அதிர்வுகள் 05 | அந்த நாளும் வந்திடாதோ?

அதிர்வுகள் 05 | அந்த நாளும் வந்திடாதோ?

உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது.
அந்த மாற்றங்களுள் சிலவற்றால் நன்மைகள் ஏற்படுகின்றன.
வேறு சிலவற்றால் தீமைகள் ஏற்படுகின்றன.
இன்னும் சிலவற்றால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுகின்றன.
நம் நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் நடந்த,
யுத்தம் விளைவித்த மாற்றங்களால்,
மூன்றாவதாய் நான் சொன்ன நன்மை, தீமை எனும் இரண்டும் விளைந்து,
நம்மைப் பெருமளவில் பாதித்திருக்கின்றன.
விளைந்திருக்கும் ஒரே நன்மை,
 

எட்டுத்திக்கும் சென்ற நம்மவரால் வந்த,
செல்வச்செழிப்பு மட்டுமென்றே தோன்றுகிறது.
அதுவும் நன்மைதானா? என்பது,
இன்று வரை எனது நெஞ்சில் கேள்வியாகவே இருக்கிறது.
காலம்தான் அக்கேள்விக்குப் பதில் சொல்லவேண்டும்.

*****
தீமை என்று பார்த்தால்,
உயிர், உரிமை, உடைமை என,
இழந்தவை பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இந்த இழப்புக்கள் எல்லாம் மிகப் பெரியவைதான்.
ஆனாலும், இந்த இழப்புக்களின் பாதிப்புக்களை,
காலம் நிச்சயம் மெல்ல மெல்ல அழித்துவிடும்.
என்னைப் பொறுத்தவரை நாம் இழந்தவற்றுள்,
காலத்தாற்கூட சரிசெய்ய முடியாத வகையில்,
எமக்கேற்பட்டிருக்கும் பெரிய இழப்பாய் நான் கருதுவது,
நம் தாய் மண்ணில் தொலைந்துபோன சில அபூர்வ விழுமியங்களையே.
அவ் விழுமியங்கள் இனி மீள உயிர்க்கும் என்பதில்,
எனக்குத் துளியளவும் நம்பிக்கையில்லை.
“தமிழன் என்றோர் இனம் உண்டு
தனியே அவர்க்கோர் குணம் உண்டு” என்ற கவிதை அடி போல,
யாழ்ப்பாணத்தார் என்று ஓர் இனம் உண்டு,
தனியே அவர்க்கோர் குணம் உண்டு என்று சொல்லத்தக்க வகையில்,
அந்தக்கால யாழ்ப்பாணத்தாரிடம்,
அபூர்வமான பல விழுமியங்கள் நிலைத்திருந்தன.
இன்றைய யாழ்ப்பாணத்தில்,
அவ்விழுமியங்கள் பெரும்பாலும்  மறைந்துவிட்டன.
அவ்விழுமியங்கள் இல்லா யாழ்ப்பாணம்,
உயிர் இல்லா உடல்போல் தான் எனக்குத் தெரிகிறது.
அதென்ன அப்பேர்ப்பட்ட விழுமியங்கள் என்கிறீர்களா?,
எனக்கு வரையறுத்து இலக்கணமாய்ச் சொல்லத்தெரியவில்லை.
எனவே, இலக்கியமாய்ச் சொல்ல முயல்கிறேன்.

