உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 17 | குமாரதாசனின் தியாகம் !

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 17 | குமாரதாசனின் தியாகம் !
நூல்கள் 23 Dec 2016
 
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

குருநாதரின் இரண்டாவது இலங்கைப் பயணம்
குருநாதரின் இரண்டாவது இலங்கைப் பயணம் 1982 மார்ச்சில் நடந்தது.
இவ்விழாவிற்கு குருநாதரோடு இராமேஸ்வரக் கம்பன்கழகச் செயலர்,
கோடூர் ராஜகோபால் சாஸ்திரிகளும் வருகை தந்தார்.
சிவராமலிங்கம் மாஸ்ரரின் மூத்தமகன் ராஜாஜி,
வெளிநாட்டால் வந்து புதுக்கார் வாங்கியிருந்த நேரம் அது.
அந்தக்காரில் சென்று ஐயாவை அழைத்து வந்தோம்.
கிரியும், ராஜாஜியும் கார் ஓட்டினார்கள்.
அழைத்து வரும்போது பாதை தெரிந்தவன்போல் ஓடிய கிரி,
அனுராதபுரம் வரை பாதை மாறி எம்மைக் கொண்டு சென்றான்.
இப்பயணத்தின்போது கொழும்பில் ஒரு விழாவையும்,
யாழ்ப்பாணத்தில் ஒரு விழாவையும் நடத்தினோம்.
கொழும்பில் முதல் நாள் விழா சரஸ்வதி மண்டபத்திலும்,
மற்றைய இரண்டு நாள் விழாக்களும்,
விவேகானந்த சபை மண்டபத்திலும் நடைபெற்றன.
யாழ் விழா வழமைபோல் நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது.
 

ஆறாவது கம்பன் விழா (கொழும்பில் நடந்தது)
(19.03.1982)
இவ்விழா 1982 மார்ச் 19,20,21 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கான முழு ஒழுங்கையும்,
எஸ்.ரி. சிவநாயகம் அவர்களே செய்தார்;.
புங்குடுதீவைச் சேர்ந்த வர்த்தகர் மயில்வாகனம் என்பவரைக்கொண்டு,
விழாச் செலவுக்காக ரூபா ஐயாயிரம் வாங்கித் தந்தார்.
அந்தக் காலத்தில் அது பெரிய தொகை.
அந்தப் பணத்தில் அந்த நாட்களில் முழு விழாவினையும்
ஓரளவு நடத்த முடிந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்,
செல்லையா இராஜதுரை அவர்கள்,
கூட்டணிக் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக,
கட்சியிலிருந்து விலகி,
ஜே.ஆர். அரசில் அமைச்சராய் இணைந்திருந்த நேரம் அது.
இனத்துரோகிப் பட்டம் அந்நேரத்தில் அவருக்குச் சூட்டப்பட்டிருந்தது.
அவர் எஸ்.ரி. சிவநாயகத்தின் நெருங்கிய நண்பர்.
பெரும் தமிழ் ஆர்வலர், நல்ல பேச்சாளர்.
கிழக்கு மாகாணத்தில் தனித்து நின்று தமிழரசுக் கட்சியை வளர்த்தவர்.
அவரை விழாவில் கலந்துகொள்ள வைக்கும் கோரிக்கையை,
எஸ்.ரி. சிவநாயகம் எங்கள் முன் வைத்தார்.
அரசியல் குழப்பங்கள் ஆரம்பித்திருந்த காலமது.
அக்காலத்தில் கழக நிகழ்ச்சிகளுக்குள்,
அரசியலைப் புகுத்துவதில்லை என்ற முடிவோடிருந்ததால்,
நாம் பெரிய சங்கடப்பட்டோம்.
எஸ்.ரி. சிவநாயகத்தையும் முகம் முறிக்க முடியவில்லை.
நீண்ட சிந்தனையின் பின்னர்,
“அரசியல் பேசக்கூடாது” என நிபந்தனை விதித்து,
அமைச்சரை விழாவுக்கு அழைக்கச் சம்மதித்தோம்.
அமைச்சர் விழாவன்று குறித்த நேரத்திற்குப் பிந்தி வந்ததால்,
அவரை விட்டு விட்டு விழாவினைத் தொடங்கினோம்.
எங்கள் முடிவை எஸ்.ரி. சிவநாயகமும் அங்கீகரித்தார்.
விழாவிற்கு நேரம் கடந்து வந்த அமைச்சர் இராஜதுரை,
அவரை விட்டு நாம் விழாத் தொடங்கியதைப் பெரிதுபடுத்தாமல்,
விழாவிற் கலந்து, தனியே இலக்கியம் மட்டும் பேசியதோடு,
விழா முடியும்வரை சபையிலிருந்து எம்மை மகிழ்வித்தார்.

