அதிர்வுகள் 07 | கிருஷ்ணியின் காதல் !

அதிர்வுகள் 07 | கிருஷ்ணியின் காதல் !
 
- கம்பவாரிதி இ.ஜெயராஜ்-


உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி!
இந்த வார அதிர்வில்,
உங்களுக்குக் கிருஷ்ணியை அறிமுகம் செய்யப் போகிறேன்.
நீண்ட முகம், துருதுருக்கும் விழிகள்,
அவ் விழிகளில் எந்நேரமும் தேங்கி நிற்கும் அன்பு,
மெலிய செவிகள், கூர்மையான மூக்கு,
ஓயாத சுறுசுறுப்பு, உயர் ஜாதி,
இளமையை அண்மையில்தான் தொட்டதால் உடம்பில் வந்த மினுமினுப்பு.
இவ்வளவும் போதும் என்று நினைக்கிறேன்.
இந்த வர்ணனைகளைக் கூட்டிப் பாருங்கள்.
வருகிற வடிவம்தான் எங்கள் கிருஷ்ணி.

 


யாரென்று சொல்லாமல் அறிமுகத்தை நீட்டுகிறோனோ?
மன்னித்துக்கொள்ளுங்கள்!
நாங்கள் வளர்க்கும் செல்ல நாய்தான் கிருஷ்ணி.
முன்னரே சொல்லாதபடியால்,
உங்கள் கற்பனைகளில் வேறு வேறு வடிவங்கள் வந்திருக்கும்.
அதற்காக, மீண்டும் உங்களிடம் ஒரு மன்னிப்பு.
அதென்ன நாய்க்கு கிருஷ்ணி என்று மனுசப் பெயர்? கேட்கிறீர்களாக்கும்.
வெள்ளைக்கார மயக்கத்தில் மனுசருக்கெல்லாம் நாய்ப் பெயர்கள் வைக்கப்படும்போது,
நாய்க்கு மனுசப் பெயர் வைத்தால் என்னவாம்?
பெயரில் கூட நாய்ப் பெயர், மனுசப்பெயர் என்ற வேறுபாடுகள் இருக்கிறதா என்ன?
யாரும் ஆய்வாளர்களிடம் தான் கேட்கவேண்டும்.
சொல்லவந்ததை விட்டு விட்டு வேறென்னவோ சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
விஷயத்திற்கு வரலாம்.


உயரமாய் வளராமல் பக்கவாட்டில் வளரும்,
‘டாஷன்’ சாதியைச் சேர்ந்தது எங்கள் கிருஷ்ணி.
நாய்க்குள் கூட ஜாதி வித்தியாசம்.
ஒரு’ டாஷன்’ குட்டியின் தற்போதைய விலை பதினையாயிரம் ரூபா.
விலையை வைத்து உயர் ஜாதி தீர்மானிக்கப்படுகிறதா?
ஜாதியை வைத்து விலை தீர்மானிக்கப்படுகிறதா? தெரியவில்லை.
பேப்பர் விற்பனைப்பகுதி விளம்பரத்தில் பார்த்து, வாங்க என்று போனால்,
நாயின் சொந்தக்காரர் என் ரசிகராய் இருந்தார்.
“உங்கள் பேச்சுக்களை எத்தனையோ தரம் கேட்டிருக்கிறோம்.
உங்களுக்கு ஒரு குட்டி தர நாங்கள் குடுத்து வச்சிருக்கவேணும்.”
அவர் சொன்ன ‘குட்டி’ என்ற வார்த்தையில் இரட்டை அர்த்தம் கண்டு,
என்னுடன் வந்த நண்பர் நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்.
நான் எவ்வளவோ சொல்லியும் பணம் வாங்க மறுத்து,
நாய் உரிமையாளர் இனாமாய் ஒரு குட்டியைத் தந்தார்.


எனக்குத் தமிழ் தந்த பரிசுகளில் அந்த நாய்க்குட்டியும் ஒன்றாயிற்று.
தமிழ்த் தாய்க்கு நன்றி செலுத்தும் முகமாக,
அதற்கு தமிழிலேயே பெயர் வைக்கவேண்டும் என்று முடிவு செய்தேன்.
எங்கள் கிராமத்தில் முன்பு ஒரு நாய்க்கு வல்லிபுரம் என்று பெயர் வைத்திருந்தார்கள்.
அந்த நினைப்பு மனத்தில் வர,
கன்னங்கரேல் என்ற நிறத்தில் இருந்ததால்,
அதற்கு கிருஷ்ணி என்று பெயர் சூட்டினேன்.
கிருஷ்ண என்ற வார்த்தைக்கு இருள் அல்லது கருமை என்று அர்த்தமாம்.
கருமையானவன் என்பதால் தான் கண்ணனுக்கு கிருஷ்ணன் என்று பெயர் இட்டார்களாம்.
பெண்ணாகவும், கருமையாகவும் இருந்ததால்,
இதற்குக் கிருஷ்ணி என்று பெயர் வைத்துவிட்டேன்.
வேறென்ன? தமிழ்த்தாயைப் போற்றிவிட்டதாக ஒரு திருப்தி அவ்வளவுதான்.


