செய்தியும்.. சிந்தனையும் .. 06 | “இடைக்கண் முறிந்தார் பலர்…” | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

செய்தியும்.. சிந்தனையும் .. 06 | “இடைக்கண் முறிந்தார் பலர்…” | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 

செய்தி
"அருளினியனின் ‘கேரள டயரீஸ்’ நூல் வெளியீட்டுக்கு யாழ். இந்துவிலும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலும் தடை." -இணையம் 09.09. 2017
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
சிந்தனை:
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.        (அதிகாரம் 85, குறள்-845)

பொருள்:- அறிவில்லாதவர் தாம் கல்லாத நூல்களையும் கற்றவர் போலக் காட்டி நடந்தால் அவர், குற்றமறக் கற்ற நூல் பற்றியும் மற்றவர்களுக்கு ஐயம் உண்டாகும்.
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
“இடைக்கண் முறிந்தார் பலர்…”

‘உலகம் எம் கையில்த்தான.;’ -இது அனுபவமில்லா இருபதுகளின்; எண்ணம்.
‘உலகின் கையில்தான் நாம்’.-இது அனுபவம் படித்த அறுபதுகளின் எண்ணம்.
அறிவு உந்துதலை மட்டும் கொண்டு, அதில் முதிர்ச்சி ஏற்படாத இளமை,
தன் அறிவின் எல்லையையே உலகின் எல்லையாய்க் கருதும்.
காலத்தால் பக்குவப்படுத்தப்படுகையில்த்தான் தன் அறிவெல்லைக்கப்பால்,
உலகம் எங்கோ இருப்பதை அவ் இளமை உணர்ந்து கொள்ளும்.
பிழையேயாயினும் தம் கருத்தை ஆணித்தரமாய் உரைக்க இளையோர் முயல்வர்.
அனுபவம் மிகுந்த முதியோர் அதுகண்டு அதிராது நிற்பர்.
தம் குழந்தைகளின் பிழையான பிடிவாதங்களைப் பொருட்படுத்தாத,
பெற்றோரின் செயலுக்கு ஒப்பானது அப்பெரியோர் செயல்.
இளையோர் துடிப்பதும் முதியோர் பொறுப்பதும் ஓர் நற்சமுதாயத்தின் அடையாளங்கள்.

 


✦✤✦

ஒரு குழந்தை எடுத்து வைக்கும் முதல் அடியே,
செம்மையுற இருக்கவேண்டும் என எதிர்பார்த்தல் யதார்த்த முரண்.
குழந்தை தள்ளாடித் தவறி வைக்கும் முதல் அடியே,
பின் அதன் செம்மையான நடைக்கும் ஓட்டத்திற்கும் காரணமாகிறது.
தள்ளாடித் தொடங்கும் நடைகளே பின்னாளில் உறுதிபெற்று,
இத்தரணியைத் தாங்கி நிற்குமாம்.
இதுவே இளையோர்தம் அறிவு நடைக்கும் பொருந்தும்.

✦✤✦

காரணத்துடனேயே இம் முன்னுரையை வரைகிறேன்.
சென்ற வாரம் அருளினியன் என்ற இளைய எழுத்தாளனின்,
‘கேரள டயரீஸ்’ எனும் நூல் இணையத்தில் பரபரப்பாய்ப் பேசப்பட்டது.
தமிழகம் சென்று பிரபல சஞ்சிகையான ஆனந்த விகடனில்
மாணவப் பத்திரிகையாளனாக இணைந்த  அருளினியன்,
அச்சஞ்சிகையின் வேண்டுகோளை ஏற்று ஒரு பெண் போராளியைப் பேட்டி கண்டு,
முன்பு எழுதிய ‘நேற்று நான் விடுதலைப் போராளி இன்று பாலியல் தொழிலாளி’
எனும் கட்டுரை சர்ச்சைக்காளானது.
அச்சர்ச்சை பிரபலத்தைத் தேடித்தர,
சர்ச்சைகளே பிரபலத்திற்காம் வழி எனும் பதிவை மனங்கொண்டு,
மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய நூலை வெளியிட்டிருக்கிறான் அருளினியன்.

