ஆண்டவனின் அம்மை- பகுதி 6: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ஆண்டவனின் அம்மை- பகுதி 6: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
(சென்ற வாரம்)
தன் உள்ளத்து உணர்ச்சியைக் கள்ளத்தால் மறைத்த பரமதத்தன், அன்னைக்காய்ச் சிவனார் செய்த திருவருளை, தன் முன்னைத் தவப்பயன் என்று உணராது எண்ணத்தில் மிரண்டான். கரம் பிடித்த கன்னிகையைக் கைவிட்டுப் போகும், திறம் தேடி அறிந்தான். தேசத்தார் கேள்விக்கு,'நெடுங்கடல் கடந்து நீள் நிதி கொணர்வேன்' என்றுரைத்த, அவன் கருத்தை அயல் ஏற்றது. அன்னையும் ஏற்றாள்.

வகையோடு கலம் சமைத்து,
அதனைச் செலுத்தும் மீகாமன் முதலான தக்காரைத் தேடி,
காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்றவையான,
அயல் நாட்டவர் விரும்பும் பண்டங்கள் அத்தனையையும் அக்கப்பலில் ஏற்றி,
கடற்தெய்வத்தை மனம், மொழி, மெய்களால் வணங்கி,
பின் நல்லநாள் பார்த்துத் தன் பயணம் தொடங்கினான் பரமதத்தன்.
மனைவியைவிட்டு அவன் பிரிந்து சென்றதை போனான் எனும் சொல்லினால் குறித்து,
அவன் திரும்பவும் நம் அன்னையிடம் மீளப்போவதில்லை என்பதை,
மறைமுகமாய்ச் சுட்டுகிறார் நம் தெய்வச் சேக்கிழார்.

கலஞ்சமைத் ததற்கு வேண்டுங் கம்மிய ருடனே செல்லும்
புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றிச்
சலந்தரு கடவுட் போற்றித் தலைமையாம் நாய்கன் றானும்
நலந்தரு நாளில் ஏறி நவிதிரைக் கடல்மேற் போனான்.


அவன் பயணம் பல நாடுகளிலும் தரித்துத் தொடர்ந்தது.
சென்ற நாடுகளிலெல்லாம் செல்வம் சேர்த்தான்.
அதனால் காலம் சில நாட்களைக் கரைத்தது.
சேர்த்த செல்வத்தோடு பாண்டிநாட்டின் ஓர் பட்டினத்தில்,
பயணம் முடித்தான் பரமதத்தன்.
அவன் வல்லமையால் அங்கும் செல்வம் பெருகிற்று.

கடல்மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயந் தன்னில்
அடைவுறச் சென்று சேர்ந்து அங்(கு) அளவில் பல் வளங்கள் முற்றி
இடைசில நாட்கள் நீங்க மீண்டும் அக்கலத்தில் ஏறிப்
படர்புனற் கன்னி நாட்டு ஓர் பட்டினம் மருங்கு சேர்ந்தான்.

இப்பாடலில் பரமதத்தன் சென்று சேர்ந்த இடத்தினை,
பெயர் சுட்டாமல் ஓர் பட்டினம் என்றே குறிக்கிறார் தெய்வச் சேக்கிழார்.
ஓர் என்ற சொல்லுக்குத் தமிழில் ஒன்று என்றும்,
ஒப்பற்ற என்றும் பொருள்கள் உளவாம்.
இங்கு ஓர் பட்டினம் என்று சேக்கிழார் குறிப்பது,
ஒப்பற்ற பட்டினம் எனும் பொருளிலேயேயாம்.
நம் அன்னை புனிதவதியார், கணவனைத் தேடிவந்து,
அவன் கைவிட, இவ் அழகுடல் எனக்கெதற்கு என்று,
தன் பெண்ணுடலை உதறிப் பேயுருக்கொண்ட இடம் இஃதாதலால்,
அவ்விடத்தின் பெருமை உணர்த்த அதனை,
ஓர் பட்டினம் என்று குறித்து அதன் ஒப்பற்ற தன்மையை,
தெய்வச் சேக்கிழார் நமக்கு உணர்த்துகிறார் என்க.