*****
இருபத்தியொரு வயதில் எங்கள் மூத்த அக்காவிற்கு,
திருமணப்பேச்சுக்கள் ஆரம்பமாகின.
எனக்குத் தெரிந்து, வீட்டில் ஒரு இருபத்தைந்து சாதகங்களாவது பார்த்திருப்பார்கள்.
இன்றைக்குப் போல் அந்தப்பாவம், இந்தப்பாவம் என,
வெறும் சாதகப் பொருத்தம் மட்டும் பார்க்கவில்லை.
பெரும்பாலும் குடும்பப் பொருத்தமே முக்கியமாய்க் கவனிக்கப்பட்டது.
குடும்பப் பெருமை, குடும்பப் பண்பாடு, குடும்பப் பழக்கவழக்கம் என,
என் அம்மாவின் தம்பிமார் ஓடியோடி பேசி வந்த மாப்பிள்ளைமாரை ஆராய்ந்தார்கள்.
பல தேடல்களின்பின் ஒரு மாப்பிள்ளை முடிவாக,
அவர்கள் வந்து பெண் பார்ப்பதற்கென நாள் நிச்சயிக்கப்பட்டது.
எனது அப்பாவின் தங்கை வீட்டில்,
பெண்பார்க்கும் நிகழ்வை நடத்துவதென நிச்சயித்தார்கள்.
எங்கள் மாமியின் கணவர் அந்தக்காலத்தில் யாழ் மேயராய் இருந்தவர்.
வக்கீலாய் அவர் புகழ் பெற்றிருந்தார்.
பண்பாடுகளுக்கு அவர் எப்பொழுதுமே முதலிடம் கொடுப்பார்.
பெண் பார்க்கும் படலத்தால் எங்களுக்கெல்லாம் பெரிய பரபரப்பு.
மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடிக்குமா?
திருமணம் நிச்சயமாகுமா? எனக் காத்திருந்தோம்.

*****
குறித்த நாளன்று மாமி வீட்டில் பெரிய ஆரவாரம்.
மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவெனப் பலகாரங்கள் எல்லாம் சுட்டார்கள்.
அப்போதெல்லாம் விருந்தினர்களுக்கு,
கடையில் உணவு வாங்கிக் கொடுக்கும் பழக்கம் இருக்கவில்லை.
அம்மா காய்ச்சிய பாலை வற்றுவதற்காக அடுப்பிலேயே விட்டிருந்தார்.
சிறுவர்களாக இருந்த நாங்கள் எமது பலகாரப் பங்கிற்காக,
குசினியைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம்.
திடீரென குசினிக்குள் புகுந்த எங்கள் மேயர் மாமா,
“மாப்பிள்ளை வந்து பார்த்து,
பொம்பிள்ளையை பிடிச்சிட்டுது என்று சொன்ன பிறகுதான்,
பலகாரம் தேத்தண்ணி எல்லாம் கொடுக்கவேணும்” என்று,
உத்தரவிட்டுவிட்டுப் போனார்.
உறவு நிச்சயிக்கப்படாமல்,
கொண்டாட்டம் தேவையில்லை எனும் கொள்கை அவருக்கு.
மாப்பிள்ளை வரும் நேரத்திற்காக நாங்கள் காத்திருந்தோம்.