✦✤✦

நூல் பற்றிய சர்ச்சைகளுக்குப் பின்னால் வருவோம்.
அதற்கு முன்பாக,
அண்மையில் யாழிலும் கொழும்பிலும் நடந்த அந்நூலின் வெளியீடுகளை,
அனுபவஸ்தர்கள் கையாண்ட விதம் பற்றிய கவலையைப் பதிவு செய்யவேண்டியிருக்கிறது.
யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவனான அருளினியன் தன் முதல் நூலை,
அக்கல்லூரி மண்டபத்திலேயே வெளியிட விரும்பியிருக்கிறான்.
முறைப்படி மண்டபத்தைப் பதிவு செய்து அழைப்பிதழையும் அச்சடித்த பின்பு,
ஒரு சில குழுக்கள் தந்த நெருக்கடியால்,
யாழ் இந்து அதிபர் மண்டப அனுமதியை ரத்துச் செய்திருக்கிறார்.

✦✤✦

அதே அனுபவம் கொழும்பு தமிழ்ச்சங்கத்திலும் அருளினியனுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அழைப்பிதழ் அச்சான பின்பு இங்கும் சில இந்து அமைப்புக்கள் தந்த அழுத்தத்தால்,
மண்டப அனுமதியை ரத்துச் செய்வதாய்க் கூறி கொழும்பு தமிழ்ச்சங்கமும்,
யாழ். இந்துக் கல்லூரியைப் போலவே பின்வாங்கியிருக்கிறது.
அருளினியனும் அவன் நண்பர்களும் இவர்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி,
நூலின் வெளியீட்டை வெவ்வேறு இடங்களில் நடாத்தி முடித்திருக்கின்றனர்.

✦✤✦

வெளியீட்டை மறுத்த அம்முக்கியஸ்தர்களின் செயற்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை.
யாழ். இந்துக்கல்லூரி, கொழும்பு தமிழ்ச் சங்கம் என்பவை,
பல்லாண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கும் அமைப்புக்கள்.
இத்தகைய அமைப்புக்கள்,
ஒன்று தம் மண்டபங்களில் வெளியிடப்படும் நூல்கள் பற்றி ஆராய்ந்தபின்னரே,
அவற்றின் வெளியீடுகளுக்கு மண்டபம் வழங்கும் முறைமையை வழக்கமாக்கியிருக்கவேண்டும்.
அங்ஙனமன்றி அனுமதி வழங்கிய பின் மற்றைய அமைப்புக்களின் நெருக்கடிகளுக்காக,
எக்காரணம் கொண்டும் அவை பின்வாங்கியிருத்தல் ஆகாது.
தேராத்தெளிவும் தெளிந்ததன் பின் ஐயுறவும்,
இவ் அமைப்புக்களின் பெருமைக்கு நிச்சயம் இழுக்காம்!

✦✤✦

அண்மைக்காலமாக ஓர் புதிய வழக்கம் நம் அறிவுலகைப் பாதிக்கப்பார்க்கிறது.
சில அமைப்புக்களில் இணைந்து இயங்கும் செல்வாக்கு மிகுந்த பெரியவர்கள்,
தம் அதிகாரம் கொண்டு அறிவுக்கருத்துக்களை நிராகரிக்கவும் அங்கீகரிக்கவும் முனைகின்றனர்.
அண்மையில் நான் எழுதிய ஓர் கட்டுரையோடு வந்த கருத்துப் படத்திற்கு,
சிலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
முகம் தெரியாதுதானே எனும் துணிவில் கீழ்த்தரமான வார்த்தைகளால்,
இணையத்தில் என்னை அவர்கள் திட்டித் தீர்த்தனர்.
அது கூடப் பரவாயில்லை.
சில இந்து அமைப்புக்கள் இந்துக்கலாச்சாரத் திணைக்களத் தலைவருடன் தொடர்பு கொண்டு,
என்மேல் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டதாயும் அறிந்தேன்.
விரிந்த இந்து மதத்தின் சுதந்திர எல்லையை,
ஒரு அரச திணைக்களத்  தலைவரிடம் ஒப்படைக்கும் அளவிற்குத்தான்,
அவர்தமக்கு இந்து மதத்தின் பெருமை தெரிந்திருந்தது பற்றி கவலைப்பட்டேன்.