குருநாதரின் பெருந்தன்மை
விழாவுக்காக ரயிலில் 15, 20 பேரளவில்,
யாழிலிருந்து கொழும்பு சென்றோம்.
என் குருநாதர் பேராசிரியர் இராதாகிருஷ்ணனும்,
அவரது நண்பர் இராமேஸ்வரக் கம்பன்கழகச் செயலாளரும்,
தலைமன்னாரூடு யாழ் வந்து,
பின்னர் எங்களுடன் அவர்கள் கொழும்பு வந்தனர்.
குருநாதருக்கும் நண்பருக்கும் இராமகிருஷ்ண மிஷன் மடத்திலும்,
மற்றவர்களுக்கு ‘மோடி’ மண்டபத்திலும்,
எஸ்.ரி. சிவநாயாகம் அவர்களால் தங்கும் வசதி செய்யப்பட்டிருந்தது.
நாம் கொழும்பு வந்து சேர்ந்ததும்,
வேறு வேறு இடங்களில்,
கழகத்தார்க்கு தங்கும் வசதி ஒழுங்கு செய்யப்பட்டதை அறிந்த குருநாதர்,
“கம்பன் குடும்பத்தில் வேறுபாடு இருக்கக் கூடாது” எனக்கூறி,
வசதிக் குறைவுகளைப் பெரிதுபடுத்தாது,
எங்களுடனேயே ‘மோடி’ மண்டபத்தில் நண்பருடன் வந்து தங்கினார்.
எங்களுக்கு, கொழும்பே தெரிந்திராத காலமது.
எஸ்.ரி. சிவநாயகத்தைத் தவிர,
வேறு எவரோடும் எங்களுக்கு அறிமுகம் இருக்கவில்லை.
மூன்று நேர உணவுகளையும் கடையில்தான் வாங்கிச் சாப்பிட்டோம்.
அந்தண மரபுப்படி,
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உணவிற் சேர்க்காத குருநாதர்,
அவை கலந்து வந்த,
கடையில் வாங்கிய ‘பார்சல்’ உணவினைக் குறைசொல்லாது,
அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு,
வெறும் சோற்றை மட்டும் அள்ளி,
தயிரோடு உண்டு சமாளித்ததை,
இன்று நினைத்தாலும் என் நெஞ்சுருகும்.
குருநாதருடனான ஒப்பீட்டில்,
புள்ளியளவாய் தோன்ற முடியாத பேச்சாளர் பலர்,
தம் வசதிநோக்கி இன்று இடும் நிபந்தனைகளைக் காணும்போது,
என் குருநாதரின் பெருந்தன்மைகளை நினைத்துக்கொள்வேன்.

அப்பம் முப்பழம்!
அப்போது தினபதி பத்திரிகையில் வேலை செய்த,
எங்கள் நண்பன் வித்தியாதரனிடம்,
எமக்கான உணவுப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
அவன் குருநாதரின் பரம இரசிகனாய் ஆகியிருந்தான்.
ஒருநாள் மாலை விழாவில் உணவுப் பொறுப்பை மறந்து,
அவன் குருநாதரின் பேச்சில் மயங்கி உட்கார்ந்துவிட்டான்.
விழா முடிந்த நேரத்தில் உணவுக் கடைகள் பூட்டப்பட்டுவிட்டதால்,
அன்று ஒருவருக்கும் உணவில்லாத நிலை.
வித்துவான் வேலன் பசிபொறுக்க மாட்டார்.
அவருக்குக் கடுமையான கோபம்.
ஆசிரியர் தேவன் உணவில்லை என முடிவுசெய்து உறங்கப்போய்விட்டார்.
குருநாதரும் நண்பரும் அதுபற்றி எதுவித குறையுமில்லாது,
முகம் சுழிக்காமல் இயல்பாய் இருந்தனர்.
வித்தியாதரன் பாடு பெரும் சங்கடமாகி விட்டது.
அவன் பின்னர், எங்கெல்லாமோ அலைந்து திரிந்து,
கொஞ்ச அப்பங்களையும் வாழைப்பழங்களையும்,
வாங்கிக்கொண்டு வந்தான்.
அதனை வைத்து அனைவரும் ஒருவாறு பசிதீர்த்தோம்.
எவ்வித குறையும் சொல்லாது,
குருநாதரும் அன்று அரைப்பட்டினியுடன் கிடந்ததை,
என்னால் மறக்கவே முடியாது.