*****
‘சோமசெற்’ கார் ஒன்று ‘கேற்’ தாண்டி உள்ளே வந்தது.
மாப்பிள்ளை வீட்டார்கள் வந்துவிட்டனர் எனும்,
பரபரப்புத் தொற்றிக்கொள்ள வீடு சுறுசுறுப்பானது.
அம்மா மாமியாக்களோடு அப்பாவும் மாமாவும்,
வந்தவர்களை வரவேற்க முன்னே சென்றனர்.
மச்சான்மாரும், நாங்களும் மாப்பிள்ளையைப் பார்க்கும் ஆர்வத்தில்,
அவர்களைப் பின் தொடர்ந்தோம்.
மாப்பிள்ளை வந்துவிட்டார் எனும் செய்தி தெரிந்ததும்,
அலங்கரிக்கப்பட்டிருந்த அக்காவிற்கு சலம்சலமாய் வேர்க்கத்தொடங்கியிருந்தது.
முன்னே சென்ற மாமா தனது அரசியல் பாணி மாறாமல்,
வாருங்கோ! வாருங்கோ!” எனத் தலைக்கு மேலே கைகூப்பி,
வந்தவர்களை வரவேற்றார்.
கார் திறக்கப்பட முதலில் ஒரு வயதானவர் இறங்கினார்.
அவரைத் தொடர்ந்து ஒரு ரூபாய் அளவான குங்குமப்பொட்டோடு,
லட்சுமிகரமான ஒரு பெண்மணி இறங்கினார்.
அவர்கள் மாப்பிள்ளையின் தாய், தந்தையர் போலும்.
எங்கள் அப்பாவும், அம்மாவும் முன்னே சென்று அவர்களை வரவேற்றனர்.
பிறகு காரிலிருந்து சற்று நெடுவலாக மா நிறத்தில் ஒருவர் இறங்க,
அவர்தான் மாப்பிள்ளை என்று நாங்கள் தெரிந்து கொண்டோம்.
மாப்பிள்ளைக்குக் கைகொடுத்து வரவேற்ற மாமா,
எல்லோரும் வந்துவிட்டதாக நினைந்து,
வாங்கோ உள்ளே போவம்” எனத் திரும்பி நடக்கத்தொடங்க,
காரின் மறுபக்கத்தால் வேறொரு இளைஞர் இறங்கினார்.
கிட்டத்தட்ட மாப்பிள்ளையின் வயதுதான் அவருக்கும் இருக்கும்.
சற்றுக் கறுவலாய் சுருட்டைத் தலைமுடியோடு இருந்த அவர்,
மாப்பிள்ளைக்கு அருகில் வந்து தோளோடு தோள் முட்ட நின்று கொண்டார்.
எங்கள் மாமாவின் முகம் மாறத்தொடங்கியது.

*****
வந்தவர்களை, வீட்டினுள்ளே அழைத்துச்செல்ல ஆயத்தமான மாமா,
திடீரென நின்றார்.
மாப்பிள்ளையின் தந்தையின் அருகில் சென்று,
ஒரு சின்ன விசயம் கதைக்கவேண்டும்” என்று,
அவரை அப்புறமாய் அழைத்துச்சென்றார்.
ஒரு ஓரமாய்ப் போய் மாப்பிள்ளையின் தந்தையிடம்,
இந்தத் தம்பி யார் பாருங்கோ? உங்கட இரண்டாவது மகனே?” என,
குரலைத் தாழ்த்திக் கேட்டார்.
மாப்பிள்ளையின் தந்தை நிதானமாக,
இல்ல பாருங்கோ இது தம்பியிட ‘பெஸ்ற் பிரண்ட்’, 
அவரும் பொம்பிள்ளையைப் பார்க்கவேண்டுமெண்டு,
தம்பி கூட்டிக்கொண்டு வந்தவன்
பெரியவர் சொல்லி முடிக்கும் முன்,
மாமா உருவாடத் தொடங்கினார்.

*****
நல்ல குடும்பம் எண்டுதான் உங்களோட சம்பந்தம் செய்ய விரும்பினனாங்கள். 
உதென்ன பழக்கம் பாருங்கோ! 
பொம்பிள்ளை பார்க்க கண்டவங்களையும் கூட்டிக்கொண்டு வரலாமே?
தன்ர வாழ்க்கைய இன்னொருவரிட்டக் கேட்டுத் தீர்மானிக்கிறவர், 
என்னெண்டு குடும்பம் நடத்தப்போகிறார் பாருங்கோ? 
தயவுசெய்து எங்களை நீங்கள் மன்னிக்கவேணும். 
உங்களை நாங்கள் அவமரியாதை செய்வதாய் நினைக்கப்படாது. 
எங்களுக்கு எங்கட பிள்ளையிட வாழ்க்கை முக்கியம். 
இனி நாங்கள் பொம்பிள்ளையைக் காட்டிறதாய் இல்ல, 
தயவு செய்து நீங்கள் போயிட்டு வாங்கோ!
மாப்பிள்ளை வீட்டார் வாசலில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்டனர்.
கல்யாணம் குழம்பியதில் சிறுவர்களாகிய எங்களுக்கு கவலை ஒருபக்கம்.
சுட்ட பலகாரம் முழுவதும் எங்களுக்குத்தான் எனும் சந்தோஷம் ஒருபக்கம்.
ஆச்சரியமாய் எங்கள் வீடு முழுவதும் மாமாவின் முடிவை அங்கீகரித்தது.