✦✤✦

இது முழுமையாய்ச் சரியென்றோ இது முழுமையாய்த் தவறென்றோ,
எந்தக் கருத்தையும் உரைக்கும் தகுதி எவர்க்கும் இல்லையாம்.
நிலைத்து நில்லாது வளர்ந்து செல்வது அறிவின் இயற்கை.
வளர வளர கருத்துக்களில் மாற்றம் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.
நிறை மொழி மாந்தர் கருத்துக்களைத் தவிர்ந்த அனைத்துக்கருத்துகளுக்கும் இது பொதுவாம்.
எனவே தம் அறிவு நிலைகொண்டு சிறியோரில் பிழைகாணும் பெரியவர்கள்,
தம்மைவிட அறிவு மிகுந்தோர் பார்வையில் தம் கருத்தும் பிழைபடும் என்பதை உணர்தல் வேண்டும்.
உண்மை இங்ஙனம் இருக்க பிழையை எழுதக் கூடாது என சட்டமியற்றத் தலைப்படின்,
எவரும் எதனையும் எழுத முடியாமற் போகும்.

✦✤✦

அறிவுத்துறை சார்ந்த கருத்தொன்றை அது தவறெனக் கருதும் பட்சத்தில்,
அறிவுத்துறை சார்ந்தே மறுதலித்து நிராகரித்தல் வேண்டும்.
அங்ஙனமன்றி செல்வாக்குகள் செலுத்தி அக்கருத்துக்களை நசுக்க முயல்வது,
அங்கீகரிக்கத்தக்க ஒரு முறையன்று.
அது இந்துமதப் பாரம்பரியமும் அன்று.
இத்தகு பிழையான முன்னுதாரணத்தை,
யாழ்ப்பாணத்தின் அறிவுக்கருவூலமாய் விளங்கும் யாழ் இந்துக் கல்லூரியும்,
கொழும்பில் தமிழர்தம் பெருமை சொல்லி நிற்கும் தமிழ்ச்சங்கமும் நிகழ்த்தியமை,
வருத்தத்திற்குரிய விடயம் என்பதில் ஐயமில்லை.

✦✤✦

இனி அருளினியனின் நூலுக்குள் நுழையலாம்.
முரண் கருத்துக்களை உரைத்து தன்மேல் கவனம் திருப்பவேண்டும் எனும்,
இளமைக்கே உரிய ஆசை காரணமாக, சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில எல்லைகளை,
தன் நூலில் கடக்க முயன்றிருக்கிறார் அருளினியன்.
அவர் தமக்கும் ஒன்றினை உரைக்க விரும்புகிறேன்.
சர்ச்சைகளால் ஏற்படுத்தப்படும் பிரபல்யத்தின் ஆயுள் மிகக் குறைவானது.
ஒரு நூலை எழுத முற்படுகையில் அதன் பயன் நோக்கிச் சிந்தித்தல் அவசியம்.
அப்பயன் நூலாசிரியனை இனங்காட்டுவதோடு மட்டும் முடிந்து போகுமெனின்,
அஃது அறிவுலகிற்குப் பொருந்தாத ஒன்றாய் ஆகிவிடும்.

✦✤✦

பிரபலமானவர்களையும் பிரபலமானவைகளையும் மறுதலிப்பதனால்,
பிரபல்யம் அடையும் உத்தி தாழ்ந்தவர்களால் கையாளப்படும் உத்தி.
வளர்ந்துவரும் அருளினியன் போன்ற இளைஞர்கள்,
இப்பாதையில் செல்வது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் மேற்கோள்களைத் தொட்டுவிட்டு,
தமக்கு விரிந்த அறிவிருப்பதாய்க் காட்ட முயலும் முயற்சி,
நவீன ஆய்வாளர்களால் நம் தமிழுலகில் அண்மைக்காலமாக,
அறிமுகப்படுத்தப்பட்டு வரும் கயமை முயற்சி.
அத்தகு முயற்சியை வளரநினைக்கும் அருளினியனும் செய்வதைக் காண,
அருவருப்பாய் இருக்கிறது.
அங்ஙனம் அருளினியன் இந்நூலில் செய்த என் துறை சார்ந்த ஓரிரு முரண்களை மட்டும்,
ஒரு சோற்றுப் பதங்களாய் இங்கு எடுத்துக் காட்டுகிறேன்.