கிருஷ்ணி வந்த பிறகு எங்கள் வீடு கலகலப்பாயிற்று.
எனது டாக்டர் நண்பர்,
கிருஷ்ணியின் மேல் உயிரையே வைத்து விட்டார்.
வேளாவேளைக்குச் சாப்பாடு, காலை, மாலை தேநீர்,
விற்றமின் குளிசை, மாதத்திற்கு ஒரு தடுப்பூசி,
குளிப்பு, முழுக்கு, நக வெட்டு என,
தன் ஒரே மகளை வளர்த்தது போலவே அந் நாயையும் வளர்த்தார்.
அதைவிடச் சற்று மேலாக என்று கூடச் சொல்லலாம்.
தங்களோடு இருக்கும் நேரத்தை விட,
நாயோடு இருக்கும் நேரம் தான் அதிகம் என,
டாக்டர் வீட்டில் முறுமுறுப்புகள் வந்ததாகவும் கேள்வி.
காலையில் மாடியிலிருந்து அவர் இறங்கி வந்ததும் பாய்ந்து மடியிலேறி,
மனுசரைப்போல அவர் கன்னத்தில் கிருஷ்ணி முத்தம் கொடுக்கும்.
தினமும் அவரோடு வெளியில் சென்று,
பவ்வியமாய்க் காலைக்கடன் செய்துவிட்டு வரும்.
இப்படி நிறையச் சொல்லலாம்.
சுருங்கச் சொன்னால்,
எங்கள் வீட்டு உறுப்பினர்களில் கிருஷ்ணியும் ஒருத்தியானாள்.


சென்ற வாரம் கிருஷ்ணி வயதுக்கு வந்தது.
டாக்டருக்கு அளவில்லாத மகிழ்ச்சி,
உடனேயே மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கிற்று.
இந்த விடயத்தில் எங்கள் பெண்களைவிட நாய்கள் அதிர்ஷ்டசாலிகள்.
சீதனம், ஜாதகம், வெளிநாடு, தொழில் என்றெல்லாம் எதிர்பார்த்து,
இளமையைத் தொலைத்துவிட்டு,
முதிர்கன்னியாகியபின் திருமணம் செய்யும் பிரச்சினை,
அவற்றுக்கு இல்லவே இல்லை!


தெரிந்த நண்பர் ஒருவர் ஜாதி பார்த்து,
ஒரு மாப்பிள்ளையை எங்கள் வீட்டிற்கே அனுப்பி வைத்தார்.
கிருஷ்ணிக்கு அந்த மாப்பிள்ளையை ஏனோ பிடிக்கவில்லை.
வந்த மாப்பிள்ளையை ஐந்து நாட்களாக அது சீண்டவிடவேயில்லை.
மீண்டும் மாப்பிள்ளை தேடும் படலம்.
பல இடங்களிலும் தேடிக் கடைசியில்,
ஒரு சைனாக்காரர் வீட்டில் சம்பந்தம் சரி வந்தது.
வெளிநாட்டு மாப்பிள்ளை.
இம்முறை கிருஷ்ணியை அங்கு அழைத்துச் சென்றோம்.
போய்ப் பத்து நிமிஷத்துக்குள்ளேயே,
சைனா மாப்பிள்ளை,
காதலாகிக் கசிந்து எங்கள் கிருஷ்ணியைச் சிக்கனப் பிடித்தார்.
சைனாக்காரன் சைனாக்காரன்தான்.
சாந்திமுகூர்த்தம் இனிதே நிறைவேறி கிருஷ்ணி வீடு வந்து சேர்ந்தாள்.