*****
இன்னொரு சம்பவம் சொல்லப்போகிறேன்.
;நான் சிறுவனாய் இருக்கின்றபோது,
முதன்முதலாய் எங்கள் அம்மாவின் ஊரான சண்டிலிப்பாய்க்கு,
குடியிருக்கவென வந்திருந்தோம்.
முன்னமே எங்கள் ஊர் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.
ஐயனார் கோயிலடி ஒழுங்கை என்றால்,
எங்கள் உறவிற்கு மட்டும் உரித்;தான ஒழுங்கை அது என்று அர்த்தம்.
ஒழுங்கையின் எல்லா வீடுகளிலும் சொந்தக்காரர்கள் மட்டுந்தான் இருந்தார்கள்.
முதன்முதலாக முழுமையான ஒரு கிராமத்தைத் தரிசித்த மகிழ்ச்சி எனக்கு.
ஒரு நாள்  என்னை ஒத்த உறவான பிள்ளைகளோடு,
வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தேன்.
எல்லா வீடுகளையும் உயர்ந்த பனையோலை வேலிகள், தனித்தனிப் பிரித்துக்காட்டின.
பெண்கள் குளிப்பதற்காய்க் கிணற்றைச் சுற்றி,
வேலிக்குள் தனி வேலி.
அவ்வேலியைக் கடந்து அண்ணாந்து முகம் காட்டிக்கொண்டிருந்தது,
கிணற்றுத் துலாமரம்.
அப்போதெல்லாம் எங்கள் வேலிக் கதியால்களின் பூவரசம் குழைகளை,
வருடம் ஒருதரம் வெட்டி விற்பார்கள்.
கட்டுக்கட்டாய்க் கிடக்கும் அவற்றை வாங்கி,
புகையிலைக் கன்றுக்கு எருவாய்ப்பயன்படுத்த,
தூரத்து ஊர்களிலிருந்து விவசாயிகள் வண்டில் கட்டி வருவார்கள்.
அன்று, அப்படி ஒரு வண்டில் எங்கள் ஒழுங்கைக்குள் புகுந்தது.

*****
திடீரெனப் பெரும் பரபரப்பு.
எங்கள் சொந்தக்காரர்களான இளந்தாரிப் பெடியங்கள் சிலர்,
கடகடவென வேலி தாண்டி ஒழுங்கைக்குள் குதித்தார்கள்.
எடேய் கொஞ்சம் பொறுங்கடா, பொறுங்கடா” என்று,
அவர்களின் பின்னால் ஓடிவந்த வீட்டுப் பெண்கள்,
இளைஞர்கள் வேலி தாண்டிப் பாய்ந்ததும்,
அவசர அவசரமாகப் படலை திறந்து வெளியே ஓடினார்கள்.
என்ன நடக்கிறது என்று தெரிவதன்முன்பாக,
குழையேற்ற வந்த வண்டிலில் நின்றுகொண்டிருந்த,
இளைஞனைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளி,
எங்க;ர் இளந்தாரிகள் எல்லாம், அவனை அடித்து நொருக்கத் தொடங்கினார்கள்.
அவனை ஏன் இவர்கள் அடிக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
அவனோடு ஏதாவது முன் பகை இருக்குமோ?” என நினைந்தேன்.
வெளியில் ஓடிவந்த பெண்டுகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து,
அந்த இளைஞனை அடித்துக் கொண்டிருந்த ஊர் இளந்தாரிகளை,
இடுப்பிலும் கையிலுமாக பிடித்து இழுத்தபடி குளறிய குளறலில்,
அடுத்த வேலியில் குழை பிடுங்கிக் கொண்டிருந்த குலநாயகம் தாத்தா,
கொக்கத்தடியுடன் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார்.
எடேய், அவன விடுங்கடா” என்று அவர் போட்ட ஒரே அதட்டலில்,
மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்புகளாய்,
ஊர் இளந்தாரிகள் எல்லாம் ஒடுங்கி ஒருபக்கமாய் நின்றனர்.