எஸ்.ரி. சிவநாயகத்தின் பங்களிப்பு
அக்காலத்தில் சிந்தாமணி வாரப் பத்திரிகையில்,
எஸ்.ரி. சிவநாயகம் அவர்கள்,
கலை, இலக்கியம் தொடர்பாக ஒரு பகுதியை எழுதி வந்தார்.
அப்பகுதியில் அந்த வாரத்தில் நடைபெறும் இலக்கிய விழாக்கள் பற்றி,
“கூட்டத்தில் இத்தனை நாற்காலிகள் வெறுமையாய் இருந்தன”இ
“இத்தனை பேர்தான் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்”இ
“இன்னாரின் பேச்சைக் கேட்டு சபை அரைத் தூக்கத்திலிருந்தது”
என்றெல்லாம் அவர் கடுமையாய் விமர்சிப்பார்.
கொழும்பில் எங்கள் விழா நடந்தபோது,
அதில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்பதற்காய்,
அவர் பெரிதும் பாடுபட்டார்.
விழா நடக்கும் முன்னரே தான் எழுதும் இலக்கியப் பகுதியூடாக,
நிறைய எதிர்பார்ப்பை உருவாக்கினார்.
தன் பத்திரிகைச் செல்வாக்கால்,
அனைத்துப் பத்திரிகைகளிலும் கம்பன் விழாவை முக்கியப்படுத்தி,
செய்திகள் வரச் செய்தார்.
அப்போது தினகரன் பத்திரிகையில் கம்பன் விழாச் செய்தி,
தலைப்புச் செய்தியாகவே வெளிவந்தது.
அவரது முயற்சியால் கொழும்பு விழா பெரிய வெற்றி கண்டது.
விழாவின் பின்னரும் அதன் வெற்றியைப் பாராட்டி,
தான் எழுதும் இலக்கியப் பகுதியில் பெருமையோடு எழுதினார்.
அந்த விழாவின் மூலம்,
எங்களுக்கு அகில இலங்கை ரீதியாகப் புகழ்தேடித் தந்தார்.
கிட்டத்தட்ட கழகத்தின் போஷகர்போல இயங்கிப் பாடுபட்டார்.
என்றும் எங்கும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத அவர்,
எங்கள் குருநாதரின் பேச்சில் மயங்கி,
நிறைவு நாளில் தானாகக் கேட்டு, மேடையேறிப் பேசினார்.
எங்கள் குருநாதருக்குக் “கம்பகலாநிதி” எனப்பட்டம் வழங்கினார்.
விழாவின் நிறைவு நாளில் ஒரு தந்தைபோல,
என்னையும் குமாரதாசனையும் கட்டி முத்தமிட்டு மகிழ்ந்தார்.
தன் துணைவியாரையும் எங்களை முத்தமிட்டு வாழ்த்தும்படி பணித்தார்.
அவர்கள் காட்டிய அன்பில் நாம் நெகிழ்ந்து போனோம்.

