனவோ,
அதே போல் யுகமாற்றங்களின் போது நிகழும்,
அறச் சிதைவாகிய காலப்பாதிப்பை நிவர்த்திக்க,
ஏதேனும் தற்காலிக வழிஉண்டா?
சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது.

   
மேற் கேள்விக்கு விடை காணும் முன்,
மற்றொரு தடையை நாம் தாண்டவேண்டியிருக்கிறது.
வேறொரு சாரார் காலம் சார்ந்த புதியதோர் கேள்வியை எழுப்புகின்றனர்.
காலம் அறிவுப் பொருளன்று; அது அறிவில் பொருள்.
அது உயிர்ப்பொருளன்று; சடப்பொருள்.
அறிவில்லாத சடமாகிய காலம்,
அறிவுள்ள உயிர்த்தன்மை கொண்ட நமது இயக்கத்தில்,
மாறுதலை ஏற்படுத்துமோ? என்பதே அவர்தம் கேள்வியாம்.
ஏற்படுத்தும் என்பது யதார்த்தம் உணர்ந்தார்தம் பதிலாகிறது.

   
கால மாற்றத்தால், காய் கனியாகிறது; விதை மரமாகிறது;
கரு உயிர் ஆகிறது; இளமை முதுமையாகிறது.
இவை நாம் கண்கூடு காண்பவை.
எனவே காலம் அறிவில்லாத சடமாகினும்,
அறிவுள்ள உயிர்ப்பொருள்களில்,
அதனாலும் மாற்றங்கள் நிகழும் என்பதை,
எவராலும் நிராகரிக்க இயலாதாம்.

   
அறிவற்ற உயிரில்லாத சடப்பொருளான காலம்,
மாற்றங்களை நிகழ்த்துமா?
நிகழ்த்துவதனை யதார்த்தமாய் அறிந்தோம்.
காரியம் நிகழக் காரணம் வேண்டும்.
அறிவற்ற சடம் இயங்குமெனின் அதனை இயக்க,
அறிவுள்ள ஒருவர் தேவை என்பது அனுமான அறிவு.
அறிவற்ற சடமான கடிகாரம் ஓடுகிறதெனின்,
அதனை ஓடச்செய்ய,
அறிவான உயிருள்ள ஒருவர் இருந்திருக்க வேண்டுமென்பதை,
அனுமான அறிவால் நாம் அறிகிறோம்.
அது போலவே அறிவற்ற சடமான காலம்,
உலகை இயக்குகிறது எனின்,
அதனை அங்ஙனம் இயங்கச் செய்ய,
பேரறிவுள்ள ஒரு பொருள் வேண்டும் என்பதனை,
நாம் உணர்ந்து கொள்ளலாம்.
அப்பேரறிவுப் பொருளையே இறை என்கிறோம்.

   
இவ்வுலகில் வாழும் அறிவுள்ள உயிர்களே காலத்தை இயக்காதா?
வினாப் பிறக்கும்.
இவ் உலகில் வாழும் அறிவுள்ள உயிர்களோ,
உலகோடு சேர்ந்து இயங்குபவை,
எனவே அவை இவ் உலகை இயக்குபவை அன்றாம்.
ஆதலால் இவ்வுலகை இயக்க பேரறிவும், பேராற்றலும் கொண்ட,
உயிர்ப்புள்ள ஒரு பொருள்  இருத்தல் வேண்டும் என்பது,
அளவை அறிவுடையார் அனைவரும் ஒப்பவேண்டிய ஒன்று.

   
இறைப் பொருளே உலகை இயக்குகிறது எனக் கண்டோம்.
அவ் இயக்கம் எங்ஙனம் நிகழ்த்தப்படுகிறது?
மீண்டும் வினாப்பிறக்கும்.
இவ் உலகியற்கையான அறங்களே இறையின் வடிவமாம்.
அறவாழி அந்தணன் எனும் திருக்குறளுக்கு உரை செய்யும் பரிமேலழகர்,
பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும்,
தனக்கு வடிவாக உடையான் ஆகலின் அற ஆழி அந்தணன் என்றார் என்று,
மேற்கருத்தை உறுதி செய்கிறார்.
ஓர் உடலை உள் நிற்கும் உயிரே இயக்குகிறது.
அதுபோலவே இறையின் உடலாகிய அறங்களை,
அவனது உயிர் மூச்சே இயக்குதல் வேண்டும்.
இறைவனின் உயிர் மூச்சே வேதங்கள் என்றனர் நம் சான்றோர்.