✦✤✦

அருளினியன் தனது ‘முருகனைத் தொலைத்த கதை’ என்ற கட்டுரையில்,
ஆதித்தமிழர்களின் நிலம் சார்ந்த கடவுளே முருகன் என்றும்,
உண்மையில் முருக வழிபாடு என்பது தலைவன் வழிபாடே என்றும் உரைத்து,
ஆடு, மாடு ஆகியவற்றைப் பலிகொடுக்கும் முனீஸ்வரன் போன்ற சிறுதெய்வ வழிபாடாகவே,
முருக வழிபாடும் இருந்திருக்கிறது என நிறுவ முனைகிறார்.
தன் கருத்துக்குச் சான்றாக ‘சிறுதினை மலரொடு விரயீஇ’ எனத் தொடங்கும்,
திருமுருகாற்றுப்படையின் சில அடிகளை எடுத்துக் காட்டும் அவர்,
பிற்காலத்தில் வந்த ஆறு தலைகளும் பன்னிரு கைகளும் கொண்ட,
முருகனல்ல நம் ஆதி முருகன் என அடித்துக்கூறுகிறார்.
நூலாசிரியரின் அறிவுச் சுருக்கத்திற்கு இஃது ஓர் அடையாளம்.

✦✤✦

நக்கீரரின் திருமுருகாற்றுப்படை,
ஆறு முருக ஸ்தலங்களில் நிகழும் வௌ;வேறு விதமான வழிபாடுகளை பதிவுசெய்கிறது.
அதில் பழமுதிர்ச்சோலையில் நிகழும் வழிபாட்டு முறையை உரைக்கையிலேயே,
நூலாசிரியர் சொன்ன பலி கொடுத்து வழிபடும் செய்தி பதிவாகியிருக்கிறது.
நூலாசிரியர் சொல்லும் அதே திருமுருகாற்றுப்படையின் வேறொரு பகுதியில்,
மூவிரு முகனும் முறை நவின்று ஓழுகலின் என்றும்,
ஆங்கப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி என்றும் வரும் அடிகள்,
ஆறுமுகங்களுடனும் பன்னிரு கைகளுடனும் இருக்கும் முருகன் பற்றிய செய்தியையும்,
உறுதிபட உரைக்கின்றன.
அதனை அறியாது, பிழையான தன் முடிவுக்கு பொருத்தமற்ற சான்றைக் காட்டி,
தன் இளமையை நிரூபித்திருக்கிறார் நூலாசிரியர்.
விரிவில்லா அவர் தேடலின் வெளிப்பாடாய் விளங்கும் முதல் இடம் இது.

✦✤✦

‘வெள்ளாளர்கள் யாழ்ப்பாணத்தின் துயரம்’ என்பது சர்ச்சைக்குரிய அடுத்த கட்டுரை.
இக் கட்டுரையில் யாழ்ப்பாணத்தைப் பீடித்திருந்த சாதீயம் எனும் குறைபாட்டைப்பற்றி,
விரிவாய் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
சாதீயக் குருவிச்சை படர்ந்து தமிழின விருட்சம் சிதைந்த கதை புதிதன்று.
இக்கட்டுரையில் பிரச்சினைக்குரியதாய் இருக்கும் விடயங்கள் இரண்டு.
முதலாவது சாதீயப் பிரச்சினையில் வேளாளர்களை மட்டுமே குற்றம் சாட்டியிருப்பது.
இரண்டாவது இப்பிரச்சினை பற்றி இன்று எழுதியிருப்பதன் பொருத்தப்பாடின்மை.