அமைச்சர் இட்ட விருந்து
விழா முடிந்த அன்றிரவு,
கொழும்பில் அப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டிருந்த
‘சாந்தி விகார் ஹோட்டலில்’,
எங்களுக்கெல்லாம் அமைச்சர் இராஜதுரை விருந்திட்டார்.
நாங்கள் ‘ஹோட்டலுக்கு’ அழைத்துச் செல்லப்பட்டோம்.
வடை இருபத்தைந்து சதம் விற்ற அக்காலத்தில்,
‘சாந்தி விகார் ஹோட்டலில்’ ஒரு வடையின் விலை ஏழு ரூபா.
அப்போது எங்களால் இவ்விடயம் ஆச்சரியமாகப் பேசப்பட்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த எங்களுக்கு,
‘ஹோட்டலும்’ அங்கிருந்த ஆடம்பரமும் பெரிய புதுமையாய்ப்பட்டன.
நாம் அங்கு சென்றபோது,
அமைச்சரும் எஸ்.ரி. சிவநாயகமும் அங்கு வந்து சேர்ந்திருக்கவில்லை.
அவர்களின் வருகைக்காய் நாம் காத்திருக்க,
திருமதி வேலன் அவர்கள்,
தன் விருப்பத்திற்கு உணவுகளை ‘ஓடர்’ செய்யத் தொடங்கினார்.
அவரை உட்கார வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
பிறகு, அமைச்சரும், சிவநாயகமும் வந்து சேர்ந்து
பிரமாண்ட விருந்திட்டனர்.
அமைச்சர் இராஜதுரை விருந்தின் முடிவில் உரை நிகழ்த்தியபொழுது,
அடுத்து நடக்கவிருந்த எமது யாழ் விழாவை இரத்துச்செய்து,
தான் தொடக்கவிருந்த விபுலானந்தர் இசைக்கல்லூரியின் தொடக்கவிழாவில்,
குருநாதரைக் கலந்துகொள்ள வைக்கவேண்டும் எனக்
கோரிக்கை வைத்தார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய நான்,
அமைச்சரது உதவிகளுக்கு நன்றி சொல்லி,
அமைத்த விழாவை இரத்துச்செய்ய முடியாதெனக் கூறி,
அவர் கோரிக்கையை நிராகரித்தேன்.
அமைச்சரது கோரிக்கையை நாம் நிராகரித்ததைக் கண்டு,
வந்திருந்த அறிஞர் பலர் ஆச்சரியப்பட்டனர்.
எங்களது ஆசிரியர் வித்துவான் ஆறுமுகம்,
“அமைச்சற்ற கோரிக்கையை நிராகரித்து,
தேவையில்லாமல் பகை தேடிப்போட்டீங்களடா!”
என்று யாழ் வரை புலம்பிக்கொண்டே வந்தார்.

மறக்க முடியாத சில சம்பவங்கள்
இவ்விழாவில் மறக்க முடியாத சில சம்பவங்கள் நிகழ்ந்தன.
மோடி மண்டபத்தில் நாங்கள் தங்கியபோது,
எங்கள் அறைகளுக்கு அடுத்த அறையில்,
ஓர் இளம் தம்பதியர் தங்கியிருந்தனர்.
நாம் அங்கு வந்ததுமே,
தம்மைத் தமிழ் இரசிகர்களாய்க் காட்டி,
அவர்கள் எங்களோடு ஒட்டி உறவாடத் தொடங்கினர்.
நாங்களும் அவர்களின் ஆர்வம் கண்டு மயங்கிப்போனோம்.
எங்களது அம்மயக்கத்தைப் பயன்படுத்தி,
தங்களின் தங்குமிடச் செலவு,
உணவுச் செலவு முதலிய எல்லாவற்றையும்,
எங்கள் தலையிலேயே அவர்கள் கட்டினர்.
மூன்று நாட்களும் கழக உறுப்பினர்போல்
தங்களையும் காட்டிக்கொண்டு,
எங்கள் செலவிலேயே பயணம் செய்து,
அமைச்சரின் விருந்து வரை வந்து கலந்துகொண்டனர்.
பின்னர்தான், அவர்கள் தம்பதியர் இல்லை எனும்
உண்மை தெரிய வந்தது.
கழக அளவில் ஏமாந்த என் முதல் அனுபவம் இது.
விழா முடிந்து யாழ் திரும்புகையில்,
‘ரயிலில்’ குருநாதருக்கும் நண்பருக்கும் மட்டும்,
படுக்கையிருக்கை பதிவு பண்ணியிருந்தார்கள்.
மற்ற அனைவருக்கும் சாதாரண இருக்கை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
வித்துவான் வேலன் குருநாதர்மேல் அன்பு நிறைந்தவர்தான் என்றாலும்,
அவருக்குத் தனித்த வசதி செய்து கொடுத்ததுபற்றி
கடுங்கோபம் கொண்டார்.
எங்களைப் பெரிய சங்கடத்திற்கு ஆளாக்கினார்.
ஒருவாறு அவரைச் சமாளித்தோம்.
இவ்விழாவிற்குத் திருகோணமலையிலிருந்து,
பெ.பொ. சிவசேகரம், சிவச்சந்திரன் ஆகியோரும் வந்திருந்தனர்.
கொழும்புக் கம்பன் விழா நிகழ்வில்,
ல~;மணஐயர் தலைமையில் குருநாதர் பேசிய,
“திருமுருகாற்றுப்படை” பேச்சு மறக்கமுடியாதது.