   
இறையின் சுவாசமாய்க் கருதப்படும் வேதமே,
இவ்வுலகில் அறம் நிலைத்தற்குக் காரணமாம்.
வேத ஓசை இவ்வுலகில் நிலைத்தால்,
அறமும் நிலைக்கும் என்பது ஆன்றோர்தம் கருத்து.
யுக மாற்றத்தில் கலி தோன்ற,
வேதங்களும் தேய்ந்து குன்றும் என உணர்ந்த,
வேதவியாசர் எனும் பெரும் ஞானி,
அங்ஙனம் வேதம் குன்ற அறங்களும் குன்றுதலால்,
இவ்வுலகு பேரழிவைச் சந்திக்கும் என்பதறிந்து,
கலி காலத்தில் ஓரளவேனும் அறம் நிலைக்க வேண்டின்,
வேதங்களை நிலைக்கச் செய்வதன் அவசியம் உணர்ந்து,
தன் பெரும் கருணையினால்,
ஆரம்பத்தில் எல்லையும் பிரிவுமின்றி விரிந்து கிடந்த நமது வேதத்தினை,
இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என நான்கு பிரிவுகளாய் வகுத்தனர்.

   
வேதவியாசரால் வகுக்கப்பட்ட இவ் ஒவ்வொரு வேதமும்,
'சாகைகள்' எனும் பகுதிகளை உள்ளடக்கி நின்றன.
அங்ஙனம் வேதவியாசரால் வகுக்கப்பட்ட சாகைகள் 1180 ஆம்.
இருக்கு வேத சாகைகள்         21
சுக்ல யசுர் வேத சாகைகள்       15
கிருஷ்ண யசுர் வேத சாகைகள்   94   
சாம வேத சாகைகள்              1000
அதர்வண வேத சாகைகள்        50
மேற் குறிப்பிட்ட சாகைகளில் இன்று இருப்பன,
இருக்கு வேத சாகைகள்         1
சுக்ல யசுர் வேத சாகைகள்       2
கிருஷ்ண யசுர் வேத சாகைகள்   1   
சாம வேத சாகைகள்              3
அதர்வண வேத சாகைகள்        1

   
கலியுகத்திலும் வேதம் நிலைத்தற் பொருட்டு,
வேதவியாசரால் வகுத்துத் தரப்பட்ட,
ஆயிரத்து நூற்றி எண்பது  சாகைகளுள்,
இன்று கிடைப்பன எட்டே சாகைகளாம்.
இதனை நம்மோடு வாழ்ந்து மறைந்த காஞ்சி மடாதிபதி,
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்,
தனது 'தெய்வத்தின் குரல்' நூற்தொகுதியின் இரண்டாம் பகுதியில்,
மனவருத்தத்தோடு பதிவு செய்துள்ளார்.
அறம் குன்றி மறம் தழைக்கும் இக்காலத்தில்,
வேதமும் குன்றிப்போன செய்தி,
ஆன்றோர்தம் கருத்தை நிஜமாக்கி,
வேதத்திற்கும் அறத்திற்குமான தொடர்பினை,
நமக்கு நன்கு உணர்த்துகின்றது.

   
கூர்த்த நுண்ணறிவு மிக்க,
ஞானிகளால் மட்டும் உய்த்துணரத்தக்க வகையில்,
ஆக்கப்பட்ட வேதநூல் உண்மைகள்,
அனைவரையும் சேர்தல் பொருட்டு,
பின்னாளில் வேதநூல் வரிசை,
வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் என,
எளிமை நோக்கி விரிக்கப்பட்டது.
வேதத்தினையும் ஆகமத்தினையும் இறைவனே செய்தான் என்று உரைப்பது மரபு.
இந்நூற் கருத்துக்களை உள்வாங்கி எளிமைப்படுத்தி,
புராண, இதிகாசங்களை உயர் ஞானியர் இயற்றினர்.

   
இறைவனால் ஆக்கப்பட்ட நூல்கள் எனக் கருதப்படும்,
வேதங்களின் இன்றைய நிலை அறிந்தோம்.
ஆகமங்களின் நிலையும் அதுவேயாம்.
மூல ஆகமங்கள் இருபத்தெட்டு.
உப ஆகமங்கள் இருநூற்றிப்பதினேழு இருந்ததாய்,
பண்டைய நூல்கள் மூலம் நாம் அறிகிறோம்.
ஆனால் இன்று கிடைப்பவை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலவேயாம்.
நம் சமயத்தில்; கிரியை, ஞானம் ஆகிய இரண்டு பகுதிகளையும் வரையறை செய்யும்,
பிரமாண நூல்களான ஆகம நூல்களையும் இழந்து வரும் கொடுமை,
கலியின் செயலன்றி வேறென்ன?