*****
விசாரணை தொடங்கியது.
அடி வாங்கியவன்,
தாத்தாவின் கட்டளைக்கு ஊர் இளைஞர்கள் கட்டுப்படுவதைக் கண்டதும்,
ஓடிப்போய், தாத்தாவின்பின் ஒளிந்துகொண்டான்.
வில்போல் வளைந்திருந்த தனது மெல்லிய நரைத்த மீசையை முறுக்கியபடி,
 “ஏனடா, அவனப் போட்டு அடிக்கிறீங்கள்? அவன் என்ன செய்தவன்?” என,
விசாரணையை ஆரம்பித்தார் தாத்தா.
அடி வாங்கியவன் “ஐயோ! ஐயா, நான் ஒண்டும் செய்யேல, 
இவயள எனக்கு ஆரெண்டே தெரியாது. 
நான் குழை வண்டிலில சும்மா நிண்டுகொண்டு வந்தனான். 
ஏனெண்டு தெரியாம வேலியால பாய்ஞ்சு வந்து, 
இவங்கள் என்னப் போட்டு அடிக்கிறாங்கள்” என்று அழுதான்.

*****
தாத்தா, இப்போது விடயத்தை விளங்கிக் கொண்டவர்போல் தலையை ஆட்டினார்.
ஊர்ப் பெடியளப் பார்த்து,
இவன் செய்தது பிழைதான், அதுக்கு இப்பிடி மாட்டுத்தனமாவே போட்டு அடிக்கிறது? போய் வேலையப் பாருங்கடா!” என்று அவர்களைக் கலைத்தார்.
அவர்கள் முணுமுணுத்துக்கொண்டு அப்புறம் போனார்கள்.
அப்போதும் அவன் செய்த பிழை என்ன என்று எனக்கு விளங்கவில்லை.
இளைஞர்கள் அப்புறம் போனதும்,
வண்டிலில் வந்தவனின் காதைப் பிடித்து முறுக்கிய தாத்தா,
எட விசரா, ஊர் ஒழுங்கைகளுக்குள்ள, வண்டிலில நிண்டு கொண்டு வரலாமே?,
வீடுகளில பெண்டு, பிள்ளைகள், கிணத்தடியில குளிச்சுக் கொண்டெல்லோ நிக்குங்கள். 
நீ வண்டிலில நிண்டுகொண்டு வந்தால் அதுகள் என்ன செய்யுறது? 
இத குடும்பம் நடத்துற ஊரெண்டு நினைச்சனியோ?, 
கூத்தடிக்கிற ஊரெண்டு நினைச்சனியோ? 
இனிமேல்பட்டு இப்பிடி நடந்திடாத!, 
இவங்கள் உன்னக் கொண்டு போடுவாங்கள்” என்று,
அவனை வெருட்டி அனுப்பினார்.
நான் திகைத்துப் போனேன்.

*****
பெண்களின் மரியாதையைப் போற்றிய யாழ்ப்பாணத்தை,
குடும்பப் பண்பாட்டைப் பேணிய யாழ்ப்பாணத்தை,
ஊர் ஒழுங்கைக் கடைப்பிடித்த யாழ்ப்பாணத்தை,
ஊர் ஒழுங்கைப் பேணுதற்காய் வீரமும் ஒற்றுமையும் காட்டிய யாழ்ப்பாணத்தை,
ஊர்ப் பெரியவருக்குக் கட்டுப்பட்ட இளைஞர்கள் நிறைந்த யாழ்ப்பாணத்தை,
தமக்கெனத் தனிப் பண்பாடமைத்து வாழ்ந்த யாழ்ப்பாணத்தை,
இனிப் பார்க்க முடியாதா?
அந்த நாளும் வந்திடாதோ என்று நெஞ்சு ஏங்குகிறது.

*****
-கம்பவாரிதி இ. ஜெயராஜ்-
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.