✦✤✦

சாதீயப் பிரச்சினையில் வேளாளர்களின் ஆதிக்கம் மறுக்கமுடியாததே.
ஆனால் அவர்களுக்குக் கீழ்பட்ட சாதியினராய் உரைக்கப்பட்டோரும்,
வேளாளர் செய்தது போலவே தத்தமக்குக் கீழ்பட்ட சாதியினரை,
தாழ்த்தியும் இழிவு செய்தும் வந்தது மறுக்கமுடியாத வரலாறு.
இந்நிலையில் வெள்ளாளர்களை மட்டும்,
சாதீயக் குறைபாட்டின் காரணர்களாக்குவதில் அர்த்தமில்லை என்றே படுகிறது.
இக்கட்டுரைக்கு ‘சாதீயம் யாழ்ப்பாணத்தின் துயரம்’ என்றே நூலாசிரியர்  பெயரிட்டிருக்கவேண்டும்.
உரைக்கப்பட்ட செய்திகளில் உண்மை இருப்பினும்,
உண்மையின் ஒரு பகுதியை மட்டும் காட்டி, ஒருசாராரை மட்டும் குற்றம் சாட்டுவதில்,
நியாயம் இருப்பதாய்ப் படவில்லை.
இவ்விடயத்தில் அருளினியனின் தராசு வேளாளரை வீழ்த்தி வீணே நிறுத்திருக்கிறது.

✦✤✦

‘காலம்அறிதல்’ என்ற ஒன்றை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
ஈழத்தமிழினம் பேரழிவைச் சந்தித்து மெல்ல முதுகு நிமிர்த்த முயன்று கொண்டிருக்கும் இவ்வேளையில்,
மறைந்து கொண்டிருக்கும் இனத்தின் பழைய குறைபாடுகளை விரித்து ஆராய்வது,
காலப் பொருத்தமற்ற விடயம் என்றே கருதவேண்டியிருக்கிறது.
புரை தீர்ந்த நன்மை பயத்தல் இன்றெனின் வாய்மையும் பொய்மை இடத்ததாம்.
ஏலவே எதிரிகள் நம் இனத்தைப் பிரிக்க,
‘மித்திரபேத’ முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில்,
அருளியனின் இம்முயற்சி அவர்தமக்கு ‘பொல்’லெடுத்துக் கொடுக்கும் புன்மை முயற்சியாகவே அமையும்.
சாதிக்கொடுமையை வன்மையாய்க் கண்டிக்கும் தன்னை,
கீழ்சாதிக்காரனென எவரும் நினைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்,
இக்கட்டுரையிலேயே அருளினியன் தன் தாய் தந்தையரின் வெள்ளாளச் சாதியை,
இகழுமாப்போல் புகழ்ந்து பதிவு செய்துள்ளார் என்றும்,
அதுவும் வெள்ளாளக் ‘குசும்பு’தான் என்றும்,
ஆய்வென்னும் பேரில் வேறெவரும் உரைத்தால் அருளினியன் என்ன செய்வார்?

✦✤✦

முன்னைய தலைவர்களை விட புலித் தலைவர்களின் காலத்திலேயே,
சாதீயக் கொடுமை நீக்கப்பட்டதாய் அருளினியன் எழுதுகிறார்.
புலிகள் சாதி வேற்றுமையை முற்றக் கலைந்தார்களா? என்பது பற்றியும்,
சாதீய வேறுபாட்டிற்கு அவர்கள் எதிராக இருந்ததன் காரணம் பற்றியும் விரிவாக ஆராயவேண்டும்.
விரிவஞ்சி அதனை இவ்விடத்தில் தவிர்க்கிறேன்.
புலிகளின் சார்புபட்ட பல கருத்துக்களை அருளினியன் இந்நூலில் அடிக்கடி பதிவு செய்துள்ளார்.
முன்பு சர்ச்சைக்காளான தனது கட்டுரையால்,
புலிகள் இழிவு செய்யப்பட்டதாய் எழுந்த எதிர்ப்பினைச் சமாளிக்கவே,
இம் முயற்சியோ? எனும் ஐயம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