அதன் பிறகுதான் பிரச்சினையே ஆரம்பமானது.
வந்த நாள்தொட்டு கிருஷ்ணி யாரோடும் சரியாக முகம் கொடுக்கவில்லை.
திருமணம் முடிந்து உடன் மாப்பிள்ளை வெளிநாடு சென்றுவிட,
வீட்டில் வெறுத்திருக்கும் மணப்பெண்போல,
எந்நேரமும் அது வெற்றுப்பார்வை பார்த்தபடி இருந்தது.
சாப்பாட்டை முற்றாகத் துறந்தது.
டாக்டர், அதுக்கு பிடித்த உணவையெல்லாம் தேடித்தேடிக் கொண்டுவந்து கொடுத்தார்.
மணந்துகூடப் பார்க்காமல் அது முகத்தைத் திருப்பிக்கொண்டது.
அத்தோடு,
தினம் தினம் டாக்டருக்குக் கொடுக்கப்படும் கிருஷ்ணியின் முத்தமும் நிறுத்தப்பட்டது.
டாக்டர் வலியப்போய் அதைத்தூக்கி வைத்துக் கொண்டால்,
சலிப்போடும், முறைப்போடும் அவரைப்பார்த்து, பின் திமிறிக் குதித்து ஓடியது.
பாவம்  டாக்டர், மிகவும் நொந்து போனார்.


மனுசரைப்பற்றி மனுசர்தான் அதிகம் பெருமையாய்ப் பேசிக்கொள்கிறோம்.
இலக்கியங்களில் படித்த காதல் நோயின் அடையாளங்களான,
பால் கசத்தல், படுக்கை நோதல், பசலை படர்தல்,
அத்தனையையும் கிருஷ்ணியிடமும் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன்.

பாயின் மிசை நானும்-தனியே
படுத் திருக்கையிலே
தாயினைக் கண்டாலும்-சகியே
சலிப்பு வந்ததடீ!
உணவு செல்லவில்லை-சகியே!
உறக்கங் கொள்ளவில்லை
பாலும் கசந்ததடி சகியே!
படுக்கை நொந்ததடீ

பாரதியின் ‘கண்ணன் என் காதலன்’ பாட்டு அடிகளை,
எங்கள் கிருஷ்ணி மனதுள் பாடுவதாய் எனக்குப்பட்டது.


இரண்டு நாட்களில் புதிய பிரச்சினை ஆரம்பமானது.
கிருஷ்ணியின் மன ஏக்கத்தை எப்படியோ புரிந்து கொண்டு,
எங்கள் சூழலில் திரிந்த ஒரு தெரு நாய்,
கிருஷ்ணிக்குக் காதல் வலை வீசத்தொடங்கியது.
ஜாதி வேற்றுமை பார்க்காது கிருஷ்ணியும் அதன் காதலில் வீழ்ந்தாள்.
எங்கள் வீட்டில் பெருங் கொந்தளிப்பு.
டாக்டர் அக்காதலை ஏற்கக் கடுமையாய் மறுத்தார்.
ஆனால், அந்தத் தெருநாயோ அதற்கெல்லாம் சிறிதும் அஞ்சவில்லை.
சற்றுக் கவனம் குறைந்தால் போதும்,
தடையையெல்லாம் தாண்டி எப்படியோ அத்தெருநாய் உள்ளே புகுந்துவிடும்.
டாக்டரிடம் பெரிய பொல்லால் நாலைந்து தரம் அடியும் வாங்கியது.
ஆனால், அதைப்பற்றியெல்லாம் அது கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
நேரம் வாய்த்த போதெல்லாம்,
டாக்டருக்கு ‘கல்தா’ கொடுத்துவிட்டு அத் தெருநாய் உட்புகுந்து விடும்.
அதன் காதல் வேகத்தைக் கண்டு நான் சிலிர்த்துப் போனேன்.
கிருஷ்ணியின் காதலும் அப்படித்தான் இருந்தது.
சின்ன எதிர்ப்பைக் கண்டதும் காதலியைக் கைவிடுகிற,
இன்றைய மனுசக் காதலர் பலர்,
இந் நாய்க்காதலரின்முன் எனக்குத் தூசாய்ப்பட்டனர்.


நேற்று, எங்கள் கோயிலின் முன்பாக நின்றிருந்த ஒரு தந்தை,
யாரும் இல்லை எனும் நினைப்பில்,
மகனோடு எங்கள் மதிலோரம் நின்று சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்.
மகனின் காதல் சம்பந்தமான பிரச்சனை போல் தெரிந்தது.
நான் மதிலின் உட்பக்கம் நின்றது அவர்களுக்குத் தெரியவில்லை.
ஏனோ எனக்கு அவர்கள் சண்டையில் மனம் பதியவில்லை.
கோபத்தின் உச்சத்தில் தன்னை மறந்து,
மகனை நாயே! என்று திட்டினார் அந்தத் தந்தை.
அதுவரை அவ்வுரையாடலில் அக்கறையின்றி இருந்த நான்,
மகனை நாயே என்று அவர் திட்டியதும்,
அவன்மேல் மதிப்புண்டாக,
அவனைப் பார்க்கவேண்டும் என்று வீட்டிற்கு வெளியே ஓடினேன்.
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.