ஏழாவது கம்பன் விழா
(24.03.1982)

இவ்விழா 1982 மார்ச் 24, 25, 26, 27, 28 ஆகிய திகதிகளில்,
நல்லையாதீனத்தில் நடைபெற்றது.
அவ்வாண்டு பாரதியின் நூற்றாண்டாய் அமைந்ததால்,
இவ்விழாவில் பாரதி நூற்றாண்டினை இணைத்துக் கொண்டாடினோம்.
கோடூர் இராஜகோபால் சாஸ்திரிகள் இவ்விழாவிலும்; கலந்து கொண்டார்.
இவ்விழாவின் ஒரு மாலைப்பொழுதில்,
“பாரதி இசையரங்கு” என்ற தலைப்பில்
இசைக் கச்சேரிகளை அமைத்தோம்.
சங்கீதபூஷணம் பரம். தில்லைராஜா, சங்கீதபூஷணம் சத்தியபாமா இராஜலிங்கம், சங்கீதபூஷணம் பொன். சுந்தரலிங்கம் ஆகியோர்
பாரதி பாடல்களைப் பாடினர்.
அதுதான் நாம் நடத்திய முதல் இசை நிகழ்ச்சி.
பத்து இயல் நிகழ்ச்சிகளை நடத்துவதைவிட,
ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துவது பெருஞ் சிரமமாய் இருந்தது.
அக்காலத்தில் பொன். சுந்தரலிங்கத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
அவரது கச்சேரியை நிறைவாய் அமைக்க நாம் நினைத்தோம்.
தான் மூத்த கலைஞர் ஆகையால்,
கச்சேரி ஒழுங்கில் தனது கச்சேரியைக் கடைசியாய்
வைக்க வேண்டுமென்று,
பரம். தில்லைராஜா பிடிவாதம் பிடித்தார்.
பொன். சுந்தரலிங்கம் மறுப்புச் சொல்லாததால்,
நிறைவு நிகழ்ச்சியாக பரம். தில்லைராஜாவையே பாட வைத்தோம்.
முதலில் சத்தியபாமா தனது மகள் கிருஷ்ணியோடு பாடினார்.
தொடர்ந்து பொன். சுந்தரலிங்கத்தின் கச்சேரி நடைபெற்றது.
அதன்பின் நிறைவாக, பரம். தில்லைராஜா பாடினார்.
சுந்தரலிங்கத்தின் கச்சேரியின் பின் அவரது கச்சேரி எடுபடவில்லை.
அதனால், சில காலம் அவர் எங்கள்மேல் கோபமாயிருந்தார்.