✦✤✦

நிறைவாக ‘நாவலரும் சைவ வேளாள மேலாதிக்கமும்’ எனும் கட்டுரை பற்றி சில வரிகள்.
இக் கட்டுரையில் அமெரிக்க மிஷனுடனான விரிந்த ஒப்பீடு தேவையற்றது.
அது சமயப்பூசல்களை விளைவிக்க வல்லது
‘நாவலரும் சைவவேளாள மேலாதிக்கமும்’ என்ற தலைப்பிலான கட்டுரைக்கு,
தேவையற்ற ஒப்பீடென்றே மேல் ஒப்பீட்டைக் கருதவேண்டியிருக்கிறது.

✦✤✦

நாவலரின் சைவ வினாவிடையில் இருந்து அவரின் சில பதில்களை எடுத்துக்காட்டி,
நாவலரை சாதி வெறியனாய் பதிவு செய்து வன்மையாய்க் கண்டித்திருக்கிறார் அருளினியன்.
ஆசாரா சீலரான நாவலரை தரவேறுபாடு உணராது,
தமிழக முன்னால் முதல்வர் கலைஞருடன் ஒப்பிட்டிருப்பதும்,
அவரது கருத்துக்களை ‘புசத்தல்’ என்பதாய் கீழ்மைச் சொல்லிட்டு விமர்சித்திருப்பதும்,
நிச்சயம் கண்டிக்கத்தக்க விடயங்கள்.
நாகரீக எல்லைகளைக் கடந்து நாவலரின் உயர் நிலையையும் தன் தரத்தையும் நினையாது
அருளினியன் செய்திருக்கும் விமர்சனத்தால் அறிவுலகம் அதிர்ந்து நிற்கிறது.

✦✤✦

இக்கட்டுரையின் ஓரிடத்தில் அருளினியன்,
‘வெள்ளாள மயமாகிய சைவசித்தாந்தம்’ என்றுரைக்கிறார்.
என்ன பதிவைக் கொண்டு இக்கருத்தை அவர் வெளியிட்டார் என்று தெரியவில்லை.
பிராமணர் அல்லாத மெய்கண்டரையும் மறைஞானசம்பந்தரையும்,
பிராமணர்களான அருணந்தி சிவாச்சாரியாரும் உமாபதி சிவாச்சாரியாரும்,
தம் குருவாய் ஏற்றமையை சைவசித்தாந்த வரலாறு உரைக்கிறது.
புலையனான பெற்றான் சாம்பானுக்கு முத்தி கொடுத்தருளியவர் உமாபதி சிவாச்சாரியார்.
உயர்ந்தவர்களான இவர்களால் ஆக்கப்பட்ட சைவசித்தாந்த கொள்கைகளுக்கு,
வெள்ளாள சாதிச்சாயம் பூச நினைக்கும் அருளினியனின் முயற்சி சிறுபிள்ளைத்தனமானது.

✦✤✦

நாவலர் எழுதிய அனைத்துமே சரி என்பது என் கருத்தன்று.
தெளிவாய்ச் சொல்லப்போனால்,
சமூகவிடயங்களில் நாவலரின் சில கருத்துக்களோடு என் மனமும் உடன்பட மறுப்பது உண்மை.
ஆகமங்களை நன்கு கற்ற நாவலர் அதனை தன் காலத்தார்க்கு உரைக்கையில்,
காலமாற்றங்களை உள்வாங்கி உரைக்கத்தவறியமையே விமர்சனங்களுக்குக் காரணமாயிற்று.
மரப பேணுவதாய் நினைந்து ஆகமங்கள் சொல்லும் பழைய செய்திகளை,
புறநிலையிலும் அப்படியே நாவலர் பதிவு செய்துவிட்டார்.
மாறிவிட்ட சமுதாயத்தில் அப்பதிவுகள் சிலர் மனதில் கேள்விக்குறிகளாய் எழுந்து நிற்கின்றன.
சைவ வினாவிடையில் நாவலர் உரைத்த கருத்துக்கள் பல ஆகமக்கருத்துக்களேயாம்.
வர்ணாச்சிரம தர்மம் பேணப்பட்ட காலத்திற்கான கருத்துக்கள் அவை.
நம் மூதாதையர்கள் ஏன் வர்ணாச்சிரம தர்மத்தைக் கொண்டு வந்தனர் என்பது பற்றி இதே உகரத்தில்,
‘வர்ணாச்சிரம தர்மம்’ என்ற என் கட்டுரைத் தொடரில் தெளிவாய்க் குறிப்பிட்டிருக்கிறேன்.
அறியார் அதனைப் படித்து உண்மை அறிக.