அவ்வூரில் பொருள் தேடிப் புகழ் கொண்ட பரமதத்தன்,
சிவனருள் பெற்ற நம் அன்னையை,
மனைவியாய்க் கருதமுடியாமல் பிரிந்து வந்த தன் மனச்சுமையை,
மறைத்து வாழ்ந்தான் ஆதலினால்,
அவனைத் திருமணம் ஆகாதவன் எனக் கருதிய அவ்வூரார்,
அவனைத் தம் ஊரிலேயே திருமணம் செய்ய வேண்டி நின்றனர்.
அவர்தம் வேண்டுதலை ஏற்று,
அத்தேயத்திலேயே ஓர் வணிகன் புதல்வியை,
வதுவை செய்து வாழத் தொடங்கினான் பரமதத்தன்.
அங்கும் அவன் இல்லறம் நல்லறமாயிற்று.
பெறுதற்கரிய இலக்குமி போன்ற புதிய மனையாளால் மனம் மகிழ்ந்தான்.
தெய்வப் பெண்ணாய்த் திகழ்ந்த தன் முன்னை மனைவி புனிதவதிக்கு,
தான் செய்த வஞ்சனையை மட்டும் அவளுக்கும் இயம்பானாயினான்.
அதுதவிர அவன் இல்லறம் குறையின்றி நிறைந்தது.
முறைதவறாது இல்லறம் நடாத்தி முகம் மலர வாழ்ந்திருந்தான் அவன்.

அப்பதி தன்னில் ஏறி அலகில்பல் பொருள்கள் ஆக்கும்
ஒப்பில்மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்து
மெய்ப்புகழ் விளங்கும் அவ்வூர் விரும்ப ஓர் வணிகன் பெற்ற
செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான்.

செல்வம் அவனை நோக்கி வந்ததேயன்றி போனதில்லை என்பதனை,
நமக்கு உணர்த்த ஒருவழிப் பெருக உய்த்து என்கிறார் தெய்வச் சேக்கிழார்.
பரமதத்தனது உண்மையான புகழ் விளங்குகிற அவ்வூர் என்றும்,
உலகில் மெய்ப்புகழோடு விளங்குகிற ஊர் என்றும்,
நம் அன்னை மெய்யை (உடலை) நீக்கியதால்,
புகழ் கொண்ட ஊர் என்றும் பொருள்கள்பட,
மெய்ப்புகழ் விளங்கும் அவ்வூர் எனச் சேக்கிழார் சிலேடையாய் உரைப்பது,
கற்றார் நெஞ்சைக் களிக்கச் செய்கிறது.

அதேபோல,
ஊரார் விரும்பிக் கேட்கத் திருமணம் செய்தான் அவன் என்ற பொருள்படவும்,
இவன் செய்த திருமணத்தை ஊர் விரும்பிற்று என்ற பொருள்படவுமாக,
அவ்வூர் விரும்ப எனத் தொடர் அமைக்கிறார் சேக்கிழார்.
வணிகத்தில் கைதேர்ந்தவனாதலின் அங்கும் செல்வத்தில் ஒப்பற்றுத் திகழ்ந்த,
ஓர் வணிகன் மகளைத் திருமணம் செய்தான் என்பதை நமக்கு உணர்த்துதற்காய்,
ஓர் வணிகன்  என்றும்,
அவன் திருமணம் செய்த பெண்,
செல்வத்தாலும், அழகாலும், பண்பாலும், உயர்ந்து நின்றதை நமக்கு உணர்த்த,
செப்பருங் கன்னி என்றும்,
அத்திருமணத்தால் பரமதத்தனின் செல்வம் மேலும் பெருகிற்று என்பதை நமக்கு உணர்த்த
திருமலி வதுவை என்றும் குறித்தனர் நம் தெய்வச்சேக்கிழார்

                                                                                           (அடுத்த வாரமும் அம்மை வருவாள்)
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.