பேராசிரியர் கைலாசபதியின் பெருந்தன்மை
அந்த விழாவிற்குத் தலைமையேற்க,
அப்போது பெரும் புகழோடு இருந்த,
பேராசிரியர் கைலாசபதி அவர்களை அழைத்தோம்.
எந்த அறிமுகமும் இல்லாமல்,
நானும், குமாரதாசனும் தனியே சென்று
அவரை விழாவிற்கு அழைத்தபோது,
இளைஞர்களான எங்களை மதித்து உபசரித்து,
விழாவிற்குத் தலைமையேற்க அவர் சம்மதித்தார்.
அக்காலத்தில் அவரோடு இணைந்திருந்த
“மாக்சீய” கொள்கையாளர் பலர்,
“கம்பன் விழாவிற்கோ போகப்போகிறீர்கள்?” என்று,
அவரைத் தடுத்ததாகவும்,
அதை மீறிப் பேராசிரியர் எங்கள் விழாவில் கலந்து கொண்டதாகவும்,
பின்னர் அறிந்தோம்.
பேராசிரியர் கைலாசபதியின் ஆளுமையில் மதிப்புண்டாயிற்று.
அந்த விழாவில்,
குருநாதர் “வழிவழி பாரதி” எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அன்றைய குருநாதரின் உரைக்கு,
பேராசிரியர் கைலாசபதி தலைமையேற்றார்.
மிக நாகரிகமான ஒரு உரை நிகழ்த்தினார்.
குருநாதரின் பேச்சின் ஒரு பகுதியை இருந்து கேட்டார்.
பின்னர், வேறொரு விழாவுக்காக இடையிற் சென்றார்.
அன்றிரவு தொலைபேசியில் என்னோடு தொடர்புகொண்டு,
அடுத்தநாள் குருநாதரைத் தேநீர் விருந்துக்கு,
தன் வீட்டுக்கு அழைத்து வரும்படிக் கேட்டுக்கொண்டார்.
அவ்விருந்தில் மரபுத் தமிழறிஞர்களின் பலம் பற்றி,
மனம் திறந்து பாராட்டிப் பேசினார்.
அடுத்த முறை வரும்போது,
தன்னோடு ஒருநாளாவது தங்கவேண்டும் என்று,
குருநாதரைக் கேட்டுக்கொண்டார்.
பேராசிரியர் சிவத்தம்பியின் நடைமுறையிலிருந்து மாறுபட்டு
தனது பண்பாட்டால் எம்மை ஈர்த்தார்.

விழாவில் சில குளறுபடிகள்
இவ்விழாவில் சில குளறுபடிகளும் நடந்தேறின.
வித்துவான் வேலன் எங்கள்மேல் பேரன்பு கொண்டவர்.
ஆனாலும், சில வேளைகளில் அளவுக்கதிகமாய் ரோசம் பார்ப்பார்.
கொழும்பிலிருந்து ரயிலில் சாதாரண இருக்கையில் வந்த
கோபமும் அவருக்கிருந்தது.
இந்த விழாவில்,
ஒருநாள் வித்துவான் ஆறுமுகத்தைத் தலைமையுரைக்குப் போட்டு,
வேலன் மாஸ்ரரைத் தொடக்கவுரைக்குப் போட்டிருந்தோம்.
தன்னைத் தலைமைக்குப் போடவில்லையென,
வேலன் மாஸ்ரருக்குக் கோபம்.
அதனால், முதல் நாள் விழாவிற்கு அவர் வரவில்லை.
எனது குருநாதருக்கு அவரது இயல்பு தெரியும்.
கைலாசபதியைச் சந்தித்த பிறகு,
கார் ஓடிய கிரியிடம்
“காரை நேராய் வேலன் மாஸ்ரர் வீட்டிற்கு விடுடா!” என்றார்.
பருத்தித்துறையிலிருந்த
வேலன் மாஸ்ரர் வீட்டிற்கு எல்லோருமாய்ச் சென்றோம்.
அவர் எங்களைக் கண்டு, சங்கடப்பட்டுப் போனார்.
நெஞ்சு வலி வந்ததாக விழாவிற்கு வராததற்குப் பொய்;க் காரணம் கூறினார்.
அதை உண்மையாய் நம்பியவர்போல் குருநாதர் நலம் விசாரித்துவிட்டு,
காரில் நாம் திரும்புகையில்,
“ஏன்டா,
சார் வராததற்கு அந்த அம்மா என்ன காரணம் சொல்லிச்சு” என்று கேட்டார்.
எங்கள் குடும்பத்தில் ஒன்றாகி, எல்லோரதும் பலம், பலவீனம் அறிந்து,
அனைவரையும் ஒன்றாக்கும் குருநாதரது இயல்பறிந்து நெகிழ்ந்தோம்.
அவ்விழா நடப்பதற்குச் சில காலத்தின் முன்தான்,
நல்லை ஆதீன முதலாவது குருமகா சந்நிதானம் சமாதியாகியிருந்தார்.
அவரது சமாதி ஆலயம் கட்டப்பட்டு,
இவ்விழாவின் போதுதான் அதன் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
அப்பணியில் முழுமையாய் ஈடுபட்டிருந்த,
வங்கி முகாமையாளர் வைத்தியநாதன் அவர்கள்,
கும்பாபிஷேகத்தின்போது,
குருநாதரை அங்கு வரும்படி வலிந்து அழைத்தார்.
அதனால் எமது காலை நிகழ்ச்சிகளில் சிறிது தாமதம் ஏற்பட்டது.
அன்புடைய அவரை மறுக்கவும் முடியாமல்,
அவர் செயலை ஏற்கவும் முடியாமல் சங்கடப்பட்டோம்.
நிகழ்ச்சி ஒழுங்கில் குழப்பம் ஏற்பட சற்று சலித்தோம்.