✦✤✦

பிற்காலத்தில் இன்னன்னார்க்கு இன்னன்ன தொழில் எனும் முறைமை மாறிவிட்டது.
அதனால் ஒழுக்கங்களிலும் ஆசாரங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.
அம்மாற்றங்களை உள்வாங்கி சமூகக் கருத்துக்களை நாவலர் பதிவு செய்திருக்கவேண்டும்.
என்னது? ஆகமக்கருத்தில் திருத்தம் செய்வதா? என்று,
சில சைவ வெறியர்கள் தொடைதட்டிப் புறப்படுவது தெரிகிறது.
அவர்களுக்கு ஒன்றை அழுத்தி உரைப்பேன்.
‘முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளேபின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே’ என திருவாசத்தில் மணிவாசகர் உரைக்கிறார்.
புதுமை இறைவர்க்கு மாறுபாடானதன்று என்பதற்கு, அந்த ஞானியின் இவ் அடிகள் சான்று பகர்கின்றன.
காலத்திற்கு ஒவ்வாத திருமுறைகள் சில அழிந்து போனதாய் வரலாறு உரைக்கிறது.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’ என்கின்றது தமிழ் இலக்கணம்.
கற்றோர்கள் உச்சிமேல் வைத்து உவக்கும் திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர்,
அறநுண்மை நூலானே அன்றி உய்த்து உணர்தலானும் அறியப்படும் என,
‘பெரியாரைத் துணைக்கோடல்’ எனும் அதிகாரத்தில் எழுதுகிறார்.
இவையெல்லாம், எந்த நூலிலும் காலமாற்றத்திற்கேற்ப மாற்றங்கள் செய்வது அவசியம் என்பதை
உயர்ந்தோர் வாயிலாக நமக்கு உணர்த்துகின்றன.
அதை உணராததொன்றே நாவலர் செய்த தவறாம்.
அதனையும்; அவர் காரணத்துடனேயே செய்தாரா என்பது நுணுகி ஆராயவேண்டிய ஒன்று.

✦✤✦

சாதி போன்ற ஒருசில விடயங்களைத் தவிர்த்துப் பார்த்தால்,
நாவலர் செய்த புரட்சிகளின் வீரியம் தெரியும்.
அப்புரட்சிகளை மறைத்து அவரை அடுத்த தலைமுறைக்கு ஓர் குற்றவாளியாய் இனங்காட்டுவது,
முன்னைக் கட்டுரையில் போராளிகளை இழிவு செய்தமையை விட கீழ்த்தரமான செயலேயாம்.
இயல்பு வழிபாட்டை நீக்கி ஆலயங்களில் ஆகம நெறியைப் புகுத்தியதை,
நாவலர் செய்த குற்றங்களில் ஒன்றாய் உரைக்கிறார் நூலாசிரியர்.
நாவலர் செய்த அந்த ஆகமவழிபாட்டு மாhற்றங்கள்,
ஒழுக்க நிலையில் நம் ஆலயங்களை உயர்த்தின என்பதை யாரும் மறுக்கமுடியாது.
பழமையை மாற்றமின்றிப் பேணினார் என நாவலரைக் குற்றம் சாட்டும் அருளினியன்,
பழமை என்பதற்காக ஆடு வெட்டுவதும் மாடு வெட்டுவதுமான,
சமய நெறிக்குப் பொருந்தாத, வழிபாட்டு முறைகளை,
அவைதான் இயற்கை வழிபாட்டு முறை என உரைத்து,
மாற்றமின்றி அவற்றைப் பேண வேண்டும் என நினைப்பதும் வலியுறுத்துவதும்,
அதில் மாற்றங்கள் செய்த நாவலரை குற்றம் சாட்டுவதும்,
எங்ஙனம் அறிவுக்குப் பொருத்தமாகும்?