   
வேத, ஆகம, புராண, இதிகாசங்கள் என்பது நமது சமயநூல் வரிசை.
வேதத்தில் சொல்லப்பட்ட அதிநுட்ப அறங்கள் ஆகமத்திலும்,
ஆகமத்தில் சொல்லப்பட்ட அதிநுட்ப அறங்கள் புராணத்திலும்,
புராணத்தில் சொல்லப்பட்ட அதிநுட்ப அறங்கள் இதிகாசத்திலுமாக,
அறிவிலாரும் உய்யும் பொருட்டு எளிமைப்படுத்தப்பட்டு உரைக்கப்பட்டன.

   
இந்நான்கினுள் வேத, ஆகமங்கள் இன்று பெரும்பாலும் நம் கைவிட்டுப் போய்விட்டன.
அறிவியல் வளர்ச்சியுற்றதாய்க் கருதும் இன்றைய தலைமுறை,
நுண் அறங்களை உள்ளடக்கிச் சொல்லப்பட்டிருக்கும் புராணக் கதைகளை
ஏற்கவோ, நம்பவோ தயாராயில்லை.
எனவே இன்றைய நிலையில் வேதசாரத்தை உட்கொண்டிருக்கும் இதிகாசங்களே,
இலக்கியச் சுவை மிகுதியாலும், கவிதா ஆற்றலாலும்,
கலியுகத்தில் வேதக்கருத்தை நிலைநிறுத்தவல்லன.
ஆதலால் கலியுகத்தில் ஓரளவேனும் வேதம் நிலைக்கவும்,
அதனூடு ஓரளவேனும் அறம் நிலைக்கவும்,
காரணமாய் இன்று நிற்பவை இதிகாசங்களேயாம்.

   
அவ் இதிகாசங்களில் ஒன்றாய்த் திகழ்வது இராமாயணமாகும்.
வான்மீகி முனிவர் செய்த அப்பெரும் இதிகாசத்தை,
அதன் உரமும், திறமும் குன்றாது தமிழில் நிலைநிற்கச் செய்தவர்,
நம் கவிச்சக்கரவர்த்தி கம்பராவர்.
காலம் கடந்தும் கம்பகாவியம்,
இன்றைய இளையோர் மத்தியிலும்,
அதன் ஏற்றம் குன்றாது நிலைத்து நிற்கிறது.
தான் செய்த தமிழ் இராமகாவியத்தால்,
வேதக் கருத்துக்களை நிலைக்கச்செய்து,
அதன் மூலம் அறத்தினை நிலைக்கச்செய்து,
அதன் மூலம் இப்பிரபஞ்சத்தின் அழிவைத் தடுத்து நிற்கிறான் கம்பநாடன்.

   
கம்பனைக் கற்பதன் பயன் என்ன என்று கேட்போர்க்கு,
தமிழறிவு, இலக்கியச்சுவை, கவிதானுபவம், அறப்படிவு என்பதாய்,
பதிலுரைப்பதிலும் பார்க்க,
வேதத்தின் நிலைத்தலுக்குக் காரணமாகி,
அதன் மூலம் அறத்தின் நிலைத்தலுக்குக் காரணமாகி,
இக்கலியுகத்தில் பிரபஞ்சத்தின் நிலைத்தலுக்குக் காரணமாய்,
இன்றைய நிலையில் கம்பகாவியக்கல்வி,
பயன் செய்யும் என்றுரைப்பதுவே,
உண்மையும், பொருத்தமும் உடைய முதற்பதிவாம்.

   
வேதத்தின் சாரமாய்த் தான் நின்று நிலைத்து,
அதன் மூலம் இவ்வுலகில் ஓரளவேனும் அறத்தை நிலைக்கச்செய்து,
பிரபஞ்சத்தின் அழிவைத் தடுத்து நிற்கும் கம்பகாவியம்;,
கலியுகத்தை இருள் முழுமையாய் விழுங்கிவிடாது காத்து நிற்கும்,
நந்தா விளக்காய் விளங்குகிறது.
இப்பிரபஞ்சத்தை சிதைய விடாது,
கலியுகத்தில் அறத்தைக் காத்து நிற்கும்,
அரிய கம்பவிளக்கை,
உயிரினும் மேலாய்ப் போற்றுதல் நம் கடமையன்றோ!
கம்பவிளக்கைக் காக்கும் கடமை தமிழர்க்காக அன்றாம்;
இத்தரணிக்காக என்று உணர்தல் அவசியம்.
      
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.