குமாரதாசனின் தியாகம்
இந்த வருகையின்,
குருநாதருக்குக் கொடுக்க எங்களிடம் ஏதும் இருக்கவில்லை.
கொழும்பு விழாவையும் நடத்தியிருந்ததால்,
செலவு கையைக் கடித்திருந்தது.
என்ன செய்வதெனத் தெரியாமல்,
நான் குழம்பிப் போயிருந்தேன்.
இவ்விழாவிற்குச் சில காலத்திற்கு முன்தான்,
குமாரதாசனின் ஒரே சகோதரிக்குத் திருமணம் நடந்திருந்தது.
அது ஒரு காதல் திருமணம்.
குமாரதாசன் வீட்டில் அக்காதலுக்குப் பெரும் எதிர்ப்பிருந்தது.
நானும் குமாரதாசனும் சேர்ந்து பல காரியங்கள் செய்து,
அத்திருமணத்தை நடத்தி முடித்திருந்தோம்.
வேலன் மாஸ்ரர் தம்பதியரும்,
அவ்விடயத்தில் எங்களுக்குப் பெருந்துணை செய்தனர்.
மாப்பிள்ளைத் தோழனாய் குமாரதாசன் ஒரு மோதிரம் பெற்றிருந்தார்.
குருநாதருக்குக் கொடுக்க ஏதுமில்லாமல் தவித்த எனது குழப்பம் அறிந்து,
எதுவித தயக்கமுமின்றி,
குமாரதாசன் தன் ஒரே தமக்கையின் கலியாணப் பரிசாய்க் கிடைத்திருந்த,
மோதிரத்தைக் கழற்றி குருநாதருக்குப் பரிசாய்க் கொடுத்தார்.
இதனால், குமாரதாசன் வீட்டில் தொடர்ந்தும் பகை தேடினோம்.
இவ்விழாவில் கல்வி அதிகாரி ரட்ணா நவரட்ணம்,
பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் போன்ற அறிஞர்களோடு,
இசைக்கலைஞர்களான என்.கே. பத்மநாதன், என்.ஆர். சின்னராசா,
வி.கே. குமாரசாமி, செல்வி தனதேவி சுப்பையா, ஏ.எஸ். இராமநாதன்,
இராதாகிருஷ்ணன், மகேந்திரன், கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி,
எஸ். சிதம்பரநாதன், எம்.பி. நாகேந்திரம் போன்றோரும் கலந்துகொண்டனர்.
தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
 
 
பாகம் 018ல்...
 
· காரைக்குடிக் கம்பன் விழா - 2 
· மோதிரக் கையால் குட்டு
· ‘கி.ஆ.பெ.’ ஐச் சந்தித்தோம்
· குரு தந்த ஞானம்!
· மறக்க முடியுமா?
· திருகோணமலைக் கம்பன் விழா - 1 
· கழகத்தின் இரண்டாமாண்டு நிறைவு  
· பேரா.சண்முகதாஸ், வீரவாகு பாராட்டு 
· கம்பன் அடிப்பொடி மறைவு 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.