✦✤✦

ஈழத்தமிழினத்தின் எழுச்சிக்கு நாவலரின் பங்களிப்பு மிகப்பெரியது.
நமது முற்போக்காளர்களே அவரை தேசிய வீரராய் ஏற்றுக் கொண்டனர்.
அவரது அறிவுத்திறன் சமூக உணர்ச்சி , சமயப்பற்று என்பவை இன்றுவரை,
எவராலும் தொடமுடியா உயரத்திலேயே நிற்கின்றன.
அத்தகு பெரியவரை துச்சமான வார்த்தைகளாலும்,
இழிவான ஒப்பீடுகளாலும் கொச்சைப்படுத்திய அருளியனின் செயலை
அறிவுலகம் ஒருமித்துக் கண்டிக்கப்போவது நிச்சயம்.

✦✤✦

இக்கட்டுரை சாதிப்பகையை மட்டுமன்றி,
சமயப்பகையையும் வளர்க்க அடிப்படையாகின்றது.
காலமாற்றத்தை உட்கொள்ளாத அருளினியன் தனது நூலில்,
‘சென்சிற்றிவ்வான’ பல இடங்களில் தேவையின்றி கைவைத்திருக்கிறார்.
அஃது இன்றைய அரசியல் சூழ்நிலைக்கும்,
தமிழர்தம் வாழ்வியல் சூழ்நிலைக்கும் கேடு விளைவிக்கும் என்பது நிச்சயம்.

✦✤✦

சாதி விடயத்தில் இவ்வளவு உணர்ச்சிவயப்படும் அருளினியன்,
தனது தனிவாழ்வில் இச் சாதி வேறுபாட்டை ஒழித்துக் காட்டுவாரானால்,
அது இத்தனை கட்டுரைகளையும் விட அதிகம் பயன் செய்யும்.
வாய்ச்சொல்லில் வீரராய் இருப்பதைவிட செயல் வீரராய் இருப்பதே,
இக்காலத்திற்கும் எக்காலத்திற்கும் தேவையான விடயம்.
அருளினியனிடம் இப்புரட்சியை ஈழத்தமிழுலகம் எதிர்பார்க்கின்றது.

✦✤✦

எழுதுவதானால் நிறைய எழுதலாம்.
என் துறைசார்ந்த கட்டுரைகளை மட்டும் விமர்சித்திருக்கிறேன்.
மற்றைய கட்டுரைகளும் அவ்வத் துறையினரால் விமர்சிக்கப்படப்போவது நிச்சயம்.
தன் இளமை காரணமாக குழப்பமான நிச்சயமற்ற பல கருத்துக்களை,
அழகு தமிழில் அள்ளித் தெளித்திருக்கிறார் அருளினியன்.
ஓடுகிற பாம்பை மிதிக்க நினைப்பது வயதுக்கான எழுச்சி,
அஃது அறிவுக்கான எழுச்சி ஆகாது.
‘வேர் தேடுவோம்’ என்று உபதலைப்பிட்டு தொடங்கியிருக்கும் ஆசிரியர்.
அருளினியன் வேர்தேடும் வேகத்தில், இருக்கும் வேர்களையும் அறுத்து,
இன விருட்சத்தை வீழ்த்திவிடுவார் போல் தெரிகிறது.
தன் நினைப்பிற்குச் சான்றுகள் தேடாமல்,
நிஜத்திற்குச் சான்றுகள் தேடுவதை அவர் வழக்கமாக்கட்டும்.

✤✦✤✦✤✦✤✦
பிற்குறிப்பு: கட்டுரைத்தலைப்பை விளங்காதவர்கள் 473 ஆம் திருக்குறளின் பொருளைக் காண்க.

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.